Monday, April 19, 2021

இரண்டாம் அலை

 

ஒரு நாளைக்கு குறைந்தது 30-35 உடல்கள் எரிக்கவென எடுத்து வரப்படு கின்றன. கடந்த இரண்டு மாதங்களில். பெங்களூரில் இருக்கும் கிரிமட்டோரியங்களின் ( மின் மயானங்கள்) எண்ணிக்கை இப்போது கூட்டப்பட்டு இருக்கிறது ஒரு உடல் முழுதுமாக எரிய நான்கு மணிநேரம் ஆகுமாம். அப்படியானால் ஒரு நாளைக்கு ஐந்து உடல்கள் மட்டுமே எரிக்க இயலும். குஜராத்தில் இந்த மின் மயானங்களை தொடர்ந்து இயக்கியதின் விளைவாக உடலை ஏந்தி உட்செலுத்தும் இரும்புக் கம்பிகள்/ குழாய்கள் அதீத வெப்பத்தில் உருகி வழிந்து விட்டன. இரும்பு உருக வேண்டுமெனில் கிட்டத்தட்ட 1500டிகிரி செண்டிக்ரேட் வெப்பம் தேவைப்படும். குறைந்தது நான்கு மணிநேர ஓய்வு கொடுத்தாலொழிய அந்த மயானங்களை சரியாக பராமரிக்க இயலாது. 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கி உடல்களை எரித்துக் கொண்டிருந்த மின் மயானங்கள் இப்போது செயலிழந்து கிடக்கின்றன. உடல்களை மயானத்தின் வெளியே மரக்கட்டைகளை வைத்து எரிக்கப் பணிக்கின்றனர். 
 
இங்கு குந்தலஹள்ளி ( என் வீட்டிற்கு மிக அருகில் உள்ளது ) மின்மயானத்தில் குறைந்தது பத்து ஆம்புலன்ஸ்கள், இறுதி ஊர்வல வண்டிகள் என வரிசை கட்டி நிற்கின்றன தமதுமுறை வருவதற்கு. . இந்த வண்டிகள்/ஆம்புலன்ஸ்கள் கிடைக்கப்பெறாத கரோனா தாக்கி உயிரிழந்த உடல்கள் குப்பை வண்டிகளில் எடுத்துச்செல்லப்படுகின்றன. இங்கு எதிர்த்த தெருவில் வசித்த 30 வயதுக்குள் உள்ள ஒரு பெண்மணியின் இறப்பு கண் முன்னால் நிகழ்ந்தது. நினைத்ததை விட பெரிய இழப்புகளை கொடுக்கத் தான் போகிறது இம்முறை. 
 
எங்கள் அப்பார்ட்மெண்ட்டில் மீண்டும் சுவரொட்டி ஒட்டி வைத்திருக்கிறோம்.. சானிட்டைஸர்களும் எச்சரிக்கை அறிவிப்புகளுமாக. மீண்டும் வந்து விட்டது இது ஒரு சுழல் தப்ப முடியாத சுழல். #இரண்டாம்அலை

கடவுளின் கைகள்

 

 
 

 
உறவினர் என யாரும் அனுமதிக்கப் படவியலாத நோய் முற்றிய நோயாளிகள் மட்டும் தனித்திருக்கும் வார்டுகளில் ,அங்குள்ள செவிலியர் இது போன்ற ஒரு க்ளவுஸ்களை தயாரித்து வைத்து, நோயாளிகள் இறக்கும் தருவாயில் இந்த க்ளவுஸ்களை அவர்களின் கைகளுக்கு மேலும் கீழூமென முடிச்சிட்டு வைத்திடுவர். இதை அந்த செவிலியர்கள் ‘கடவுளின் கைகள்’ (Hands of God ) என்றழைக்கின்றனர். 
 
கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு கடவுளின் கையாவது கிட்டட்டும். இந்த க்ளவுஸ்களின் உள்ளில் இளஞ்சூடான வெந்நீரை ஊற்றி வைத்துவிடுவர். அது அவர்களுக்கு யாரோ தமது கைகளைப்பிடித்து இருக்கின்றனர் என்றே தோன்றும். கடவுளே..! #கடவுளின்கைகள்

Friday, April 9, 2021

ஜோஜி

 



ஜோஜி. இன்னொரு ஃபஹத் படம். ஃபஹத்தை ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர். நடிப்பில் முதிர்ச்சி வரத்தான் மாட்டேனென்கிறது. அற்புதமான ஸீன் எதுவெனில் அந்த பாகம் பிரிக்க வேண்டி கீழ்தளத்தில் அமர்ந்து அனைவரும் ஆலோசிக்கும் தருணம். சரேலென கண்ணாடி கீறிவிட்டாற்போல ஒரு கலக்கம், கொஞ்சம் முகம் வாடிப்போகும் தருணம் என ஃபகத்’தின் முக பாவம் அருமை. சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு போகும் போது வெடிக்கும் வெடிகளை ஒரு பெருமிதத்தோடு பார்ப்பதை ஏற்கமுடியவில்லை. அவர் இத்தனை நாளும் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த தருணம் அது. வேடிக்கை பார்க்க புறப்பட்டது போல ஒரு பாவம். பாவம்.

கதை ‘மேக்பெத்’ என்றெல்லாம் எழுத்தில் வந்தது. 80களில் அக்கால டெல்லி தூர்தர்சனில் ‘முஜ்ரிம் ஹாஸீர்’ என்ற ஒரு தொடர் வந்தது. அதில் இப்படித்தான் படுக்கையில் கிடக்கும் தந்தையின் சிகிச்சைக்கென செலவு அதிகமாகி அனுபவிக்க நினைக்கும் சொத்தே அழிந்து விடுமோவென மகனே முடித்து வைப்பான்.

முடிவு முற்றிலும் யூகிக்கக்கூடியதாகிவிட்டது. அதுபோல மீன் பிடிக்கும் போது ஜோஜியின் அப்பா தண்ணீருக்குள் இருந்து தலையை நீட்டிக் கொண்டு வெளிவருவது என...நிறைய க்ளீஷே.. அருமையான ரப்பர் தோட்டம், அத்தனை பச்சைப் பசேலென்ற சுற்றுச்சூழலில் ஒரு அரண்மனை போன்ற ஒரு வீடு. ’ஆராணது’ என்ற உப்பரிகையில் அமர்ந்திருக்கும் அச்சனின் குரல் கேட்டு ‘ சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஜோஜி ’நிங்களுடே ராஜ்ஜியத்திண்டே ப்ரஜாவாணு’ என்று பதிலளிப்பது என சில காட்சிகள் தெள்ளத் தெளிவாக வெளித் தெரிகிறது. வலித்துப் பிடித்து முழுதும் உட்கார வைத்துப் பார்க்க வைக்கும் படம். #ஜோஜி