Wednesday, December 14, 2011

ஜகத் சித்திரம் : வசன கவிதை

பாரதி எழுதிய ஒரு சிறு நாடகத்திலிருந்து ஒரு காட்சி.
பறவையினங்களும், மிருகங்களும் தமக்குள் உரையாடுதல்
போல.....


 
கிளி பாடுகிறது: -- தைர்யா, தைர்யா, தைர்யா --
              தன்மனப் பகையைக் கொன்று
              தமோ குணத்தை வென்று
              உள்ளக் கவலை யறுத்து
              ஊக்கந் தோளிற் பொறுத்து
              மனதில் மகிழ்ச்சி கொண்டு
              மயக்க மெலாம் விண்டு
              சந்தோஷத்தைப் பூண்டு
              தைர்யா, ஹுக்கும், ஹுக்கும்!
              ஹுக்கும், ஹுக்கும்!
              ஆமடா, தோழா!
              ஆமாமடா,
              எங்கோவா, எங்கோவா!
              தைர்யா, தைர்யா, தைர்யா!

கிளி: --  கேளீர், தோழர்களே! இவ்வுலகத்தில் தற்கொலையைக்காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக்
காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை.

எருமை மாடு: -- பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும்,ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே? இதன் காரணம் யாது?

நாகணவாய்: -- டுபுக்! வெயில் காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் 
மிருக மனிதர்களைக்காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு
சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக
நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம்
அதிகம். மிருக மனிதஜாதியார்களுக்குள் இருப்பதைக்காட்டிலும்
எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக
சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக்
காலங்கழிக்கிறோம். இருந்தாலும், கிளியரசு சொல்லியதுபோல்,
காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய் எங்கள்
குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம்
தேடவேண்டும். கவலையைக் கொல்வோம் வாருங்கள்.
அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.

மற்றப்பக்ஷிகள்: -- வாருங்கள், வாருங்கள், வாருங்கள் துயரத்தை அழிப்போம்,கவலையைப் பழிப்போம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்.

3 comments:

  1. //எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம்
    அதிகம்///
    பகிர்வுக்கு நன்றி .பாரதியின் இரசனையும் சரி எந்த வகை எழுத்துக்களானாலும் சரி படித்து சுவைத்துக்கொண்டிருக்கலாம் :-)

    ReplyDelete
  2. @S.Sudharshan : அவனது ஒவ்வொரு எழுத்தும்,ரசிக்கத்தகுந்தவை...அவனை வாசிப்பதே இன்பம்..! :-))

    ReplyDelete
  3. தற்போது தான் இதுபற்றி ஒரு சொற் பொழிவில் கேட்டேன் ஆகவே இதுபற்றி வாசிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது உடன் கூகுள் உதவியுடன் இதை படித்தேன் நன்றி

    ReplyDelete