Monday, January 31, 2011

இழந்த தருணங்கள்


 'திண்ணை' இணைய இதழில் எனது கவிதை.

இழந்த தருணங்கள்
மீளக்கிடைத்தால்
அப்போது உணர நினைத்த
அதே சுவையை அது
இப்போதும் தருமா
அதை ஏற்றுக்கொள்ளும்
மனநிலை இப்போதும் உளதா
என்பதும் ஐயமே.

எண்ணி அகமகிழ்தலும்
அசை போடுதலுமாகிய
கடந்த கால நினைவுகள்
நிகழ் காலத்தைக்
கடத்துவதேயன்றி
பெரிதாக ஒன்றும்
சாதித்து விடுவதில்லை

எனினும் இது ஒரு
தொடர் நிகழ்வாக
நடந்து கொண்டு தான்
இருக்கிறது எனக்குள்
எனது கட்டுப்பாடுகளுக்கு
ஆட்படாமல்.


.

Sunday, January 30, 2011

கையிலெடுக்க உகந்தவை


 இன்று மஹாத்மாவின் நினைவு நாள்

கையிலெடுக்க
உகந்தவை

காதலி,
குழந்தை,
வாத்தியக்கருவிகள்,
மனதிற்குப்பிடித்த
எழுத்தாளரின் புத்தகம்,
பார்த்தவுடனே
சுவைக்கத்தூண்டும் இனிப்பு,
அழகுற வடிவமைக்கப்பட்ட
கண்ணாடிப்பொருட்கள்,
புதிய உடுப்பு,
பனியில் நனைந்த
ஹிமாச்சல் ஆப்பிள்,
மடிக்கணினி,
வேலைப்பாடு மிக்க
கைத்தடி,
எழுத்தாளனின் பேனா,
ஓவியனின் சாயம்
படிந்த தூரிகை,
ஆவி பறக்கும்
டிகிரி காப்பிக்குவளை,
புராதனக் கலைப்பொருள்,
அழகிய புகைப்படம்,
ஹைதராபாத் கண்ணாடி
வளையல்கள்,
காதலியின் உள்ளங்கை,
பூஞ்சையான பூனை,
முசுமுசுவென
இருக்கும் முயல்,
பிசிறற்ற பஞ்சுப்பொதி,
பட்டுப்பூச்சி,
மயிலிறகு,
எவருக்கேனும் கொடுக்க
நினைக்கும் ரோசாப்பூ,
வங்கியிலிருந்து
இப்போது கிடைத்த
மணம் மாறாத புதிய
சலவைத்தாள்,
டிவி ரிமோட்,
சலவைக்குச்சென்று
வந்த உடுப்பு,
பொம்மை,
ரசகுல்லா,
ஓடையில் சலசலக்கும்
குளிர்ந்த நீர்,
ஐஸ்க்றீம்,
காதலிக்கு அனுப்ப
நினைக்கும் வாழ்த்து அட்டை,
வியர்க்கும் வேளையில்
அருகில் கிடக்கும்
பனைஓலை விசிறி,
பாய்ந்து ஓடி வரும்
வெள்ளாட்டுக்குட்டி,
செல்பேசி,
கடைந்த வெண்ணை,
பிரிக்காத பரிசுப்பொதி,
பூங்கொத்து,
புறா,
திருக்குறள்,
சப்ளாக்கட்டை,

என
இவை யாவும்
கையிலெடுக்க
உகந்தவை
...
ஆனால்
துவக்கு அல்ல..

Friday, January 28, 2011

வேண்டித்தானிருக்கிறது


கீற்று இணைய இதழில் எனது கவிதை


இவ்வாறெல்லாம்
செய்ய
வேண்டித்தானிருக்கிறது

நக்கிப்பிழைக்க,
பரிந்து பேச,
பணிந்து போக,
அடங்கிப்போக,
இழந்துபோக,
அவமானப்பட,
குருகி நிற்க,
வழிய,
ஏச்சும்,பேச்சும் வாங்க,
ஏங்கி நிற்க,
நெஞ்சுக்குள்ளேயே
குமைந்துகொள்ள,
வளைந்து கொடுக்க,
விட்டுக்கொடுக்க,
சர்வ நாடியும் அடங்கி
ஒடுங்கிப்போக,
வெட்கப்பட,
வெள்ளந்தி போல்
நடிக்க
வேண்டித்தானிருக்கிறது.

அப்போதெல்லாம்
அந்த தனக்குத்தானே
அர்த்தம்
கற்பித்துக்கொள்ளும்
"தன்மானம்" என்ற
மயிர்
என்ன தான்
செய்து கொண்டிருக்கிறது?


.

Sunday, January 23, 2011

எப்போதும்


கீற்று இணைய இதழில் எனது கவிதை

எப்போதும்
அயற்சி தராததும்,
தொய்வின்றியும்,
திரும்பத் திரும்ப
சுழற்சியில் வராததும்,
துன்பம் தராததும்,
வெறுப்புறச் செய்யாததும்,
பாதிக்காததும்,
கவலை கொள்ள
வைக்காததும்,
சலிப்புறச் செய்யாததும்,
சோம்பலுறச் செய்யாததும்,

என
ஏதேனும் உண்டா ..?


.

Wednesday, January 19, 2011

ஞாபகப்பொருள்

"வியூகம்" இணைய இதழில் வெளியான எனது கவிதைகள்

அவள் தந்த அந்த ஞாபகப்பொருளை
போற்றிப்பாதுக்காத்து வந்தேன்


நாள் தோறும் கொஞ்சமும்
மாறாமல் நேரந்தவறாமல்
அதைத் துடைத்து
வைத்துக்கொண்டே இருப்பேன்

அதை விடவும் அழகான
பொருட்களாக இருந்தால்
அவற்றை அதனருகில்
இருந்து எடுத்துவிடுவேன்

நிறம் மாறியிருக்கிறதோ
அதில் அழுக்கு ஏறிவிட்டதோ
என்று சதா எப்போதும்
அதைப்பற்றியே நினைத்துக்
கொண்டிருப்பேன்

சில நாட்களில் உடல் நலக்குறைவு
கொண்டு அதைத்துடைக்காமல்
விட்டுவிட்டால் அடுத்த நாள்
நேற்றைக்குமாகச் சேர்த்து
இரண்டு முறை
துடைத்து வைப்பேன்

என்னையும் மீறிய
வேலை மிகுதியால்
சில நாட்களில்
அதைப்பற்றிய நினைவற்றுப்போவேன்

போகும்போதும்
வரும்போதும் அதைக்
கடந்து செல்கையில்
அது என்னைக்கடந்து
செல்வதில்லை என்றும் உணர்வேன்

சில நாட்களில்
அதன் மேல் வெறுப்பும்
கோபமும் கொண்டு
வேண்டுமென்றே
அதைக்கவனியாமல்
விட்டுவிடுவேன்.

பின் சிறிது குற்ற உணர்வுடன்
மீண்டும் அதை துடைப்பதிலும்
ஒழுங்கு செய்வதிலும்
அதிக நேரம் செலவிடுவேன்

அதைப்பார்த்து எனக்குள்
புன்னகைப்பதிலும்
முழு மனதுடன்
அதைக்கையில் எடுத்து
வைத்துக்கொள்வதிலும்
அக்கறை காட்டுவேன்

இப்படி இருக்கிறது
இல்லை என்ற உணர்வு
அவ்வப்போது மேலிட
எனக்குள் சிரித்துக்கொள்வேன்.

எனினும் நாளாக ஆக
அதில் இருந்த ஆர்வம் ஏனோ
குறையத்தொடங்கி
துடைப்பதும் குறைந்து
பின்னர் இல்லாமலேயே போனது

பிறகு ஒரு மழை நாளில்
அதற்கு அருகிலிருந்தவற்றை
ஒழுங்கு படுத்த
முயன்ற போது
அது கீழே விழுந்து
உடைந்தே விட்டது..

சுக்கல்களை எடுத்து மீள
ஒட்டவைக்கவே இயலாத
அளவுக்கு.

பிறகு அது எப்போதும்
எனது நினைவை விட்டு
அகலவேயில்லை
எப்போதும்...


சரியாத்தானே இருக்கு..?

சரியான மழை
சரியான குளிர்
சரியான வெய்யில்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான அடம்
சரியான அழுகை
சரியான பிடிவாதம்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான திமிர்
சரியான கர்வம்
சரியான கொழுப்பு
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான இடி
சரியான நெரிசல்
சரியான கூட்டம்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான அடி
சரியான வலி
சரியான காயம்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?.

Monday, January 17, 2011

என் உறவுகள்

கீற்று இணைய இதழில் எனது கவிதை

இன்றைக்கும்
தனக்கேயுரிய
தர்க்கங்களோடும், நியாயங்களோடும்
எனது அப்பா

அன்றைக்கிருந்த
அதே பரிவோடும், அன்போடும்
எனது அம்மா

நெருங்கிப்பேசினால்
தவறாகுமோ என்ற
என்றைக்குமில்லாத தயக்கத்தோடு
எனது அண்ணா

கணவனின் மறைவில்
நின்று கொண்டு பரிவையும்
அளவோடு பகிர்ந்து கொள்ளும்
எனது அக்கா

என்றைக்குமான
கேலியோடும், சிரிப்போடும்
எனது சகா

இவையுடன்
நாளைக்குமான உறவுக்காக
நானும்..

Sunday, January 16, 2011

தமிழின் நிலை- பாரதி

 இது பாரதி ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் எழுதிய அன்றைய "தமிழின் நிலை " இன்றும் அது மாறாதிருப்பது தமிழின் சிறப்பு...:-)

இணையப்பக்கங்களைப்புரட்டிய போது கிடைத்த இந்த 

அரிய விடயத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள ....--------------------------------------------------------------------------------------------------------------------------


 தமிழின் நிலை பற்றி பாரதி

கல்கத்தாவில் " ஸாஹித்ய பரிஷத்" ( இலக்கியச்சங்கம் ) என்றொரு சங்கமிருக்கிறது.அதி தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச்சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி
"ஹிந்து" பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கார்,மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத்தமிழ்ச்சங்கம் முதலிய தமிழ் நாட்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டுக்காட்டி நம்மவரின் ஊக்கக்குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். 

தெலுங்கர்,மலையாளத்தார்,கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை.வங்காளத்திலுள்ள 'ஸாஹித்ய பரிஷத்'தின் நோக்கமென்னவென்றால் 'எல்லா விதமான உயர்தரப்படிப்புகளும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக்கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விட வேண்டும்' என்பது 'விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்' என்பது. பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது. என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார்.வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக்கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் உபன்னியாஸங்கள் நடந்ததை எடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார்.

"நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை" என்று அவர் வற்புறுத்திச்சொல்லுகிறார்.

மேற்படி லிகிதக்காரர் தமது கருத்துகளை இங்கிலீஷ் பாஷையில் எழுதி
வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிக்கைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள்,பொதுக்கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள்,பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷை வளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியை மேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு.அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப்பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ் படித்த வக்கீல்களும் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் , தமது நீதி ஸதலங்களையும் பள்ளிக்கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும்.

பந்தாடும் போதும்,சீட்டாடும் போதும்,ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாஸ்ரம ஸபைகளிலும், எங்கும் , எப்போதும், இந்தப் "பண்டிதர்கள்" இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால் உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை , இவர்கள் தமிழெழுதக்கற்றுக்கொள்ள வேண்டும்.இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம் , விளையாட்டு ,வார்த்தை , வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை , ராஜ்ய நீதி ,எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும். தமிழ்ப்பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங்கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல.

வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீர வேண்டியிருக்கிறது.வெளியூர்களிலுள்ள
" ஜனத்தலைவரும்" ஆங்கில பண்டித "சிகாமணிகளும்" தமிழ்ப்பத்திரிகைகளைச் சரியான படி கவனிப்பதில்லை.அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும் , அவரவர்  மனதில் படும் புதுயோசனைகளையும், தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப்பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம்.ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
.

Saturday, January 15, 2011

பொங்கலோ பொங்கல்பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டுச்சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகா நதியைப் போற்றிச்சொல்லடியோ
இந்த வைகை என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாராலே
கல்மேடு தாண்டிவரும் வைகை நீராலே
சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு சேதி சொல்ல காற்று வராதா
செவ்வாழ செங்கரும்பு சாதி மல்லி தோட்டந்தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்ல வாட்டந்தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டுச்சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகா நதியைப் போற்றிச்சொல்லடியோ
இந்த வைகை என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்


.

Friday, January 14, 2011

மலம்

கீற்று இணைய இதழில் எனது கவிதை


மலத்தைப்பார்த்தே
நாள் துவங்குகிறது
சரியாக கழிந்துவிட்டதா
என்ற நினைப்பிலேயே
ஒவ்வொரு நாளும் கடக்கிறது.

தெருவில் அங்கெங்கினாதபடி
கிடப்பது வேறு தொடர்ந்து
அதை ஞாபகமூட்டிக்கொண்டே
இருக்கிறது.

மனிதமலம் மட்டுமல்ல,
கிடக்கும் விலங்கின் மலமும்
மனதை ஆக்கிரமிக்கின்றன

அதை அள்ளுபவனின்
மற்றும் சுமப்பவனின் மலத்தை
யார் அள்ளுவார்,சுமப்பார் என்ற
கேள்வியும் மனதில்
ஊஞ்சலாடுகிறது.

எந்த மருத்துவரும்
நோயாளியிடம்
முதலில் கேட்கும்
கேள்வியில் அது சப்பணமிட்டு
உட்கார்ந்து கொள்கிறது.

ஒவ்வொரு மனிதனும்
முழுதும் அகன்று விட்டது
என நினைத்துக்கொண்டாலும்
ஒரு அவுன்ஸ் மலத்தோடுதான்
நடமாடுதல் சாத்தியம்
என்ற உண்மையும் மனதை
என்னவோ செய்கிறது.

நான் அதி சுத்தம்
எனக்கூறிக்கொள்பவனை
நினைத்தால் உள்ளூர
சிரிப்பு வருகிறது.

இங்குள்ள
கலையும்,கவிதையும்
மலத்தைப்பற்றி எதுவும்
பேசாது இருப்பது வியப்பை
அளிக்கிறது.

அதனால் தான்
இயல்பைப்பற்றிய
இலக்கியம் இன்னும்
படைக்கப்படவில்லை
போலும்.

எனினும்
இதுவரை படைக்கப்பட்டவை
அதனையொத்ததாகவே
காணப்படுகிறது.
.

Monday, January 10, 2011

பறக்க எத்தனிக்காத பறவை

திண்ணையில் எனது கவிதை

தானும் பறக்க இயலும்
என்பதை மறந்தே போனது அது.

இறக்கை என்ற ஒன்றை
எதற்கென நினைத்து
விரித்துக்கூட பார்க்கவில்லை அது

கிடைத்தவற்றைக்
கிளறிக்கொண்டிருப்பதிலேயே
சுகம் கொண்டது அது.

பாதுகாப்பான சூழலில்
இருப்பதாகக் கருதிக்கொண்டு
நாட்களைக் கடத்துவதிலேயே
மரத்துப்போனது அது.

சோம்பிக்கிடப்பதே சுகம்
எனக்கொண்டது அது.

கூண்டு விட்டுக் கூண்டு
செல்லும் இட மாற்றங்களை
மறுப்பேதும் தெரிவிக்காமல்
ஏற்றுக்கொண்டது அது.

கால்கள் உடைந்தும்
சிறகுகள் முறிந்ததுமான
தோழி தோழர்களைக்
கொண்டதுமாக
அங்குமிங்கும் அலைந்து
கொண்டேயிருந்தது அது.

"இருத்தல்" போதும்
என அகமகிழ்ந்து இப்போது
கூவுதலையும்
மறந்து அலைகிறது அது.


.

Monday, January 3, 2011

அது எது..!

திண்ணை'யில் எனது கவிதை

சில சமயம் சன்னல்களின்
திரைச்சீலைகூட
அசையாமல் அது
உள்ளே வருவதுண்டு.

என் உடலையா மனதையா
தீண்டியதென்றறியாமல்
அது தழுவிச்செல்வதுண்டு.

சிறு மழைத்தருணத்தில்
பார்த்து மெலிதே வீசும்
மண்மணத்தை என்னோடு
சேர்ந்தே அனுபவிக்கும் அது.

சிலசமயம் மழைக்குப்பிந்தைய
இளவெயிலாக விரிந்து
கிடப்பதை நான் காண நேர்வதுண்டு.
மனது விரிந்து தன் நினைவுகளில்
சிலாகித்துக்கிடக்கையில் அது
என் குசலம் விசாரிப்பதுண்டு

சிலசமயம் இருளில்
நான் ஆழ்ந்த தனிமையில்
துயருடன் இருக்கையில்
என்னுடன் மிக அந்தரங்கமாக
அதுவும் கூடவே இருப்பதுண்டு.

எனக்கான வெளி'யில்
நான் இருக்கையில் அது
தன் இருப்பை உறுதி
செய்துகொள்வதுமுண்டு

அதிகாலைப்பனியில்
நனைந்த இதழ்களை என்
விரல் நுனிகள் தொட்டு
உணர்வதையும் பங்கு
போட்டுக்கொள்ளும் அது.

அடைமழையினால்
கூரையின் ஓரத்தில் ஒருங்கே
விழும் இடைவிடாத குளிர்
நீரை என் விரல்கள்
தெல்லித்தெரிக்கையில்
உள்ளூர ரசித்துக்கொள்ளும் அது.


.