Tuesday, December 13, 2011

சக்தி : வசன கவிதை


பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.
குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?
பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை
    புரியாது; உள்ளம் குழலிலே ஒட்டாது.
உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக் குழலிலே ஒட்டும்
     குழல் பாடும்.
இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின்
     தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே
     இசையுண்டாக்குதல் -- சக்தி.
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன.
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும்
    யார் சுருதிசேர்த்துவிட்டது? சக்தி.
“ஜரிகை வேணும்; ஜரிகை!” என்றொருவன் கத்திக்கொண்டு
    போகிறான், அதே சுருதியில்.
ஆ! பொருள் கண்டுகொண்டேன்.
பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்,
    ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன்.
தோற்றம் பல. சக்தி ஒன்று.


 - மகாகவி பாரதி
.

2 comments:

  1. அனைத்தையும் இயக்குவது சக்தி...

    பாரதியின் வரிகளை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete