Monday, January 30, 2012

மயிலு : இளையராஜாவின் தீராத இசை வெள்ளம்எவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில் , இந்த மயிலின் இசை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராஜா சார் நமக்காக. இன்னும் கொலவெறி’யோட சுத்திக்கிட்டு இருக்கிற தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அருமருந்தாக இந்த எண்பதுகளின் இசை மீண்டும் அவரின் பறைசாற்ற வந்திருக்கிறது. எனக்கென்னவோ ஜெயா ப்ளஸ்’ஸ ஆன் பண்ணிவிட்ட மாதிரி ஒரு Feeling. மயிலிறகின் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது அத்தனை பாடல்களும்.அவரின் அதே மண் மணம் மாறாத இசை. அனைத்துப்பாடல்களிலும் இக்கால இசைக்கென/பாணிக்கெனத் தம்மை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் மேலும் தமது பாணியிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் அதே பாணியில் இசையைக் கொடுத்திருக்கிறார் ராஜா சார். அனைத்துப்பாடல்களும் வில்லுப்பாட்டின் இசையை ஒத்திருப்பதாக , உருக்கொண்டு இசைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த 16 வயதினிலே மயிலு போலவே , இன்னும் இளையராஜாவின் இசைக்கு வயது பதினாறேதான் என்று நிரூபிக்கிறது அத்தனை பாடல்களும்..!


நம்மளோட பாட்டுதாண்டா

கார்த்திக், திப்பு மற்றும் சைந்தவி இணைந்து பாடிய பாடல் , “ நம்மளோட பாட்டுத்தாண்டா ஒலகம் பூரா மக்கா, கண்டபாட்டக்கேக்க நாங்க காணப்பயறு தொக்கா..?! “ என்று ஆரம்பிக்கும் பாடல் “வேற எந்த பாட்டயும் நாங்க உள்ளவிடமாட்டோம்” என்று திப்பு’வுடன் கார்த்திக்கும் தொடர்கிறார். தொடக்கத்தில் வில்லுப்பாட்டு கோஷ்டியினரின் பாடல்கள் போல உருப்பெற்றிருக்கும் பாட்டு தொடர்ந்தும் அதே பாணியில் பின்னால் கோரஸ் ஒலிக்க கை விரல்களால் நம்மை தாளம் போடவைக்கும் பாடல். இப்டி ஒரு பாட்டு கேட்டு எத்தன நாளாகுது..?! ஹ்ம்.. யுவன் கூட “கோவா”வில ஒரு பாட்டு போட்ருந்தார் , ஏறக்குறய இதே பாணீல..ஐயா இத இப்டித்தான் சொல்லணும் , அய்யா பாட்ட பாத்து மகன் போட்ருந்தார்னு :-)
 
இப்பல்லாம் ஊர்த்திருவிழாவில என்ன பாட்டு போட்றாங்கன்னு பாத்தா இன்னும் கரகாட்டக்காரனும், “ஒத்த ரூவா தாரேன்” பாட்டுந்தான் ஓடிக்கிட்டுருக்கு, இனிமே இந்தப்பாடல் ஒலிக்கும் அத்தனை திருவிழாக்களிலும். 1:47 ல் தொடங்கும் ஷெனாயின் ஒலியுடன் “தப்பு” வாத்தியம் பின்னர் தாளத்திற்கென சேர்ந்து கொள்ள அது தொடர்ந்தும் 2:10 வரை ஒலிக்கிறது.ராஜா சார் எப்பவுமே ஒரே நோட்ஸ பல காற்றுக்கருவிகள் வாசிப்பவருக்கு கொடுத்து [ க்ளாரினெட் , புல்லாங்குழல், ஷெனாய் போன்ற ] ஒரே நேரத்திலும் அந்த நோட்ஸ்களை வாசிக்கச்சொல்வார் , அதனால இந்த வாத்தியத்துலதான் இசை வருகிறதுன்னு சாதாரண காதுகள் கொண்ட நம்மால பிரித்தறிவது மிகக்கடினம்.சிம்ஃபொனி இசைப்பவருக்கு இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா..?! ஹ்ம்..?! பிறகு 2:10 லிருந்து 2:20 வரை அதே நோட்ஸை வயலின்,மாண்டலின் மற்றும் லீட் கிட்டாரில் வாசிக்க முதல் interlude  முற்றுப்பெறுகிறது. பின்னர் திப்பு’வே பாடத்தொடங்குகிறார் முதல் சரணத்தை. “செந்தூரப்பொட்டு  மாறி இப்ப ஸ்டிக்கராகிப்போச்சு “ என்று அடிக்குரலில் திப்பு பாடும்போது இதுகாறும் முப்பது ஆண்டுகளாக நம்மை மயக்கிக்கட்டிப் போட்டிருந்த ஹார்மனி பின்னில் இசைக்கிறது சைந்தவி மற்றும் பிற பெண்களின் குரல்களில்.. ஐயா சாமி ,,இப்பல்லாம் இதெல்லாம் கேக்கவே முடியிறதில்லீங்கோ….தொடருங்க..:-) 3:14 ல் தொடரும் தவில் இசையுடன் பின்னர் சேரும் ஷெனாயும் , மத்தளம் கொஞ்சம் எதிர்நடை கொடுக்க , திப்புவே இரண்டாவது சரணத்தையும் பாட கோரஸ் அவ்வப்போது வந்து செல்கிறது , Typical Raaja Style குதூகலமான பாட்டு..!
துக்கமென்ன துயரமென்ன

ரீட்டா என்ற ஒரு புதுப்பாடகியுடன் ஸ்ரீராம் பார்த்தசாரதி இணைந்து பாடும் பாடல்.எனக்கென்னவோ பாடல் தொடங்கியவுடனே “நிலவே முகம் காட்டு” ( எஜமான் படத்தில் இடம் பெற்ற பாடல் ) மற்றும் “முத்துமணி மால “ ( சின்னக்கவுண்டர் படப்பாடல் ) தான் ஞாபகம் வந்து விட்டது. மனதை உருக்கும் பாடல் முற்றிலும். முதல் Interlude ,violin மற்றும் புல்லாங்குழலுடன் 0:56 ல் தொடங்கி பின்னர் Synthesizer உடன் 1:18 ல் முடிவடைய  ஸ்ரீராம் தொடர்கிறார் முதல் சரணத்தை. இரண்டாவது Interlude கொஞ்சமே வந்தாலும் , பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீக்கிரமே முடிந்துவிடுகிறது. பாடல்களில் இரண்டு Interludes களையும் , வேறுவேறாக இசைத்தது , அவர் இசைக்கத்தொடங்கிய காலத்திலிருந்தே ராஜா சார் மட்டுமே.அதுவரை ஓரே மாதிரியான Interludes களையே தமிழ்கூறும் நல்லுலக மக்கள் கேட்டு வந்தனர். இந்தப்பாடலிலும் ராஜா சார் இரு வேறு இசைத் துணுக்குகளை இரண்டு interludesகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப்பாடலை “இலங்கை வானொலி’ல (அதெல்லாம் ஒரு காலம் மக்கா ) , இரவு பத்து மணிக்குமேல் , இரவின் மடியில் என்று B.H.அப்துல் ஹமீத் இசைப்பார். அந்த நிகழ்ச்சிக்கான மிகப்பொருத்தமான இரவுச்சூழலுக்கான பாடல்,இதைக்கேட்ட பிறகு உங்களுக்கு நிம்மதியான உறக்கம் வரவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்..! :-)
யாத்தே அடி யாத்தே

பவதாரிணி தான் சிரமப்பட்டு “யாத்தே யாத்தே” என்று ஆரம்பிக்கிறார். “ பாவிப்பய பாத்தே கொல்லுற்யான்” என்றும் தொடர்கிறார்.இருந்தாலும் அந்தப்பாடலுக்குத் தேவையான விரகத்தை தன் குரலில் காட்ட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இயக்குனர் பாலச்சந்தர் , “தாஜ்மகால்” பட ஆரம்ப விழாவில பேசினது தான் எனக்கு நினைவுக்கு வருது.அந்த நிகழ்ச்சில அவர் பாரதிராஜாவை பற்றி சொன்னார் இப்டி.” என்ன அப்பாவே மகனுக்கு காதலிக்கிறது எப்படி’ன்னு சொல்லிக்குடுக்கிறதில் ஒரு Embarrassment இருக்கும்னு சொன்னது போல , ராஜா சாரே எப்டி தன் மகளுக்கு அத விளக்கி சொல்லிருக்க முடியும்னு,J ரொம்பக்கஷ்ட்டம் தான். “மஸ்த்தானா மஸ்த்தானா” பாட்டுத்தான் முதலில் ராஜா சாரிடம் பவதாரிணி பாடின பாடல்னு நினக்கிறேன்.அப்ப ராஜா சார் இப்டி சொல்லீருந்தார்னு ஒரு பேட்டில பவதாரிணி சொல்லிருந்தார். “ சரியா கத்துக்காமவே பாட்ட பாடீட்ட”ன்னு..அதே மாதிரிதான் இந்தப்பாட்டும் இருக்கு,! இருந்தாலும் இடையில பாரதி படத்திற்கென அவர் “ மயில் போல பொண்ணு ஒண்ணு “ என்று பாடி தேசீய விருது பெறவும் தவறவில்லை அவர் :-)
 . 
Friends படத்திலருந்து தன்னுடைய வழக்கமான Bongos வெச்சிக்கிட்டு தாளத்துக்கென இசைக்கிற பாணிய மாற்றிவிட்டார் ராஜா சார். பின்னர் வந்த பாடல்களில் எதிலும் அந்த Bongos பின்னணி தாள இசையை கேட்கவே நம்மால் முடியல. அதே பாணியில் இந்தப்பாடலும் ஸிந்தஸைஸரே பாடலின் தாளத்திற்கென யன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஓரளவு “ஒளியிலே தெரிவது ( அழகி படப்பாடல்) “ போல ஒரு Feelஐ இந்தப்பாடல் தருவதை தவிர்க்க இயலவில்லை.1: 32 ல் Interludeக்கென பவதாரிணி ஹார்மனி பாடுகையில் ‘ஓளியிலே’ நன்றாகவே ‘தெரிகிறது’ :-). 2:50  ல் தொடங்கும் இரண்டாவது Interlude  முழுக்க ஸிந்தஸைஸரிலேயே இசைக்கப்பட,பின்னணிக்கு மட்டும் தபேலா சேர்ந்து கொள்கிறது தாளத்திற்கென. பின்னர் கூடவே தொடர்கிறார் ஸ்ரீராம் பார்த்தசாரதி.


என்ன குத்தம்

வழக்கமான கரகரப்பான ராஜா சாரின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் , காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பதெற்கென இசைக்கப்பட்ட பாட்டு போலவே இருக்கிறது. இருந்தாலும் அந்த மதுரக்குரல் இன்னும் நம் மனதை கீறிடத்தவறவில்லை. வயலின் கூடவே பாடுகிறது ராஜா சாருடன். சோகத்தை இழைத்து இழைத்து ஓடவிடும் பாடலுக்கு உரம் கொடுக்கும் அதிர்வில்லாத பின்னணி இசை. “நானானனா “ என்ற ராஜா சார் பாடும் பாடல்களில் எப்போதும் காணக்கிடைக்கும் ஹார்மனி இந்தப்பாடலிலும் ஒலிக்கத்தவறவில்லை. ஒலம் ஒலிக்கிறது பாடலில். சமீபத்திய ராஜா சாரின் நிகழ்ச்சியில் “பிரகாஷ்ராஜ்” கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தமது பழைய பாடல்களில் ஒன்றை அவர் குரலிலேயே பாடியது போலவே இருக்கிறது இந்தப்பாடலும்..!


கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் என்று குதூகலமாக ஆரம்பிக்கிறார் சின்னப்பொண்ணு. “ஒத்த ரூவா தாரேன்” பாடலின் பின்னணி தவில் போல தொடங்கும் இசையுடன் தொடர்ந்தும் பாடுகிறார் சின்னப்பொண்ணு.முதல் Interlude 1:15ல் நாதஸ்வரத்துக்குப் பின்னரான புல்லாங்குழல் இசை’யை இப்போதும் “அருண்மொழி”யே வாசித்திருக்கக்கூடும். அத்தனை நேர்த்தி ,அத்தனை கச்சிதமாக ஒலிக்கிறது , பாடலின் Tempoவிற்குத்தகுந்த மாதிரி..! :-) பாடல் முழுக்க நாதஸ்வரமும் ,தவிலுமாக நமது முந்தைய ஊர்த்திருவிழாக்களை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. :-)


Thursday, January 26, 2012

காஃப்கா'வின் குட்டிக் கதை
"அந்தோ"! என்றது எலி,

"ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரிதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காக பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்".

"நீ உன் திசையை மாற்றவேண்டிய தேவை உள்ளது" என்ற பூனை, அதனை சாப்பிட்டது.Saturday, January 21, 2012

என்னைப் போலவே..

ஆனந்தவிகடனில் வெளியான கவிதை


சூழ்ச்சி வலையில்
சிக்க வைத்து எதையும்
கிடைக்கவிடாமல் செய்வதில்
அவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

நம்ப வைத்து கடைசியில்
கழுத்தறுப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

நயவஞ்சகமாகப்பேசி
தனது சொல்லை என்னிடம்
நிலை நாட்டிக்கொள்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அதிரடியாக நுழைந்து
த்வம்சம் செய்பவர்களைக்காட்டிலும்
கனிவுடன் நயமாகப்பேசி
நஞ்சு வைத்துக்கொல்பவரை
எனக்கு மிகவும் பிடிக்கும்


தன் வலையில்
உறுதியாக வீழ்ந்துவிட்ட இரையை
அதை உணரச்செய்யாமல்,
தம் கண்களில் காட்டிக்கொள்ளாமல்,
உள்ளுக்குள் ரசிப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

தன் வலையில்
வீழக்காத்திருப்பவர்களை,
காலம் கனிய வேண்டி
காய் நகர்த்துபவர்களை,
எனக்கு மிகவும் பிடிக்கும்.

தப்பிக்க வழியின்றி
அனைத்தையும்
ஒவ்வொன்றாக மூடி
கடைசியில் உரக்கச்சிரிப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

முகத்தை இறுக்கமாக
வைத்துக்கொண்டு
உள்ளுக்குள் நகைத்துக்
கொண்டிருப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

விடாத பிடிவாதத்துடன்
இருப்பவரை அவரின் வலுக்குறைவு
அறிந்து வீழ்த்துபவரை
எனக்கு மிகவும் பிடிக்கும்.


எவ்வளவோ முறை சொல்லியும்
அவர்தம் வழிக்கு வராதவர்களை
அவர் வழியிலேயே தொடர்ந்துசென்று
சமயம் பார்த்து
போட்டுத்தள்ளுபவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

உன்னை வீழ்த்தவே முடியாதா
என்று வாய்விட்டுக்கேட்டே
முதுகில் குத்துபவரை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

இத்தனை பிடித்தங்களும் உள்ள
என்னை உங்களுக்கும் பிடிக்கும்.
உங்களை எனக்குப் 
பிடித்துப்போனது போல.

(ஆனந்தவிகடன் 25-01-2012 இதழில் வெளியான கவிதை)

.

Wednesday, January 18, 2012

ஊறிய பிறகுஇறுகி முறுக்கிக்கொண்ட
என் மரக்கதவுகள்
குளிர்காலம் வந்துவிட்டதை
எனக்கு உணர்த்துகின்றன
அடித்துச்சாத்திய காலங்கள்
கடந்து விட்டன
ஒலி எழுப்பாது
சாத்திக்கொள்ளும் அவை
எவ்வித எதிர்ப்பும்
தெரிவிக்காத என்னையே
பல சமயங்களில்
எனக்கு நினைவுறுத்துகின்றன
ஈரமிருப்பின் எல்லாம்
சுளுவாகிப்போவதை.


.

Saturday, January 14, 2012

3 இசை விமர்சனம்A Life Full Of Love 

பியானோவின் நோட்ஸுடன் தொடங்கிப்பின் அதே நோட்ஸ்களை வயலின் இசையோடு தொடரும் தீம் ம்யூஸிக், கொஞ்சம் சைனீஸ் டச்சுடன் ஒலிக்கத்தொடங்கி , தொடர்ந்தும் நம்மை கூடவே அழைத்துச்செல்கிறது. ரஹ்மான் சொல்லுவார் அதிகமா சைனீஸோட இசையில சிந்துபைரவி ராகம் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துவாங்கன்னு, அதோட அவங்க இசையின் அடிப்படையும் அதுவாவேதான் இருக்கும், கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க இதுல சிந்துபைரவி டச் இருக்கான்னு. இன்னும் தொடர்ந்தும் கேக்கும்போது எனக்கு யானி’யோட Tribute-ம் , இங்க டெல்லி கன்செர்ட்டுக்கு வந்திருப்ப வாசிச்சார்.அந்த ட்ரிப்யூட்’டோட வாசனையும், நம்ம ரஹ்மானின் பாம்பே தீம் ம்யூஸிக்கும் கலந்து ஒலிப்பது போலத்தானிருக்கு, இசைச்சேர்ப்பு மற்றும் கலந்தொலிக்கும் போது எனக்கு யானி’யும் ரஹ்மானும் தான் நினைவுக்கு வருகின்றனர்.கேட்டுப்பாருங்க…உங்களுக்கும் காதல் மூட் வருதா இல்லியான்னு..ஆனா தம்பி அனிருத்துக்கு ஏற்கனவே பிரவாஹமா பொழியுதுன்னு தான் தோணுது. A Life Full Of Love :-)


போ நீ போ

மோஹித் சௌஹானும் அனிருத்தும் இணைந்து பாடின பாடல். கொஞ்சம் நம்ம யுவனோட “ஓ இந்தக்காதல் என்னும் பூதம் “ ( சத்தம் போடதே படத்திலிருந்து) உள்ள பாடல் போல ஆரம்பத்தில் ஒலிக்கிறது.ஹ்ம்..கொஞ்சம் 6-8 ல இருக்குற Tempo’ வக்குறச்சு 2-4 ல கேட்டுப்பாருங்க அதே பாட்டுதான்..So இந்தப்பாட்டுக்கு யுவன்..! :-) இருந்தாலும் Perfect Match’ன்னா “ஓ சனம்,முஹப்பத் கீ கஸம்” என்ற கொஞ்சம் பழய நம்ம லக்கி அலி’யோட பாடலை அச்சசல் நினைவுறுத்தவும் தவறவில்லை.இருப்பினும் சாயல் தெளிவாகத்தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் அனிருத். மோஹித் சௌஹானின் குரலும் , லக்கி அலியின் கொஞ்சம் Boss கூடின குரலும் ஒன்று போல அமைந்திருப்பதும் அந்தப்பாடலை தொடர்ந்தும் நினைவில் நிறுத்துகிறது. ஆஹ் ஆஹ் என்று பின்னிலிருந்து உயிர் போவதுபோல் , சித்ரவதைக்குட்பட்டவர் போல, கத்தும் Effect கேட்கும்படித்தான் இருக்கிறது. பாடலைத்திசை திருப்பாமல் ..! பாடல் மொத்தமும் இசைச்சேர்ப்பு , ஒலிக்கலவை , ஸிந்தஸைஸரில் செய்தது போலவே தெரியுது,,:-)

நீ பார்த்த

பின்னணியில் முழுக்க ஒலிக்கும் வயலின் ,எனக்கு “ந்யூயார்க் நகரம்” பாடலையே நினைவூட்டுகிறது. அருமையான மெலடியாக உருவெடுத்துக்கிறது.  “நீ பாதி நான் பாதி” பாடல் ஸ்டைல் தான் (கேளடி கண்மணி) Same Treatment பாடல் முழுக்க. பாடலின் Mood-ஐ தவிர்த்துவிடாமல் தொடர்ந்தும் செல்லவைக்கிறது. ஆனாலும் பாடலின் Interludes ரசிக்கும்படியில்லை. அனிருத் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்னு தோணுது.. :-)

கண்ணழகா

ஒண்ணுமில்ல…நம்ம ராஜா சாரோட How To Name it-ல ஒரு ‘Is It Fixed’ன்னு சின்ன Master Piece இருக்கு, கொஞ்சம் அதக்கேட்டுட்டு இந்தப்பாட்டக்கேளுங்க. அனிருத்கிட்ட கேட்டா Just Inspired ன்னு சொன்னாலும் சொல்லிருவார். என்ன இருந்தாலும் அது Original மாஸ்டரோட Piece  அல்லவா..?! J இருந்தாலும் பாட்டின் இடையில வர்ற பூவின் மடல் போல விரியும் ரெண்டு Interludes –லயும் மனிதர் ரொம்பவே அசத்துறார்.Guitar E Major String-ல ஆரம்பிக்கிற பாட்டு அப்டியே நம்ம மனசோட அத்தனை Stringsஐயும் தொட்டுவிட்டுத்தான் செல்கிறது.Guitar-உடன் பின்னர் violinம் சேர்ந்து கொள்ள , மனதைக்கொள்ளை கொள்கிறது..! 1st Interlude-ஆக 1:04 லருந்து 1:12 வரை , அப்டியே நம்ம ராஜா சாரோட Is it Fixed :-) தான் , பிறகு 2:36 ல் ஆரம்பிக்கும் Interlude-ல் பூவின் இதழ் போல் விரியும் வயலினும் பின்னர் புல்லாங்குழலுமாக மனதைக்கொள்ளை கொள்கிறது…என்னைக்கேட்டா இந்தப்பாட்டு தான் ஸூப்பர் படத்துலயே…அதோட ஸ்ருதி நிஜமாகவே கொஞ்சுகிறார் நம்மோட..!

How To Name it “Is it Fixed“ http://www.youtube.com/watch?v=MPU4lPyopKI
 
Theme of 3 

ஸ்பானிஷ் பின்னணி போல ஆரம்பிக்குது தீம் , ஆ ஹோ என்ற பின்னணி பிறகு சேர்ந்துகொள்ள , தொடர்ந்தும் Mandolin Strings இசைக்கிறது.ஹ்ம்..ஒண்ணும் சொல்லிக்கிர்ற மாதிரி Impress பண்ணல..! :-) Sorry Anirudh. Theatrical Thriller க்கு வேணா Use பண்ணிக்கலாம் இதை.. :-)

The Rhythm of Love

சிவதாண்டவம் போல ஆரம்பிக்கிற தாளத்துக்கேற்றவாறு பின்னால புல்லாங்குழல் சேர்ந்திசைக்கிறது..கொஞ்சம் நம்ம யுவனோட “தொட்டுத்தொட்டுப்போகும் தென்றல்”  (காதல் கொண்டேன்) போல இசைக்கிறது இந்த இசைத்தொகுப்பு.. ஒருவேள படத்துல காட்சிகளோட பார்க்கும் போது வேண்ணா Impress பண்ணும்னு நினைக்கிறேன்.இந்த ஒரு படத்தை வைத்து எடை போடமுடியாது , ஏற்கனவே உலகப்புகழ் வாங்கிட்டார்னு சொன்னாலும், தம்பி அனிருத்’கிட்ட சரக்கு இருக்கத்தான் செய்யுது.அதை ரொம்ப தைரியமாவே காட்டீருக்கார் எல்லாப்பாட்டுலயும்…! “வாகை சூடவா “ ஜிப்ரான் போல நமக்கு ஒரு Promising Talent கிடைத்திருக்கிறதுன்னு தான் சொல்லணும். ஒரு பாட்டில் உலகப்புகழ் என்கிறதால எதிர்பார்ப்பும் அதே மாதிரி தான் இருக்கும் இனி அவரிடமிருந்து வரும் அத்தனை பாடல்களுக்கும்..! சொல்லப்போனா ராஜா, ரஹ்மான், மற்றும் யுவனின் இசைக்கலப்பு போலத்தான் தெரியுது எல்லாப்பாடல்களும்..! இருப்பினும் தமது இசையைப் பிறர் சாயலின்றி தொடர்ந்தும் வெளிப்படுத்துவாரேயானால் வெற்றிகளைக்குவிப்பது உறுதி…!! 

வாழ்த்துகள் அனிருத்…! 

.