Wednesday, November 28, 2012

பூனை மகாத்மியம்



ஒரு மழை நாள் ராத்திரில , என்னோட கம்ப்யூட்டர் ரூமுக்குப் பின்னாலிருந்த பால்கனிலிருந்து பழைய பாத்திரங்கள்லாம் போட்டு வெக்கிறதுக்காக சும்மா கிடந்த அலமாரில ஏதோ விழற மாதிரி சத்தம் கேட்டது .ராத்திரி மழைல மேல் வீட்லருந்து எதாவது பூந்தொட்டி ,இல்ல செடி கிடி விழுந்துருக்கும்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன் எழுந்து பாக்காம. காலைல எழுந்து பாத்தா ஒரு பெரிய பூனை கொஞ்சம் வயிறு உப்பலா , கதவத்திறந்த என்னையே கொஞ்சம் பாவமா பாத்துது.சரி ஏதோ மழைக்கி ஒதுங்கிருக்கும். இருந்துட்டுப்போகட்டும்னு விட்டு வெச்சேன்.ரெண்டு நாள் கழிச்சு கிய்கிய்"னு ஏதோ சத்தம் வந்தது அந்த அலமாரீலருந்து, போய்ப்பார்த்தா ஒண்ணு இல்ல ரண்டு இல்ல, ஆறு குட்டி போட்டிருந்தது அந்தப்பூனை.

ஒண்ணொண்ணும் ஒவ்வொரு கலர்ல.ஒண்ணு முழுக்க கறுப்பு, கொஞ்சம் அதோட அம்மாவ மாதிரியே சாம்பல் கலர்ல ஒண்ணு, இன்னொண்ணு முழுக்க பூசினாப்ல அங்கங்க திட்டு திட்டா வெள்ளையும் கறுப்புமா இப்டீ ஆறு குட்டிகள்.! எனக்கு இதுவரை இந்தப்பூனை , நாய் இதெல்லாம் இந்தச் செல்லப்பிராணிகள்லாம் வளர்த்து அனுபவமில்ல.சரி, என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமேன்னு அங்கயே வளரட்டும்னு விட்டு வெச்சேன், அப்ப அந்தக் குட்டிகளுக்கு கண்ணு கூடத்திறக்கல.ஒண்ணோட ஒண்ணு முட்டி மோதிக்கிட்டு ஒண்ணு மேல ஒண்ணு விழுந்துக்கிட்டு போறதப்பாத்தா எனக்குச் சிரிப்புத்தாங்கல. அப்பப்ப பால்கனிக்கதவத் திறந்து பார்க்கிறதும் மூட்றதுமா இருந்தேன்.


காபி போட்றதுக்கு வெச்சிருக்கிற பால்ல கொஞ்சம் தண்ணியக்கலந்து ஒரு கொட்டாங்குச்சீல ஊத்தி அம்மா பூனைக்கு வெப்பேன்.மடக்கு மடக்குன்னு குடிச்சு ஒரே நிமிஷத்துல காலி பண்ணிரும். பாவம், அதுக்குப்பசி. குட்டிகளை ஈன்றபின்னர் அவைகளை விட்டு வெளியில போயி இரை தேட முடியாத அவஸ்தை அதன் கண்களில் காண முடிந்தது.அது குடிச்சு முடிச்சவுடனே குட்டிகளுக்கு இடையே போய்ப்படுத்துக்கிட்டு அவற்றுக்கு பால் கொடுப்பதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே அப்டியே தரைல உட்கார்ந்திருப்பேன்.

பெங்களூர்ல அப்ப அடைமழை இன்னும் ஆரம்பிக்கல.அதனால குட்டிகள் அந்த பால்கனில வெச்சிருந்த டீ.வி.அட்டைப்பெட்டிகள் பக்கத்துல படுத்துக்கிட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தன.அடிக்கிற வெயில்லருந்து தம்மைக் காத்துக்கொள்ள பெட்டிக்குப்பின் பக்கம் கூனிக்குறுகி முடங்கிக்கிடப்பதையும் பல சமயங்கள்ல பார்த்துருக்கேன்.அன்னிக்கு ராத்திரி சரியான மழை.எனக்கே கொஞ்சம் கஷ்டமாத்தானிருந்தது. அந்தக்குட்டிகள்லாம் என்ன பண்ணும், மழைல செமத்தியா நனையப்போகுதேன்னு. காலைல அவசரமா எழுந்து பார்த்தப்ப அதேதான் நடந்திருந்தது.எல்லாக்குட்டிகளும் நனைஞ்சு,ரோமங்கள்லாம் உடலோட ஒட்டிப்போயி நடுங்கிக் கொண்டிருந்தன. அம்மா பூனையைத் தேடிப்பாத்தேன் காணோம். இரை தேடப்போயிருக்கும் போல.


அரிசி வாங்கி வந்த ஒரு பாலித்தீன் பையை தரையில் விரித்து வைத்துவிட்டு , ஹோம் தியேட்டர் அட்டைப்பெட்டியை எடுத்து அதற்குள்ளிருந்த தெர்மோகோல்களை அகற்றிவிட்டு பெட்டியைக்கவிழ்த்து அதன் மேல் வைத்து விட்டேன். பெட்டிக்கு மேலே அந்த தெர்மோகோல்களை வைத்து தண்ணீர் உள்ளே விழாவண்ணம் பாதுகாத்து வைத்தேன். பூனைகள் உள்ளே சென்று வர ஏதுவாக கத்தியை வைத்துக்கீறி , அதன் உயரத்திற்கேற்றவாறு அந்தப்பெட்டியில் வாசல் அமைத்துக்கொடுத்தேன். குட்டிகள் அது வரை என் கால்பெருவிரலை ஏதோ புதிய ஜந்துவைப் பார்ப்பதைப்போல உற்று நோக்கிக் கொண்டிருந்தன.சில குட்டிகள் அதை நுகர்ந்து பார்க்கவும் எத்தனித்தன.

இதைச்செய்து முடிக்குமுன்னர் அம்மா பூனை வந்தேவிட்டது.எங்கே என் மீது தாவி நகங்களை வைத்துக் கீறிவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். அப்படி ஏதும் செய்யவில்லை. ஏதோ புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதே என்று நோட்டம் விட்ட அது, முதலில் அந்த வாசல் வழி பெட்டிக்கு உள்ளே சென்று பார்த்தது. பார்த்த வேகத்தில் வெளியே வந்து குட்டிகளைத் தம் பற்களால் கவ்வி எடுத்துச்சென்றது. அதைப்பார்த்த மற்ற குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே சென்று அமர்ந்து கொண்டன. ‘அப்பாடா என்றிருந்தது எனக்கு. தரையிலமர்ந்து கொண்டிருந்த நான் , கொஞ்சம் தலையைச்சாய்த்து, கன்னத்தை தரையில் வைத்துக்கொண்டு அந்தப்பெட்டியின் வாசல் வழியாக உள்ளே பார்த்தேன். குடும்பம் ஏகக்குஷியில் இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.இனி மழை பெய்தாலும் கவலையில்லை.


அவ்வப்போது பூனைக்குப் பால் வைப்பதும் , அந்தக்குட்டிகளின் சேட்டைகளை ரசிப்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக்குட்டிகளுக்கு கொட்டாங்குச்சியில் வைக்கப்பட்டிருந்த பாலை நக்கிக்குடிக்க இன்னமும் தெரியவில்லை. தாய்ப்பூனை மட்டுமே குடித்துக்காலி செய்து வந்தது. பாலூற்றப்போகும்போது , குட்டிகளை கை கொண்டு விலக்கும்போது , தாய்ப்பூனை தனது முன்னங்காலை தன் கழுத்தளவு உயர்த்தி உயர்த்திக் காண்பிக்கும், பின்னர்தான் புரிந்தது என் குட்டிகளை ஒன்றும் செய்யாதே, உன் நண்பன் நான் என்ற அறிவிப்பு என்று. சில நாட்கள் அப்படி செய்து காட்டிய அது , பிறகு என்னால் அதன் குட்டிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று உணர்ந்தபின்னர் அப்படிக் காலைத்தூக்கிக் காட்டுவதை நிறுத்திக்கொண்டது. பழகிப்போய்விட்டது அதற்கும் எனக்கும் .
 
பால் ஊற்றுவதற்காகப் பால்கனிக்கதவை எப்போது திறந்தாலும் குட்டிகள் அந்த இடுக்கின் வழி என் அறைக்குள் வந்து விடவே எத்தனிக்கும். தாய்ப்பூனையும் கூடவே வந்தே விடும். உள்ளே யூபிஎஸ், பேட்டரி, இன்னபிற எலக்ட்ரிக் வஸ்ததுகள் இருப்பதால் எனக்கு எப்போதும் பயம். குட்டிகள் நேரே அந்த யூபிஎஸ் டப்பாவுக்கும் தரைக்கும் கீழேயுள்ள இடைவெளியில் சென்று அமர்ந்து கொள்ளும்.வெளியே எடுப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகிவிடும். தாய்ப்பூனையை போக்குக்காட்டி பாலைக்குடிக்க வைப்பதற்குள் சில குட்டிகள் கிடைக்கும் வயரை தம் பற்கள் கொண்டு கடிக்க எத்தனிக்கும். அதன் வாயிலிருந்து ஒயரை பெரும் சிரமத்துடனேயே எடுத்து எடுத்துவிடுவேன்.


ஒரு வழியாக தாய்ப்பூனை பால் குடித்து முடித்தவுடன் பால்கனிக்கதவை சாத்திவிடுவதே சாலச்சிறந்தது. எல்லாக் குட்டிகளையும் கைகளால் தூக்கி ( இப்போதெல்லாம் தாய்ப்பூனை என்னைக் கண்டு கொள்வதேயில்லை. கால் தூக்கிக்காட்டுவதோ இல்லை. குரலெழுப்பவோ முயற்சிப்பதில்லை ) வெளியே கொண்டுபோய் விடுவதற்குள் , முன்னர் வெளியே விட்ட குட்டி என் காலைச் சுற்றிக்கொண்டு பின்னரும் அறைக்குள் வந்துவிடும். எப்படியும் கால் மணி நேரமாவது ஆகிவிடும் அவை அனைத்தையும் வெளியேற்றி கதவைச் சார்த்திவிட. பின்னர் உள்ளேயிருந்து கண்ணாடி வழியே வெளியே எண்ணிப்பார்த்து ஆறு வெளியே உலாத்துகிறது என்று பார்த்த பிறகே எனக்கு நிம்மதியாக இருக்கும்,
 
வெறும்பாலை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறோமேன்னு நினைச்சு, மால்ல எதாச்சும் பூனை உணவு கிடைக்குமான்னு நாளைக்குப் பார்க்காலாம்னு நினைத்துக்கொண்டேன். மல்லு பஜார்ல ( மலையாளிநடத்தும் மஹா பஜார் , அதான் மல்லு பஜார் ), ‘Cat Food எந்தெங்கிலும் கிட்டுவோன்னு , உண்டல்லோன்னு அவர் பறஞ்சு, ஒரு Cat Food Packet ஐ எடுத்துக்காட்டினார், எதோ கொரியன் பாக்ஸ் அது(இதுவும் கொரியாலருந்து தான் வரணுமா ? ) , விலை Rs 145/- ன்னு போட்ருந்தது. அடப்போங்கடா ,நானே ஒரு வேளைக்கு Rs 145/-க்கு சாப்டறதில்ல, இதுல பூனைக்கி வேறயான்னு நினைத்துக்கொண்டு , ‘சேட்டா வேறேந்திங்கிலும் ப்ராண்ட் உண்டோன்னு, இல்லா, இது ஒன்னு மாத்றமேயுள்ளு, நல்லதாணு இது, எல்லாவரும் இதுதன்ன வாங்குகயாணு " என்றார். ‘இல்லா வேறெந்தெங்கிலும் சீப் ஃபுட் உண்டோன்னு" "சீப் அங்ஙன ஒண்ணும் கிட்டுல்லா, வேணங்கி மீனு கொடுத்து நோக்கு, பாசகம் ஒண்ணும் செய்யேண்டா, மாசால ஏதும் இடாதே வெறுதே அங்ஙனே கொடுத்தா மதி, நன்னாயிட்டு உண்டுகோளும்" என்று சொந்த அனுபவத்தில் பரஞ்சார் சேட்டன். "நாங்க வீட்ல மீன் சாப்டறதில்லையேன்னு" சொன்னேன் "அங்ஙன பறா" என்று கூறிச்சிரித்தார் சேட்டன். ஹ்ம், இப்ப அதுவும் போச்சு, அதே தண்ணிப்பால்தான் உனக்கு என்று நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் அவ்வப்போது நான் சாப்பிடும் தோசை, இட்லி வகையறாக்களை போட்டு வந்தேன். முதலில் முகம் சுளித்தாலும் பின்னர் பாலில் கலந்து கொடுத்தபின்னர் குட்டிகளுடன் சேர்ந்து உண்ணத் தொடங்கிவிட்டது.


 அவ்வப்போது பெய்யும் சிறு மழையில் அந்தக்குட்டிகள் நனைந்து கொண்டு , தம் சிறு உடம்பைச் சிலிர்த்துக்கொள்ளும் , காணக்கண்கோடி வேணும் அதற்கு. இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு தண்ணிப்பாலிலுமாக வளர்ந்து வந்தன. எப்படா பால்கனிக் கதவைத் திறப்பான் உள்ளே வந்து விளையாடலாம்னு காத்துக்கிடக்கும் அவை. சன்னல் கதவின் கொண்டியை சடார் சடாரென அடித்து விளையாடிக்கொண்டிருக்கும் அவை வெளியில். ஒண்ணு மேல ஒண்ணு படுத்துப்புரள்வதும் , காதைக் கடித்துக்கொண்டு இழுப்பதுமாக ஏகக்குஷியில் ஆடிக்கொண்டிருக்கும். அடர்மழையென்றால் அவற்றை வெளியில் காணக் கிடைக்காது , அட்டைப்பெட்டிக்குள் சென்று தஞ்சமடைந்துவிடும்.
 
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது, அவை பால் குடிப்பதும் கொட்டிக் கவிழ்ப்பதுமாக, கொஞ்சம் நாற்றம் அடிக்கத்தொடங்கியது , சுத்தம் செய்யாது பல நாட்களாக அப்படியே கிடந்த பால்கனி , இப்போது புதிதாக பூனைக்குடும்பம் வேறு குடிபுகுந்து , அவற்றின் எச்சங்களும் , பால் கறையுமாகச்சேர்ந்து கொண்டு நெடி அடிக்கத்தொடங்கியது. இந்த அழகில மீனை வேறு கொண்டு வந்து அதற்குக்கொடுத்தால் . இருந்தாலும் அன்னிக்கு ராத்திரிலருந்து ஏகத்துக்கு முடை நாற்றம் அடிக்கத்தொடங்கியது.அறைக்கதவை மூடி வைத்து உறங்கி எழுந்தேன். பின்னர் பால்கனிக்கதவைக் காலையில் எழுந்து பார்த்தால் , அங்கே ஒரு பெரிய பெருச்சாளியை அடித்துக்கொண்டு வந்து போட்டிருந்தது அந்தத் தாய்ப்பூனை. குட்டிகளும் தம்மாலியன்ற வரை அதைத் தின்ன முயன்று கொண்டிருந்தன. அதான் முடை நாற்றம். படாரென கதவைச் சார்த்தி விட்டேன். என்னதான் பாலும் தோசையும் குடுத்தாலும் கடைசியில் பூனை அது புத்தியைக் காட்டிருச்சேன்னு நினைத்து மாய்ந்துபோனேன். அதோட ஜீன்ல இருக்கிற சங்கதி , பத்து நாள் பால்லயும் , தோசைலயும் மாறி விடுமா என்ன ?


இப்ப எப்டி க்ளீன் பண்றது இத ? ஹ்ம்.சரி வாட்ச்மேன் கிட்ட கேட்டுப்பாக்கலாம்னு நினைச்சு தேப் சிங், ஏக் பில்லினே பச்சா பைதா கர்க்கே பூரா கச்சரா கர்தியா , தோடா சாஃப் கர்னேக்கா"( ஒரு பூனை குட்டியப்போட்டுவெச்சு பூரா குப்பையா ஆக்கி வெச்சிருக்கு, க்ளீன் பண்ணணும்) , ‘சாப் உஸ்கோ டச் கரேகாத்தோ காட்டேகா சாப் ,சுபஹ் கரேகா சாப், அபி மந்திர் ஜானேகா" ( சார், அததொட்டா கடிக்க வரும் சார், இப்ப நான் கோயிலுக்கு போறேன் , காலைல பண்றேன் சார் ) . "நஹி அபி கர்னா படேகா" (‘இல்ல இப்பவே பண்ணனும்)’ , டீக் ஹை சாப் , ‘இஸ்கோ பேஜ்தாஹூம் , இஹ் கரேகா’ ( சரி , இவன அனுப்பறேன் , இவன் பண்ணுவான் ) , கூடவே வந்தான் அவன். அறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு , பால்கனிக்கதவைத்திறந்தேன். நாற்றம் எங்கேயென்று மூக்கில் அறைந்தது. "சாப் ஏஹ் டப்பா ஃபேக் தூம்" (சார் இந்த டப்பாவை தூக்கிப்போட்றவா -அந்தப்பூனை வீடு ) , சரி வேற வழியில்ல, "ஃபேக் தோ" (தூக்கிப்போடு) என்றேன். அதற்குள் குட்டிகள் என் அறைக்குள் வந்து விட்டிருந்தன. பெருச்சாளியைக் கீறித்தின்ற கால்களுடனும் ,மூக்குடனும் , அவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை துப்புரவாக்குவதை ஜன்னல் கம்பிகளில் ஏறி நின்று கொண்டே பார்த்துக்கொண்டிருந்தது அந்தத்தாய்ப்பூனை. என்னைப்பார்க்கவே அஞ்சிக்கொண்டிருந்தது போலிருந்தது எனக்கு. பிறகு தண்ணீர் ஊற்றிக்கழுவிட்டு, குட்டிகளை எடுத்து பால்கனிக்குள் கொண்டு போய்விட்டான். ஏற்கனேவே ஈரமாகியிருந்த தரையில் பட்டும் படாமல் நடந்து சென்றன அவை. எல்லாவற்றையும் கொண்டுபோய் விட்டு , பின்னர் பால்கனிக்கதவை சார்த்திவிட்டான்.


பாத்ரூமிற்குள் சென்று கைகால் கழுவிவிட்டு வந்த அவன், "சாப்" என்று தலையைச் சொறிந்தான். பத்து ரூபாயை எடுத்துக்கொடுத்தேன், " சாப் அவுர் தோ சாப்" ( சார் கொஞ்சம் போட்டுக்குடுங்க சார்) , ‘பஸ்ரெ, பாத் மேன் தேத்தா ஹூன்’ (சரிப்பா, பின்னால வாங்கிக்க) , ‘நஹி சாப்’ , என்று முரண்டு பிடித்தவனை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அனுப்பி விட்டு, வந்தவன் மீண்டும் பால்கனியை மூடியிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன், ஏதும் நடவாத மாதிரியே அவை ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. சரி, ஏதோ பிரச்சினையை முடிச்சாச்சுன்னு நினைத்துக்கொண்டு அறைக்கதவை இன்று திறந்து வைத்து விட்டு ( இனி நெடியில்லை என்ற நிம்மதியில் ) உறங்கச்சென்றேன்.

காலையில் எழுந்து ஆசுவாசமாக பால்கனியை எட்டிப்பார்த்தால் , இன்னும் இரண்டு புதிய எலிகள் தம் தலையையும் , உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தபடி கிடந்தன பால்கனித்தரையில் . வயிற்றைக்கிழித்து உருவும் சதையை சப்புக்கொட்டிக்கொண்டு குட்டிகள் தின்று கொண்டிருந்தன , பிறகென்ன , வாட்ச்மேனைக் கூப்பிட்டால், தலையைச் சொறிந்து கொண்டு இன்னும் அம்பது ரூபாய் கேட்பானே என்று நினைத்து , வாரியலையும் , ட்ரேயையும் எடுத்துக்கொண்டு நானே க்ளீன் செய்ய ஆரம்பித்தேன்.அப்போதும் ஒன்றும் நடவாத மாதிரி அந்தத் தாய்ப்பூனை ஜன்னல் கம்பிகளில் ஏறி நின்றுகொண்டு என் வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தது .

எலி, பெருச்சாளி, மற்றும் மீன் தின்னாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பூனை கிடைக்க ஏதேனும் வழியிருக்கிறதா ? இருந்தால் கீழுள்ள முகவரியில் எனக்குத் தெரிவிப்பவர்க்கு உடனே H1B Visa கிடைத்து, US போய்ச்சேர்ந்தவுடனே கையோடு கையாக Green Card-ம் கிடைக்க அந்த ஸ்ரீரங்கப்பெருமாள் நிச்சயம் வழியுண்டாக்குவான்


.

 

Saturday, November 24, 2012

முயன்று தோற்கிறேன்




முழு வானவில்லைப் பார்க்க 
முயன்று தோற்கிறேன்

சோம்பல் முறிக்கும் அணிலின்
முதுகைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


கூவி வரவழைத்த மழையில்
கரைந்து போன அந்தக்

குருவியைப்பார்க்க முயன்று தோற்கிறேன்

சீராகப்பெய்து கொண்டிருந்த மழைச்சாரலை

மெல்லவே கலைக்க முயன்ற
தென்றலைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மரங்களினூடே தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கும்
மைனாவின் இருப்பிடத்தைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மழை இல்லாக்காலங்களில் தென்படாத
நத்தைகளைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


மழை பெய்து முடித்த பின் அதற்கு முந்தைய
நிலப்பரப்பைப்பார்க்க முயன்று தோற்கிறேன்


பல நாட்கள் சகஜமாகப்பழகிய பின்னரும்
என் காதலை அவளிடம்
சொல்ல முயன்று தோற்கிறேன்


இந்தப்பட்டியலில் இன்னமும்
கோர்க்கவியலும் தோல்விகளை
சுவைபடச்சொல்ல இயலாமல்
உங்களிடம் இன்னமும் தோற்கிறேன்.


.

Wednesday, November 21, 2012

ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்



“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன் :) அநாவசியக்காட்சிகள் இல்லை,முக்கியமாக ஏகத்துக்கு ஆச்சரியம்
Hero Worship இல்லை. Cliches இல்லை,Punch Dialogues இல்லை, திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளோ பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளோ இல்லை..என்ன இது விஜய் படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்று எனக்கே ஆச்சரியம். முருகதாஸுக்குத்தான் நன்றி சொல்லணும். 

‘கில்லி’க்குப்பிறகு , சொல்லிக்கொள்ளுமாறு வெற்றி பெற்றது ‘போக்கிரி’ தவிர வேறு எந்தப்படமும் இல்லை விஜய்க்கு. ஃபாஸில் போல ஒரு நல்ல இயக்குநர் கிடைத்தால் விஜயாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.Very Nice Screenplay , எந்த இடத்திலும் தொய்வே இல்லை, கஜினிக்குப்பிறகு , ஏழாம் அறிவில் சொதப்பியதை ‘துப்பாக்கி’யால் சுட்டு சரி செய்துவிட்டார் இயக்குநர். அதெல்லாம் சரி ,விஜய்க்கு பெயர் ஏன் “ஜக்தீஷ்” , ஒரு நல்ல தமிழ்ப்பெயர் கூடவா கிடைக்கவில்லை ?! விஜயோட Body Language ரொம்பவே மெருகேறி இருக்கிறது. B Grade Movies ல வர்ற மாதிரி (திருப்பாச்சி) பண்ணாம கொஞ்சம் முன்னேறி வந்துருக்கார் , Thanks to Murugadas :)


காஜலை விட்டால் வேறு ஹீரோயின்களே கிடையாதா என்று கேட்குமளவுக்கு தொடர்ந்து அவரே ரவுண்டு கட்டி அடிக்கிறார் , இப்போதான் சூர்யாவுடன் மாற்றானில் ரஷ்யாவுக் கெல்லாம் போய் டூயட் பாடினார், இங்க பாம்பேல விஜய் கூடவும் ஆட வந்துட்டார். Hero Oriented Movies ல வழக்கமா Heroines என்ன பண்ணுவாங்களோ அதையே தான் செய்திருக்கார். “கூகிள் கூளில்” பாட்டில( Crazy Frog Song தான் அது ) அவர் போட்டிருக்கும் உடை மட்டுமே உற்றுப்பார்க்கவைத்தது  என்னை . நான் கூட அந்தக்கருப்புப்பட்டி மட்டுந்தான் இருக்கோன்னு ஒரு நப்பாசைல தொடர்ந்து “உற்று” நோக்கிக்கொண்டிருந்தேன் அவர் “Performance” ஐப்பார்க்க ( நம்புங்க :) ), ஆனாலும் அந்த வெள்ளைப்பட்டியும் கூடவே அவர் உடுப்புல சேர்ந்துதான் இருக்கு,,,ஹ்ம்..ச்ச ஏமாத்திட்டானுங்கப்பா :) ஜோக்கர் ஜெயராமுடன் , விஜயும் , காஜலும் அந்த காஃபி ஷாப்பில் சந்திக்கும் காட்சி அப்படியே “ நான் மகான் அல்ல” மாதிரியே இருக்கு, காஜலும் அதே மாதிரி நடிச்சு இன்னும் வலுவா அதை ‘ஞாபகப்’படுத்து’றார் :) இருப்பினும் ஒரு ‘மேட்டருக்கு’க்கூட ஒன்னயப் புடிக்கலையேன்னு அவர் விஜயைக்கலாய்ப்பது அருமை :)

இந்த சத்யன் ஏன் எப்பவுமே “சத்யராஜ்” மாதிரி பேசியே நம்மளக்கொல்றார்னு புரியல.Same body language, Dialogue delivery எல்லாமே அப்படியே சத்யராஜ் தான், ‘என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்க்றீங்களே’ன்னு மட்டுந்தான் சொல்லல.மத்தபடி எல்லாமே அவரையே மாதிரிதான் இருக்கு படம் முழுக்க.

இசை பற்றி எழுத ஒன்றுமே இல்லை, ஹாரிஸ் தன்னோட Style Maintain  பண்ணியே தீருவேன்னு அடம்புடிக்கிற மாதிரி முழுக்க முழுக்க Run Of the Mill , and Mostly Plagiarized Songs of his own தான் . கொஞ்சம் வெளிய வாங்க ஹாரிஸ், ராஜா , ரஹ்மானெல்லாம் இப்ப மாறிட்டங்க , இன்னும் நீங்க அதே “உள்ளம் துள்ளுமா”ன்னு பாட்டயே போட்டுக்கிட்டு இருந்தா எப்படி ? Spice Girls ன் Wannabe இசைக்கிறது காஜல் வரும் காட்சிகளிலெல்லாம், அப்புறம் விஜயும் காஜலும் முட்டிக்கொள்ளும் இடங்களில் Mozart’s  Serenade No 13 பாதில நிறுத்தி நிறுத்தி வாசிச்சும் தொல்ல பண்றார் (எங்க முழுசா வாசிச்சா கண்டுபுடிச்சிருவோம்னு பயத்துல :) ).”முதல் மழை எனை நனைத்ததே”,”சுட்டும் விழிச்சுடரே”ன்னு இசைத்த மெலடிகளை ஹாரீஸிடம் இப்போதெல்லாம் கண்டுபிடிக்க முடிவதேயில்லை. காஜலைப்பெண் பார்க்கும் படலத்தில் “சாமி மாமி”யின் “இதுதானா” என்று கஞ்சிராவும் எட்டிப்பார்க்கிறது. கற்பனை வளம் குறைகிறது ஹாரிஸ்.புதுசா எதுனா செய்யுங்க :) அதோட Chasing Scenes ல அதிவேகமாக இசைக்கப்படும் பின்னணி இசை “Double O seven “ படங்களில் எப்போதும் வரும் கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன காலகாலமாக இசைக்கப்படும் இசை மட்டுமே :)




“Minority Report” படத்தில Pre Crime ன்னு ஒரு Concept , Tom Cuiseஐ வெச்சிக்கிட்டு ,குற்றம் நடக்குமுன்னரே அவரின் மனநிலையறிந்து அதைத்தடுப்பது, அதிரடியாக நுழைந்து அவரைக்கைது செய்வதுங்கறத காட்டியிருப்பார் Speilberg. அதயே நம்ம முருகதாஸ் கொஞ்சம் தமிழுக்காக மெருகூட்டி , பாட்டு, காஜலின் உடம்பில் கருப்புப்பட்டி உடை( ஹிஹி), கொஞ்சம் நாட்டுப்பற்றுங்கற இன்னபிற “விஜய்காந்த்” வஸ்துகளையெல்லாம் கோர்த்து நம்ம தலைல கட்டி விட்ருக்கார் :) கூடவே “ரமணா” Concept தான் இது, அங்க விஜய்காந்துக்கு அவர் கிட்ட படிச்ச Students எல்லாரும் Sleepers ஆ வேலை பார்ப்பாங்க , நாட்டுக்கு நல்லது பண்றதுக்குத்தான் இங்க Real Sleepers , பக்கத்து நாடுகள்லருந்து இங்க வந்து இறையாண்மையை சீர்குலைக்கிறது. புதுசா ஒண்ணும் இல்ல. ஆனாலும் திரைக்கதை வலுவா இருக்கிறதால வெற்றி :) ஆனாலும் படம் முடியும்போது விஜய் Sleeper ல தான் போறார்..ஹிஹி.. Sleeper Coach லங்க. :)

கத்தி வெச்ச கழுத்துக்கு இதமா , கொய்யாப்பழ ஜூஸ் குடுக்குறார் பாருங்க விஜய் , அவர் தங்கைக்கு, அங்கதான், எந்த நிலையிலும் மன உறுதி முக்கியம்னு இருக்கற கேரக்டர் அழகா சொல்லப்பட்டிருக்கு. இவ்வளவு ஹிந்தி பேசுவார் விஜய்னு இப்பதான் தெரியுது :) , இப்ப கடந்த 10-15 வருஷமா படிக்கிற பசங்கல்லாம் Convent-லயே ஹிந்திய படிச்சு வெச்சுக்கிட்டு நம்ம உயிர வாங்குறாய்ங்க :) , இருந்தாலும் தமிழனோட Accent  வாடை அடிக்கத்தான் செய்யுது விஜய் ஹிந்தி பேசும் போது, அதுல தப்பிக்கிறது நடிகர் “மாதவன்” மட்டுந்தான், அவர் பேசினா மட்டும்தான் உ.பி.காரன் பேசற மாதிரியே இருக்கும் :) விஜயின் தங்கை ஃபோனை எடுத்தவர்கிட்ட “ஹிந்தி”ல பேசுறார், ஆனா அவர் இங்கிலீஷ்ல பதில் சொல்றார், எங்கயோ இடிக்குதே முருகதாஸ் ?! :)

  

Perfect Villain , அங்க ஏழாம் அறிவுல Dong Lee , இங்க வித்யுத் ஜம்வால், பில்லா 2 வில நடிச்சதவிட இங்க அருமையா பண்ணிருக்கார். Lip Sync பிரமாதம்.அதிக வசனங்கள் இல்லாம இருந்தாலும்.அதோட அந்த உச்சக்கட்ட காட்சில கப்பலின் மேல்தளத்தில ,கிட்டத்தட்ட பில்லா-2 வில ரஷ்யாவில கோட்சூட் போட்டுக்கிட்டு இருக்குறவங்க கூட அவர் போடுவது போலான சண்டை Perfect.

சரி படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே சட்டையைக்கழட்டி ஹேங்கர்ல் போடலாம்னு Cup Board ஐத்திறந்தால் உள்ள “வாயக்கட்டி வெச்ச” Terrorist கால மடக்கி ஒக்காந்துக்கிட்டு இருக்குறா மாதிரி ஒரு Feeling. Nice Idea Murugadas :) அதோட விட்றாரா விஜய் , கூடவே ரெண்டு மணிநேரத்துக்கு எந்திரிக்க மாட்டான்னு ஒரு மயக்க ஊசி வேற போட்டுட்டு அவர் பாட்டுக்கு சர்ச்ல கல்யாணத்துக்கு வேற போயிட்றார். சத்யனவிட நமக்குதான் இங்க “பதக் பதக்”ங்குது :)

ஐந்து தங்கைகளைக்கடத்தி வைத்துக்கொண்டு வில்லன் மிரட்டும் காட்சிகள் , தொடக்கத்தில் இருந்து முடியும் வரை ஏற்கனவே இப்படித்தான் நடக்கும்னு நமக்கு உள்ளூரத் தெரிஞ்சாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை :)



‘ஆயிரம் பேரக்கொல்ல நினைக்கிறவனே தன்னை மாய்த்துக்கொள்ள தயாரா இருக்கும்போது அதே ஆயிரம் பேரக்காப்பாத்த நினைக்கிறவன் தன் உயிரைக்கொடுக்க தயாராத்தான் இருக்கணும்’ங்கற வசனம் நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் அதையே ரெண்டு தடவ விஜய் சொல்றதால சலிப்புதான் வருது :)

படத்தில் இத்தனை நிறைகள் இருப்பினும் ஒரு வலுவான கருத்தைப்பதிய விரும்புகிறேன் இங்கு. ஐரோம் ஷர்மிளாவின் காலவரையற்ற உண்ணாநோன்பைப்பற்றியும் , பக்கத்து நாட்டில் போய், கடலை எண்ணை வைத்து காய்த்துக்குடித்தது போக, அங்கு செய்துவைத்து விட்டு வந்தவைகளைப்பற்றியும், இன்னமும் அந்த சோகங்களில் வாடும் குடும்பங்களைப்பற்றியும் இந்த விஜய் ஜக்தீஷும், முருகதாஸும் அறியமாட்டார்களா ? அதென்ன பிரச்னையில் தமக்குப்பிடித்த ஒரு பக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு வியாபார நோக்கில் ஒரு படத்தை சுட்டுத்தள்ளிவிட்டால் போதும் என்று இவர்களின் நினைப்பு என்பதுதான் எனக்குப்புரியவில்லை.

தமிழில் நாட்டுப்பற்று பாடலை பாடினார் “ஜெயம் ரவி” என்பதற்காக “பேராண்மை” படத்தில் அந்தக்காட்சிகளை அடியோடு நீக்கச்சொன்னது இந்தியத் திரைப்படத் தணிக்கைக்குழு. இங்கு முழுக்க முழுக்க ஹிந்தி புகுந்து விளையாடுகிறது படம் முழுக்க (பாம்பே பின்னணி என்ற சாக்கில்) , பல சமயங்களில் நான் என்ன தமிழ்ப்படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா இல்லை ஹிந்திப்படமா என்று கூட சந்தேகப்படும்படி அத்தனை ஹிந்தி வசனங்கள், என்ன நடக்கிறது ? விஜய் ராணுவ உடுப்பில் இருந்துகொண்டு பெண் பார்க்கும் படலக்காட்சியில், இந்த உடுப்புக்கு “ஜன கன மன” தான் பாடமுடியும் என்று வேறு ஒரு வசனம் , ஏன் “நீராரும் கடலொடுத்த” என்று வசனம் வைத்திருந்தால் ஆகாதா ? ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதையும் , அது போலான காட்சிகளில் பின்னணி இசை அதை உறுதிப்படுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.

இது போல அடிப்படைக்குறைகளை ,,ஹ்ம்..நீக்கிவிட்டுப்பார்த்தால் , வலுவான தொய்வில்லாத திரைக்கதை, சரியான இடங்களில் வரும் பாடல்கள் (பாட்டு ஒண்ணும் சரியில்லை என்பது வேறு விஷயம்), Tight Closeupல வந்து பேசாத Punch Dialogues , இவையனைத்தும் வெகு நாட்களாகக் காத்துக்கிடந்த விஜயையும், ஏழாம் அறிவு கொடுத்து சொதப்பிய முருகதஸையும் வெற்றி பெற வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.


.