Tuesday, May 29, 2012

நீர் சொட்டும் கவிதைநனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து
நீர் மட்டுமே தாரை தாரையாகச்
சொட்டிக்கொண்டிருந்தது
சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட
அதில் திடீரென அன்னப்பறவைகள்
நீந்தத்தொடங்கின

எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று
நினைத்த பொழுதில்
அவை என்னைப்பார்த்து அகவின
அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை
யாவும் கவிதைகளாகவே இருந்தன.

புத்தகத்தை கையிலெடுத்து
உலரச்செய்து நோக்கும்போது
அதில் நான்காம் பக்கத்தில் இருந்த
அன்னப்பறவைகளும்
அவற்றோடிருந்த கவிதைகளும்
கரைந்து போயிருந்தன.


.

Tuesday, May 22, 2012

சில மேகங்கள்

சில மேகங்கள்
எப்போதும் மலைமுகடுகளில்
வயதானவர்கள் போல் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
காற்று வரும்போது கலைந்துகொள்ளலாம்
என்று சோம்பேறிகள் போல் காத்திருக்கின்றன

சில மேகங்கள்
கீழிருக்கும் மனிதருக்கு உகந்த வகையில்
அவர் ஏற்கனவே அறிந்த வண்ணம் உருக்கொண்டு
அவரை மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
இடையிடையில் இடைவெளிகள் விட்டு
சூரியத்தலைவனுக்கு கீழிருக்கும்
பூமியைக்காட்டிக்கொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
கருக்கொண்டு கீழிருக்கும் வயல்களை
நனைக்க காத்திருக்கின்றன

சில மேகங்கள்
தம்முள் புகுந்து கொண்ட விமானங்களை
மறையச்செய்து சிறிதுநேரம் வரை வெளிவரவிடாது
போக்குக்காட்டிக்கொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
தம்மைக்காண நேரில் வந்த விமானப்பயணிகளுக்கு
அவர்களின் ஜன்னலூடாகத் தமது வாழ்த்துகளை
தெரிவிக்க முயன்றுகொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
காற்றடிக்கும் திசையெங்கும்
இலக்கின்றிப் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன

சில மேகங்கள்
நடந்து கொண்டிருந்த மூதாட்டிக்கு நிழல் தரவேண்டி
அவரின் நடைபாதையெங்கும் வியாபித்துக்கிடக்கின்றன

சில மேகங்கள்
கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின்
ஏசல்கள் தாங்காது திடலின் ஓரமாக நின்று
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
தம்முள் தேக்கி வைத்திருந்த
பெருமழையைக் கொட்டித்தீர்த்துவிட்டு
வீட்டுக்குள் இதுவரை முடங்கிக்கிடந்த
சிறுவர்கள் ஹோ என்று இரைந்தபடி
வெளிப்பட்டதைக்கண்டு அகமகிழ்வுடன்
கலைய முற்பட்டன

சில மேகங்கள்
ஓவியனுக்கு இன்று நல்ல காட்சிகள்
தரவேண்டி சூரிய ஒளியை தம்முள் சிதறடித்து
வர்ணஜாலங்களைக் காட்டிக்கொண்டிருந்தன

சில மேகங்கள்
தம்மிலிருந்து பெய்த சாரல்களிலிருந்து
உருவான வானவில்லைத்தாமே ரசித்துக்கொண்டிருந்தன.

சில மேகங்கள்
தம்மை வரைபவர் எப்போதும்
மலைகளோடும், ஆதவனோடும்
சிறு பறவைகளோடுமே வரைவதை
உள்ளுக்குள் ரசித்துக்கொண்டு உம்மென்றிருந்தன.சில மேகங்கள்
வெளுப்பாக இருந்துகொண்டு
நீல நிற வானை வெள்ளையடித்துக்கொண்டிருந்தன

சில மேகங்கள்
இன்று விடுப்பு எடுத்துக்கொண்டதுபோல்
நீல நிற வானை தனியே விட்டுச்சென்றுவிட்டன

சில மேகங்கள்
எங்கே காணோமே என்று விசனப்பட்டோருக்கென
இரவில் வந்து தம்முகம் காட்டிக்கொண்டிருந்தன.

சில மேகங்கள்
கொதித்துக்கொண்டிருக்கும் குழம்புக்கு
காய் நறுக்கிக்கொண்டிருக்கும் என் அம்மா போல்
அவசரஅவசரமாக அடுத்த ஊருக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.சில மேகங்கள்
தவழ்ந்து புரண்டு மிகவும் சோம்பல் கொண்டு
அசையவும் இயலாது நிலை கொண்டிருக்கின்றன,

சில மேகங்கள்
இங்கு பெய்யும் என நினைப்போரை ஏமாற்றிவிட்டு
அடுத்த ஊரில் போய்க்கொட்டித்தீர்த்து விட்டு
இந்த ஊர்க்காரர்களின் பழியை ஏற்றுக்கொண்டன

சில மேகங்கள்
ஆலங்கட்டி மழையெனப்பொழிந்து
அவர்களின் தலைகளைப்பதம் பார்த்துக்கொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
வானிலிருந்து பெரிய துதிக்கை போல கீழிறங்கி
கடலில் நீரை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றனசில மேகங்கள்
கடலிலிருந்து பெற்ற நீரை கொஞ்சமும் உப்பு இல்லாது
மழையாகப் பொழியச்செய்த மாயத்தை
அறிவியல் மாணாக்கனிடம்
கேள்விகளாக எழுப்பிக்கொண்டிருக்கின்றன.

சில மேகங்கள்
தலையுயர்த்திப்பார்த்து ‘யப்பா என்னா வெய்யிலு’
என்று கூறுபவரை ஆசுவாசப்படுத்த நிழல்
கொடுக்க முயன்று கொண்டிருக்கின்றன.

சில மேகங்கள்
பெரிய தட்டில் வைக்கப்பட்ட நிறைய க்றீம்
கொண்ட வெண்ணிற பனிக்குழைவு போல
இருந்துகொண்டு சிறுவர்களின்
ஆசையைத் தூண்டிக்கொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
தேவதைகள் என வானில் ஏதுமில்லை
அவர்கள் எங்களினூடே காட்சியளிப்பதுமில்லை
என்று உண்மையைப் பகர்ந்துகொண்டிருக்கின்றன

சில மேகங்கள்
இலைகளின் பச்சையம் ஊறவேண்டி
சூரிய ஓளி கேட்டு நிற்கும் பெரிய மரத்தின்
விண்ணப்பத்தையும் பொருட்படுத்தாது
தொடர்ந்தும் அதன் மேலேயே நிலை கொண்டிருக்கின்றன.

சில மேகங்கள்
தமக்குள் போர் கொண்டு
ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு இடி
மின்னல்களைத் தரையிறக்கிக்கொண்டிருக்கின்றன.

சில மேகங்கள்
தாம் பெய்துவிட்ட மழையில் தேங்கி நிற்கும்
சிறு குட்டைகளில் முகம் பார்த்து அகம் மகிழ்ந்துகொண்டிருக்கின்றன.

சில மேகங்கள்
இது போன்ற கவிதைகளை
எப்போதும் எழுத வைக்கத் தம்மிலிருந்து
சாரல்களைத் தூவிக்கொண்டேயிருக்கின்றன.

சில மேகங்கள்
இது போன்ற கவிதைகளை
வாசித்த பின்னராவது தம்மை தலையுயர்த்திப்
பார்க்கமாட்டார்களா என்ற ஏக்கத்தில் அலைந்துகொண்டிருக்கின்றன.

.

Tuesday, May 15, 2012

என் அக்கா மாயம்மா
துடுக்காகப்பேசுவாள் என் அக்கா
அதற்கே அவளை லாபாய்ண்ட் என்றே அழைப்பர் பலரும்.
எனினும் அவளின் இயற்பெயர் கொண்டு அழைத்தால்
ஏனோ அவளுக்குப்பிடிப்பதில்லை

தனக்குப்பிடித்த பெயர்களை ஒவ்வொன்றாக
நாளொன்றுக்கும் கிழமையொன்றுக்குமாக
மாற்றிக்கொண்டேயிருப்பாள்
ஷோபா, ஷர்மிளா என்று க்ரந்தம் வருமாறு
அமைத்துக்கொள்வதில் அவளுக்கு ஏனோ மிக விருப்பம்

ஷோபாவின் திரைப்படங்களை
மிகவும் விரும்பிப்பார்ப்பாள்
சில நேரங்களில் அவர் போல
நடித்தும் காண்பிப்பாள் எனக்கு
அவளின் புத்தக அலமாரியில் படங்களை
ஒட்டி வைத்திருப்பாள்
கூடவே முண்டாசு கட்டியவரின் படங்களும்
ஆங்காங்கே காணக்கிடைக்கும்

என்னையும் அந்தப்புதிய பெயர்களை
வைத்தே கூப்பிடுமாறு சொல்லுவாள் என் அக்கா.
நானும் ஷோபாக்கா, ஷர்மிளாக்கா என்றே
கூப்பிட்டுக்கொண்டிருப்பேன்

நான் திடலில் பயல்களோடு விளையாடிக்கொண்டிருந்தால்
என்னோடு மார்க்கெட்டுக்கு வா ப்ளம்ஸ் வாங்கித்தருகிறேன்
என்று ஆசை காட்டுவாள்
கூடப்போனால் சொன்னபடி வாங்கியும் கொடுப்பாள்
மார்க்கெட்டில் படிக்கல்லை வாங்கி சரிபார்ப்பதையும்
தராசுத்தட்டில் கீழே ஏதும் புளி ஒட்டியிருக்கிறதா
என்றும் சரிபார்க்கவும் தயங்கமாட்டாள்

பாரதி பற்றி மிகப்பெருமையாகப்பேசுவாள்
புதுமைப்பெண் என்றெல்லாம்
நானும் அந்த பாரதி ஏதோ அவளின் தோழி போலிருக்கிறது
என்று நினைத்துக்கொள்வேன்

ஒரு முறை பாரதி வேடமிட்டு பள்ளிக்கூட நாடகத்தில்
நடிக்கும்போது தான் அறிந்தேன் அவன் ஒரு கவியென்று
அவள் அப்படி ஆண்வேடமிட்டு நடித்ததில் எனக்கு
சிறிதும் உடன்பாடிருந்ததில்லை

பாரதியை எனக்குப்பிடிக்காது என்று வலுவாகவே
அவளிடம் கூறுவேன்
பிடிக்காது என்று சொல்லாதே , அவரை உனக்குத்தெரியாது
என்று சொல் என்பாள்

தட்டச்சு குறுக்கெழுத்து என்று பலவும் பயின்றுகொண்டாள்
வேலைக்கு விண்ணப்பித்த போது உள்ளே இருந்த
கவரில் தபால் தலை ஒட்டவேண்டுமா என்று கேட்டு
கடைசிநாளில் என்னால் அதை அனுப்ப இயலாது
போனது கண்டு கடிந்துகொள்ளவும் தோணவில்லை அவளுக்கு.

புரட்சி ,போராட்டம் ,அடக்குமுறை, பெண் விடுதலை
வரதட்சணை ,கையூட்டு, லஞ்சம் , எனத் தமிழில் இத்தனை
சொற்கள் உண்டு என்று எனக்கு அறிமுகப்படுத்தியது அவள்தான்
அத்தனையையும் கேட்டுக்கொண்டு உம் கொட்டுவேன்
கிஞ்சித்தும் புரியாமல்.

பிறகும் தபால்தலை சரியாக ஒட்டி அனுப்பிய
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று வெகு நாட்கள்
வீட்டில் தான் இருந்தாள்,
என்னக்கா இன்னும் வேலைக்குப்போகவில்லையா என்று கேட்டபோது
போஸ்ட்டிங்கிற்கு லஞ்சம் கொடுக்கவேண்டுமாம் என்றாள்.
தானாக வரட்டும் என்றே இரண்டு மூன்று ஆண்டுகள் காத்திருந்தாள்.

அவ்வப்போது சில கவிதைகளும் எழுதி
என்னிடம் காண்பிப்பாள் , அவையெல்லாவற்றிலும்
மேற்கூறிய அனைத்துப் புரட்சிகளும் காணக்கிடைக்கும்
எழுத்துக்கூட்டி வாசித்துப் பொருள் புரியாமல் விழிப்பேன்
என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே
இதெல்லாம் நீ பெரியவனான பிறகு
உனக்குப் புரியும் என்று பூடகமாகச் சொல்லுவாள்.


ரயிலேறி அடுத்த ஊர்களுக்குச்சென்று
குறுக்கெழுத்து வகுப்புகள் நடத்தி வருவாள்
தெருவில் அனைவராலும் ராங்கிக்காரி
என்ற அடைமொழியிலேயே அழைக்கப்படுவாள் என் அக்கா.
அதை அவள் ஒரு பொருட்டாகக்கூட
மதிப்பதை நான் பார்த்ததில்லை

வயது ஆண் பெண் என்ற
சிறு வித்தியாசம் கூடப்பாராட்டாது
அனைவரிடமும் சகஜமாகப்பேசுவாள்
விவாதிக்கவும் தயங்கமாட்டாள்
எனினும் அவளுக்கு நெருங்கிய தோழியோ
தோழனோ இருந்து நான் பார்த்ததேயில்லை.

எப்போதும் என்னிடம் நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும் தேவையென்று
கூறிக்கொண்டேயிருப்பாள் ,
அதைக்கேட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு
அலைந்து கொண்டிருப்பதைப்பார்த்துவிட்டு
பெரிய க்ளாஸ் பயல்களிடம் நான்
பலமுறை அடி வாங்கியதுண்டு

அவளுக்கு திருமணம் செய்துவைக்க முயன்று
வீட்டில் பலமுறை தோற்றுப்போயினர்
வந்தவனிடம் ஏதேனும் குறை கண்டுபிடித்து
தட்டிக்கழித்து விடுவாள் என் அக்கா.

இலங்கை வானொலியில் ஒலிக்கும்
‘பாரதி கண்ணம்மா நீயடி செல்லம்மா’
பாடலை காதோடு வைத்து
எப்போதும் கேட்டுக்கொண்டேயிருப்பாள் என் அக்கா.

தொடர்ந்த நாட்களில் அவளின் பிடி தளர்ந்து
கொஞ்சம் நீர்த்துபோவதை
என்னால் கண்கூடாகக்காண முடிந்தது
பிறகு வீட்டில் பார்த்து வைத்த
ஒருவருடன் திருமணமும் நடந்தது
மணவறையில் கட்டிக்கொண்ட தாலியை
ஏதோ தாம்புக்கயிறு போலவே 
பார்த்துக்கொண்டிருந்தாள் என் அக்கா

சீர் செனத்தியோடு தனிக்குடித்தனமும்
போனாள் என் அக்கா , கூடவே நானும் சென்றேன்
என் அக்காவின் புது வீட்டுக்கு.
இருப்பினும் வேலைக்குத்
தொடர்ந்து போவதை நிறுத்தவேயில்லை என் அக்கா

கொஞ்ச நாளைக்கெல்லாம் எங்கள் வீட்டிற்கு
அடிக்கடி வரத்தொடங்கினாள் என் அக்கா
பெரியவர்களின் பேச்சு எனக்கு சிறிதும் விளங்கியதில்லை
வரும்போதெல்லாம் எனக்கு ஏதேனும்
வாங்கி வரத்தயங்கியதில்லை அவள்.
அப்போதெல்லாம் பாரதி பற்றிய பேச்சே எடுப்பதில்லை அவள்
வெறித்துப்பார்ப்பதும் , தனக்குள் சிரித்துக்கொள்வதுமாக
எங்கள் வீட்டில் இருக்கும் நாட்களைக்கழிப்பாள்

வெகுகாலம் கழித்து அவளுக்கு ஒரு
ஆண் குழந்தை பிறந்தது.
மிகவும் மகிழ்ச்சியோடு
தூக்கிக்கொஞ்சுவதும் அவனோடு கூடவே
நாட்களைக்கழிப்பதுமாக இருந்தாள் என் அக்கா.

படிப்பு முடிந்து எனக்கு வேலை கிடைத்து
வெளியூரில் தங்கத்தொடங்கியதும்
அவளுடன் தொடர்ந்தும் பேசும் வாய்ப்புகள்
குறைந்தேதான் போனது

உறவினர் திருமணத்தில்
என் அக்காவைச்சந்தித்தபோது,
‘அவனுக்கு இஞ்சினியரிங் காலேஜில சீட் வாங்கறதுக்கு
நாலு லட்சம் கேக்றானுங்கடா
கொஞ்சம் பேரம் பேசிக்கொறச்சு
ரெண்டர லெட்சத்துல முடிச்சுட்டேன்’ என்றாள்
அதோடு விட்டுவிடாமல்
‘என்ன ஒன் மகளுக்கு எவ்வளவு போடுவ ?
என் பையன் இன்னும் நாலே வருஷத்துல
இஞ்சினியர் ஆயிருவான்’ என்றாள்
என் அக்கா மாயம்மா.


Tuesday, May 8, 2012

யுவனின் பில்லா-2 இசை விமர்சனம்முழுக்கப்புதிதாகவும் , முன்னெப்போதும் கேட்டிராத இசைக்கோவைகளுடனும் களமிறங்கியிருக்கிறார் யுவன் இந்த பில்லா-2வுக்கென. முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பாடல்கள் முழுக்க இளைஞர்களை கவரவைக்க வேணுமென்ற முயற்சியிலேயே பின்னப்பட்டிருக்கிறது.இதுவரை கேட்டிராததாக இருக்க வேணுமென்ற முயற்சியில் ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் யுவன். அதே முயற்சி பின்னணி இசையிலும் இருக்கும் என்றே நம்புவோம். பில்லா-1 ல் அவருக்கு சில அழுத்தங்கள் இருந்ததென்பது உண்மைதான். ரஜினி பாடியவற்றை மீளக்கொண்டு வந்தே ஆகவேண்டுமென்று , படமே ரீமேக் என்பதால் , இருப்பினும் தீம் ம்யூஸிக்கில் கலக்கியிருந்தார்.அதில் பாடல்கள் அனைத்தும் “ My name is billa “  தவிர அனைத்தும் புதிதாகவே இருந்தது .இங்கு அப்படி ஒரு கட்டுப்பாடும் இல்லை , முழுச்சுதந்திரம் இவருக்கு ..! எப்போதும்  Sequel  என்று வரும்போது முன்னது மாதிரி இல்லயே என்ற பேச்சு எப்போதும் எழும், அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் அசத்தித்தானிருக்கிறார் யுவன்.  இது Sequel இல்லை, முழுக்க Original  :-)


ஏதோ மயக்கம்

Brass Concert மாதிரி செய்யலாம்னு நினைத்தார் போலிருக்கு யுவன்.பாடல் முழுக்க Brass and Saxophone Treatment ஆகவே இருக்கிறது. தன்வி கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் பாடலை ஆரம்பிக்கிறார் .ஸாக்ஸஃபோனுடன் தொடங்கும் பாடல் Aqua Girl ஐ கொஞ்சம் ஞாபகப்படுத்தும் Harmonyயுடன் ஒலிக்கிறது.பின்னர் யுவன் தொடங்கும்போது அதன் சங்கதி அறவே அற்றுப்போகிறது. Savage Garden Animal Song ன் தாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் அவற்றின் சாயல்கள் முழுதும் தெரிந்துவிடாது இசைக்கிறது பாடல். முழுக்க முழுக்க Pub-லே திரும்பத்திரும்பப் போடுவதற்கு வசதியாக பாடல் கட்டமைப்பு.  தன்வி ‘நா நா நா ‘ என்று நம்மைக்கூப்பிடும்போது Aqua Girl எட்டிப்பார்க்கிறார் நம்மை :-) 1:56 ல் ஆரம்பிக்கும் ஸாக்ஸ் 2:11 வரை நீண்டுகொண்டு பாடலை நமக்காகப்பாடிக்காட்டுகிறது. நா.முத்துக்குமார் “ இங்கே வந்து உய்யடா” ன்னு எழுதீருக்கார் , அப்டீன்னா என்னான்னு சொஞ்சம் சொல்றீங்களா எனக்கு சத்தியமா புரியவில்லை..! 3:47-ல் தன்வி ஒலிக்கருவியுடன் இணைந்து பாடும்போது என்னால் கூடப்பாடுவதைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.Compelling and Repeating  Song..! :-) பாடல் உச்சத்தை அடையும்போது யாருக்கும் கூடச்சேர்ந்து பாடத்தோணவில்லை என்று கூறவே இயலாது..!.யுவன் இடையிடையே வந்து Dance Dance with me என்று கூப்பிட்டுக் கொண்டே தானிருக்கிறார்..வாங்க ஆடப்போகலாம்.. :-) 
கேங்க்ஸ்ட்டர்

விரலை விட்டு நம்பர் சுழற்றும் பழைய டெலிஃபோனில் , நாம் டயல் செய்யும் போது எழுவது போன்ற ஒலியுடன் துவங்குகிறது பாடல். நடுங்கும் குரலுடன் ஆரம்பிக்கிறார் ஸ்டெஃப்னி .Electric Guitar ன் Piece உடன் தொடர்ந்தும் ஒலிக்கிறது பாடல் , பில்லா-1 ன் தீம் ம்யூஸிக்குடன்.நான் எல்லோருக்கும் ப்ரெண்டு”.என்ற ஏகனின் பாடல் போல இடையிலே ஒலிக்கத்தான் செய்கிறது. அதுவும் தல படந்தானே :-) அதனால இருக்கலாம். 2:17 ல் தொடங்கும் Synth ன் இசை 2:47 வரை தொடர்கிறது. Stefani உடன் அந்த கிணற்றுக்குள் இருந்து ஒலிக்கும் குரலும் சேர்ந்தே ஒலிக்கிறது Gang Gang Gangster என்று, பிறகு தளர்ந்தே ஒலிக்கும் பில்லா தீம் கொஞ்சம் புதுசாகத்தானிருக்கிறது. இதையும் Rock  ஸ்டைல்லயே தான் இசைத்திருக்கிறார் யுவன். எனது Home Theater   அதிர ஆரம்பிச்சது இன்னும் முடியவேயில்ல..! :-)மதுரைப்பொண்ணு

Eric Clapton Style-ல் தளர்வாக Tune செய்யப்பட்ட Guitar Strings உடன் ஆரம்பிக்கும் பாடல் இது. Yodeling ஆன்ட்ரியா’விற்கு இந்த மதுரப்பொண்ணு கொஞ்சம் புதுசு தான்.முழுக்க வெஸ்ட்டர்ன்ல பிளந்துகட்டியவருக்கு மத்தளமும், தளர்வான தந்திகளின் வாசிப்புகளும் ஒத்துப்போகும் என்று எப்படித்தான் நினைத்தாரோ யுவன்..இருப்பினும் அருமையாகப் பொருந்திப்போகிறது. கோவாவில் அவர் ஆன்ட்ரியாவிற்கு கொடுத்திருந்த “இதுவரை” பாடல் Perfect Western Style ,  அவரின் ஸ்டைலுக்கு கன கச்சிதமாகப்பொருந்தக்கூடியது! மாண்டலினுக்கு மத்தளம் போல இந்தப்பாடலில் ஆன்ட்ரியாவின் அரேபியன் ஸ்டைல் ஜுகல் பந்திக்கு மத்தளமும் கனகச்சிதமாகப் பொருந்திப்போகிறது. உங்களுக்கு “ஒட்டகத்தக்கட்டிக்க” நினைப்பு வந்தா அதற்கு நான் பொறுப்பில்லை. :-) பாடலின் பின்னால் ஒலிக்கும் ஷெனாய் கேட்கும் போது அரேபியன் ஸ்டைல் நீறுபூத்த நெருப்பு போல தெரிகிறது .(இருப்பினும் மங்காத்தாவின் “பல்லேலக்கா” பாடலை நினைவுபடுத்தவும் தவறவில்லை). மல்லிகா ஷெராவத் இந்தப்பாடலுக்கு ஆடினா ரொம்பப்பொருத்தமா இருக்கும் ..ஹிஹி... :-) முன்னாடி எல்.ஆர்.ஈஸ்வரி பாடின அத்தனை பாடல்களையும் ஆன்ட்ரியா’வ வெச்சு ரீமிக்ஸ் பண்ணினா ரொம்பப்பொருத்தமா இருக்கும்னு தோணுது எனக்கு இந்தப்பாடலைக் கேட்டபிறகு.. :-)  கிட்டத்தட்ட இதே மாதிரியான Genre-ல  அதிகம் பேசப்படாத பாணா காத்தாடி’ல “உள்ளாரப்பூந்து பாரு” ன்னு ஒரு பாட்டு போட்டிருந்தார் யுவன் , அதோடு இதையும் சேர்த்துக்கலாம், அரேபியன் ஸ்டைல் அந்தப்புர அற்புதப்பாட்டு,.!


இதயம்

Mild Guitar Piece உடன் ஆரம்பிக்கும் பாடல், இங்க பாருங்க, இந்தப்பாட்டுல Hard றாக்கோ இல்ல வெஸ்ட்டர்னோ எதிபார்க்காதீங்கன்னு யுவன் நம்ம கிட்ட சொல்லிவிட்டே ஆரம்பிக்கிறார் .பாடல் ஆரம்பித்து முடியும் வரை எனக்கு ராஜா சாரின் “Nothing But Wind” ஆல்பத்தில் வரும் “Song of Soul” ஐயே நினைவுபடுத்துகிறது. பிரபு சார் சொன்ன மாதிரி எல்லாரும் சிவாஜியப் போல நடிக்கும்போது நான் நடிச்சா மட்டும் ஏன் குத்தம் சொல்றீங்கன்னு , அதே மாதிரி எல்லாரும் ராஜா சார் போல இசைக்கும்போது அவரது குழந்தை செய்யலாகாதா என்ன ?! :-) வலுவான தபேலாவும்,கூடவே பயணிக்கும் வீணையும் என் கவனத்தை திசை திருப்ப முயன்றாலும் ராஜாவே என் காதுகளில் ரீங்காரமிடுகிறார். மேலும் இந்தப்பாட்டு ஷ்வேதா பண்டிட் பாடியது என்று என்னால் நம்பவேமுடியவில்லை. “ இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா” என்று அவர் பாடும் போது எனக்கு ஷ்ரேயா கோஷலையே  நினைவுபடுத்துகிறது. 0:57 ல் தொடங்கும் Synthன் மெல்லிய  இசைத்துணுக்கு பாடலின் ராகத்தை இசைக்க பின்னர் 1:13 ல் தொடர்ந்து வாசிக்கும் வீணை நம்மைக்கொள்ளை கொள்கிறது !

“உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்” என்பது “நமக்கு உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறை இதயம்” என்றே கேட்கிறது ...ஹ்ம்...அதுவும் சரிதானே
:-) ஹிந்துஸ்த்தானி ஸ்டைலில் தபேலா ஒலித்தாலும் நம்ம தமிழ்ப்பாட்டாகத்தான் தெரிகிறது. இந்தமாதிரி கொஞ்சம் ஹிந்துஸ்த்தானி டச் இருக்கிற பாடல்கள்னா வட இந்தியப்பாடகிகளுக்கு லட்டு சாப்டறாமாதிரி தான்.வெளுத்துக்கட்டீருக்காங்க ஷ்வேதா பண்டிட். அதுவும் அந்த சரளி வரிசை வரும்போது அச்சசல் ஹிந்துஸ்த்தானியேதான். இருந்தாலும் ஷ்வேதாவிற்கு இன்னொரு லட்டு தின்ன ஆசையிருந்தும் யுவன் அந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை. படத்துல இன்னொரு பாட்டு ஷ்வேதாவிற்கு இல்லைன்னு சொல்றேன் :-) 2:16-ல் ஆரம்பிக்கும் தபேலாவில் உருட்டல்களும் , மற்றும் பின்னர் 2:21-ல் தொடங்கும் புல்லாங்குழல் பிட்டும் , பின்னர் 2:33-ல் ஆரம்பித்து 2:51-ல் முடியும் சரளி வரிசையும் சஞ்சரிக்கிறது நம் மனதில் அப்படியே ராஜா சாரின் ஸ்டைல்ல :-) இந்த Interlude ராஜா சாரின் அத்தனை பாடல்களிலும் ஒலித்த Interludes களைப்போலவே காலாகாலத்துக்கு அலை பாய்ந்து கொண்டேதானிருக்கும் நம் மனதில் அதற்கு நான் Guarantee. :-)

இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ ?
இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ..?!
வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே ..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே ..

Nothing But Wind “Song of Soul “:  http://youtu.be/LjYGlxQN_vU 
உனக்குள்ளே மிருகம்

Rock க்கிற்கே உரித்தான Electric Guitar ன் பிளக்கும் இசையுடனேயே பாடல் ஆரம்பிக்கிறது .Who am I Who am I என்று பரத் கேட்டுக்கேட்டு பாடிய ‘வானம்’ படத்தின் பாடலின் மறுபதிப்பு இது. “காதல் டூ கல்யாணம்” என்ற இன்னும் வெளிவராத படத்தில் இடம்பெற்றிருக்கும் “ தேடி வருவேன்” என்று யுவன் அமைத்திருக்கும் பாடலையும் அடிப்படையாகக்கொண்டு Rock இசையை நம்ம தமிழுக்கு கொண்டுவந்துள்ள இன்னொரு முயற்சி. ஏற்கனவே ராஜா சார் போட்டு வைத்த காதல் திட்டம் “ என்று  சிங்காரவேலனிலும் , இப்போது ரஹ்மான் Rock star-ல் Sadda Haq-மாக செய்து பார்த்ததுதான். தமிழ் கூறும் நல்லுலகிற்கும் Hard Rock கிற்கும் கொஞ்சம் ரொம்பவே தூரம் தான்..நம்மளால ரசிக்க முடிவதில்லை.பாடலில் பிறகு தொடர்ந்து பில்லா 1– ல் வந்த தீம் ம்யூஸிக்கை இசைத்து நம்மை ரஞ்சித்’தின் குரல் மூலம் அவர் வழிக்கு இழுத்துச்செல்கிறார் யுவன்..! இருந்தாலும் இந்த மாதிரி Hard Rock தமிழுக்கு ஒத்து வருமான்னு சந்தேகம் தான். எல்லாரும் கொஞ்சம் ஊறுகாய் தொட்டுக்கிர்ற மாதிரி அப்பப்ப ஒண்ணு ரெண்டு பண்ணிட்டு அப்புறம் விட்டுடுவாங்க.அதேதான் யுவனும் செய்திருக்கார். Canadian Rock Star Bryan Adams ன் Everything I do I do it for you மாதிரியோ இல்லை, அவரின் Here I am (Stallion Movie Track) மாதிரியோ Mild Rock ஆக முயற்சி செய்ய இன்னும் யாரும் முன்வரவில்லை..! :-) 1:48 ல் தொடர்ந்து கொஞ்சும் Electric Guitar Pieceக்குப்பிறகு பில்லா-1 ல் கொடுத்த தீம் மியூஸிக்கை வாசிக்கிறார் யுவன். “எனக்கு நண்பன் யாருமில்லையே , எனக்கு பகைவன் யாருமில்லையே” என்று பாடும்போது , பின்னில் Echo Effect கொடுத்து வரிகளுக்கு உரமேற்றி நம் கவனத்தையும் வரிகளை நோக்கி திசை திருப்புகிறார் யுவன். Pure Hard Rock தான் “உனக்குள்ளே மிருகம்”. Enjoy..!

தேடி வருவேன் :http://youtu.be/GPoK8k-iEzU
பில்லா-2 தீம் ம்யூஸிக்

ஜூரஸிக் பார்க் – போன்ற திரைப்படங்களில் வரும் அழுத்தமான ஷெனாய் மற்றும் புல்லாங்குழல் போன்ற Wind Instruments களின் ஊதல்களுடன் ஆரம்பிக்கிறது தீம் ம்யூஸிக் , வலுவான Double Bass ஐயும் வைத்துக்கொண்டு , ஒவ்வொரு சிறு துணுக்குகளாக இசைக்கோவையை சின்ன Symphony போல இசைத்திருக்கிறார் யுவன், பழைய பில்லா-1ன் தீம் ம்யூஸிக்கையே. இடையிடையே Electric Guitar ன் சுழிப்புகளுடன்  ,முழுக்க ஸிம்ஃபொனி ஸ்டைலில் தொடங்கி முடியவும் செய்கிறது இந்த தீம் ம்யூஸிக்.


.