Monday, September 25, 2017

ஒன் அண்டு ஹாஃப்/டபுள்

நேற்று சாயங்காலம் ஐயா பொதியவெற்பனின் பிரியாவிடை சந்திப்பிற்கென செந்தில் வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தேன். சில்க் போர்டிலிருந்து ஆட்டோ எடுத்தேன், வழக்கம் போல நூறு நுற்றைம்பது என்றனர். ஏம்ப்பா என்ஜீவி காம்ப்ளெக்ஸுக்கு இவ்வளவா என்றவனை, ட்ராஃபிக் சார் என்னா பண்றது என்றார் தமிழில். அட நம்மூரு என்று எண்பதுக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்டு ஏற முயன்றபோது,கையில் சிகரெட் வைத்திருந்தார். இல்ல எனக்கு புகை ஆகாது , அத முடிச்சிருங்க என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அவசர அவசரமான ஊதித்தள்ளி விட்டு அணைத்தார். ஏறிக்கொண்டேன். போகும் வழியில் நினைத்ததை விட அத்தனை ட்ராஃபிக். 92ல வந்தேன் சார், இங்க தர்மபுரி பக்கத்துலருந்துவந்த நாள்லருந்து இதே ட்ராஃபிக் தான் சார். வாழ்க்கையே ட்ராஃபிக்ல தான் ஓடுது என்று சலித்துக்கொண்டார். எங்க சார் இப்பல்லாம் வருமானம்? ஓலா,ஊபர் காரன் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போய்ட்டான். நைட்லாம் ஒன் அண்டு ஹாஃப்/டபுள் வாங்கி ஓட்டிக்கிருந்த தெல்லாம் சுத்தமா வழிச்சிட்டான். நீங்களும் ஓலா'வில ஆட்டோவை சேர்த்துர வேண்டியது தானே. இல்ல நானும் வெச்சிருக்கேன், ஆனா மீட்டருக்கு மேலே பத்து காசு வாங்கமுடியாது அதான் கனெக்ட் பண்றதேயில்ல என்றார்.

பேசிக்கொண்டேயிருந்தவர் , இப்ப நான் குடிச்சிட்டு தான் வண்டி ஓட்டிக்கிட்டுருக்கேன் என்று குண்டைத்தூக்கிப்போட்டார் ...அடப்பாவி, இருந்தாலும் ஸ்டெடியா ஓட்டுவேன் சார், பயப்படாதீங்க என்று என்னை தைரிய மூட்டினார். என்ன சார் பண்றது வருமானம் பூரா கம்மியாயிருச்சி, மேவரும்படி இல்ல, வீட்டுக்கு போனா சதா சண்டை, அதான் அப்பப்ப கட்டிங் போட்டுருவேன். போன வாரம் என் மாமனாருக்கு இப்டித்தான் சார் ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு என்று கலவரமூட்டினார். எப்டி என்றேன். ராத்திரில மூணு பேர் வண்டில போய்ட்டிருக்கும் போது பைக்காரனுக்கு வழி விட்றேன்னு சொல்லிட்டு வேகம் குறைக்க முடியாம பேரிகேட் மதில் சுவர்ல முட்டி என்றெல்லாம் கூறிக்கொண்டேயிருந்தார். இவன் ஒழுங்கா கொண்டுபோய் சேர்ப்பானா என்றாகிவிட்டது. அப்புறம், ஒண்ணும் இல்ல சார், ரெண்டு பேருக்கு கை ஒடைஞ்சு, மாமனாருக்கு நெற்றி பிளந்துகொண்டது, நாலு நாள் ஆச்சு சார் டிஸ்சார்ஜ் ஆகி என்றார். அதான் அவர் வண்டியத்தான் இப்ப ஓட்டிக்கிட்ருக்கேன் என்றார். இவன் செந்தில் வீட்டுக்கு போவானா இல்ல வேறேங்கயாவது கொண்டு போய் சேர்ப்பானா ?! என்றாகிவிட்டது எனக்கு.

சிக்னல் ரொம்ப நேரம் சிவப்பு. செந்தில் அழைத்தார் என்ன ராம் இவ்வளவு நேரமா என்றார். எப்டி சொல்றது, இந்தா வந்துர்றேன் என்றேன். ‘ட்ரங்க அன் ட்ரைவ்' புடிக்க மாட்டாங்களா என்றேன். அதெல்லாம் இந்த ஏரியால இல்ல சார் அப்டியே வந்தாலும் ஐநூறு குடுத்தா விட்ருவான் என்று நம்பிக்கையாக சொன்னார். பெரும்பாலும் ஆட்டோக்காரங்களை பிடிக்க மாட்டாங்க சார் அதான்.. ஒண்ணும் பயமில்ல என்றார். எனக்குத்தான பயம். கொஞ்சம் மெதுவாவே போங்க எனக்கு ஒண்ணும் அவசரமில்லை என்றேன். என்ன தம்பி பயந்துட்டீங்களா என்று சிரித்தார். வாடை வீசியது. ஒரு வழியாக காம்ப்ளெக்ஸ் வந்திறங்கியதும் , சரியான சில்லறை கொடுத்தார். பாத்து போங்க, வேகம்லாம் வேணாம் என்றேன். அடப்போங்க தம்பி, என்று சிரித்தவாறே ஆட்டோவைத்திருப்பிக்கொண்டு விரைந்தார்.