Friday, June 14, 2019

பா.வெ

கடந்த வாரம் ரம்ஜானன்று புதின ஆசிரியர் பா.வெங்கடேசனைச் சந்திக்க வாய்த்தது. ஓசூரில் அவரின் இல்லத்தில் ஸ்ரீனியும் உடன் இருந்தார். வாரணசி புதினத்தின் பாராட்டு விழாவிற்குப்பிறகு அவரை அது குறித்தும் பின்னர் அவரின் பிற படைப்புகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறு மழை தூறல் அன்று. சரளமாக ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறார். பிற எழுத்தாளர்களைப் போலல்லாது விடாப்பிடியான தனித்தமிழில் இல்லாது. எஸ் ரா’வைச்சந்தித்த பிறகு இன்னுமொரு புதின ஆசிரியரை இப்போது தான் சந்திக்கிறேன் என்றேன்.

வர் வேலை விட்டு வருமுன்னதாகவே அவரின் வீட்டிற்கு சென்று விட்டோம். வீட்டில் அவர் இன்னும் வரவில்லை என்றவுடன் திரும்பி நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவரே வண்டியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்துவிட்டார். இன்னிக்கு விடுமுறை இல்லையா என்றேன், எங்களுக்கு ரம்ஜான், கிறிஸ்மஸ்களுக்குல்லாம் விடுமுறை கிடையாது என்றார். எனக் கென்னவோ அது ஒரு செய்தி போலத் தோணிற்று.

பின்னர் அவரின் மேல் மாடியில் எழுதும் அறைக்கு கூட்டி சென்றார். எத்தனையோ நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அலமாரி முழுதும் நிரம்பி தரையிலும் வழிகிறது நூல்கள். வாரணசி வாசிக்க வாய்ப்பிருக்கிறதா என்றேன். சற்றும் யோசிக்காது அலமாரியை திறந்து எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னமும் வாரணசியின் நெகிழி உறையைப் பிரிக்கவே இல்லை நான். விமர்சனம் வந்துவிட்டதா என வினவினேன். ஹ்ம்.. காலச்சுவடில் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றார். பாராட்டு விழாவிற்கு வந்திருந்தீர்களா என கவனமாகக் கேட்டார். ஆமாமென்றேன்.

நாவலின் இலக்கணம் குறித்து கேட்டேன். அது நிறைய நாவல்களை வாசிக்கும் போது மட்டுமே புலப்படும் என்றார். சிறுகதைக்கு இருப்பதைப் போல எதேனும் இலக்கணம் இருக்கிறதா என்ற உள்ளூர உழன்று கொண்டிருக்கும் எனது வினாவிற்கான விடையாக அது அமையவில்லை.

தாண்டவராயன் கதை’ புதினத்தை வாசித்த ராஜன் குறை என் இல்லத்திற்கே வந்துவிட்டார் என்னைச் சந்திக்க என குழந்தையின் மகிழ்வில் கூறிக் கொண்டிருந்தார். இதுவரை உங்களின் எந்த புதினத்தையும் நான் வாசித்ததில்லை என்றேன்.அவர் ஒன்றும் மிண்டவில்லை என் பதிலுக்கு.

அதோடு கூடுதலாக ஒரு சிறு கதைத் தொகுப்பையும் கொடுத்தார். அடர்த்தியான சிறுகதைகள்.கோவில் யானை பற்றிய சிறுகதை மனதை விட்டகலாது அந்த ஆனை போலவே அசையாது நின்று கொண்டு இருக்கிறது என் மனதில். இன்னமும் வாசிக்க வேணும். #பாவெ

Sunday, June 9, 2019

ஒளிப்பதிவாளன்


பாம்பேயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தங்கியிருந்த வீட்டின் அருகில் ஒரு மராட்டி தேநீர்க்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். எப்போதும் அங்கு ஒரு தேநீர் அருந்திவிட்டே லோக்கல் ட்ரெயினைப் பிடிக்கச்செல்வது வழக்கம். ஒரு நாள் எனது யாஷிகா கேமராவை (பழைய ஃபிலிம் ரோல் போட்டு படம் எடுக்கும்) எடுத்துக்கொண்டு சும்மா படம் எடுக்கவென்று அலைவது வழக்கம். அதைப் பார்த்துவிட்டு என்னிடம் தயங்கித்தயங்கி தம்பி, என்னை ஒரு படம் எடுங்களேன், டீ போடுவது போல, ஃபோட்டோக்ராஃபரைக் கூப்பிட்டால் நிறைய காசு கேட்கிறான் என்றார். சரி நில்லுங்க என்றபோது , கரண்டியை நன்கு பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்தார். 

சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் ஃப்ரேமிற்குள்ளும் வந்து போய்க்கொண்டிருக்க, கொஞ்சம் பொறுங்க என்றேன்..இருப்பினும் சமாளித்துக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டேயிருந்தார், சரியான தருணத்தில் அவரும் கரண்டியும்,மட்டும் ஃப்ரேமிற்குள் வந்துவிட ஒரு க்ளிக். அதன் பிறகு ரோல் நிறைந்தவுடன் , டெவெலெப் செய்து பிரிண்ட் எடுத்து அவரிடம் ஒரு நாள் கொடுத்தேன். வாங்கிப்பார்த்தவர் முகத்தில் அன்றைய சாயா முழுதும் ஒரே மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது போல சந்தோஷம். அன்று எனக்கு ஒரு காப்பி கிடைத்தது கூடுதல் சீனியுடன் இலவசமாக...! பிறகு சில நாட்கள் கழித்து அவரின் பக்க சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டி வைத்தார். சாயா குடிக்க வருபவர்களிடம் பெருமையாக அதைக் காண்பிக்கவும் செய்வார்.

நானும் தொடர்ந்து படங்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன் நேஷனல் ஜியோக்ரஃபி புகைப்பட போட்டிக்கு , ஒரு போதும் எனக்கு அத்தனை மகிழ்ச்சி கிடைத்ததில்லை, அந்த சாயாக்கடை நண்பரின் முகத்தில் இருந்ததை விட.! எனது பழைய ரோல்களை தேடிப் பார்த்ததில் ஒருபோதும் அந்த நெகட்டிவ் கிடைக்கவில்லை. அவரின் சிரிப்பும், அந்த காப்பியின் சுவையும் இன்றும் அழியாப் புகைப்படம் போல என்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

Thursday, June 6, 2019

திபேத் எக்ஸைல்


கூர்க்கிலிருந்து திரும்பி பெங்களூர் வரும் வழியில் திபேத்’ எக்ஸைல். கோல்டன் சிட்டி. சீனா துரத்தியடித்த திபேத் புத்த பிக்குகள் இங்கு வந்து தமது வம்சத்தை வளர்க்கின்றனர். இழைத்து இழைத்து உண்டாக்கிய புத்த விஹார். பள்ளி, இருப்பிடம் மடம் எல்லாம் ஒரே இடத்தில் இந்திய அரசின் முழு ஓத்துழைப்போடு. தமிழன் வந்தால் மட்டும் அடி.அகதி முகாம். எல்லாம் தலேலேழுத்து...


சிறு சிறு பையன்களெல்லாம் வேதம் கத்துக்கிறார். அவர்களின் பிரத்யேக உடுப்போடு. உணவு கொண்டு சென்ற ஒரு ஸ்மால் பிக்குவை புகைப்படமெடுக்க முனைந்த போது ‘திபேத்’ மொழியில் ஆஊ என்றார். எனக்கென்னவோ ஜாக்கிஷான் படத்தில் வரும் குங்ஃபூ போல ஒலித்தது. மொழி எழுத்தெல்லாம் கொஞ்சம் நேபாளத்தோடு ஒட்டிப்போகிறது.


புகைப்படம் எடுக்க அனுமதி இருக்கிறது. இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதிகளும் உண்டு.உள்ளே போனால் எதோ சீன நகரத்தினுள் வந்து விட்டது போல தோன்றும். #திபேத்எக்ஸைல்

Tuesday, June 4, 2019

மண்டலாபட்டி - கூர்க்

கடந்த இரண்டு நாட்கள் கூர்க் பயணம், மண்டலாபட்டி இது வரை பார்த்திராத மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.கரடுமுரடான பாதை. இருப்பினும் அத்தனையும் பெய்யும் மழையில் நொடியில் அடித்துச்செல்லப்படும் சாலை.. பாதையே இல்லை என்று தான் சொல்லவேணும். ஜீப் இல்லையென்றால் ஏதேனும் கனரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி.மற்ற இலகு ரக வாகனங்கள் சென்றால் அத்தனை பாகங்களையும் கையில் பொறுக்கிக்கொண்டு தான் வரவேணும். நிலவில் உள்ள பாதை கூட அத்தனை மோசமில்லை போல. உடம்பில் ஒவ்வொரு எலும்பும் எண்ணப்பட்டு விட்டது.. ஹிஹி..

 மாதமொருமுறை தமது ஜீப்பை பழுது பார்ப்பேன் என்கிறார் ஓட்டுநர். கொண்டு போயிருந்த இண்டிகாவை வழியிலேயே நிறுத்திவிட்டு இவரின் வாடகை ஜீப்பில் சென்றோம். 280டிகிரி வளைவுகள்.எதிர்பாரா ஏற்றம். திறந்த சாளர ஜீப்புகளும் இருக்கின்றன. போய்விட்டு வருவது வாழ்க்கைக்கான சவால். எம்மிடம் வாங்கிக் கொள்ளும் ஆயிரத்து ஐநூறில் ஜீப் பராமரிப்புக்கே செலவாகி விடும் போல. அதிலும் திரும்பி வருகையில் சொல்லி வைத்தாற்போல டயர் கிழிந்துவிட்டது. எங்களை பாதி வழியில் இறக்கி விட்டு டயரை மாற்றிக்கொண்டிருந்தார் அந்த அத்துவான மலையில்.கொஞ்சம் பயந்தான். என்னவாகுமோ என்று.


முழுக்க மலை புற்கள். கற்பாறைகள் எங்கும்.ஒளி உள்ளே புக பயந்து ஒதுங்கும் காடு.கீழே விழுந்தால் வன அதிகாரிகள் நம் குரல் கேட்க எவ்வித வாய்ப்பும் இல்லை. ஜீப் செல்கிறது 25 கிமீ பாறைகளில். அதன் பின் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ நடந்து சென்று மேலே போகலாம். அத்தனை கடுமையான பாதைக்குப் பிறகு. ஜீப் செல்ல இயலாது. கால் நடை தான். ஹ்ம்..#மண்டலாபட்டி

 

Saturday, June 1, 2019

தமிழ்’நாடு

இந்தி பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டால் தான் ஆயிற்று என்பதில்லை. வெளி/வட மாநிலங்களுக்கு சென்று அங்கு இரண்டு மூன்று மாதங்கள் தங்கியிருந்தாலே போதும். எழுதப்படிக்கத்தெரிந்த எலைட் சமூகத்தை விட காய்கறி விற்போர்/கூலி வேலை பார்க்க முனைவோர் எளிதில் எந்த மொழியையும் கற்று விடுவது இயல்பு.

டெல்லியில் எத்தனையோ தமிழர்களைச்சந்தித்து இருக்கிறேன் அத்தனை பேரும் 80களில் தமிழகத்தில் பிறந்தவர் தான் பெரும்பாலும். அத்தனை அழகாக இந்தி பேசுவர். அறுபதாண்டுகளாக இந்தி பேசாததால் தமிழகம் ஒன்றும் குறைந்து விடவில்லை. எதையும் இழக்கவும் இல்லை. தொழில்/ வர்த்தகத்தில் முதல் மூன்று மாநிலங்களில் எப்போதும் ஒன்றாகவே திகழ்கிறது. மஹாரஷ்ட்ரா/ கர்நாடகாவுடன் தொழில் முனைப்பில் எப்போதும் போட்டியில் இருக்கும் தமிழகம்.

வடமாநில நண்பர்களிடம் இருக்கும் மனத்தயக்கம் தடை , என்ன இந்தி பேசவே மாட்டாங்யளே என்பது தான். பெங்களூருக்கு வந்துவிட எந்த தயக்கமும் காட்டாத வட மாநிலத்தவருக்கு அருகிலிருக்கும் சென்னைக்கு வரத்தயக்கம் மொழி மட்டுமே.

திணிப்பெல்லாம் ஒரு நாடு ஒரு மொழி ஒரு மதம் என்ற மூடர்கள் செய்து காட்டத்துடிக்கும் செயல். பன்முகத்தன்மைக்கு ஊறு கேடு. செயல்தான் இனி செயலாற்ற வேணும். #banhindi #TNAgainstHindiImposition

Monday, May 20, 2019

அவிழாய் அவிழாய்…

 

அவிழாய் அவிழாய்…நல்ல ஒரு டிஸ்கோ பாடல். தர்புகா சிவாவின் இசையில் தற்போது வெளிவந்திருக்கும் பாடல். டிஸ்கோ டான்ஸர் பாடல்கள் போல எண்பதுகளின் இசையில் ஒலிக்கும் பாடல். தர்புகா சிவா கலக்குறாண்டா. தம்பி அநிருத் இன்னும் இது போன்ற ஜானரில் பாடல் போட்டதில்லை. பாடல் சஞ்சனா கல்மஞ்சே (என்ன பேர்டா இது ?) என்ற பெண்மணி பாடியிருக்கிறார். ( நல்ல ஆகுருதி ..ஹிஹி)  ஆனாலும் பல இடங்களில் இவரின் தமிழ் உச்சரிப்பில் பிழை இல்லை. இருப்பினும் “ண” சொல்லுமிடத்தில் “ன” சொல்கிறார். மன்னிக்கலாம் தான். பாடல் எழுதினது மதன் கார்க்கி. ’ஆணா பெண்ணா நான் ரெண்டும் இல்லை’  என்பதை ஆனா பென்னா நான் ரென்டும் இல்லை’ என்கிறார். இந்த சென்னைப் பொண்ணுங்களுக்கு தமிழ் உச்சரிப்பு சரிவர அமைவதில்லை.  வேற்றுமொழி பேசுபவராகக்கூட இருக்கலாம். (சூப்பர் சிங்கர்2009 ல பங்கு பெற்றவராம் சரி சரி)

இது போன்ற தனிப்பாடற்திரட்டுகள் தமிழிலும் வரத்தொடங்கி இருப்பது நன்று. அதற்கு மதன் போன்ற பெருந்தலைகளும் சம்மதித்து பங்கு கொள்வது அதிலும் சிறப்பு. செவன் – அப் மற்றும் சோனி ம்யூஸிக்கின் பெரும் பண உதவியோடு சன் ம்யூஸிக்கின் ஒத்துழைப்பில் பாடல் உருவாகியிருக்கிறது. மெட்ராஸ் கேக் ஸீஸன் (Madras Gag Season 2) பாடல் வரிசையில் இதுவும் ஒன்று தனியாத் தெரிகிறது.  இன்னும் சில பழைய பாடல்களின் இதே சீசனில்  மீளுருவாக்கங்கள் நடந்திருந்த போதிலும் இந்தப்பாடல் தனி. தர்புகா சிவாவின் ஆர்ப்பாட்டமான இசையோடு. ”மறு வார்த்தை பேசாதே” புகழ் தர்புகா சிவா. ( ஆமா அந்தப்படம் எப்பதான்ப்பா வரப்போகுது ?!)

ஜெமோ சொல்வது போல பெரும் பண்ணையார்களின் காலங்களில் இசை வளர்ந்தது. ஏனெனில் பணம் கொடுத்து ஆதரிக்க இது போன்ற பெருந்தலைகள் அவசியம் என. இப்போதும் அதே தான். முதலீடு செய்யாது எந்தக்கலையும் வளரப் போவதில்லை.  அட் லீஸ்ட் மைக் செட் கட்டுவதற்காவது கொஞ்சம் காசு அவசியம். எவ்வளவு சுத்தினாலும் கார்ப்பரேட்டுகளின் உதவியின்றி யாரும் காலூன்றி விட இயலாது எந்ததுறையிலும் என்பது மறுக்கவியலா உண்மை. நொந்து கொள்வதைத் தவிர வேறோன்றும் சொல்வதிற்கில்லை.  லினஸ் டோர்வால்ட்ஸ்’ எவ்வளவு தான் ஆணைத்தொடர் எழுதி இயக்க செயலியை உருவாக்கினாலும் ரெஹேட் என்ற பெரும் பண முதலை உதவியால் தான் பலரைச் சென்றடைந்தது லினக்ஸ் என்னும் திறந்த ஆணைத்தொடர் இயக்கச் செயலி ( Open Source Operating System -Linux )

காலங்களைப் பின்னுக்குத் தள்ள கால இயந்திரம் ஒன்றும் தேவையில்லை. இது போன்ற பாடல்களே அதைச்செய்து விடும். ஆதெண்ட்டிக் டிஸ்கோ. இருப்பினும் ஹிப் ஹாப்/ராப்’ இடையில் புகுந்து செல்கிறது. 02:20 ல் தொடக்கம்.  முழுக்கவும் தனித் தன்மையான டிஸ்கோ சலிப்பைத்தரும் என்று இசையமைப்பாளர் நினைத்திருக்கலாம்.  ராசைய்யா ‘தங்கமகன்’ படத்தில் நல்ல டிஸ்கோ இசையைக் கொடுத்திருந்தார். இருப்பினும் அவரின்’ஏய் உன்னைத் தானே’ன்னு கமல் ஆடின பாட்டுத்தான்  ஒரிஜினல் டிஸ்கோ. ஹிந்தியில் பப்பி லஹரி காலம் என்று ஒன்று உண்டு. எல்லோரும் மறக்க நினைக்கும் காலம். ஹ்ம்.. பன்னிப்பன்னி அதைத்தவிர வேறேதையும் செய்ய விடாது இந்தி இசையை ஒரு முடுக்குக்குள் தள்ளி சலிக்க வைத்த அவரின் டிஸ்கோ இசை.

கால்வின் ஹாரீஸின் இசையில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் வரிகளை ரிஹானா பாடிய (எம்ப்பூட்டு பெரிய ஆட்களெல்லாம் இந்தப்பாட்டுக்கு  வேலை பாத்திருக்காங்க..ஹிஹி ) அந்தப்பாடலும் பெர்ஃபெக்ட் டிஸ்கோ. EDM Electronic Dance Music வரிசையில் வைத்த போதும் எனக்கு இதன் ஜானர் எப்பொதும் பழைய டிஸ்கோ’’வை போன்றே தோன்றுவது வழக்கம்,. அந்த EDM-ம் பார்ட்டிகளில், பப்களில் ஆட வசதியாக மின்னணுக் கருவிகளைக் கொண்டு குரலை பின்னுக்குத்தள்ளி மேலோங்கி இசைக்க வைக்கும் ஜானர். எல்லாம் ஒண்ணுதாண்டா …ஹிஹி  இப்போது இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பு செய்தது This is What You Came For !

இது போல சொல்லிக்கொண்டே போகலாம். டிஸ்கோவை ரசிக்க இந்தக்காலத்தில் 2019-ல் முடியுமா என்ற கேள்விக்கு பதில் இந்த அவிழாய் அவிழாய்! மதன் கார்க்கியின் வரிகளைக்குறிப்பிடாமல் இந்தக்கட்டுரை முடியாது …

----  ஹிப் ஹாப்/ராப்பிற்கென இந்த வரிகள்

எழுந்திடும் அலையென விழுந்திடும் மழையென
அழுதிடும் முகிலென ஆடு
அதிர்ந்திடும் நிலமென உதிர்ந்திடும் மலரென
எதிர்த்திடும்  புயலென ஆடு
காதல் காமம் எல்லாம் உன் காலடியில் போட்டு !
ஆடும்போது நீயும் கடவுள் என்று காட்டு!
நீயே உந்தன் தாளம் !
நீயே உந்தன் மேடை!
நீயே உந்தன் விசிறி !
வேறாரும் இல்லை!

 ---  டிஸ்கோவிற்கென இந்த வரிகள்
ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து
ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து!

இந்த டிஸ்கோவிற்கான வரிகள் அந்த ஹிப்ஹாப் முடிந்ததும் உடனே தொடங்கும்.. ஆஹா. பல்லில் வெகுநேரம்  சிக்கிக்கொண்ட பாக்குத் துகள் சிறு நாவின் நுனி நெருடலில் வெளிக்கிளம்பி விட்ட உற்சாகம் பற்றிக் கொள்ளுவது போல. ஆஹா… ஹிஹி .. கேளுங்க ஐ ஆம் அ டிஸ்கோ டான்ஸர்.!

பாடல் ஆரம்பத்தின் 40 செகண்டுகள் வரை, பாடலைத்தொடங்க ஒரு சூழல் உருவாக்க (அதாம்ப்பா என்விரான்மெண்ட்டூ..ஹிஹி) ஒரு அம்மணி தன் தலைவனோடு சண்டை போடுகிறார் அத்தனையும் செயற்கை, உடல்மொழியோ இல்லை நடிப்போ எதுவுமே ஒத்துழைக்காது பாடல் எப்ப ஆரம்பிக்கும் என்று ஏங்க வைக்கிறார். (படத்தைப்போடுங்கடா டேய்…ஹிஹி ) அதைப் பொறுத்துக் கொண்டு மேலும் கேட்க ஆரம்பித்தால் பாடலை முழுதுமாக ரசிக்கலாம்!.. #அவிழாய்

Sunday, May 19, 2019

நாளைய இயக்குநர்இன்னிக்கு நாளைய இயக்குநர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜூரிகள் வெற்றிமாறன், பிரதப் போத்தன் மற்றும் பொன்ராம். ஒவ்வொரு குறும்படம் முடிந்ததும் சொல்லிவைத்தது போல பொன்ராம் அந்தப்படங்களில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். பிரதாப் போத்தனும் வெற்றியும் கிழித்துத் தொங்க விடுகின்றனர், பார்த்தா இதுவே எனக்கு டெம்ப்ளேட் மாதிரி தான் இருந்தது.

மொத்தம் நாலு படம் அதுல ஒண்ணு வழியில் வாழ்பவர்கள், ஹாரர் ஜானர், இன்னொண்ணு அன்பு மட்டுமே சிறந்தது, கடைசியா ஒரு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை பற்றியது. வாழ வழியில்லாததால் வழியில் வாழ்கின்றனர்னு அப்துல் ரஹமான் கவிதைன்னு நினைக்கிறேன். அதுபோலவே ஒரு இளஞ்சோடி வழியில் வாழ முற்பட்டு நடைமுறைச் சிக்கல் களுக்குட்பட்டு , ஒரு தாலி கட்டியிருந்தா இப்டீல்லாம் கேவலப்பட வேணுமான்னு அந்தப்பெண் சொல்லிவைக்க கல்யாணம் முடிந்து, மேற் கொண்டு நடக்க வேண்டிய விஷயங்களுக்கு இடமில்லை. வாழ்வதே வழியில் தானே ? பூங்காவில் ஒதுங்கப்போக போலீஸ் தொல்லையுடன் படம் முடியுது.

இன்னொண்ணு அந்த ஹாரர் படம். ஒண்ணும் புதிதில்லை, பயமே வரலை. வெற்றி மாறன் அதே தான் கேட்டார் பயமுறுத்தணுமே ஏன் நடக்கவேயில்லன்னு. பெண் மேலுள்ள பேய் திருடனின் கூட்டாளி மேல் ஏறிக்கொள்கிறது. ஏன் என்ற கேள்விக்கு இயக்குநரிடம் பதில் இல்லை. அவன் திருடன்ல அதான்னு சொல்லி சமாளிக்கிறார், அப்ப கூட இருக்கிற கூட்டாளி திருடன் இல்லயா அவன் மேல ஏன் ஏறலைன்னு தர்க்க ரீதியான கேள்விக்கு பதில் இல்லை. இது மாதிரி ஏகப்பட்ட குழப்பங்கள். வெற்றி மாறன் கிட்ட படம் போட்டுக் காட்றீங்கன்னா எப்டிக்கேள்வீல்லாம் வரும்னு தெரிஞ்சு அதுக்கு தயாரா இருக்கணுமா வேணாமா ?!

பாலியல் கொடுமைக்கதை கொஞ்சம் பரவால்லை. செல்போனால் கெட்டுப் போகும் குப்பை அள்ளுபவனின் கதை. வெற்றி மாறனின் கருத்துகள் மிகவும் தைப்பதாகவே இருந்தது. கறுப்பா இருக்கிறவன் தான் அந்தப்பெண்ணுக்கு கொடுமை செய்து கொலையும் செய்கிறான். கூட இருக்கும் சிவப்பா இருக்கறவன் அது தெரிஞ்சு செல்போனை போலீஸிடன் ஒப்படைத்து நண்பனைப் பிடித்துக் கொடுக்கிறான். இது நம்ம சப்கான்ஷியஸ் மைண்ட்ல ஓடும் கருத்து. அதிலிருந்து மீண்டு வரும் ஒரு இயக்குநரை அடையாளம் காட்டத்தான் இந்த நாளைய இயக்குநர். அப்டி இப்டீன்னு போட்டு கலாய்ச்சுட்டார் வெற்றி மாறன். பின்னால அவருக்கே ரொம்ப உறுத்தீருக்கும் போல. இல்ல நான் ஒரு கண்ட்ரோல்லயே இல்ல. அப்டீன்னு அப்புறம் சொல்லி சமாளிக்க பார்த்தார்.

 நளன் குமாரசாமி, அப்புறம் கார்த்திக் சுப்பராஜ்-லாம் இங்கருந்து வந்தவங்க தான். குறும்படம் எடுக்கும் வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கும்போது அதை சரிவரப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் கிடைப்பதில்லை. வாய்ப்புகள்.

கதைகள் கிடைக்க வாய்ப்பில்லையா? எத்தனையோ சிறுகதைகள் இருக்கின்றன, ஜெயகாந்தனின் சிறுகதையை ஒட்டி எடுத்தது தான் அந்த வழியில் வாழ்பவர் படம் என்று கடைசியில் சொல்கிறார் இயக்குநர், அதற்கான கிரெடிட்டை போட்ருக்க வேணுமே ஏன் செய்யலை என்று பாய்ந்தார் வெற்றி மாறன். கனவுகள் மட்டும்போதாது போட்டிகள் நிறைந்த உலகம், எதையும் புதிதாக சொல்லத் தெரியவும் வேணும். !

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டு தானிருந்தேன், இடையில் இது போல ஒன்றுமே தேறாத படங்களாக போட்டு மொக்கையானதால் விட்டுவிட்டேன். வெற்றி மாறன் அமர்ந்திருக்கிறாரே என்பதற்காக இன்று பார்க்க அமர்ந்தேன் ...ஹ்ம்...! #நாளையஇயக்குநர்

Tuesday, May 7, 2019

தீபச்செல்வனின் செவ்வி
தீபச்செல்வனோட பேட்டி (செவ்வி..அப்படித்தான் பிபிசி தமிழோசைல சொல்லுவார்கள் )  இரண்டு பாகங்களையும் பார்த்தேன். பிரியா வின்செண்டின் கேள்விகளுக்கு பள்ளிப்பிள்ளை போல பதில் கூறிக்கொண்டிருந்தார். இப்ப தமிழ் சினிமாலயும் வேலை செய்கிறார் போல அதான் இங்கிலீஷ் சொற்களும் கலந்து வருது அவர் பேசும்போது.  ஆமா குரல் ஏன் இவ்வளவு கரகரப்பா இருக்கு அவருக்கு ? ஒரு வேளை அரங்கத்தண்ணீர் ஒத்துக் கொள்ள வில்லையா ?  ஈழத்தமிழர் பேட்டி என்றாலே போர், வன்முறை, ரத்தம் இவற்றைத்தவிர ஏதும் பேசமாட்டாங்களா ? என்று எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கும். அவங்களுக்கும் சாதராண தமிழ்நாட்டுத் தமிழன் போல இசை,கவிதை,சிரிப்பு இதெல்லாம் இருந்திராதா என்ற கேள்வி எப்போதும் தொக்கி நிற்கும்.

இங்கும் அதே போல தான், அத்தனை கேள்விகளும் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்தது , கல்லூரியில் தலைவனாக பொறுப்பேற்றுக்கொண்டது , பின்னர் போர்க்காலங்களில் அவரின் செயல் பாடு பற்றி மட்டுமே கேள்விகள்.  கமலகாசன் ஒரு திரைப்படத்தில் ஈழத்தமிழச்சி சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்கவேண்டுமென இறைவனை வேண்டுவர். அதுக்கு இத்தனை அளப்பறைகள் நடந்தன. யப்பா சாமிகளா அவரும் ஒரு மனுசி தானே..அவருக்கும் சாதாரண ஆசாபாசங்கள் இருக்கத்தானே செய்யும்? அதெல்லாம் சரி. அவர்களின் தமிழ் எனக்கு எப்போதும் உவப்பானது.  உச்சரிப்பும், விடாது தமிழில் மட்டுமே பேசுவேன் என்று உறுதியுடன் இருப்பதும். இங்குள்ள பெருந்தலைகள் மேடையேறும் போது மட்டும் தனித்தமிழில் உரையாடிவிட்டு பின்னர் கீழிறங்கியதும் மணிப்பிரவாளம் ஆரம்பித்துவிடும், :)

கல்லூரி வாழ்க்கையை கடந்தவர், அங்கும் நம்மைப்போல அவருக்கும் ஏதேனும் ராக்கிங் வகைறா நடந்திருக்கும், அல்லது வகுப்பில் ஏதும் சிரிப்பும் கும்மாளமும் என ஏதும் நடந்தேயிருக்காதா? இதையெல்லாம் கேட்டாலென்ன ?   அவரும் முழுப்பேட்டியும் இறுக்கமாகவே அமர்ந்து பேசுகிறார். பாவம். இருப்பினும் தீபன் தடம்க்கு அளித்த பேட்டியை விட இது நல்லாயிருக்கு. நிறைய விஷயங்கள் பேசுகிறார்.

பிரியா கேட்கிறார் தமிழ்த்திரையில் ஈழத்தமிழரை காண்பிக்கும்போது இத்தனை செயற்கையாக பேச வைப்பதேன் என்று? சினம் கொள்’ளில் அந்தத்தவறு சரி செய்யப்பட்டிருக்கிறது என்கிறார் தீபச்செல்வன். ஏன் கமல் பேசிய ஈழத்தமிழ் அந்த ஊரு தமிழே இல்லையா ? வட்டார வழக்கை பரமக்குடி வழக்காக மாற்றிவிட்டாரா அம்மணி ? பிரியா பேசும்போது அத்தனை பெரிய பெரிய வாக்கியங்கள்... மூச்சு வாங்குகிறது அவருக்கு ஒரு கேள்வியை முடிக்குமுன், எனக்கென்னவோ பா.வெங்கடேசனின் பாகீரதியும் ,வாரணசியும் தான் நினைவில் வந்தது. காற்புள்ளியோ, இல்லை முற்றுப்புள்ளியோ இன்றி பதினைஞ்சு பக்கங்களுக்கு ஒரு வரி மட்டும் ஊர்ந்து செல்லும் அது போல அமைந்திருந்தது கேள்விகள் :)

Friday, May 3, 2019

எனக்குத்தெரிந்த இஸ்லாமியர்


முதல் முதலா ஒரு கார் வாங்கணும்னு நினைச்சு, ஓட்டத்தெரியாது எங்கயாவது போயி இடிச்சா புதுசு வீணாயிருமேன்னு செகண்ட் ஹேண்ட் ஒண்ணு வாங்க நினைத்தேன். அப்போ வாடகைக்கு தங்கியிருந்த ஓனரும் ரஃபி ஒரு முஸ்லீம்.  வீட்டுத்தரகர் , பாருங்க நீங்க பாக்ற ஏரியாலன்னா முஸ்லீம் வீடு தான் வாடகைக்கு இருக்கு. அங்க போய் இருக்க ஒங்களுக்கு தோதுப்படுமா என்று சந்தேகத்துடன் கேட்டே என்னை அங்கு கூட்டிச் சென்றார். எனக்கு எதுன்னாலும் பரவால்லை என்று அங்கு தான் வெகு நாட்கள் தங்கியிருந்தேன். அந்த வீட்டு ஓனர் ரஃபி அவர்தான் முன்னாபாய்னு (அவரும் ஒரு முஸ்லீம்) ஒருத்தர் இருக்கார். அவர் இந்த டீலிங்லாம் பண்ணுவார்னு நம்பர் கொடுத்தார். அவரிடம் பேசி வாங்க முடிவு செய்தேன். பார்த்தா அப்புராணி பேச்சும் அப்படியே.  உருவம் மட்டும் ஓங்கு தாங்கா இருப்பர். பார்த்தா பத்து பேர சாய்ச்சுடுவார் போல. 

இங்க பெங்களூரில கால் செண்டருக்கு கார் சப்ளை பண்றவர். அவருக்கு தெரிந்த கிளையண்ட்டிடம் சொல்லி எனக்கு சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தார். லைசன்ஸ் எடுக்கவும் தெரியாது. அதுக்கும் உதவி பண்ணினார். காரோ யூ.பி ரெஜிஸ்ட்ரேஷன். அத கர்நாடகாவில ஓட்றது (அப்போ) பெரிய தொல்லை. ரெஜிஸ்ட்ரெஷன் மாத்தணும்னா முப்பதாயிரம் செலவாகும். ஒங்க ஏரியாவுக்குள்ளயே ஓட்டிக்குங்க என்றார்.

எப்பவும் நல்லதே நடக்கும். யாருக்கும் தீங்கு வந்திராது. அல்லா எல்லாரையும் காப்பாத்துவான்னு பேசுவார்.முன்னாபாய் அதிர்ந்து பேசமாட்டார். பாத்தா இவன் நம்பள ஏமாத்திருவானோன்னு நினைக்கிற முகபாவம். குழைந்த முகம். எப்பவும்.  குனிந்து குழைந்து தான் எப்பவும் பேசுவார். ஓ அப்படியா என்று ஹிந்தியில் மட்டுமே பேசுவார். கொஞ்சம் உருது வாடை கலந்து தான். இவர்லாம் எப்டி பிஸ்னெஸ் பண்றார்னு எனக்கு பெரிய சந்தேகம். முதல்ல ஒரு டாக்டரின் காரைக் காட்டினார். எனக்கு என்னவோ அது பிடிக்கவேயில்லை. இந்த வண்டி மட்டும் லிட்டருக்கு பதினஞ்சு ( 7 ஆண்டு பழைய கார் அது :) ) கிமீ ஓடலைன்னு வெச்சுக்கங்க ராம்பையா உங்க காலூ ஊடால நுழைஞ்சு வெளிய வருவேன்னு சொல்லி சிரிப்பார்.

ஒவ்வொரு முறை வண்டியைக்காட்ட போகும்போது பேச்சுக் கொடுப்பேன். வீட்ல இன்னிக்கி என்ன சாப்டீங்க என்று கேட்டால் (மனதில் நல்ல பீஃப் கறியும் குடலும் சாப்ட்டு வந்திருப்பார் என நினைத்துக் கொண்டு) இன்னிக்கு ரசம் சோறு சாப்ட்டேன் ராம் பையா. நேத்து இட்லியும் கெட்டிச்சட்னியும் என்றார். ஓ ராம்பையா  நான் அசைவம் தொட்றதேயில்லை ஆப்கோ மாலும் ஹை ? (உங்களுக்கு தெரியுமா ) என்பார். அடப்பாவி நல்ல அடிச்சுத் துவைக்கிற மாதிரி ஒடம்பை வெச்சுக்கிட்டு ரசம் சோறா என்று மனதில் நினைத்து சிரித்துக்கொள்வேன்.

ஆர்.டீ.ஓ அலுவலகத்தில் லைசன்ஸ் எடுக்கும்போது பிரச்னை. என்ன முன்னாபாய் இவ்வளவு லேட்டாகுது என்றால் கால் செண்டரிலருந்து பதினஞ்சு கால் வந்தாச்சு. அனுப்பிச்ச வண்டி ப்ரேக் டவுன். எனக்கிருக்கிற பிரச்னைய நான் யார்ட்ட போயி சொல்றது யா அல்லா என்பார். முகத்தில் அதே குழைவு. அப்பாவிக்களை. சரியா இங்கிலீஷ் பேச வராது. லைசென்ஸ் எடுக்க போன போது ”பெஸ்ட் லக்” என்று கூறினார். இங்கிலீஷ்ல பேசணும்னு ரொம்ப ஆசை. இருந்தாலும் உருது தான் சரளமாக வரும்.  கால் செண்டர் பிஸ்னெஸ்லல்லாம் இங்கிலீஷ் பேச வேண்டிருக்கு ராம் பையா  என்று கூறி கொஞ்சம் வெட்கத்துடன் சிரிப்பார்.

எதையும் முறையா சட்டப்பூர்வமாகவே செய்யணும்னு நினைக்கிற சீவன். நமக்கு எல்லாம் அப்டித்தான் வாய்க்கும். அப்புறம் வீடு மாற்றியபின் காரை வெளியே எடுக்க இயலவில்லை. சரி இதை வைத்துக் கொண்டு தீனி போட முடியாது என நினைத்து விற்று விடலாம் என எண்ணி மீண்டும் முன்னாபாயிடம் கேட்டேன். அட அதனால என்ன, கஸ்டமருக்கு உதவி பண்ணலன்னா வேற யாருக்கு பண்ணப் போறேன்னு சொல்லி பல இடங்களில் அலைந்து பார்த்தார். கிராக்கி ஏதும் சிக்கவில்லை.

தொடர்ந்து சிலர் வந்து பார்ப்பதும் வேண்டாமென்று போவதும் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் ராம்பையா இந்தக்காரை நானே வாங்கிக்கிறேன். இருந்தாலும் வித்த விலைக்கே ஆவாது, கொஞ்சம் சஸ்தா ரேட்ல வாங்கிக்குவேன் என்று ரொம்ப யோசிச்சு என்ன சொல்வானோன்னு பயந்துகொண்டே கேட்டார். எனக்கோ இது இடத்தை விட்டு நகர்ந்தால் சரி என்று ஒப்புக்கொண்டேன். வந்து காரை எடுத்துக்கொண்டு போய்விட்டு பணம் அனுப்பி வைத்தார். இடைக்கிடைக்கு அவ்வப்போது ஃபோன் செய்வார் வேறே ஏதும் வண்டி வேணுமா என . இல்லை இப்போதைக்கு வேணாம் என்று கூறி வைப்பேன். இப்போதும் தொடர்பிலிருக்கிறார் முன்னாபாய். இப்பவும் அதே போல பேச்சு குழைவு என...நல்ல நண்பர்.

.