Thursday, December 29, 2011

ஒற்றை மழைத்துளிநேற்றிரவு பெய்த மழையில்
எனது மொட்டுகள் முழுசாக
நனைந்து தான் விட்டன

நீர்த்துளிகள் தொடர்ந்து விழுந்து,
அதன் பாரம் தாங்காது
அவை தொய்ந்து போய்க்கிடந்தன

விரைவில் மலரும் என்று
விழி வைத்துக்காத்திருந்தேன்
பகலவனை எதிர்பார்த்து
மொட்டுகளும் காத்திருந்தன

நேரம் ஆக ஆக
எனக்கு பொறுமையின்றிப்போனது
அவை அங்கனம்
ஏதும் காட்டிக்கொள்ளவில்லை

மழையில் குளித்தெழுந்த
சூரியனும் தன் பூசணம் பூத்த
கதிர்களை மொட்டுகளின்
மீதேவினான்

மெல்லச்சோம்பலுடன்
விரிந்த ஒரு மொட்டு
தம்முள் யாருமறியாது
தேக்கி வைத்திருந்த
ஒற்றை மழைத்துளியை
எனக்கு மட்டும் காட்டியது.


.

Monday, December 26, 2011

மீன் குழம்புமீன் குழம்பு என்றாலே
எல்லோருக்கும் பிடிக்கும்,
மீன் குழம்பை புளிப்பா காரசாரமா
சுள்ளுன்னு வைக்கணும் என்பார்கள்.
கர்ப்பிணி பெண்கள்,
ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள்,
பியர் குடித்தவர்கள்,
என எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும்,
மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது,
எவ்வளவு வேண்டுமானாலும்,
எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம்.
அதில் இது ஒரு ஈசியான முறை.
மீனை கடைசியில் தான் போடணும்
இல்லை என்றால் குழைந்து விடும்.
தேங்காய் பவுடர் இல்லாதவர்கள்,
தேங்காய் பத்தை நான்கு
அரைத்து பால் எடுத்து ஊற்றவும்.
மீன் குழம்பிற்கு
பிளெயின் சாதம், இடியாப்பம்,
ரொட்டி,ஆப்பம்,தோசை,மைதா அடை,
பருப்படை என எல்லாம் பொருந்தும்.
காஷ்மீரி சில்லி சேர்ப்பதால்
காரம் இல்லாமல்,அதே நேரம்
நல்ல சிவப்பு கலராகவும் இருக்கும்.
அப்படித் தயாரித்த மீன் குழம்பை
இரண்டு நாள் வைத்து
சாப்பிட்டால் அதன்
சுவையே தனி தான்.

அந்த மீனை அப்படியே கடலிலே
விட்டிருந்தால் தன் பாட்டுக்கு
நீந்திக்கொண்டிருக்கும்
.


.

Saturday, December 24, 2011

வன்முறைக்கவிதைநகம் வெட்டிக்கொண்டிருந்த போது
சிறிது சதையையும் சேர்த்து
வெட்டிவிட்டது நகவெட்டி

துணுக்காக வெளியேறிய
ரத்தம், சிறிது பெருகி
வழியத்தொடங்கியது.
நின்று விடும் என்று நினைத்து
கவனியாமல் விட்டுவிட நினைத்தேன்

தொடர்ந்து வழிந்து கொண்டேயிருந்தது.
சரி என்று வாயில் வைத்து
விரலைக்கொஞ்சம்
ஈரப்படுத்தினேன்.

உப்பு தோய்ந்து,சிவப்பு
நிறத்துடனான எனது
குருதியின் சுவை
நாக்கிற்கு மிகவும்
பிடித்துப்போய்விட்டது

இளஞ்சூட்டுடன் வழிவதை
தடுக்க மனமின்றி
சப்பிக்கொண்டேயிருக்கிறேன்

இதை வன்முறைக்கவிதை என்று
பிரசுரிக்க பலரும் மறுக்கின்றனர்
எனக்காக யாரேனும் சிபாரிசு
செய்வீர்களா..?!


 

Thursday, December 22, 2011

காதல் கவிதைகள்கொஞ்சம் காதல்
கவிதைகள்
எழுதித்தரவேண்டும்
என பதிப்பாளர்
என்னிடம் கேட்டிருக்கிறார்,
யாருக்கேனும் என் கனவில்
வந்து போக விருப்பமா ?

ஏற்கனவே பிறரின் கனவுகளில்
உலவியவராயிருப்பினும்
பரவாயில்லை.
நீங்களும் உங்கள் நினைவுகளும்
என் காதல் கவிதைகளில்
நிச்சயம் இடம்பெறும்
என்பது உறுதி.

என் கனவுகளில் என்றும்
நிலைத்திருக்க வேண்டிவரும்
என்று அஞ்சத்தேவையில்லை.
அச்சில் வெளிவரப்
பெறுமானமுள்ள
கவிதைகள் தேறும் வரையே
உங்களின் நினைவுகள்
எனக்குத் தேவைப்படும்

நான் உறங்கிக்கொண்டிருக்கும்
நேரம் பார்த்து என் கனவுகளில்
நுழைந்துவிடுங்கள்
நான் விழித்திருக்கும் நேரம்
நுழைய நேர்ந்தால்
எப்போதும் அழியாமல்
தங்கிவிட வாய்ப்புண்டு..

Monday, December 19, 2011

அங்கேஅங்கே
பறவைகள் தமது பாடலை
ஒரு கணம் நிறுத்தி பின் இசைக்கின்றன

அங்கே
சீறிப்பாய எத்தனித்த கடலலைகள்
பின் மெதுவாக எழும்பி அடங்குகின்றன

அங்கே
துயில் கொண்டிருந்த மேகங்கள்
சிறிது யோசித்து பின் கலைகின்றன.

அங்கே
பறந்துகொண்டிருந்த
பட்டாம்பூச்சிகள் தம் சிறகுகளை அசைப்பதை
சில வினாடிகள் நிறுத்தி பின் பறக்கின்றன

அங்கே
தெள்ளிய நீரில்
வழுக்கிச்சென்று கொண்டிருந்த மீன்கள்
தமது நீச்சலை நிறுத்தி பின் தொடர்கின்றன

அங்கே
அவர்களின் வயலின்கள் சிறிது
சிணுங்கி பின் தன் வாக்கில் இசைக்கின்றன

அங்கே
என்ன நடக்கிறது
என்று எட்டிப்பார்த்த பின் நானும்
எனது வழமையான பணியைத் தொடர்கின்றேன்..


Friday, December 16, 2011

பாரதி செல்லம்மா
கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்கங்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.

கடிதம் -1 -  1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது.
 
                                                        ஒம்
                                                                                                                
ஸ்ரீகாசி
                                                                                                               
ஹனுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்லஇதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.
     

உனதன்பன்
சி.சுப்ரமணியபாரதி

****இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.கடிதம்எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கு கடிதம். 1919
         

                                                                                                         கடயம்.
                                                                                                          30
ஜனவரி. 1919


ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால்  இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.

இந்த விஷயத்தைக் குறித்து  மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாகவேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்

உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக 

 உனதன்புள்ள
 
சி. சுப்ரமணிய பாரதி..