Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, December 29, 2016

லீஸா ஸ்டாஃபர் - பயோக்ராஃபியா


லீஸா ஸ்டாஃபர் - நெய்தல் கலை ஓவியங்கள் புனையும் கலைஞர். சுவிட்ஸர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.  நேஷ்னல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்' பெங்களூரில் சென்றிருந்தேன். நிறைய நூல் நெய்து அதில் ஓவியங்கள் உண்டாக்கி காட்சிப்படுத்தும் கலைஞர். பி ஆர் விஸ்வநாத்' என்ற ஒளிப்பதிவாளர்/ ஓவியக்கலைஞர் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பயோக்ராஃபியா' என்ற பெயரில். "கலை என்பது சமூகத்தை திருத்துவதற்கோ இல்லை பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ இல்லை" என்கிறார்.

முழுக்க வாழ்க்கை வரலாறு போலல்லாது , அவரின் பணிகளினூடே இவர் காமிராவை வைத்து எடுத்தது போல கொஞ்சமும் சலிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடும் டாக்குமென்ட்டரி. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார். பல சொற்கள் கிட்டாது தவித்து யோசித்து , ஸ்விஸ் மொழியிலிருந்து தமக்குள் மொழி பெயர்த்துக்கொண்டு பின்னர் சொல்கிறார். அது வரை காமிரா அசையாது அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அவரவர்க்கான மொழி என்று ஒன்று உண்டு. ஜெர்மன்/இட்டாலியன்/ போல ஸ்விஸ் மொழியும் தமது சொற்களைக்கொண்டு விளங்குவதே. நான் ப்ராக்(செக் குடியரசு)கில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது கண்கூடாக அதைக்கண்டிருக்கிறேன். தமிழனுக்கு இந்தி எங்கனம் ஒரு வெறுப்போ, காலனியாதிக்கம் செலுத்தும் மொழி என்ற தேஸ்யம் உள்ளது போல ஐரொப்பிய பிற மொழி பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் மேல் அத்தனை வெறுப்பு. எனக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது ( இன்னமும் தான் :) ).

அப்போது சிலர் கூறுவர். ஜெர்மனோ இல்லை கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் இங்கு சமாளிக்கலாம் என. கொஞ்சமும் ஸ்னானப்ரப்தியே இல்லாத வேறு குடும்பத்தை சேர்ந்த மொழி அது.  அது போல அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் பிணக்கு. இருப்பினும் வலுவில் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார் லீஸா. என்ன காரணம் என ஊகித்தேன். படம் எடுப்பவர் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் தாம் உரையாடுவது அவருக்கு புரிய வேணும் என்று கருதி பேசியிருக்கலாம். இடையிடையே அவர்தம் மகள் சொற்களை எடுத்துக் கொடுக்கிறார். உண்மையைச்சொன்னால் அவரின் பெயரும் அவர்தம் ஓவியங்களும் எனக்குப் பரிச்சயமானது இந்த ஆவணப்படத்தின் மூலமாகத்தான். ஒருவேளை இதையும் அவர் ஊகித்திருக்கலாம் உலகம் முழுக்க பரவ ஆங்கிலத்தில் தான் பேசவேணும் என்று. மொழி மற்றும் சொற்களுக்கு முன்னரே கலை தோன்றிவிட்டது என்று அறுதியிட்டு கூறுகிறார் லீஸா. இதுவும் கூட  காரணமாகக்கூட இருக்கலாம்.

இருப்பினும் என்னியோ மரிக்கொன் தமது 80ஆவது வயதில் ஆஸ்கர் பரிசு மேடையில் தம் தாய்மொழியான இட்டாலியனிலேயே பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு கருத்து.

முதற்கணவர் உடல் நலக்குறைவால் விரைவில் இறந்துவிட்டதையும் பின்னர் ஒரு பெயின்டருடன் தாம் இணைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது உறவு அத்தனை சுகமாயில்லை. அந்த பெயின்ட்டர் இவரை கீழ்ப்படிந்து நடக்கும் படி பணித்ததையும் , தமது ஓவியங்களின் மீது பொறாமை கொண்டதாகவும் வருந்துகிறார். தம்பதியருக்குள் இப்படி ஒரு பிணக்கு. Jealous என்ற சொல்லை ஜெலூஸ் என்று உச்சரிக்கிறார். பெண்கள் ஆணை சார்ந்திருக்கவேணும் , பணம் சம்பாதிப்பது ஆணுக்குரியது(ஹ்ம் அங்குமாடா இதெல்லாம் ?!) இப்படிக்கும் இதெல்லாம் 70-80களில் நடக்கிறது. பின்னர் அந்த வலிகொடுக்கும் உறவிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளிவந்து தம் மகள்களோடு ஓவியப்பணியை தொடர்ந்திருக்கிறார்.

Tapestry என்ற பல நிறங்கள் கொண்ட நூல்களை சட்டகத்தில் வைத்துக்கொண்டு அதில் ஓவியங்களை உருவாக்குதல் இவரின் சிறப்பு. க்ராபிக் டிசைன்ஸ், ஓவியங்கள் என பல படிப்புகளை கல்லூரியில் பயின்று பின்னர் அதையே தொழிலாக கொண்டிருக்கிறார் லீஸா. தமது முதற்கணவர் வேண்டுகோளுக்கிணங்க தாவரவியல் ஓவியங்களை வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அவர் ஒரு தாவரவியல் நிபுணராக இருந்திருக்கிறார் எனினும் 36 வயதில் இறந்து விட்டதை நினைவு கூர்கிறார். இந்த டாபிஸ்ட்ரி பெண்களுக்கான கலை என்பதில் உறுதியாக இருக்கிறார். இயல்பிலேயே நெய்தலில் பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்றும் கூறுகிறார்.

டாப்பிஸ்ட்ரி மட்டுமல்லாது கண்ணாடியை சிறு கத்தி கொண்டு கீறி அதில் ஓவியங்களை உண்டாக்கி பின் வண்ணம் தீட்டும் கலையும் இவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அத்தனை தேவாலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக்காணலாம். வெளிப்புற வழி சூரிய ஒளி அக்கண்ணாடியில் பட்டு சர்ச்சுக்குள் படரும் நிழலில் ஓவியம் துலங்கும். அத்தனை வண்ணங்களும் ஜெகஜ்ஜோதியாக ஒளிரும். நான்கு காலங்கள் என்ற ஓவியம் நான்கு கண்ணாடிகளில் செய்து அதை சர்ச்சின் ஜன்னல்களில் பொருத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.பதினைந்துக்கு பத்தடி என்ற அளவில் இந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

கம்ப்யூட்டர் க்றாபிக்ஸ் பற்றி அத்தனை விருப்பின்றியே பேசுகிறார். 80களில் அப்போது வெளிவந்த தொழில் நுட்பத்தை அவர் வெறுத்திருக்கிறார். அந்தச்சமயமே அவர் மரபு நோக்கி நகர்ந்து ட்ரெடிஷனல் ஓவியங்களை டாபிஸ்ட்ரியில் நெய்யத்தொடங்கியிருக்கிறார்.  உலகம் முன்னோக்கி கலைகளை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல முற்படும் போது அவர் பின்னோக்கி தன்முனைப்புடன் தம் கைகள் கொண்டு உருவாக்கும் கைவினைக்கலஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்.

அவர் கண்களில் அந்த வெறுப்பு மண்டிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அதுவரை பென்சிலும் பேப்பருமாக வரைந்து கொண்டிருந்தவர் , மிகுந்த உடலை வருத்தும் டாப்பிஸ்ட்ட்ரியில் கவனம் செலுத்தத்தொடங்கி அவரின் புறங்கைகள் உள்ளுக்குள் வளைந்து போயிருக்கின்றன. கூன் விழுந்து நெஞ்சு முன்பக்கம் நகர்ந்து உருவம் சொல்லிக்கொள்ளும் படியாகவே இல்லை அவருக்கு, கணினியும் தொழில் நுட்பமும் எத்தனை வெறுப்பை அவருள் விதைத்திருக்க வேணும் என்பது தெளிவு. விரல்களும் புறங்கைகளும் அந்த க்றோஷா/கொண்டை ஊசிபோல வளைந்து போனதன் காரணமாக வழக்கமாக வாசிக்கும் பியானோவை இப்போதெல்லாம் வாசிக்க முடியவில்லை என வருந்துகிறார்.

டாப்பிஸ்ட்ரி தவிர, தனியாக உள்ளூர் ஸ்விஸ் கடிகார நிறுவனங்களுக்கு லெட்டர் பேடுகளும், லோகோக்களும் வரைந்து கொடுத்திருப்பதை ஆர்வத்துடன் காட்டுகிறார். எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. பின்னர் விஸ்வநாத்துடன் காரில் பயணித்து தமது ஓவியங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். ஒரு பெரிய டப்பிஸ்ட்ரி வொர்க், கிட்டத்தட்ட 40 அடிகள் உயரமும், 10 அடி அகலமும் கொண்ட டாப்பிஸ்ட்ரியை ஓவியக் கண்காட்சி நடக்கும் ஆர்ட் கேலரியில் காண்பிக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக அதற்கென உழைத்திருப்பதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட கலையால் சமூகத்திற்கு என்ன பயன் என்ற விஸ்வநாத்தின் கேள்விக்கு , இதனால் ஒரு பயனும் இல்லை எல்லாம் எனது விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டவையே எனத்தெளிவாக பதிலளிக்கிறார் லீஸா. இருப்பினும் ஸ்விஸ் உள்ளூர் கலைகளில் வேறு வெளிநாட்டுத்தாக்கங்களை குறித்து அச்சம் தெரிவிக்கும் அதே லீஸா, கொரியன் பாதிப்பில் தாம் ஒரு டாப்பிஸ்ட்ரி செய்திருப்பதையும் காண்பிப்பது நகை முரண். இருப்பினும் இவரின் மகள்கள் யாரும் இப்பணியை தொடராது இசை மற்றும் இன்னபிற கலைகளை பயிற்சி செய்பவர்களாகவே இருக்கின்றனர்.  ஒரு விஷயம் சொன்னார் விஸ்வநாத், பொதுவாக தாயை பேட்டி எடுக்கும்போது மகள்களோ/மகன்களோ கூட இருப்பதில்லை தாமுண்டு தம் வேலையுண்டு என்றேயிருப்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் இங்கு தலைகீழ். கூடவே பயணிக்கின்றனர் ஆவணப்படம் முழுக்க.

பின்னர் படம் முடிந்ததும் விஸ்வநாத் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நல்ல சுவாரசியமான கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார். எனது கேள்விகள் இவை, ஸ்விஸ்ஸீல் நிறைய கலைஞர்கள் இருந்த போதிலும் லீஸாவை தேர்ந்தெடுத்தது ஏன் ? சமூகத்திற்கு என் கலைகள் ஏதும் செய்யப்போவதில்லை என லீஸா கூறுகிறார். அதே கேள்வியை உங்களிடம் (விஸ்வநாத்திடம்) கேட்பின் என்ன பதிலுரைப்பீர்கள், இந்த டாக்குமென்ட்ரியை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததா (ஏனெனில் அவர் 2009-ல் மறைந்து விட்டார்). லீஸாவின் பணியில் அவர்தம் கலையில் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேணும் என்பதும், மேலும் மரபு வழி வந்த அவரின் கலைப்பயணம் குறித்தும் தாம் மகிழ்ந்ததாலும் படம் எடுக்கத்தோணியது என்றார். சமூகத்திற்கென , இந்தப்படத்தை ஒரு சிறுவன் பார்த்து அதன் மூலம் அவனின் கலையை வெளிக்கொணர இது உதவலாம் என்பதே எனது நோக்கம். இந்தப்படத்தின் ரஃப் கட்டை மட்டுமே அவரால் காண முடிந்தது,முழுக்க படம் எடுத்து/இசைக்கோர்ப்பெல்லாம் செய்து முடித்து முழுப்படமாக வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். பலமுறை இந்தப்படத்தின் பல வித நேரங்களில் அவரிடம் காண்பித்து பல மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய கலைஞர், ஒரு விக்கிப்பீடியா பக்கம் போலும் இல்லை.அவரைப்பற்றிய அவரின் ஓவியங்களின் படங்கள் எவையும் இணையத்தில் கிடைக்கவேயில்லை எனக்கு. (கிடைக்கும் படங்களும் வலைப்பூக்களும் இதே பெயரில் இருக்கும் வேறொரு அமேரிக்கப்பெண்மணியின் ஓவியங்களாகவே இருக்கிறது) ஒருவேளை அதுவே அவரின் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் கணினி கொண்டு உருவாக்கும் படைப்புகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருந்ததில்லை. விஸ்வநாத்தின் ஆவணம் மட்டுமே அந்தப்பணியை செய்திருக்கிறது. மேலும் கலை என்பது பிறரின் அங்கீகாரம் தேடுவதற்கெனச் செய்யப்படுவதில்லை , அது முட்டமுழுக்க அதை உருவாக்கும் கலைஞனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாகவே இருக்கவேணும் என்பதே விஸ்வநாத்தின் கூற்றாக இருக்கிறது. 




.

Sunday, December 25, 2016

"Original Tamils"



நேற்று (24/12/2016) பெங்களூர் காக்ஸ்டவுன் அலொய்ஸிஸ் கல்லூரியின் அரங்கில் ஸ்டாலின் ராஜாங்கம் (அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர்) அயோத்தி தாசர் பற்றி உரையாற்றினார். நிறைய புதிய விஷயங்கள் எனக்குத்தெளிவாகின. 1800 களிலேயே அவரது பணி துவங்கி விட்டதை எடுத்துரைத்தார். "Original Tamils" என்ற வகைப்பாட்டில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்க்கவேணும் என்பது, பெரியார்/அம்பேட்கர் ஆகியோருக்கு முன்னரேயே விடுதலை பற்றிப்பேசியது, சிதம்பரத்தில் தீப்புகுந்து தமது பக்தியை நிரூபித்த நந்தன் ஒரு பெளத்த மன்னன் (ஆண்டான் அடிமை அல்ல), பெரும்பான்மையான இலக்கியங்கள் பெளத்த/ சமண மதத்தை சார்ந்தவை,சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள் மறைக்கப்பட்டவை, ICS தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேணும், இந்தியாவில் அல்ல, ஏனெனில் இந்தியர்களை ஆளுமையில் ஆங்கிலேயர்கள் சாதிப்பாகுபாடின்றி நடத்துவர் , மேலும் தாதாபாய் நவ்ரோஜி 300 கையெழுத்துகள் கொண்டே இந்த கோரிக்கையை முன்வைத்தார், அயோத்தி தாசரோ மூவாயிரத்துக்கும் மேலான கையெழுத்துகளுடன்  இந்த ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து கோரிக்கை முன்வைத்தார். நீதிக்கட்சியின் முன்னோடி தாசருடையது, இதைப்பற்றி பெரியாரே சில இடங்களில் கூறியிருக்கிறார்.இப்படி பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

கார்த்திகை தீபம் என்பது கார்' என்றால் இருள் துல' என்றால் துலக்கக்கூடிய என்ற பொருள். மேலும் அடிமுடி காணா அண்ணாமலை என்பதெல்லாம் நம்ப வைக்கப்பட்ட கதைகள். ஆமணக்கு விதையிலிருந்து எங்கனம் எள் எடுத்து பின் அதை செக்கிலாட்டி எண்ணெய் பிழிந்தெடுப்பது போல என்ற முயற்சிகள் கொண்ட எண்ணை கொண்டு எரியவைக்கப்படும் விளக்குகள் என்பதே.



திருவையாறில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆனை மேல் அம்பாரி வைத்து அந்த ஆனையை முதன்மையாக அணியில் வலம் வரச்செய்யும் மரபு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. சங்கீத வைபவத்தில் இன்றும் இருமணிக்கூறு நிகழ்வாக பறையடிக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து நமக்கும் தெளிவாகலாம் தமிழ்ப்பண்ணிலிருந்து தோன்றியது அனைத்தும் என்பது.





ஸ்டாலின் ராஜாங்கம் பேராசியர் என்பதால் அவர் வகுப்பு நடத்துவது போலவே தோன்றியது எனக்கு. ஹிந்து' ரா விநோத்'தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடந்தது. உரை முடிந்ததும் கலந்துரையாடல். பல பேர் கேள்விகள் கேட்டனர். மாணாக்கர்களுக்கு விளக்கம் சொல்வது போல பொறுமையுடன் பதிலுரைத்தார். பின்னர் அனைவருமாக சேர்ந்து ஷாந்தி சாகரில் தேநீர் அருந்திவிட்டு வீடு கிளம்பினோம்.

 

Monday, November 19, 2012

“அரிச்சந்திரா” தோற்பாவைக்கூத்து





அழிந்து வரும் கலைகளில் ஒன்றான தோற்பாவைக்கூத்து நடந்தேறியது நேற்று 18-11-2012 பெங்களூர் ஜெய்பீம் பவனில் , கலைஆர்வலர் மற்றும் “களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்” என்ற ட்ரஸ்ட்டை நடத்தி வரும் திரு மு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து வழங்கினார்.

தொடரும் பொருளாதார நெருக்கடியிலும் அழிந்து வரும் கலைகளைத் தம்மால் இயன்றவரை இந்த்தலைமுறைக்கு எடுத்துச்செல்ல முயல்பவர். கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தும், அந்தக்கலைகள் அழிந்து விடாது , ஒரு கலைக்கூடம் – கூத்துப்பள்ளி –நிரந்தரமாகக் கட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அது குறித்த நிதி திரட்டும் வகையிலும், பெங்களூரில் இருக்கும் கலை ஆர்வலர்களின் கண்களுக்கு விருந்தாக்கவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது “பெங்களூர் ஜெய் பீம் பவனில் (டவுன் ஹால் அருகில்).

தோற்பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,கூத்து முதலிய தொல்கலைகள் தமிழர்தம் நுகர்வுக்கலாச்சாரத்தால் நசிந்து வருகின்றன. இவ்வரிய கலைகளை மீட்டெடுப்பதும் , ஆவணப்படுத்துவதும் மட்டுமல்ல, ஆதார வடிவம் மாறாது அவற்றை வளர் தலைமுறைக்கு கைமாற்றித்தருவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.

நிகழ்த்துக் கலைஞர்களைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம்

அம்மாப்பேட்டை கணேசன் -அய்யா கணேசன் அவர்கள் தோற்பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,கூத்து முதலான கலைகளில் சிறந்து விளங்குபவரும் , தமிழகத்தில் தற்போது காணக்கிடக்கும் பத்தே பத்து கலைஞர்களில் ஒருவர்.வாழ்வை முழுமையாக கலைக்கெனவே அர்ப்பணித்தவர். “அரிச்சந்திரா” தோற்பாவைக்கூத்தை நிகழ்த்தியவர்.



அம்மாப்பேட்டை செல்லப்பன் -இவர் “அய்யா கணேசனின்” தமையனார்.மிருதங்கமும் ,கூடவே பாடல்களும் பாடக் கூடியவர்.
முகவீணை நாகமரை குமார் – நாயனம் போன்ற சிறிய வாத்தியக்கருவியை வைத்துக்கொண்டு வர்ணஜாலங்கள் காட்டுகிறார்.
ஹார்மோனியம் சுப்ரமணி – ஆதார சுதி இவரின் ஆர்மோனியத்திலிருந்துதான் கிளம்புகிறது.
தாளம் ரமேஷ் – கூடி வரும் தாளமும்,ஒருமித்த குரலுமாக தோற்பாவைக்கூத்தை ஒரு நிகழ்கால நிகழ்வு போல மாற்றிக்கொண்டிருப்பவர்.

என்னுடைய சிறுவயதில் ஊரில் நடந்த கோயில் திருவிழாக்களில் கரகாட்டம், ஒயிலாட்டம், ராஜா ராணி ஆட்டங்கள் எல்லாம் பார்த்த எனக்கு அவை நினைவில் எப்போதும் தங்கிப்போனவை. இந்தத் தோற்பாவைக்கூத்து என்பது என்னைப்பொருத்தவரை ரொம்பவும் புதிதான ஒன்று. பொம்மலாட்டங்கள் கூட ஒரு சில இடங்களில் கண்டது உண்டு.

இந்தத் தோற்பாவைக்கூத்துக்கென , ஆட்டின் தோலைப்பதப்படுத்தி , அதை மெருகேற்றி பிறகு கதாபாத்திரங்களூக்கேற்ப அவற்றை உருவங்களாக நறுக்கி ,  வர்ணங்கள் பூசி என ஏகத்துக்கு முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டிய ஒன்று.


ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உண்டான ஆடை அணிகலன்கள், வேல் , அம்பு, மற்றும் ஐயர் குடுமிகள் , அவற்றின் பானை வயிறு என்றெல்லாம் அதை அமர்ந்து கலை நேர்த்தியோடு உருவாக்க வேண்டும். அவற்றின் கண்களில் வேறுபாடு காண்பிக்கிறார் “அய்யா கணேசன்” . அதே சந்திரமதி நாடாளும் அரிச்சந்திர மன்னனின் ராணியாக இருக்கும்போது உள்ள உடுப்புகளும் ,முக்கியமாக தீட்சண்யமான அவளின் கண்களும் , பின்னர் அவள் ஒரு பிராமணனின் வீட்டு வேலைக்காரியாக விற்கப்பட்டவுடன் காணக்கிடைக்காது போகின்றன.

அந்த வேலைக்காரி உருவத்திற்கென இடுங்கிய கண்களும், அத்தனை சோபிக்காத உடுப்புகளுமாக , நகைகள் அனைத்துமிழந்து போய் நம்மை கண்கலங்க வைக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் , குறைந்தது மூன்று வேடங்கள் அரிச்சந்திரா நாடகத்தில் வருகிறது. அவற்றுக்குப்பொருத்தமான வேலைப்பாடு கொண்ட தோற்பாவைகளை உருவாக்கி அவற்றை வேணும்போது கயிறு கொண்டு அசைத்து நம்மை அந்தக் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போகச்செய்கிறார். திரை நடிகர்களையும் மிஞ்சும் பாவனைகள் காட்டுகின்றன பாவைகள்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் சென்றால் மட்டுமே இப்படியான கலைகள் இன்னமும் இருந்து வருகின்றன என்பது தெளிவாகிறது. இது சம்பந்தமான காட்சிகள் ‘அழகி’ மற்றும் ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற திரைப்படங்களிலும் வருகிறது ,அதற்கான முக்கியத்துவம் அத்தனை கொடுக்கப்படாவிட்டாலும் கூட போகிறபோக்கில் காண்பித்துவிட்டு போகிறது.. எத்தனை பேர் இவற்றை கவனித்தோம் ?



Pogo , Cartoon Network Channels பார்க்கும் நம் குழந்தைகளின் மனதில் மேற்கத்திய நாடுகளின் மிக்கி மௌஸ், டொனால்ட் டக் போன்ற கதாபாத்திரங்கள் எவ்வித உள்ளுறுத்தலுமின்றி அவர்களால் விதைக்கப்படுகிறது.முழுக்க வியாபார நோக்கில்.நம்மிடம் இருக்கும் இந்தத் தோற்பாவைக் கூத்துக்கு அந்த மாதிரியான தொலைக்காட்சி சேனல்களில் இடமேயில்லை. நாமளே முதலில் பார்ப்பதில்லை, பிறகல்லவா நமது குழந்தைகளுக்கு இவற்றைக்காண்பிக்க ?

சினிமாத்திரையில் முன்னேற்பாடுகள் செய்து,இயக்குநர்,இசை அமைப்பாளர்,கதை/திரைக்கதை இன்னபிற விஷயங்களும் , அவற்றுக்கான உதவிகளும் ஒருங்கே கிடைத்து , தமது
“திறமையை” பல டேக்குகள் வாங்கி , பல சமயங்களில் கதையையே தமக்கென , தம் புகழ் வருமாறு மாற்றிக்கொள்ளவும் செய்யும் செல்லுலாய்ட் சிற்பங்கள் எல்லாம் இந்த உண்மைக்கலைஞன் முன்னிலையில் தலை குனிந்து நிற்க வேண்டும். நிகழ்ச்சிக்கென தகுந்த முன்னேற்பாட்டுடன் வந்தாலும் , கதை சொல்லும் விதம் , அவற்றுக்கான இசை , இடையே வரும் பாடல்கள் அனைத்தும் எவ்விதத்தடையுமின்றி , தடங்கலின்றி நேரடியாக நிகழ்த்திக்காண்பிக்கப்படுகிறது. ‘டேக்’குகள் எடுக்க வாய்ப்பேயில்லை. இப்படிப்பட்ட கலைஞர்கள் கோடியில் சம்பாதிக்கிறார்களா ? தெருக்கோடியில் சீண்டுவாரற்று கிடக்கிறது இந்தக்கலை.

கோடிகளில் சம்பாதிக்கும் அந்தத்திரைக்கலைஞர்கள் தமது ஒரு நாள் ஊதியத்தைக் கொடுத்தாலும் போதும் இந்த உண்மை நிகழ்த்துக்கலைஞன் ஒரு ஆண்டு உண்ணவும் , தமது கலையை வியாபார நோக்கின்றி பலருக்கும் எடுத்துச்செல்லப் போதுமாயிருக்கும் என்பதே முகத்திலறையும் உண்மை.