Tuesday, November 13, 2018

காகித உறைகள்

இன்னிக்கு பக்கத்தில இருக்கிற மெடிக்கல் ஷாப்பில சில மாத்திரைகள் வாங்கப்போயிருந்தேன். ஆச்சரியம் மாத்திரைகளை ஒரு காகித உறையில் போட்டுக்கொடுத்தார். அந்தக்காகிதம் எதோ ஒரு புத்தகத்தின் ஒரு பக்கமாக இருந்திருக்கக்கூடும். 

அப்போதைய காலங்களில் எல்லாப்பொருட்களுமே காகித உறைகளிலேயே வழங்கப்படுவது வழக்கம். அப்படிக்கிடைத்த உறைகளை புரட்டிப்புரட்டிப்பார்த்து அதில் எழுதியிருப்பவற்றை வாசிப்பது வழக்கம் எனக்கு. சில சமயம் விகடன்/குமுதம் போன்றவைகளின் பக்கங்களிலும் உறைகள் செய்யப் பட்டிருக்கும். வாய்ப்பிருப்பின் சிறுகதைகளின் ஒரு பக்கத்தை நான்காக மடித்து பசை ஒட்டி அந்த உறையை அளவிற்கேற்ப தயாரித்து வைத்திருப்பர். பொதிந்து கொடுக்க. அப்படி சில சிறுகதைகளை அந்த சிறுமடிப்பிலேயே வாசித்துவிடுவது என்பதில் உள்ள சுகம் அலாதி. 

வீட்டிற்கு வந்து அதனுள் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு கவனமாக அந்த பசையை நீக்கி,(சில சமயம் கிழிந்து கொண்டே போகும் :)) , கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முழுப்பக்கத்தையும் வாசிப்பது என்பது சால சுகம். சில சமயங்களில் அந்தக்கதைப்பகுதி மிகப்பெரிதாக இருக்கும் பட்சத்தில் , மீதக்கதையை நமக்குள்ளேயே புனைந்து கொள்வதும், இன்னொரு பொருள் வாங்கியிருந்தால் அதன் தொடர்ச்சி அடுத்த காகித உறையில் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே என்ற நப்பாசையும் கிளர்ந்தெழும். 

இப்பொதெல்லாம் மால் கலாச்சாரம் , காகித உறைகளையோ , இல்லை அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகதை, கட்டுரைகளையோ வாசிக்கவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும் இன்று வாங்கிய காகித உறை , எதோ ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கை போல வழவழவென இருந்த பக்கம், சுவைக்கவியலாத கட்டுரை. இருப்பினும் அந்தக்கால நினைவுகளை கிளறத்தவறவில்லை. இன்று கடலை வாங்கினால் கூட காகிதத்தில் வருவதில்லை. எல்லாம் அந்தக்கடையின் விளம்பரம் தவிர சுவாரசியமான பத்திகள் வாசிக்கவென எதுவும் வாய்ப்பதில்லை. ஒரே ஆறுதல், தீபாவளிக்கு வெடிகள் வெடித்து மிச்சக்குப்பைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன தெருவில் இங்கு, அவையனைத்தும் தினத்தந்தி நாளிதழின் பக்கங்கள்...! #காகிதஉறைகள்

.

Tuesday, November 6, 2018

ஜானூ.....இசை அற்புதம். இதுவரை யாரும் இசைத்ததில்லை இத்தனை அருமையான பின்னணி. கோவிந்த வஸந்த். தாய்க்குடம் குழுவிலிருந்து ராசைய்யாவின் நிகழ்ச்சியில் பங்குகொண்டவர். படம் முழுக்க இழையோடும் இசை மாயாஜாலங்களைக் காட்டுகிறது. அளவோடு ராசைய்யாவின் பாடல்களைப் பயன்படுத்திக்கொண்டதில் இனிமை. அவருக்குப்பிறகும் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்திருந்த போதிலும் அவரின் இசையே இக்காலங்களில் மீள் வாசிக்கப்படுகிறது. 96 என்பது இசைப்புயலின் காலம். அவர் உச்சத்திலிருந்த காலம். ஆச்சரியமான இசைக்கோவைகளை ராசைய்யா ஒதுக்கி வைத்தவற்றைத்தொட்டு உச்சம் காட்டிக்கொண்டிருந்தார். ஜானு எப்படி ராசைய்யாவின் பாடலையே பாடிக்கொண்டிருந்தாள். ஆச்சரியம் தான். கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆசை அதிகம் வெச்சு, தென்றல் வந்து தீண்டும் போது, யமுனை ஆற்றிலே இப்படி நாலே நாலு பாட்டுதான் படமே முடிஞ்சிருச்சிடா. வெறுமனே ராசைய்யாவோட பாட்ட மட்டும் வெச்சிக்கிட்டு கதை தயார் பண்ணி சில்வர் ஜூப்ளி அடிக்கலாம்டே. இன்றைக்கும் பெண்கள் கல்லூரி மாணவிகள் ராசைய்யாவோடு இணைந்து ஹார்மனியாக பாடியதெல்லாம் நிகழ்கால அற்புதம்.

படம் மலர் டீச்சரை ஞாபகப்படுத்தியபோதும் சலிக்கவில்லை. கிளறிவிடவும் தயங்கவில்லை. கடைசி வரைக்கும் காதலையே சொல்லாத இதயம் முரளி மாதிரில்லாம் இல்லை. கொஞ்சம் தைரியம் இருக்கு ராமுக்கு.வீட்டுக்கு கூட்டிப்போகும் வரைக்கும். தொடாமல் தள்ளியே நிற்பது,கூச்சம், இன்னும் இருக்கும் அந்த உள்ளூர அச்சமெல்லாம் அற்புதம் விஜய் சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும்-க்குப்பிறகு விசேக்கு ஒரு அருமையான படம். நா முத்துக்குமார் எழுதின கவிதை ஒன்று இருக்கிறது. ' இன்னமும் அவள் பத்தாவதில் தான் இருக்கிறாள்'என அந்த ஒன் லைனரை வைத்துக்கொண்டு பிழிந்து எடுத்திருக்கிறார் 96.

மாமி இன்னமும் 35லும் 16 தான். இந்தப்படத்தை டீவியில் அதற்குள் ஏனென்று ட்வீட்டியெல்லாம் பார்த்தார் மாமி. ஒன்றும் நடக்கவில்லை. அந்த ராமச்சந்திரன் ஜானகி தேவியைத்தேடி கடல் கடந்து இலங்கை போனான். இந்த ஜானகி தேவி கடல்கடந்து ராமச்சந்திரனைப்பார்க்க வந்திருக்கிறார்.

அந்த சலூன்காரன் 'எல்லாந்தெரியும் போ' என்பது, வசனங்களே தேவையில்லை. இந்த மாதிரி படங்களுக்கு. முதலில் விஜய் சேதுபதி பாடும் பாடல் சமுராய் படத்தில் விக்ரம் பாடும் பாடல் போலவே அமைந்திருக்கிறது. மற்ற பாடல்கள் கதையோட்டத்தை மைய்யமாக வைத்தே பின்னப்பட்டிருப்பதால் வெளியே தெரியவில்லை.

பிரிந்த காதல் தான் வாழும்.சேர்ந்துவிட்டால் அது காதலே இல்லை. மொத்தமே நாலு கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. யமுனை ஆற்றிலே பாடும் இடம் பொருள் ஏவல் என்னவெல்லாம் சொல்லலாம். அற்புதம்டா! ராமச்சந்திரன்கள் இன்னமும் ஜானகி தேவிக்கென காத்துத்தான் இருக்கின்றனர். ஜானகி தேவிகளுக்குத்தான் இன்னொரு சரவணன் கிடைத்துவிடுகிறார்.
Wednesday, October 31, 2018

'ரெட் ஹேட்'


'ரெட் ஹேட்' (Red Hat) நிறுவனத்தை ஐ பிஎம் (IBM) வாங்கிவிட்டது . ஒரு ஷேருக்கு 180 டாலர் கொடுத்து மொத்தமா வாங்கிப் போட்டுவிட்டது. இப்ப விலை 116 டாலர்லதான் இருக்கு ஒரு ரெட்ஹேட் ஷேர்.  கிட்டத்தட்ட பதினோரு மடங்கு விலை கொடுத்து உள்ள இருக்கிற அத்தனை பேரையும் கிட்டத்தட்ட பில்லியனாராக்கி விட்டான். சரி அதுக்கு இப்ப என்ன ? வழக்கமா எல்லா ஐ.ட்டீ. நிறுவனங்கள்ல நடக்கிற டேக் ஓவர்/அக்வையர் தானேன்னு சும்மா இருந்துவிட இயலாது. மைக்ரோசாஃப்ட் என்கிற மைட்டி மலையோட மோதி ஜெயிச்ச ஒரே நிறுவனம் ரெட் ஹேட் மட்டுந்தான். இயக்கச்செயலி சந்தையில் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) தன்னை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு மார்தட்டிக்கொண்டிருந்த நிறுவனம் பில் கேட்ஸோடது.  திறந்த ஆணை மூலத்தின் மூலமா (Open Source) ஒரு இயக்க செயலியை உருவாக்கி அதை வெற்றிகரமாக கார்ப்பொரேட் கூட மோதத்துணிந்த நிறுவனந்தான் ரெட் ஹேட். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் மைக்ரோஸாஃப்ட்டின் சர்வர்களூடன் ரெட்ஹேட் சர்வர்களும் இருந்தே தீர வேண்டிய அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சி. ஒரு கட்டத்தில் 85 சதமான சர்வர்கள் ரெட்ஹேட்/லினக்ஸ் சர்வர் மயமாகிவிட்டது.

ஐபிஎம்'மிடமும் ஒரு லினக்ஸ்/யுனிக்ஸ் இருக்கிறது, அது அத்தனை புகழ் பெறவில்லை. என்ன செய்யலாம் என நினைத்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ரெட்ஹேட்டை வளைத்துப்போடுவது என்ற எண்ணத்துடன் காரியம் கச்சிதமாக முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதை ஐபிஎம் வாங்கின செய்தி அறிந்ததும் திடுக்கிடத்தான் செய்கிறது. இனியும் திறந்த ஆணை மூலத்தை இத்தனை முனைப்புடன் வெற்றிகரமாக மேலும் லாபத்துடன் எடுத்துச்செல்லவென  யாரும் இல்லை என்பதே உண்மை. இதே ரெட்ஹேட் (சிவந்த தொப்பி) கொஞ்சம் கம்பூனிச சிந்தனையுள்ள நிறுவனம். எதிர்ப்பினைக்காட்ட அந்தக்காலத்தில் சிவப்பு தொப்பியை அணிவது வழக்கம். அதையே தனது கம்பனியின் லோகோவாக வைத்துக்கொண்டு சவால் விட்டுக்கொண்டிருந்த ரெட்ஹேட் இப்போது வாங்கிப்போடப்பட்டு விட்டது. அத்தனை பேரின் கவலையெல்லாம்  இனியும் இதே முனைப்புடன் ஐபிஎம் திறந்த ஆணை மூலத்தை தொடருமா என்பதே. லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூல ஐடியா வெகுவாக புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது ரெட்ஹேட் நிறுவனத்தின் மூலந்தான். இன்னமும் லினஸ் டோர்வால்ட்ஸின் திறந்த ஆணை மூலப்பொருள் கொண்டே ரெட்ஹேட் சர்வர்கள் கட்டமைக்கப் படுகின்றன.

கொஞ்ச நாட்கள் முன்புதான் மைக்ரோசாஃப்ட் 'கிட்ஹப்'(GitHub)பை வாங்கிப்போட்டது. அப்போதே சாவு மணி தொடங்கி விட்டது தமக்காக எந்த ஒரு மென்பொருள் ப்ராஜெக்டையும் உருவாக்கி அழகு பார்த்து அதை பிறருக்கு கொடுத்து மகிழ்வது என்ற உன்னதம் மங்கிப் போகப்போகிறது . கிட்ஹப் மட்டுமே உலகின் பல லட்சக்கணக்கில் மென்பொறியாளர்களை இணைக்கும் ஹப். இப்போது முதலுக்கே மோசம்.  மைக்ரோசாஃப்ட்டின் உள் எண்ணங்கள் என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எவரையும் அழித்தொழிப்பது. மடங்காதவரை விலைக்கு வாங்குவது. ஹாட்மெயிலின் கதை எல்லாவரும் அறிந்ததே. இப்போது எவருக்கேனும் ஹாட்மெயிலில் (hotmail) அக்கவுன்ட் இருக்கிறதா? 90களின் இறுதியில் அதை வாங்கிபோட்டு அதன் புகழை கெடுத்து குட்டிச்சுவராக்கியது மைக்ரோசாஃப்ட். அதே போல் வின்டோஸ் ஃபோன் என்ற பேரில் 'நோக்கியா'வை ஒன்றுமில்லாமல் ஆக்கியதும் இதே பில் கேட்ஸின் நிறுவனந்தான்.  குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல கிட்ஹப் ஆகியிருக்கிறது.

பற்றாக்குறைக்கு இப்போது ஐபிஎம் ரெட்ஹேட்டை வாங்கி விட்டது. இனியும் திறந்த ஆணை மூலம் என்பதெல்லாம் கனவு தான் போலிருக்கிறது. சைனா ஹாங்காங்கை தமதாக்கியவுடன் இத்தனை காலமும் ஹாங்க்காங் எப்படி இயங்கி வந்ததோ அதே போல இனியும் ஐம்பது ஆண்டுகளுக்கு இயங்கும் என்ற அறிக்கை இப்போது எங்கிருக்கிறது என்று தேடித்தான் பார்க்க வேணும். அதே கதை தான் ரெட்ஹெட்டுக்கும், கிட்ஹப்புக்கும் வாய்க்கும்.

எனது நிறுவனம் நிர்வகிக்கும் சர்வர்களில் 80 சதமானம் ரெட்ஹேட் வெளியிடும் சென்ட் ஓஸ் என்ற திறந்த ஆணை மூல சர்வர்கள் தான். பத்தாண்டுகளுக்கு புதுப்பிக்கும் உரிமை அனவைருக்கும் இலவசம். (இயக்க செயலி மட்டுந்தான் , அதனுள் இயங்கும் மற்ற ஆப்களுக்கு இல்லை ) இப்போது அப்ஸ்ட்ரீம் எனப்படும் மேல்நோக்கிய புதுப்பித்தல்கள், அவ்வப்போது கிடைக்கும் பழுதுநீக்கிகள் எல்லாவற்றிற்கும் கொட்டிக்கொடுத்து தான் சரி செய்து கொள்ள வேணும்.

இந்தக்கட்டுரை மட்டுமல்ல, நானெழுதும் அனைத்து எழுத்துகளும் சென்ட் ஓஸ்(Cent OS) எனப்படும் திறந்த ஆணை மூல கணினி மூலமே எழுதப்படுகிறது. எனது டெஸ்க்ட்டாப் எப்பவும் சென்ட் ஓஸ் தான். இனியும் இதைப்போலவே தொடருமா என்ற ஐயம் எனக்குள் அன்றே தொடங்கி விட்டது. உபுன்டு (Ubuntu) இருக்கிறதே அதில் எழுதலாம் தான். இருப்பினும் வழமையையும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்வது அத்தனை எளிதில்லை. அலுவலகத்தில் ரெட்ஹேட்/சென்ட் ஓஸ் என புழங்கியே பழகி விட்டது.

ஐபிஎம்மின் செய்திக்குறிப்பில் அத்தனை தெளிவில்லை. திறந்த ஆணை மூலம் இனியும் இதே வேகத்துடன் தொடருமா என்பது ஐயம் தான். மேலும் ரெட்ஹேட்டின் மேகக்கணினி அமைப்புகளை மட்டுமே வாங்கி இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் பலரோ இல்லை முழு ரெட்ஹேட்டுமே விலை பேசப்பட்டு விற்றுவிடப்பட்டது என்று. இதை நியாயமான விலையில் உள்ளுரில் ஆட்டோ/கார் ஓட்டிக்கொண்டிருந்த முகவர்களை மொத்தமாக ஓலா/ஊபர் அள்ளிக்கொண்டு போனதுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.'

Sunday, October 21, 2018

நாற்குழிச்சதுரங்கம்வரும் விமர்சனங்கள் காட்டும் அத்தனை ஹைப் இல்லை படத்தில். படத்தில் பெண்கள் காட்டும் கெத்து புதிது. எப்பவாவது சொர்ணாக்கா'வை மட்டுமே பார்த்து வந்த நமக்கு , சூழல் கருதி குரலுயர்த்தி,முஷ்ட்டி காட்டும் பெண்கள்.ம்..நல்ல காட்சிகள். இயல்பில் இப்படி பெண்களை நாம் சந்திக்கத்தான் செய்கிறோம். அநீதி கண்டு பொங்கி ஒலிவாங்கிக்கென ஆக்ரோஷமாக பேசும் பெண்களை இப்படம் பேசவில்லை. எக்கச்சக்க கதா பாத்திரங்கள். இருப்பினும் யாரும் தனித்தனியாக நிற்கவில்லை. கதையில் சூழலில் அனைவருக்கும் தேவை,அவரவர் இடம் இருக்கிறது. தனுஷின் இளமைக்கால முகம் அவர் நடித்த இந்திப்படத்தை(ராஞ்சனா) நினைவூட்டுகிறது. அதே முகம்,களை,ஒப்பனை எல்லாம். ஹிப்பி வைத்து,பெல்பாட்டம் போட்டுக்கொண்டு தடித்த ஃப்ரேம் கொண்ட குளிர் கண்ணாடிகளுடன் கேங்ஸ்ட்டர்ஸ்..80களின் ரசினி பட எதிரிகளை நினைவூட்டுகிறது நிசத்தில் சிறையில் போய் எடுத்தனரா..இல்லை செட்ட்'டா என வியக்க வைக்கும் கலைஇயக்கம்.!.

சாலிடெர் டீவி,சுவரில் பான்ட்ஸ் விளம்பரம், ரோஜா பாக்கு,பின்னர் இரட்டை இலைக்கான தேர்தல் போஸ்ட்டர்கள், ஆல் இன்டியா ரேடியோவின் செய்திகள்,பின்னில் பாயும் புலி போஸ்ட்டர், மூன்றெழுத்து மட்டும் வைத்து பின்னர் எண்கள் கொண்ட பைக்குகள் என 80களை அப்படியே கண்ணில் கொண்டு வருகிறது காட்சிகள். இறங்கி வேலை பார்த்திருக்கின்றனர். இளமைப்பருவம் ராஞ்சனா கெட்டப் என்றால் நடுத்தர வயதில் கொடி கெட்டப் தனுஷுக்கு. ஒவ்வொரு வசனமும் அவரே பேசுவது போல தோன்றுகிறது. இது வெற்றி மாறன் எழுதிக்கொடுத்துப்பேசுவது போலத்தோன்றவேயில்லை எனக்கு.

ஹார்பரில் இரவில் வைத்து பொருள் கொண்டுபோய் வைத்து அங்கேயே கொன்றுபோடும் காட்சி,அத்தனை இரவிலும் அவ்வளவு தெளிவாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு காட்சியும் அது இரவில் நடப்பதாக இருப்பினும் எவ்வித குழப்பமுமின்றி தெளிவாக அமைந்திருக்கிறது. படத்தின் பாதி வரை வெறும் ஆண்களை வைத்தே ஓட்டி இருப்பது சலிப்பு.

"என் பாசையே புரியலை, என் லைஃப் எப்படி ஒனக்குப்புரியப்போகுது ?, சின்ன ஆங்க்கர் தானே அம்மாம்பெரிய கப்பலை நிக்க வெக்கிது ?, என்னை என்ன தேவடியான்னு நெனச்சியா? ராஜன் பொண்டாட்டிடா" பொட்டில் தெறிக்கும் வசனங்கள்.கதை சொல்லும் பாணி நான் லீனியர் என்ற போதிலும்,பார்வையாளனுக்கு எவ்வித சிரமுமின்றி தெளிவாக விளங்குதல் சிறப்பு. விடாது ஒலிக்கும் வசவுகள், பாசாங்கில்லாத வசனங்கள் என பரிமளிக்கிறது. பொண்ணு பார்க்க போகும் காட்சி, நான் கூப்ட்டா வந்துரும், அதான் பயமா இருக்குன்னு சொல்ற தனுஷ்.நெகிழும் அந்த அப்பா.ஆஹா..

அமீர் இத்தனை குள்ளமா? டூட்ஸியின் தமிழ்ப்பதிப்பை விட அடக்கி வாசித்திருக்கிறார். பாரக்க அசப்பில் டி ராஜேந்தர் போலவே தோன்றுவது எனக்கு மட்டுந்தானா? அதற்காகவே டீ ஆரின் பாடலை அவர் திருமணத்தில் ஒலிக்க விட்டிருக்கிறார் சந்தோஷ். 'சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது :) அடிக்குரலில் பேசி தம் நிலைப்பாட்டை விளக்கும் அந்தக்காட்சி போதும். பின்னர் இரவில் ஓட்டலில் அமர்ந்து தம்மைப் போடுவதற்குத்தான் என்பதை அறிந்ததும் களைத்து சேரில் முழுதுமாக தம்மை சாய்த்துக்கொண்டு..ஆஹா. நானே செட்டில் பண்ணி விடுவேனேடா என்று மன்றாடுகிறார். பிடிக்க வந்த காவல் அதிகாரியை உடுப்புகளை அவிழ்த்துவிட்டு படகில் பயணிக்க வைக்கும் காட்சியில் வணிக நாயகன் ராஜன் அமீர்!
சந்தோஷ் பற்றி பேசியே ஆக வேண்டும். அந்த காரம் போர்ட் போட்டி சிறைக்குள் நடக்கும் காட்சியில் இறங்கி அடித்திருக்கிறார். சம்பவம் செய்ய மணித்துளிகள் எண்ணப்படுவது போல இசை. பாடல்கள் ஆங்காங்கெ பின்னில் ஒலிக்கவிட்டு அத்தனை முக்கியத்துவம் தரப்படாததில் கவலை கொள்ளாது பின்னணி இசையில் களம் இறங்கியிருக்கிறார். 80களின் பின்னணி இசை,பின்னர் 2000ம் ஆண்டுகளின் இசை, பின்னர் நவீனம் என புகுந்து விளையாட அனுமதி கிடைத்திருக்கிறது. கானா' மட்டும் எப்போதும் பாடலாம் போலிருக்கிறது. அறிமுக ஐஸ்வர்யாவின் காட்சிகளில் கானா கலக்குகிறது. எங்கு அடக்கி வாசிக்க வேணும், எங்கு ஆர்ப்பாட்டம் தேவை என்பதெல்லாம் புரிந்து வைத்து இசைத்த பண்பட்ட முதிர்ச்சியான இசை.

ஆன்ட்ரியாவின் பழிவாங்கும் முறை, அயன் ரான்ட் எழுதிய 'ஃபொன்டன் ஹெட்' கதையின் தலைவி எதிரியின் உடனே எப்போதும் இருப்பாள். தலைவனுடன் இருந்தால் எப்போதும் அவளே ஒரு பொறாமையின் இலக்காக இருக்கக்கூடும், அவனை வெற்றியை அடைய முடியா இலக்கில் விட்டுச்செல்லும் என்ற நோக்கில் எதிரியுடனேயே பயணிப்பாள். வெற்றி பெற்றவுடன் தலைவனுடன் சேர்வாள்.! 
அன்பு, பத்மா, சந்திரா, ராஜன், குணா, செந்தில் என அத்தனை கதாபாத்திரங்களின் பெயர்களும் ஒரு முறை படம் பார்த்ததில் மனதில் பதிந்துவிட்டது. அரிதான நிகழ்வு. இருந்தாலும் நான் லீனியர் கதை சொல்லலில் வாய்ஸ் ஓவர் எதற்கு ?..இந்த வாய்ஸ் ஓவர் எல்லாம் எஸ்.ரா'வுக்கு ரொம்ப பிடித்த விஷயம். நான் சொல்றேன் நீ கேளுன்னு :) மக்களுக்கு புரியாது போய்விடும் என்ற பயமா வெற்றி மாறன் ?!

Thursday, September 20, 2018

கீச்சுக்குரல் கன்னி..!கீச்சுக்குரல் கன்னி..! சக்திஸ்ரீஈஈஈஈஈஈஈ….ஹிஹி… இவ்வளவு உச்சஸ்த்தாயில அந்த ‘நுஸ்ரத் ஃபதே அலிக்கான்’ தான் பாடுவார். சுதி பிசகாம…ஹ்ம்.. டெக்னோ எலக்ட்ரானிக் பாப் என்னென்னல்லாம் இருக்கு இந்தப்பாட்டுல… எலெட்ரானிக் பாப்பு எண்டு முடிச்சிக்கலாம். முழு ஆல்பத்துலயும் இந்தப்பாட்டத்தான் கொஞ்சம் கேக்றாப்போல போட்ருக்கார் ரஹ்மான். 03:03-ல காண்டாமணி போல ஒலிக்கும் அந்த ஒலி. புதுசு. ”வென்று சென்றனை”… ஐ படத்தின் ’லேடியோ’ பாடலுக்குப்பிறகு எனக்கு பிடித்தவாறு இசைத்திருக்கிறார். ட்ரூலி இண்டர்நேஷ்னல். விஎச்1- சேனல்ல போடலாம் டைரக்டா!

.

Monday, September 17, 2018

இளையராஜாராசைய்யாவின் நேற்றைய நிகழ்ச்சி அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. குரல் உடைந்து இருக்கிறது ராசைய்யாவிற்கு. பயணக்களைப்பா இல்லை உடல் சோர்வா என எண்ணவைத்தது. இருப்பினும் முடியும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் உறங்கினேன். எழுபத்தைந்து வயதில் இத்தனை தூரம் பயணம் செய்து அத்தனை ஆர்க்கெஸ்ட்ராவையும் தயார் செய்து ,ஒருங்கிணைத்து வாசிப்பது என்பதெல்லாம் பெரிய விஷயம். அத்தனை களைப்பிலும் தன்னைக் காண வந்திருக்கிறார்கள் என்ற ஒரே நோக்கத்திற்கென வலிந்து தம்மை ஆட்படுத்திக்கொள்கிறார். பாட இயலவில்லை. பல வரிகளை இரண்டு முறை பாடுகிறார் அதே வரிகளை. இனியும் வதைக்க வேணுமா?!. கண்டெக்டர் லாஸ்லோ கவாக்ஸ் முன் வந்து தலை சாய்க்கிறார் பலமுறை எத்தனையோ சிம்ஃபொனி. ஆர்க்கெஸ்ட்ராவை வழி நடத்துபவர்.

விஜய் பிரகாஷின் குரல் கிஞ்சித்தும் எட்டவில்லை பாலுவின் உயரத்துக்கு. அப்படி என்னதான்யா சண்டை ஒண்ணாப் பாடிட்டுப் போகவேண்டீது தானே?! மொத்தமே பதினைந்து பேர் இசைக்குழுவில் இருந்திருப்பர் என நினைக்கிறேன். அதிலும் அதே பிரமிப்பு. கன கச்சிதமாக இசைக்கோர்வை. எனினும் பாடிய பலர் புதுமுகங்கள். என்னவோ ஒன்று குறைகிறதே என்ற எண்ணம் மேலிடாமலில்லை. ராசைய்யாவே வெளிநாடு சென்று நிகழ்வுகள் நடத்தவேணுமா என யோசிக்க வைக்கிறது. ஸ்கைப், வீடியோ கான்ஃபெரன்ஸிங் என பல அறிவியல் ஊடகங்கள் வளர்ந்துவிட்ட போதிலும் நேரில் தோன்றித் தான் நிகழ்ச்சி நடத்த வேணுமா?! முதுமை வாட்டுகிறது அவரை.

’என் ஜோடி மஞ்சக்குருவி’யில் 04:00 லிருந்து 04:10 வரை வரும் வரிகள், அதில் குரல் எது குழல் எதுவெனத்தெரியவே தெரியாது.ஆஹா. சித்ரா அதைக்கொணர முயன்றார். முயன்றார் மட்டுமே. அந்த இடங்களில் வரும் ”கூக்கூ”வைப்பாடினது சித்ரா தானே? இல்லை ஷைலஜாவா ?

”இசைக்கு என்னைப்போல குழலுக்கு இவர்” என அருண்மொழியைக் கைகாட்டினார். இசைத்திமிர் ஆணவம் :) இன்னமும் ஆணவக்கொம்பு இளைக்கவேயில்லை. மனோவைப்பார்த்து நீ தான் பாடுகிறாயா இல்லை வேறு யாராவது பாடுகிறார்களா? என பாலுவை கிண்டலடிக்கவும் செய்கிறார். இதெல்லாம் கட்டையோட தாண்டி போகும்.அம்புட்டும் ஆணவம். அவருக்கிருக்கிற திறமைல 0.0001 விழுக்காடு எனக்கு இருந்திருந்தாலும் இத விடப்பல்லாயிரம் மடங்கு திமிரோட பேசுவேன் நான்..!

இதற்குப்பிறகு இன்ன நோட்’தான் என ஊறிப்போன ராகம்,தாளம் என்றாலும் நேரில் வாசிக்கும்போது சிலிர்க்கத்தான் செய்கிறது. மிக்ஸிங் குறைபாடு இருப்பினும் இல்லையே இங்க இது வரணுமே என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. நனவிலி மனது அறியும் அந்த இசைக்குறிப்புகளை! அடுத்த வாரமும் பார்ப்பேன்!

.

Friday, September 14, 2018

மீண்டும் 'மழைக்குருவி'

யப்பா சாமீகளா , அந்த மழைக்குருவி பாட்டுல என்னதாம்ல இருக்கு ? ஆளாளுக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுதறீங்களே..? வரிகள் படு சுமார், இசை அப்பட்டமான உருவல், இழுத்து எடுத்தது, இதெல்லாம் தெரிஞ்சுமா பத்தி பத்தியா எழுதித்தள்றீங்க? ஒண்ணும் புரியலை. இல்ல என் காது தான் மக்கர் பண்ணுதா,எழவு இசை ரசனையே இல்லாமப் போயிருச்சா? ரவ்வும் பகலுமா உக்காந்து ப்ராஹ்ம்ஸ், ரஹ்மானினோவ், மொஸார்ட், மற்றும் இன்னபிற தெரிந்த இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளை மனனம் செய்து அவர்களின் இசைக்குறிப்புகளை எனது கிட்டாரில் எடுக்க எத்தனை சிரமப்பட்டது எல்லாம் வீணா ? 

இசைச்செல்வங்களே.செப்புங்கள் …ஹ்ம்… ! நெஞ்சத் தொட்டு சொல்லுங்க இசைவெறியர்களே. இதே பாடலை ஒரு அறிமுகப் பாடலாசிரியர் எழுதி அதற்கு தரன்குமார், இல்லை ஒரு லீயான் ஜேம்ஸ், ஷான் ரோல்டான் போன்ற திரைக்கும் வந்தும் புகழே கிடைக்காதவர்கள் இசைத்திருந்தால் இத்தனை எழுதுவீரா ?. ஐயா எனக்கொண்ணும் ரஹ்மான் மீது காண்டு இல்லை. கிஞ்சித்தும் யோசிக்காது மேம்போக்காக இசைத்து,அப்படி சொல்வதே தவறு, வாசித்துவிட்டு சென்ற ஒரு பாடலை எப்படிய்ய்யா இப்ப்டீல்லாம் வரிஞ்சி கட்டிக்கிட்டு எழுத முடியுது ?! 

விமர்சனம் எழுதுபவர்களெல்லாம் தமக்குப்பேர் கிடைக்கவேணும் என்பதற்காகவே எழுதுகின்றனர் என சுஜாதா சொல்லியிருக்கார். இதையெல்லாம் பாக்கும்போது அது தான் சரி என்று தோணுகிறது எனக்கு. #மழைக்குருவி

.