Friday, September 23, 2016

ஆயர் தம் மாயா நீ வா...
எப்பவும் சாயங்காலம் நேரம் கிடைத்தால் SVBC TTD சேனலில் ஆறு மணிக்கு வரும் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பது வழக்கம். பாடல், ஆடல், இசைக்கச்சேரிகள் என முழங்கும். இன்று கதக் நடனம் பாம்பேயிலிருந்து ஒரு குழு ஆடினர். வடநாட்டு இசை,நடனங்கள் அத்தனை ஈர்ப்பதில்லை எனை. எதோ கமல் 'விஸ்வரூம்' எடுத்து கதக் ஆடினாரேன்னு இன்னிக்கு பார்க்கலாம்னு உட்கார்ந்தேன்
 
குழுவாகவும் , பின்னர் தனியாகவும் நடனப்பெண்மணிகள் மேடையை ஆக்ரமித்து நடனமாடினர். எனக்கு இந்த பரத நாட்டியம் பார்த்தே வழக்கம். கர்நாடக இசைக்கச்சேரிகள் போல. வடக்கத்தியரின் ஹிந்துஸ்தானியோ இல்லை பிருக்காக்களோ என்னை ஈர்ப்பதில்லை. இவங்க ஆட்றாங்க என்பதே எனக்கு பெருத்த சந்தேகமாகவே இருந்தது ஒன்றரை மணிநேரமும், ஏன்னா இப்போ எப்டி ஆடணும்னு காமிக்கிறேன் பாருங்க என்பது போலவே முழுக்க ஆடினார்கள். உடல் முழுக்க அசைந்து, அடவு பிடித்து, வருத்தி என ஆடிய நடனங்களையே பார்த்து பழகிய எனக்கு யாரோ முன்னில் இருப்பவர்களுக்கு எப்படி ஆடவேணும் என்று சொல்லிக்கொடுப்பது போலவே தான் இருந்ததே ஒழிய கைகால்களை வீசி ஆடி நான் பார்க்கவேயில்லை
 
இடையிடையே நின்ற இடத்திலேயேயிருந்து சுற்றி சுற்றி ஆடினர். சுத்தி சுத்தி வந்தீஹங்கற மாதிரி. ஆனாலும் ஒரு போதும் விழவில்லை. சும்மா இருமுறை சுற்றினால் நமக்கு தலை சுற்றி தட்டுத்தடுமாறி அருகிலிருக்கும் எதையோ பிடிக்க தோணும், அப்படி ஏதும் நிகழவில்லை இங்கு, நல்ல பேலன்ஸுடன் ஆடுகின்றனர். நின்ற இடத்தில் நின்றே சுற்றி சுற்றி அத்தனை முறை சுற்றினாலும் அலுக்கவேயில்லை, அசரவேயில்லை அவர்கள். உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றோடொன்று பிடித்துக்கொண்டு சின்னப்பிள்ளைகளை ஏமாற்றுவது போல சுற்றி வருகின்றனர். நடனப்பெண்மணிகள் நின்று இரண்டு நிமிடம் கழித்து அவர்களின் பாவாடைகள் நிற்கின்றன. பெரும்பாலும் சூஃபி நடனங்களில் இது போன்ற சுற்றல்கள் உண்டு, எங்கெங்கொ பார்த்தது.

இடத்தை விட்டு நகராமல் சுற்றுவதைத்தவிர வேறேந்த உருவகப்படுத்தலையும் என்னால் கவனிக்க இயலவில்லை. ஆமா இதில் என்ன நடன அசைவுகள் இருக்கின்றன ? நளினம் , அடவுகள் இதெல்லாம் எங்கே ? கால்களுக்கு என ஒரு ஒலிவாங்கி மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது. கால்களில் கட்டியிருக்கும் சலங்கைகள் ஒலியை பெருக்கி கொடுக்க. கொஞ்சமே பாவாடையை உயர்த்திக் கொண்டு , பாலே நடன அழகிகள் போல ஒற்றை கால் பெருவிரலில் நின்றூகொண்டே நீந்திச்செல்லும் அன்னம் போலின்றி, பாதங்களை முன்னும் பின்னும் நகர்த்தி (இங்கு தான் சொஞ்சம் வேகம் பார்த்தேன்.) ஆடினார் கொஞ்சம் சீனியர் நடனமங்கை.

ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். ஆடிய யாருக்கும் நடனமங்கைகளுக்கான உடற்கட்டே இல்லை. ஒரு வேளை இந்தக்குழுவில் இல்லையோ ? ஏனென்றால் , உடலை முறுக்கி, கைகால்களை வீசி ஒரு உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் போன்ற ஆடல் இங்கு இல்லவே இல்லை. அதனால் அவர்கள் உடல் நடனமங்கைக்கானதாக இல்லையோ என்னவோ ? அதுக்காக சைஸ் ஸீரோ எல்லாம் எதிர்பார்க்கவில்லை. மேலும் அத்தனை எனர்ஜி ஆட்டம் முழுக்க சேமிக்கப்படுவதால் அவர்களால் விழாமல் சுற்றமுடிகிறது போல…!

.

Friday, September 16, 2016

மௌனராகம்


மௌனராகம் கருவிசை..கேட்டுக்கேட்டு இன்புற்ற இன்னும் நாடி நரம்புகளில் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் இசை. அருமையான பியானோவில் இசைத்த அதே இசைக்குறிப்புகள் இன்னும் தாள கதி வேகமாக்கி புல்லாங்குழலில் இசைத்திருக்கிறார். இத்தனை நாளாக எனக்கு இது புரிபடவில்லை. எப்போதும் ஓடிக்கொண்டிருக்குமது இன்று என் தலைக்குள் சுற்றி சுற்றி பொறி தட்டியது, கேளுங்களேன்,,


அதே நோட்ஸ் முன்னர் ரேவதி/மோகனுக்காக மென்மையான உறவை சொல்லக்கூடியது பின்னில் வரும் அந்த புல்லாங்குழலில் இசைக்கும் அதே இசைக்குறிப்புகள் தாளகதி மாற்றி ரேவதி/கார்த்திக்கிற்காக ,அதிரடியான குறும்பும் கேலியும் மிக்க காதலுக்காக. மீளுருவாக்கம் (ரீமிக்ஸ்) என எண்பதுகளிலேயே நிகழ்ந்திருக்கிறது.


00:08 ல் ஆரம்பித்து 00:24 வரை பியானோவில் இசைக்கப்படும் குறிப்புகள் பின்னர் அவையே ரீமிக்ஸாகி வேகமாக இப்போது இசைக்கப்படுவது போல 00:29லிருந்து 00:51 வரையென ஆஹா.. எத்தனை சுகம்..! 


ஒரே ராகத்தை டெம்ப்போ (வேகம்) மாற்றி இசைக்கும்போது மகிழ்விற்கும் துயரத்திற்குமென உருமாறி நம்மைச்சுற்றி வருகிறது. நாயகன் படத்தில் மூன்று பாடல்கள் ஒரே ராகத்தின் அடிப்படையில் அமைந்தவை. இருப்பினும் காட்சிகளுக்கேற்ப உருமாறி வேறு கோலங்கள் காட்டும்...ஹ்ம்.. ராசைய்யாடா!
.

Tuesday, September 6, 2016

தப்பு பண்ணினா சாமி கண்ணக்குத்திடும்


டனல் விஷன்

நீங்க ஒரு தப்பு பண்ணீட்டீங்கன்னா, அத நெனச்சு பின்னால வருத்தப்படுபவரா? இல்லை காலங்கடந்தாவது வருத்தப்படுபவரா ?,,இதெல்லாம் எதுவுமே இல்லைன்னுட்டு , செய்த தவறுகள் தான் தன்னை இப்டி போட்டு வாட்டுது , இந்த நெலமைக்கு கொண்டாந்து விட்ருக்குன்னு நினைப்பவரா?..ஹ்ம்… இப்டீல்லாம் இருக்கறவரா இருந்தா இந்தப்படம் பார்க்கலாம். அதெல்லாம் ஒண்ணுங்கெடயாதுன்னு தூக்கியடிக்கிறவரா இருந்தா படம் செம போர் அடிக்கும்.

மணிகண்டன் படம் , காக்கா முட்டை கொஞ்சமே வேறுபட்டு இருந்ததால குற்றமே தண்டனை' பார்க்கலாம்னு முடிவு பண்ணி வழக்கம்போல டொரண்ட் தேடினா , மூணு வர்சம் உள்ளே போறியா இல்ல மூணு லெட்சம் கட்றியான்னு ஒவ்வொரு டொரண்ட் சைட்லயும் போய் போட்டு வெச்சிருக்காங்க்ய. அடங்கொய்யால.. இப்ப ரீசண்டா ஒரு லைம் டொரண்ட் ஓனர்னு நினைக்கிறேன், அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளிவிட்டார்கள். மச்சி அவ்ளவ்தானா இனிமே… சரி படத்த விடு, நமக்கு ஏகத்துக்கு வாரி வழங்கிய பலான காரியங்களுக்கெல்லாம் சரியான ஆப்பு வெச்சிட்டாங்கயளேன்னு நெனக்கும் போது ஸ்ரீனி தான் வாங்க ராம் , நீலசந்தரால ஒரு காட்சி போட்ருக்கான் , போய்ப்பார்க்கலாம்னு கூப்பிட்டார்.

அங்க போனா இருக்கிற போஸ்ட்டரெல்லாம் உள்ளூர் போலீஸே கிழித்துக்கொண்டிருப்பதை பார்த்தோம். காவிரித்தண்ணி விடமுடியாது , இருக்கிற தமிழ் பட சுவரொட்டி மொதக்கொண்டு கிழிச்சுப்போடுவோம்னு போலீஸ் தல மேல நடந்துகொண்டிருக்கிறது. சரி இன்னிக்கு இவங்க படம் போட்டா மாதிரிதான்னு தேவுடு காத்துக்கெடந்தோம். 8:15க்கு படம் என்றவர்கள் எட்டு மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்த போதுதான் ஊர்ஜிதமானது படம் இருக்கு மச்சின்னு. செந்தில் இடைல கூப்ட்டு நான் வரலைன்னுட்டார். நாளைக்கு பந்த்னு டிக்ளேர் வேறே பண்ணீட்டா..இந்தத்தொல்ல வேறே..நீலசந்த்ராலருந்து யெலஹங்க்கா போணும் ஸ்ரீனிக்கு , எனக்கு மாரத்தஹள்ளி வரை..இடையில பிடிச்சு எதையாவது எரிச்சு விட்ருவானுஹளோன்னு வேறே பயம்..அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலை. போஸ்ட்டரைக் கிழித்தது வரை போதுமென காவல் ஜீப் கிளம்பிச்சென்று விட்டது.

பாலாஜி தியேட்டர் அவ்வளவு மோசம் ஒண்ணுமில்லை. என்ன ஒரு இருவது டிக்கெட் வந்திருக்கும் அவ்வளவு தான். உள்ளே எழுத்து ஓட ஆரம்பித்துவிட்டது. கையிலிருந்த டிக்கெட்டை கிழிப்பவரிடம் கொடுத்தா, அவர் கிழிக்காமலேயே முழு டிக்கெட்டையும் வாங்கி வைத்துக்கொண்டு உள்ள போங்க என்றார். நின்று நின்று பார்த்துவிட்டு பின் உள்ளே சென்று மறைக்காத சேர் பார்த்து உக்காந்தோம். ஏகப்பட்ட வாகை மலர் இருபுறமும் சூழ்ந்த சின்னங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. படத்துக்கு கிடைத்த நிறைய வெளிநாட்டு விருதுகள்.

ரஷோமான் பார்த்து சிலாகிச்சிருப்பார் போலருக்கு மணிகண்டன். திரும்பி வண்டீல வரும்போது அதத்தான் சொல்லிட்டு வந்துட்ருந்தேன் ஸ்ரீனியிடம். ஒரு கொலை , மூன்று பார்வைகள், மூன்று சந்தேகப்படும் நபர்கள், அவர்களின் வாயிலாக நடந்தவற்றை ஒப்புவித்தல் நீதி மன்றத்தில்..இப்ப தெரியுதா , ரஷொமான் தான்னு..ஹிஹி.

விதார்த்துக்கு டனல் விஷன் , ஒரு குவியம் போலத்தான் பார்வையே தெரியும். அதை அவ்வளவு அழகாக மறைத்துவிட்டு எப்படி சமாளிக்கிறான் பாவி ? போலீஸ்கிட்ட கூட. சம்மதிக்கணும் மாஷே..நிறைய சிகரெட் பிடிக்கிறார். கீழே சப்டைட்டிலோடே,, வுடி ஆலன் தன்னோட படத்தை இந்தியாவில ரிலீஸ் பண்ண நினைக்கும்போது இப்டி புகை/பகை சப்டைட்டிலோட தான் வெளியிடுவோம்னு தணிக்கை அலுவலகம் சொன்னதுக்கு எம்படத்து மேல நீ யார்றா கிறுக்கிறதுக்குன்னு சொல்லி படத்தை ரிலீஸ் பண்ணவேவேணாம்னு மறுத்துட்டதா ஒரு செய்தி. மணியும் தான் இருக்கார்..ஹ்ம்..

ரஹ்மான் அவ்வளவு சரியா தன்னொட பார்ட்டை செய்யவில்லைன்னு தான் சொல்வேன்.. வழக்கம்போல எல்லா வில்லன்களும் நடிப்பது போல நடிச்சு வெச்சிருக்கார். உடல் மொழில ஒரு வித்தியாசமும் காமிக்காம என்னவொ போங்க..அந்த இன்னொரு சஸ்பெக்ட் பரவால்லை.வக்கீலுக்கு  ஜூனியர் அஸிஸ்டெண்ட் செம செம. கலக்குறார். கூத்துப்பட்டறையின் ஆக்டர் என ஸ்ரீனி என்னிடம் கிசுகிசுத்தார்.

நிறையத்தவறுகள் ,கண்ணி வெச்செல்லாம் பிடிக்கணும்னு அவசியமில்லாத சாதாரணமாகவே கண்டுபிடித்துவிடும் ஓட்டைகள் , கதையில் , திரைக்கதையில், என. இருந்தாலும் மன்னிக்கலாம். கண்ணாஸ்பத்திரிக்கு ஏன் போறேன்னு கேக்கற போலீஸு , இவ்வளவு பணம் எங்கருந்து வந்துச்சுன்னு ஒரு தடவ கூட விதார்த் கிட்ட கேக்கமாட்டாங்களா ?..ஹ்ம்..? க்ரெடிட் கார்ட் பேமேன்ட் கலெக்ஷ்ன்லாம் இன்னுமா கேஷ்ல நடக்குது ? என்னவோ மணி சொல்றார் நாம கேட்டுப்போம். ஐஸ்வர்யாவின் ஃபோனிலிருந்து இன்னொரு ஃபோனுக்கு நிறைய கால்ஸ் போயிருக்கு என சொல்லும் போலீஸ் ஐஎஸ்ப்பி'யை விளித்து அழைப்புகள் எந்த இடத்தில் இருந்து பெறப்பட்டிருக்கிறதுன்னு கேக்கவே கேக்காதா ?...ஹ்ம்..?! போலீஸ் நாய் விதார்த் அபார்ட்மெண்ட் வரை மூக்கை நீட்டிக்கொண்டு வந்துவிடாதா ?!..ஹ்ம்..?!

ஒனக்கு எவ்வளவு வேணும்னு கேட்கும்போது மூணு லெட்சத்தி இருபதாயிரம்னு சொல்லும் போது சிரிப்பலை தான் எழுகிறது. இந்த பதிலிலிருந்தே இவனை நம்பலாம்னு, போட்டுக்குடுக்க மாட்டான்னு ரஹ்மான் நம்பும் இடம் அருமை. தனக்குத்தேவையானதை மட்டுமே கேட்கும் அந்த மிடில் க்ளாஸ் மெண்ட்டாலிட்டி ஆஹா. அருமை மணி. ஆனாலும் அந்த நாசர் கேரக்டர் எல்லாவற்றையும் ரொம்பச்சாதாரணமா , துணையின்றித்தவிக்கும் , அந்த கேரக்டர் சொல்லிவிடுகிறது. சினிமாத்தனமான டயலாக்கை கூட ' தருமம் வேறோண்ணூமில்லை , தேவைதான்' தருமம்ம்ம்ணூ' ஹிஹி.. கேஸ் அடுப்பு ஆன் பண்ணி ஒரு கண்ணாடி சிற்பம் பண்றார் பாருங்கோ , கண்ணுல ஒத்திக்கலாம்ங்க்ணா.

விதார்த் கேட்கும் டெலிஃபொன் நம்பர்களை தேடியெடுத்துக்கொடுக்கும் அந்த சேட்டு வீட்டுப்பொண்ணு மாதிரி இருக்கும் பூஜா. கொஞ்சமாக தலையை உயர்த்தி உள்ளுணர்வோட பார்க்கும் கால் கேர்ள் ஐஸ்வர்யா. உண்மையை மறைத்து அயர்ன் செய்யும் பெண்மணி என பல லெவல்களில் வாழும் பெண் கேரக்டர்கள் .

ஏமாற்றுவது என்பது படத்தில் குற்றவுணர்வேயின்றி எங்கும் பரவிக்கிடக்கிறது. நமக்கு பணம் கிடைத்தால் போதும் என அந்த டாக்டர் செகண்ட் ஒப்பீனியன் கேட்டீங்களா என்று கேட்டுவிட்டு பின்னர் உணர்ந்து உண்மையை சொல்லுகிறார்.

ராசைய்யாவைப்பற்றி பேசியே ஆகவேணும். அப்படி ஆக்கிட்டாங்க மக்கா. இந்தப்படத்துக்கு இசையமைக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்பது தான் எனக்கு புதிராக இருக்கிறது. ஏனென்றால் கதை அப்படி. கொலை, ரத்தம் , அடிதடி , அராஜகம் இப்படியான தலைப்புகளில் வெளிவரும் படங்களை அவர் ஒத்துக்கொள்வதில்லை. ஒதுங்கியே இருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாகவே அவரின் இசை மெல்லிய ஜாஸினை அடிப்படையாகக் கொண்டு ஒலிக்கிறது என்பதே நிஜம். இருப்பினும் ஓநாய் படத்துக்கு இசைத்தார். ஹ்ம்.. இங்கு பின்னணி மட்டுமே பாடல்கள் இல்லை. என்னுடைய இசையை எடுத்துவிட்டு படத்தைப்பார் என செல்வமணியிடம் ஒரு முறை சவால் விட்டார் ராசைய்யா ' கேப்டன் பிரபாகரன்' படத்துக்கென நினைக்கிறேன். மின்உருகி பிடுங்கப்பட்ட வீடு போல இருண்டு தான் கிடக்கும். இங்கும் அதே நிலை.

இந்தப்படத்திற்கு இயற்கையான இசை, அக்கம்பக்கங்களில் இயல்பாக வெளிவரும் சப்தங்களை மட்டுமே வைத்து இசைத்திருந்தால் என்னவென ஒரு 'அறிவுச்சுழி' கேட்டிருக்கிறது. படத்தைப்பார்க்கும்போது காதுகளை திறந்து வைத்துக்கொண்டு கேட்டிருக்காது அந்த சுழி என நினைக்கிறேன். திகில் படங்களுக்கு/இது போன்ற ஸஸ்பென்ஸ் நிறைந்த படங்களை பின்னணி இசை தான் பார்ப்பவரை/கேட்பவரை ஒன்ற வைக்கும். இசையேயின்றி இயல்பாக விட்டிருந்தால் சலிப்பு தான் மிஞ்சும். என்னவோ நடக்கப்போகிறது, எதிர்பாரா நிகழ்வுகள் நிகழப்போகின்றன என்பதையெல்லாம் பார்ப்பவரின் இதயத்துடிப்பை அதிகரிக்க வைக்க ஆர்ப்பரிக்கும் இசை அவசியம். சிம்ஃபொனி இசைத்தவருக்கு இங்கிருக்கும் கற்றுக்குட்டிகள் சொல்லிக்கொடுக்கின்றன. அட சாத்தானே.

பின்னணி இசை பரவலாக இரைந்து கிடப்பினும் , இயல்பான அப்பார்ட்மெண்ட் அக்கம்பக்க/மரங்கள் அசையும், குழாயிலிருந்து நீர் சொட்டும்/சாலை இரைச்சல்கள்/ ஆஃபீஸ் களேபரங்கள்/ டெலிஃபோன் அதிரல்கள்/ போவோர் வருவோர் செருப்பு/ஷூ ஒலிகள் என படம் முழுதும் வியாபித்துக்கிடக்கிறது இயல்பான ஒலி. யாரோ ஒருவர் சொன்னதை, அவருக்கு இசைக்ககூடத்தெரியாது , ரசிகர் மட்டுமே , அவர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இயல்பான சப்தங்கள் இல்லை என ஒப்பாரி வைக்கும் அறிவுச்சுழிகள். ஐயோ சாமி. கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய்..ஹ்ம்….!!

பின்னணி கருவிசை இதுவரை அவர் செய்த எந்த துணுக்குகளையும் சாராது புதிதாக ஒலிக்கிறது. படம் முழுக்க. படத்தின் காலம் சொல்லப்படவில்லை. எனில் எந்த மாதிரியான இசை கொடுக்கலாம் என தீர்மானிக்கலாம் இசையமைப்பாளரால். எண்பதுகள் எனில் டிஸ்கோ'வும் க்ளாஸிக்கலாகவும் செய்யலாம்

தொண்ணூறுகளுக்குப்பிறகெனில் டெக்னொ/ஹிப் ஹாப்/மெட்டல் என தெரிவு செய்து இசைக்கலாம். இங்கு காலம் கணிக்கப்படவேயில்லை. எனினும் தமது பாணியில் எண்பதுகளில் தாமிசைத்த பாணியிலேயே இசைத்திருக்கிறார் ராசைய்யா. ஜாஸ் ஒத்துவராது மென்மை மருந்துக்கும் இல்லை, இங்கு வெறும் காமம்/குரோதம்/பின்னில் குழி பறிப்பது என்ற சூழலுக்குப்பொருந்தாது என தீர்மானித்து அதற்கேற்ப இசைக்கருவிகளைத்தேர்ந்தெடுத்து இசைத்திருக்கிறார். தற்போது வரும் அவியல்கள்/கீ போர்ட் குஞ்சுகளின் அவசர இசை கேட்டே பழகியவருக்கு உலகத்தரம் என்றெல்லாம் பிதற்றுபவருக்கு ஒன்றும் புரியப்போவதில்லை.

நேஷ்னல் ஜியோக்ராஃபி/டிஸ்கவரி சேனல்களில் நிகழ்ச்சிகள்/ ஆவணப்படங்கள் பார்த்தீர்களேயானால் அந்நிகழ்ச்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இசையை சற்று உன்னிப்பாக கவனியுங்கள். எந்த நாட்டில் எடுக்கப்பட்ட நிகழ்வோ அந்த நாட்டின் பாரம்பரிய ஒலிகளே/இசையே இசைக்கப்படும். எகா'வாக ஆப்ரிக்க நாடுகளின் ஆவணப்படமெனில் அவர்களின் இசைக்கருவிகள் கொண்ட அவர்களின் பாரம்பரிய இசையே ஒலிக்கும், தமிழ்நாட்டு ஆவணப்படமெனில் மத்தளமும்/நாயனமும் மட்டுமே ஒலிக்கும். அது தான் உலகத்தரம்.

கருந்தட்டாங்குடியில் இருந்து பாடுபவள் 'ரெக்கே'விலும் , 'ராக்'கிலும் பாட மாட்டாள். உலகத்தரம் என்பதை பேசமுயலுமுன் அவற்றின் அடிப்படைக் கண்ணிகளை/கூறுகளை அறிந்து கொண்டு பேசவேணும்.

இருந்தாலும் படம் ஆவணப்படம் மாதிரியே உலவுவது கொடுமை.அதிரடி திருப்பங்கள் என ஏதும் இல்லை. யூகிக்க முடியும் காட்சிகள் சில இருக்கின்றன. யூகிக்கவியலாத காட்சிகள் என ஏதும் இல்லையென்பதும் உண்மை. கதை சொன்ன விதம் ரஷொமான் போன்றதேயென்றாலும்
அதன் நேர்த்தி எங்கும் தென்படவில்லை.

தப்பு பண்ணினா சாமி கண்ணக்குத்திடும்னு சொல்றார் மணி.. ஹிஹி.அவ்வளவுதான் படம்.

Monday, September 5, 2016

ராசைய்யா


இப்படி ஒரு பதிவை எழுதியே ஆகணும். ராசைய்யாவால் பின்னணி இசையை வைத்துக்கொண்டு ஏன் உலகத்தரத்திற்கு இசைக்கமுடியவில்லை , ஏன் அத்தனை தூரம் எட்டவில்லை , ஏன் இன்னமும் வெளிநாட்டு இயக்குநர்கள் இன்னமும் அணுகவேயில்லை? ஏன் இன்னமும் ஹாலிவுட் படங்களுக்கோ இல்லை பன்னாட்டு இசை நிகழ்ச்சியை நடத்தவோ இல்லை ? ஏன் இன்னமும் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ?.. இப்படி பல கேள்விகள்.

ராசைய்யாவின் பாணி என்பது எந்த மண்ணின் இசையானாலும் அதை தமது பாணியில் தமிழுக்கேற்றவாறு மாற்றியும் அதன் நேர்த்தி கெடாமலும் கொடுப்பது.எத்தனையோ brahms,lizt, beethoven மற்றும் அவரின் ஆத்மார்த்த ஆசானான bach-ன் இசையையும் அங்கனமே கொடுத்திருக்கிறார். பட்டியலிடமுடியும். சரி எதற்காக மேல் நாட்டு இசையை நமது/தமது பாணியில் கொடுக்கவேணும் ? என்ற கேள்வி எழலாம்.

நான் ஒரு ஐ.ட்டி. எஞ்சினியர், ஐயா என் பொழப்பு அமெரிக்க/இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு கார்ப்பொரேட்டுகளுக்கு கை கட்டி கூலி சேவகம் செய்வது. நிறுவனத்தில் சேர்ந்ததுமே 'அவர்களிடம்' எப்படி பேசவேண்டும். ஏனெனில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு என்பது மிகவும் சொற்பம். ஆதலால் தொலைபேசியில் எங்கனம் பேசவேணும், அதற்கான நெறிமுறைகள் என்னென்ன என்பதெல்லாம் அத்துப்படி ஆனபிறகே தினத்திற்கான பணியை செய்யவியலும். ஏனெனில் எனது மார்க்கெட் அங்கிருக்கிறது. அவர்களின் பண்பாடு,மொழி, பேசும் முறை, அவர்களின் சூழல் என அத்தனையும் மண்டைக்குள் திணிக்கப்படும். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே நான் மாறித்தான் ஆகவேணும். எத்தனையோ இங்கிலீஷ் பாடல்கள் கேட்கிறோம், ஜீன்ஸ் பேண்ட் அணியத்துவங்கியாயிற்று, bring the check’ என்று பில்லைக் கொண்டுவா என கட்டளை பிறப்பிக்கவும் பழகியாயிற்று. இப்படி 'அவர்களின்' மனம் கோணாமல் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களின் எதிர்பார்ப்புக்கென வேலை செய்யத்துவங்கியாயிற்று, நாட்கள் போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி அவர்களுக்குப்பிடித்தமேனிக்கு இசைப்பவரை மட்டுமே அவர்கள் பணியமர்த்திக் கொள்வார். மேற்கத்திய இசை பொதுவில் தனிமனித , தன்னூக்கமுள்ள , குடும்பச்சூழல் சாராத , தனிப்பயனருக்கென உருவாக்கப்பட்ட இசை. அதை உருவகம் செய்துகொண்டு அதற்கேற்றாற் போல இசைப்பவரே அவர்களுக்குப்பிடித்தமானவர். ( மேற்கத்திய செவ்வியல் இசை பற்றி பேசவில்ல நான்). குடும்பச்சூழலும், இன்னமும் HUF :) அம்மா/அப்பாவை வைத்து பேணிக்காக்கும் நமது முறை அவர்களுக்கு ஒத்துவருவதில்லை. இதையெல்லாம் சமரசம் செய்துகொண்டு யார் இசைப்பாரோ அவரே அங்கே ஏற்றுக்கொள்ளப்படுவர். ‘பத்தாம் பசலி' போல ஏன் பேசுகிறாய் என்று கேட்கலாம். ஐயா நமது இசை இன்னமும் இப்படியான பாங்கினைக்கொண்டே இசைக்கப்படுவது. அடிப்பொடிகள், சிஷ்யக்குஞ்சுகள், வாரிசுகள் என புழங்கி வருவது நமது இசை. இன்னமும் தீர்க்கமான இசைக்குறிப்புகளை உள்ளடக்கிய பதிவுகளோ இல்லை தரவுகளோ இல்லை. எல்லாம் வழிவழி வந்தவை தான். ஏட்டுக்குறிப்புகள் என்பது அத்தனை இல்லை, தேடினாலும் கிடைக்கப்பெறா.

லிபரலைசேஷனுக்குப்பிறகு வந்த வினை இதெல்லாம். க்ளோபல் வில்லேஜ் கான்செப்ட். உனக்கென ஒன்றுமே , தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகள் இருக்கலாகாது, உனக்கென பண்பாடோ,நாகரீகமோ, இசையோ எதுவும் தேவையில்லை. ஒன்றாகக்கலந்துவிட்டால் விற்பது எளிது.அத்தனை தான். இதில் போய் எனது நாட்டார் இசை, எனது பாணி என கூவிக்கொண்டு இருப்பவனை கோமாளியினும் கேவலமாகவே பார்ப்பர்.

நான் பாம்பேயில் வசித்தபோது அங்குள்ள உள்ளுர்/மற்றும் வடநாட்டவர்கள் ,இன்னபிற இசையமைப்பாளர்களின் பாடல்களை உவந்து ஏற்றுக்கொண்டு கேட்பது போல ராசைய்யாவின் இசையை ஏற்றுக்கொள்வதில்லை. எனது பழைய பாஸ் ஒரு பெங்காலி நல்ல இசைக்கலைஞர். ட்ரெம்பெட்/பாண்டு இசைக்குழுவில் இசைத்தவர். அவரே சொல்லி பலமுறை கேட்டிருக்கிறேன். இல்லை ராம்நாத், எனக்கு அவரின்(ராசைய்யாவின்) இசை புரிபடவில்லை. ஏகத்துக்கு குழப்பமாகவும் விரைவாகவும் வாசிக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பார். இது முற்றிலும் அவர் கூறியது. என் கலப்புச்சொற்கள் என ஏதும் இல்லை.

எத்தனையோ ராசைய்யாவின் பாடல்களை , அவற்றின் சுவரங்களை உள்வாங்கிக்கொண்டு 'வட நாட்டவர்க்கு' பிடித்தமான முறையில் மெதுவாக்கி இசைத்து / லிஃப்ட் பண்ணி ஹிட்டாக்கிய பாடல்களைப் பட்டியலிடலாம். பால்கி பெருமுயற்சி எடுத்து அவரின் எண்பதுகளின் பாடல்களை இப்போது ஹிந்தி பொதுஜனத்திற்கு கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அவற்றின் ஆதார சுதி கெடாமல். எத்தனை வெற்றி என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தியத்துணைக்கண்டம் முழுக்க செல்லக்கூடிய வகையில் கொஞ்சம் சமரசம் செய்துகொண்டு இசைத்து தாருங்கள் என்று கேட்டுக்கொண்ட இயக்குநர்களை ஒதுக்கியே வைத்துவிட்டார். மெதுவாக இசைக்கவேணும் , மூன்று நிமிடப்பாடலை ஐந்து நிமிடங்களாக இசைக்கவேணும் சலிப்பு மேலிடுமடா ங்கொய்யால. பாடப்படும் இரண்டு சொற்களுக்கிடையே போதிய இடைவெளி விட்டு பாடினால் , அதே ராகத்தை துணைக்கண்டம் முழுக்க கேட்கச்செய்யலாம். கலைஞனுக்குத்தெரியாதா இது ? Compromise செய்து கொள்வதில்லை ஐயா ராசைய்யா. ஏன் புரிந்து கொள்ள மாட்டேங்கறீங்க ? ஏண்டா இவன் இப்படி வாசிச்சு விட்றான்னு என் அம்மா எப்பவும் சொல்லும், இப்ப வர்ற பாடல்களைக்கேட்டுவிட்டு.


ஒரு நொடியில் பாப் இசைப்பாடல்கள் ஆயிரம் உருவாக்கவியலும் என்று ஒரு முறை கூறியிருக்கிறார். அதான் சொல்றேன், நம்மிசையை நமது பாணியை மாற்றாது, most traditional way-ல் இசைக்கக்கூடியவரை கொஞ்சம் மாத்திக்குங்க என்று சொன்னால் சொன்னவரைத்தான் மாற்றுவார். ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' அவர் பாணியே இல்லை. சூழல் வங்காளம் , யோசிங்கண்ணா.

இன்னுங்கொஞ்சம் சொல்றேன்.ப்ராக்/செக் குடியரசில் சில நாட்கள் பணியிலிருந்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக மேற்கத்திய இசையே அவர்களின் இசை என கூறிவிடவும் இயலாது. ‘துவாரக்' அந்த செக் நாட்டின் இசைக்கலைஞர்தான். நிறைய சிம்ஃபொனிக்கோவைகளை உருவாக்கியவர் தான். இப்படி பலரை அடையாளம் காட்டலாம். அவர்களின் நாட்டார் இசை அடங்கிய ஒலிப்பேழையை வாங்கி கேட்க முயற்சித்தேன். ஆமாம் முயற்சி தான் செய்தேன். அத்தனை அயற்சி, சொய்வு இன்னும் எத்தனை சொற்களை வேணுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் இசைதானே கேட்கலாம் தானே என்று சொல்லலாம். ஐயா ஒன்றுமே விளங்கவில்லை. அந்தப்பேழை அங்கு அதிகம் விற்கும் இசைப்பேழை . ஐயோ சாமி… என்னாலேயே கேட்கவியலவில்லை. இத ஏன் சொல்றேன்னா சில அடிப்படையான , செறிவுமிக்க மண் சார்ந்த இசையை அணுகக்கூட இயலாது நம்மால். எத்தனை முயற்சித்தாலும். அசூயையும், வெறுப்புமே மண்டிடும் . நிறுத்தினால் போதும் என்ற நிலையில் கொண்டு போய் விட்டுவிடும். ஏன் என்பதற்கான காரணங்களை ஆராய முற்பட்டேன். இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்த மண் சார்ந்து அங்கேயே வசிப்பவனாக இல்லாததாலோ என்னவோ என்னால் ரசிக்கவே இயலவில்லை. அந்த இசை என் குருதியில் ஊறியதில்லை. என் அன்னை எனக்கு அதை ஊட்டவில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தான்.

நமக்கென ஒரு பாணி உண்டு. தாளக்கட்டுகள் உண்டு. மேளகர்த்தாக்கள் உண்டு. இவையாவும் தமிழ்ப்பண்ணிசையில் உண்டு. அதை உள்வாங்கிக்கொண்டு தியாகைய்யரும், ஷாமாவும் கொடுத்த கொடை என நமக்கான இசை உண்டு. இதைத்தான் ராசைய்யா எப்போதும் நமக்கு கொடுப்பார். அவரை நாடி வாரும் யாரைக்கும் இந்தப் பாணியிலான இசையையே கொடுப்பார். அதை யாருக்குப்பிடிக்கிறதோ அவர்களிடம் மட்டுமே பணி செய்வார். அவர் எந்நாட்டவராயினும் சரி.

ராசைய்யா இசைத்த கோவைகள், சிம்ஃபொனிக்கள் , இன்னபிற திரை சாராத இசைப் பேழைகள் எல்லாவற்றிலும் , நமது பாணியே பின்பற்றப்பட்டிருக்கும். how to name it-ல் chamber welcomes thiyagaraaja, I met bach in my house என்ற தலைப்புகளில் தான் இசைக்கோவைகள் இசைக்கப்பட்டிருக்கும். பாக்'கை என் வீட்டில் சந்தித்தேன், என் இசையை என் நாட்டார் பாணி/நமது இசையை அறிமுகப்படுத்தினேன். சேம்பர் தியாகய்யரை வரவேற்கிறது, தலைப்புகளையே பார்க்கலாம். கலைச்செல்வங்களை அறிமுகப்படுத்த செய்த முயற்சி வெளிநாட்டவர்க்கு நமது பாணியில். அவர்களை இங்கு கொண்டு வரவில்லை. இங்கிருப்பதை அங்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகள் கண்ணு. நம்மிடம் கொட்டிக்கிடக்குது , அதைப்போற்றலாம்.

ராசைய்யா என்னைப்போல வெள்ளைக்காரனுக்கு/ கார்ப்பொரேட்டுகளுக்கு கை கட்டி , சொல்லுங்க எசமான்னு சேவகம் புரியும் ஐ.ட்டி இஞ்சினியர் இல்லை. இசைக்கலைஞன். நம்மாளு.