Wednesday, March 27, 2024

Africa The Wild Secrets

 


ஆப்ரிக்க காடுகளில் ஒரு ஃபோட்டோக்ராஃபரின் அனுபவங்கள். பிரமாதமான நிகழ்வு. எடுத்த அத்தனை புகைப்படங்களையும் ஒரு ஸ்லைட்ஷோவாகப் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு நாட்டிலும் கிட்டத்தட்ட பத்து பதினைந்து நாட்கள் டூர். குழுவாகத்தான். நமீபியா, கென்யா, தான்சானியா மற்றும் ருவாண்டா உகாண்டா என அத்தனை மத்திய ஆஃப்ரிக்க நாடுகள். என்ன பெரிசா காட்டிறப்போறார்னு இளப்பமாக நினைத்துக்கொண்டு தான் நிகழ்வுக்குச்சென்றேன். நாட்ஜியோவிலும் டிஸ்கவரியிலும் காட்டாததையா காட்டப்போகிறார் என.

எந்த ஆப்ரிக்க நாட்டிலும் ஒருங்கிணைப்பு மிகச்சரியாக இருப்பதை ஒவ்வொரு முறையும் குறிப்பிடத்தவறவில்லை அவர். பிரதீப் ராவ். இங்கோ கேட்கவே வேணாம். ஒவ்வொரு இடத்திலும் அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும் தொல்லை நான் எனது நண்பர்களுடன் கர்நாடகக்காடுகளில் சுற்றிய போது நொந்தவை. சொந்தக்கதை சோகக்காட்டுக்கதை.

தான்சானியாவுல் நட்டநடுக்காட்டுக்குள் ரிசார்ட் கட்டி வைத்து இருக்கின்றனர். அத்தனையும் மரத்தாலானவை. வேறெந்த கட்டிடப் பொருட்களைக் கொண்டும் கட்டப்படாதவை. பாதுகாப்பு...எல்லாம் சில வனவிலங்கு அதிகாரிகளின் தயவில் தான். இருப்பினும் அத்தனை ரிஸ்க் எடுத்துதான் உள்ளே தங்க வேணும்.. இன்ன விலங்கு என்றில்லாது ஒவ்வொன்றும் இந்த காட்டேஜை கடந்து சென்று கொண்டு தான் இருக்கின்றன. தாக்கவோ இல்லை உள்ளே வரவோ செய்யவில்லை. ஆச்சரியம். நல்ல குளங்கள் வெட்டி அதில் தவறாது தண்ணீர் நிரப்புவது எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது, அதையொட்டியே இந்த காட்டேஜ். நல்ல கேமரா வித் டெலஸ்கோப்பிக் லென்ஸ் கொண்டு அற்புதமான உலகப்புகழ் பெறும் புகைப்படங்களை எடுத்துத்தள்ளலாம். உங்களுக்கு நல்லூழ் இருப்பின். ஏனெனில் விலங்குகள் வந்து நீரருந்துவது என்பது அவற்றின் விருப்பம். நடுச்சாமத்தில் வந்து அருந்துமாயின் ஒன்றும் செய்யவியலாது.

இரவில் ஒலிக்கவிட அங்கு ஒரு மணி/அலார்ம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை ஒலித்தால் யானைகள் வந்திருக்கின்றன. இருமுறை ஒலித்தால் சிறுத்தைகள் , மூன்று முறை ஒலித்தால் சிங்கம் வந்திருக்கிறது நீரருந்த எனப்பொருள். இவர்கள் அங்கு தங்கியிருந்த ஒரு இரவில் ஒரு மணி போலும் ஒலிக்கவில்லை. எங்களுக்கு நல்ல உறக்கம் என்றார்.

சின்ன ப்ளேன்,பத்துப்பேர் உடகார்ந்து செல்லக்கூடிய ,ப்ளேனில் பறந்தும் விலங்குகளைக்காணலாம். இருப்பினும் அத்தனை சுவாரசியம் இருப்பதில்லை. ஒன்று கூறினார். சில்லிட்டது அனைவருக்கும். எந்தக் காட்டிலும் செல்லும் ஜீப்/வாகனங்களை விட்டு ஒருபோது கீழிறங்கக் கூடாது என. ஏனெனில் அந்த வாகனங்களை விலங்குகள் ஒரு பெரிய விலங்காக கருந்துகின்றன. தாக்க முற்படாத ஒன்றாக, எனவே கண்டுகொள்ளாது கடந்து சென்றுவிடும். அதுவே நீங்கள் ஆரவத்தில் கேமராவை எடுத்துக்கொண்டு கீழிறங்கி படம் எடுக்கிறன் பேர்வழி என்று புறப்பட்டால் வனவிலங்கு அதிகாரிகள் போலும் உங்கள் உதவிக்கு வரமாட்டார்கள். ஏனெனில் அத்தனையும் வனவிலங்குகள் , மனிதனுக்கு ஒருபோதும் பழக்கப்படாதவை, அதிரடித்தாக்குதல் நடத்த ஒருபோதும் தயங்காதவை. இவர்களின் குழு சென்ற ஜீப் நடுக்காட்டில் மாட்டிக் கொண்டது. வழக்கம்போல கீழிறங்கித்தள்ளலாமா எனக் கேட்டிருக்கின்றனர். பயணிகள். முழுமையாக திரும்பி உடலோடு உங்கள் நாட்டிற்கு செல்லவேணுமெனில் அசையாதீங்க என்றிருக்கிறார் அந்த வனவிலங்கு அதிகாரி/ஓட்டுநர். பின்னர் கைரேடியோவில் முன்சென்ற ஜிப்பை விளித்து அவர்கள் வந்து பின்னர் இந்த ஜீப்பை முட்டித்தள்ளி (அந்த ஜீப்பிலிருந்தும் யாரும் கீழிறங்கவில்லை) கரையேற்றி விட்டவுடன் வந்து சேர்ந்தோம் என்றார்.

அந்த மைக்ரேஷன் இடப்பெயர்வு தான் அமர்க்களமாக இருந்தது. மான் வகையைச்சேர்ந்த Wlidebeest/Gnu விலங்கின் இடப்பெயர்வு. ஆண்டு முழுதும் பல நாடுகளைக்கடந்து (கிட்டத்தட்ட நான்கு நாடுகள்) பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்வது. இவற்றுடன் சேர்ந்து வரிக் குதிரைகளும், இன்னபிற கால்நடை விலங்குகளும் கூடச்சேர்ந்து பயணிக்கின்றன. நீங்கள் போகும் காலத்திற்கேற்ப அவற்றை அந்த நாடுகளில் காணலாம். ஒவ்வொரு நாட்டிலும் நதியைக்கடந்து செல்ல எத்தனிக்கும் போது முதலைகளின் வேட்டை தொடங்கும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த இடப்பெயர்வு நடந்தும் ஒருபோதும் தமது பாதையை மாற்றாத (மாற்றத்தெரியாதவை எனத்தான் சொல்லவேணும் , இன்னமும் அவற்றின் அறிவு வளரவேயில்லை..ஹ்ம்) இடப்பெயர்வு இவற்றை இரையாக உண்ணக்காத்திருக்கும் இன்னபிற பெரிய விலங்குகளுக்கு நல்ல வேட்டையாகவே எப்போதும் இருக்கிறது.

இந்த Wlidebeest/Gnu விலங்குகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கிறது இன்னமும். என்ன காரணம் இத்தனை அட்வெஞ்சரஸாக இடப்பெயர்வு செய்ய ?... அந்தந்தக்காலங்களில் அந்தந்த நாடுகளில் வளரும் புற்கள்/செடி கொடிகள் தான். தமக்கேற்ற துணையைத் தேடுவதும், பின்னர் கருவுறுவதும் குட்டிகளை ஈனுவதுமாக காலங்களுக்கு ஏதுவாக மிக நல்ல சத்துணவாக இருக்கிறது. அதுதான் காரணம் இந்த வலுக்கட்டாய இடப்பெயர்வுக்கு.

இன்னொரு சுவாரசியமான பதிவு. காட்டில் அலைந்து திரியும் இம்பாலா எனும் மான்கள், பின்னர் வரிக்குதிரைகள் இவற்றை படம் பிடித்து விட்டு இரவில் வீடு திரும்பினால், புஃபே டின்னரில் அவற்றின் இறைச்சி சமைத்து வைக்கப்பட்டிருக்கிறது. செம ஷாக். நம்ம நாட்டில் தான் மான்கறிக்கு தடை. அங்கு அவற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கமே அவற்றை சில எண்ணிக்கையில் வழக்கமாக பிடித்து பின்னர் இறைச்சியாக பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. சாப்பிட்டு பார்த்தீரா எனில் நண்பர்கள் கூறினர், செம ச்சூயியாக இருந்தது என. ரொம்ப நேரம் ஆகிறது மென்று விழுங்க.அத்தனை எளிதில் மாவாக அரைபடுவதில்லை அவை.

ஒரு நாட்டில் ஒர் குரங்கு வகைக்கு ஆணுறுப்பு நல்ல ப்ளூ கலரில் (ஹிஹி...அந்த சமாச்சாரமே ப்ளூ தானே ..ஹிஹி) இருக்கிறது. எத்தனை ப்ரைட்டான ப்ளூவாக இருக்கிறதோ அத்தனை கேர்ள்ஃப்ரென்ட்ஸ் கிடைப்பார்களாம். ஹிஹி.. அதைக்காட்டிக் கொண்டே அலைகிறது . உடுப்பாவது ஒண்ணாவது. அடங்கொய்யா.

தான்சானியா நாட்டில் தான் சிம்பன்ஸிகள் அதிகம் வசிக்கின்றன.அவை மனிதர்களைப்போல குடும்பமாக குழுவாக வசிப்பவை. முன்னக்கூட்டி சொல்லி வைக்கவேணுமாம். அப்போதுதான் விலங்கு அதிகாரிகள் அவற்றின் இருப்பிடம் அறிந்து அங்கு கூட்டிச்செல்ல ஏதுவாக இருக்கும்.. இடம் பெயர்ந்து கொண்டே இருப்பவை. காட்டில் ஆதலால். 98.8 சதமானம் டி.என்.ஏ மனிதனுடன் ஒத்துப்போவது இவற்றுக்கு மட்டுந்தான். (வாழைப்பழ டி.என்.ஏ ஐம்பது சதமானமாம் ...ஹிஹி ) மிக அருகிலும் சென்று பார்க்கலாம் என்றார்.தாக்க முற்படுவதில்லை. சில சிம்பன்ஸிக்கள் நல்ல போஸ் கொடுக்கவும் தயங்குவதில்லை. இருப்பினும் பாதுகாப்பான தொலைவு என விலங்கு அதிகாரிகள் சொல்லும் தூரத்தில் இருந்தே அவற்றைப்பார்ப்பது நல்லது.

கிளிமஞ்சாரோ மலையில் மேல் பனி படர்ந்திருப்பதை, அந்த பேக்ட்ராப்பில் அதன் அடிவாரத்தில் ஒற்றை யானை நிற்பதை, மிக நீளமான தந்தம் கொண்ட யானையை அதன் அருகில் சென்று படம் பிடிப்பதை, பின்னர் சிறுத்தை மற்றும் சிங்கங்கள் அடித்துப்போட்டு தம் குட்டியுடன் சேர்ந்து உணவு உண்பதை, பின்னர் ஹயீனாக்கள் (லியோ புகழ்) மிச்ச மீசாடிகளை அடித்துப்புரண்டு கொண்டு தின்பதைப்படம் பிடிப்பது என்பது இந்த வைல்ட்லைஃப் ஃபோட்டோக்ராஃபர்களுக்கு லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் என நினைப்பர். அவையனைத்தும் எனக்கு கிடைத்தது என்றார்.

சரி அதெல்லாம் கிடக்கட்டும். போக வர என்னா செலவு ஆவும் என்று கேட்டால் ஒருநாளைக்கு ஆஃப்ரிக்க நாட்டுக்காடுகளில் உலவ, உண்ண, சஃபாரி செல்ல, சிறுப்ளேன் சவாரி செல்ல, இரவு உணவு, பாதுகாப்பு என எல்லாவற்றுக்குமாக 500-600 அமேரிக்க டாலர்கள் ஆகுமாம்....மாம்.. ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது பத்து நாட்களேனும் தங்க வேண்டி வரும் அனுபவித்து சுற்றிப்பார்க்க, படம் எடுக்க....இஹி இஹி... இதுபோக இங்கிருந்து ஆஃப்ரிக்கா செல்ல விமானச்செலவு தனி. இஹி இஹி.அப்பால லென்ஸூ, டெலஸ்க்கோப்பிக் லென்ஸூ, கேமரா, அவற்றின் உறைகள், மெமரி கார்டுகள்ளூ எல்லாமாச்சேர்ந்து ...இஹி இஹி.. பேசாம நாட்ஜியோ இல்லைன்னா டிஸ்கவரி பார்த்துட்டு அப்டியே தூங்கீற வேண்டிதுதான்.

இப்படியாப்பட்ட ட்டூர்களை மீண்டும் அரேஞ்ச் செய்ய எப்போதும் தாம் ரெடி என கூட்டத்தைப்பார்த்து ஒரு கேள்வியைப்போட்டார் பிரதீப் ராவ்.. சிங்கத்தைக் கண்ட சிறுநரிபோல வாலைச்சுருட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.


#AfricaTheWildSecrets




Friday, March 8, 2024

Why don’t you just meet me in the middle?

                                Zedd, Maren Morris, Grey - The Middle (Official Music Video) - YouTube

Why don’t you just meet me in the middle? - இந்தப்பாட்டு கொஞ்சம் பழைய பாடல் தான். 2018ல் வந்தது. என்ன பிரசித்தம்னா இதுல பத்து வரிதான் அதே தான் திரும்பத்திரும்பப்பாடுவார். பாடகி மாரன் மோரிஸ். பல்லவியில் Why don’t you just meet me in the middle? Im loosing my mind just a little. இதே இரண்டு வரிகளை பலவிதமாகப் பாடுவார். அதான் சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு ஐந்து ஆறு வகையாகப் பாடுவார். அள்ளிக் கொண்டு போகும் கேட்கும் போது.
கொஞ்சம் ராப்/கொஞ்சம் ராக் (ஆமா ) கொஞ்சம் விக்கி தேடினப்போ இந்தப்பாட்ட மாஸ்ட்டர்களில் கமீல கபெலோ (ஆஹா நம்ம செனோரீட்டா.. 🙂 ) பாட முயற்சித்திருக்கிறார் , பின்னர் ஆன் மேரி (ஃப்ரெண்ட்ஸ் புகழ்) இப்படி பல பேர பதம் பார்த்து பின்னர் கடைசியாக மாரன் மேரிஸ் பாடியது ஃபைனல் அவுட்புட்டாக வெளிவந்திருக்கிறது.

02:17 ல் ஒரு வகை குழைவு ,,யப்பா கேளுப்பா செய்ய மாட்டியா என்று கெஞ்சும் வகை. அதிலயே 02:23ல் ஒலிக்கும் அந்த தெனாவட்டு, அந்த யோடலிங் (yodelling) உருட்டல் எல்லாம் சான்ஸே இல்லை -
02:26-ல் வேறு வகை.குழைவாக ஆரம்பித்து வேகமெடுத்து உச்சத்தில் போய் நிற்கும். ஆஹா அனுபவிக்கிறாள்டா.
02:36-ல் இன்னொரு வகையாக. இவ்வளவு நேரம் கேட்கிறேனே இன்னுமா உனக்கு நான் சொல்றது புரியலைன்னு கத்த ஆரம்பித்துவிடுவார்.. ஹிஹி...
02:51 -ல் வாய்ப்பாடு சொல்லிக்கொடுப்பது போல சிறுபிள்ளைகளுக்கு, இப்ப கேப்பியா மாட்டியான்னு ..ஹிஹி.
03:01-ல் சொல்றதெல்லாம் சொல்லியாச்சு இனி உன் பாடு என்று திரும்பத்திரும்ப அதையே பாடிக் கொண்டிருப்பார். ஆஹா. இந்தப்பாடலை தமிழில் பாடத்தகுதியானவர் யாருன்னு கேட்டா ..ஆண்ட்ரியாதான் (ஹிஹி அதான அங்க தான வருவ நீ..ஹிஹி )

தமிழ்ல இது போல யாரும் செய்திருக்காங்களா என்னன்னு பார்த்தா, ராசைய்யா ‘பத்ரகாளி’ படத்துலயே இதே டெக்னிக்கை செய்திருக்கிறார். ’கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை’ பாடலில் சரணத்தில் இதை பரீட்சார்த்தமாக செய்து பார்த்திருப்பார். 01:27ல் ஜேஸுதாஸ் பாடும் ‘உன் மடியில் நானுறங்க’கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ’ ன்னு ஆரம்பித்துப் பாடுவதை சுசீலாம்மா 01:41ல் வேறு விதமாகப்பாடுவார். ஜேஸுதாஸ் கெஞ்சலாகப் பாடியதை சுசீலாம்மா கொஞ்சம் உச்சஸ்தாயியில் எடுத்து அதே வரிகளை ராகம் மாற்றாமல் வேறு கட்டையில் பாடுவார். அந்த ஒரு வரி மட்டுந்தான் பிறகு பாடல் அதன் போக்கில் சென்றுவிடும்.

பிறகு இரண்டாம் சரணத்தில் சுசீலாம்மா ‘மஞ்சள் கொண்டு நீராடி மொய்குழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி’ என்று இருவருமாகப்பாடி பின்னர் சுசீலாம்மா வேறுவகையாக பாடிக்கொண்டு செல்வார் பின்னர் அதே சுதியில்/கட்டையில் ஜேஸுதாஸும் இணைந்து பாடுவார். இதுல என்ன ப்யூட்டீன்னா தாளம் எப்பவுமே மாறாது ஒரே பாணியில் ஒலிக்கும். இரண்டு சரணங்களிலுமே. அங்க தான் வெப்பார் ட்விஸ்ட்டூ ராசைய்யா! தாளம் மாறாது வேறு கட்டையில் பாடவைத்திருப்பார் ஐயா!

இன்னொரு பாடல் கூட இருக்கு, நாடோடிப் பாட்டுக்காரன் -ல ”வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ: என ஒரு பாடல் அதுவும் சுசீலாம்மா பாடினது தான். கிட்டத்தட்ட முழுப்பாடலுமே கர்நாடக சங்கீத ராகத்தில் (லதாங்கி மற்றும் மத்யமாவதி ) ஆடலுக்கென இட்ட பாடல் போல ஒலிக்கும். கடைசியில் பாலு வந்து வேறு பாணியில் பாடுவார். நாட்டார் பாணியில் ஆனால் தாளம் முழுக்க மாறியே போய்விடும் ராகமும் தான்...எனினும் அதே வரிகள் தான்.

சரி ராசைய்யாவைச்சொல்லியாச்சு. ரஹ்மான் ஏதும் பண்ணலியான்னா செய்திருக்கார் அவரும். விண்ணைத் தாண்டி வருவாயா-ல வரும் ‘மன்னிப்பாயா’ பாடலில்.

0:43-ல் ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனைநான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா ?
01:08-ல் அதே வரிகள் தான். வேறுவகை. தாளம் மாறாது. கட்டை மாறி ஒலிக்கும் வரிகள். அலுக்காது கேட்க வைக்கும்.

இதுல என்ன ப்யூட்டின்னா ‘ இந்த ஒரு சொல் மன்னிப்பாயா’வை பல வகைகளாக சொல்லவைத்துப் பாடவைத்து காதலனை கெஞ்சிக்கேட்கும் குரலாக ஒலிக்க வைத்து தாளம் தப்பாது , எத்தன தடவை நான் கேட்கிறேன் பாரு மகனேன்னு கெஞ்சி கொஞ்சிப் பாடுவார்

0:57லேயே மூன்று முறை கேட்டுவிடுவார் மன்னிப்பாயா என பின்னரும் 01:18 ல்தொடங்கி 01:30 வரை கிட்டத்தட்ட ஐந்து வகைகளாக மன்னிப்பாயா எனக்கேட்பார் மன்றாடுவார் ஷ்ரேயா கோஷல். பின்னர் ரஹ்மான் வந்து பாடுவார்னு வெச்சுக்கங்களேன். அப்ப மொத்தமாப் பாத்தா ஒரு எட்டு தடவை மன்னிப்பாயான்னு கேட்டு காதலனை ‘இந்த அளவுக்கேல்லாம் நான் வொர்த்தா’ (அடங்*& ..சரி வேணாம் விட்ருவோம். ஹிஹி...) என சந்தேகப்படும் அளவுக்கு கெஞ்சிக்கேட்பார். ஹிஹி.

தம்பி அநிருத் இதுவரை இதுபோல ஏதும் செய்திட்டில்லை. எனக்குத் தெரிந்தவரை. இதெல்லாம் கொஞ்சம் பழைய சரக்குகள். அதான் டச் பண்ணலைன்னு நினைக்கிறேன்.

அதனால சொல்ல வர்றது என்னன்னா ‘Why don’t just meet me in the middle’ தான்..ஹிஹி.. என்ஜாய் என்ஜாமி. #Middle

Why don’t you just meet me in the middle
கண்ணன் ஒரு கைக்குழந்தை
மன்னிப்பாயா
வனமெல்லாம் சென்பகப்பூ