Friday, March 30, 2012

ஆழிப்புரவிகள்



இவற்றிற்கு உள்ள வால்களை  மட்டும்
வைத்துக்கொண்டு இவை என்னென்ன  செய்யும்?
அவையும் சுருண்டே கிடக்கின்றன

சிலிர்க்கப்பிடரி மயிரும்  இல்லை
கால்கள் என உடலில் எங்கும் காணப்படவில்லை
இருந்திருப்பினும் அவை  கடலின் பெருத்த அலைகளில்
அவற்றைப் பயன்படுத்த இயலாமலே  போயிருக்கும்.

நீருக்குள் புழுதிகிளப்ப இயலாமை
குறித்து விசனப்படுமா  தனக்குள்..?

கடலின் அலைகளிலும் அதன் அலைக்கழிப்பிலும்
தம்மை மனம் போன போக்கில் செலுத்திக்கொள்ள
இயலாமையும் அதற்கு ஒரு காரணம்.

சதுரங்கக்குதிரை போல யாரேனும் தம்மை
செலுத்தக்காத்திருப்பது  போலவே அவை
எப்போதும் தோற்றமளிக்கும் தானாக எதையும்
செய்ய இயலாமல்.

இந்தக்குதிரையின் சக்தி  அறிந்தவர் யார் ?
எதையும் உணராமல்
இந்த சீசாவினுள்
அடங்கிக்கிடக்கிறது.
இன்னொரு அலையையும்
அதன் அலைக்கழிப்பையும் எதிர்பார்த்து
என்னினம் போலவே.



.

Sunday, March 25, 2012

சில்வியா’வின் மரணம்




இந்தக்கவிதை உங்களால்
வாசிக்கப்படுகிறது என்பதை அறிய
என்னாலான சிறிய
முயற்சி என்னவாக இருக்கக்கூடும்?

எழுதிக்கொண்டிருக்கும்போது
என்னுள் ஏற்பட்ட கொந்தளிப்புகள்
உங்களுக்கு என் எழுத்துகளினூடாகத்
தெரிந்துவிட வாய்ப்பில்லைதான்
ஒருவேளை காகித எழுத்துகளுக்கும்
உணர்ச்சிகள் இருந்திருப்பின்
உங்களுக்கு அவை சுட்டிக்காட்டியிருக்கலாம்

கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்கின்றன
என் தற்கொலைக்காரணங்களை
என்னாலும் உங்களாலும்

இதில் யார் முந்துவது என்பதில்
போட்டி வர வாய்ப்பிருக்கிறதா.?

இங்கிருந்து கடந்து சென்ற
அந்த ஒரு கடைசி நொடியை
ஆவணமாக்கும் முயற்சியில்
இம்முறை கண்டிப்பாக எனக்குத்தோல்விதான்
கைவிரல்கள் பரப்பி வைத்து
சயனைடின் சுவை சுட்டமுயன்ற
அறிவியலாளன் போல

வகைவகையாக தன்னை மாய்த்துக்கொள்ளும்
முயற்சிகளை வகைதொகையின்றி
ஆவணப்படுத்தினேன்
ஒவ்வொரு முறை அது தோற்றபோதும்.
அதுவே நான் அதனிடம்
தோற்றபோது நிகழ இயலவில்லை.
 
எனக்காகப்பிறர் எழுதுவதை
எப்போதும் என்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை
அதையும் நானே எழுதிவிடவேண்டும்

உங்கள் அருகிலிருந்து
உங்களுடன் கூட அமர்ந்து
வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன்.
இதை
உங்களுக்கு அறியாமலேயே.
நீங்கள் ஒவ்வொரு முறை
வாசிக்கும்போதும்


Monday, March 19, 2012

நிழல் தரும் வெயில்



அழகர் ஆற்றில்
இறங்கும் திருவிழாவில்
காலில் மூங்கில்
வைத்துக் கட்டியிருந்தவன்
மாதிரி என் நிழல்
நீஈஈஈளமாகத் தெரியும்
காலை வெயில்

என் கால்களுக்குள்ளேயே
விழுந்து கொள்ளும் என் நிழல்
கழுதை கூடப்பொதி
சுமக்காத மத்தியான வெயில்

எம்பிக்குதித்து கைநீட்டி எக்கினாலும்
பிடிக்க முடியாத மேற்கூரையை
எளிதில் தொட்டுவிடும் என் நிழல்
மஞ்சள் நிற மாலை வெயில்

வெயிலின் அருமை
நிழலில் தான் தெரிகிறது.


.

Wednesday, March 14, 2012

காற்றைக்கடந்துவரும் கருப்பு




கருவாட்டுத்துண்டுக்கும்
பழைய சோற்றுக்கும் அலைந்து,
மல்லிகைப்பூவுக்கும்
மருக்கொழுந்துக்குமெனத்திரிந்து,
சைக்கிளின் பின்புறம் அமர்ந்து
பாரமாக அழுத்தியதெல்லாம்
சலித்துப்போனது எனது பேய்க்கு.

நரபலியை எதிர்பார்த்து

குருதி குடித்து தாகம் தீர்த்து,
பிறர் உடலிற்புகுந்து
அவர் அறியாப்பலமொழிகளைப்
பேசவைத்து ஆட்டுவித்ததெல்லாம்
அலுத்துப்போனது எனது காட்டேரிக்கு.

எதிர்பாரா நேரத்தில்

அறைந்து பயமுறுத்தி,
பார்ப்போர் கண்களில்
மரணபயத்தை உண்டாக்கி
அவரை நிரந்தர மன
நோயாளியாக்கியதெல்லாம்
மடுத்துப்போனது எனது பிசாசுக்கு.

பல இடங்களிலும்

தமது இருப்பை ஒரே நேரத்தில்
காண்பித்து அதை
உணர்ந்தவரின் அடிவயிற்றில்
சுருள்களை உண்டாக்கி
சோர்ந்து போனது எனது சாத்தானுக்கு

அமாவாசை இருட்டில்

நேற்று சலவையிலிருந்து வந்த
வெள்ளையுடையுடன் நின்று
திகிலேற்படுத்தியதெல்லாம்
திகட்டிப்போனது எனது நீலிக்கு,

ஆட்டிவைத்த மந்திரவாதி

ஏற்பித்த கட்டளைகளை
ஒவ்வொன்றாகச் செய்து முடித்து
மேற்கொண்டு கட்டளைகளை
எதிர்பார்த்து விரக்தியாய்ப்போனது
எனது பேய்க்கு,

உங்களிடம் ஏதேனும்

புதிய உத்திகள் உளதா
என எதிர்பார்த்து
நிற்கிறது அது இப்போது..!

.