Saturday, January 18, 2020

”தாய் மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்”



”தாய் மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்”, இது இங்கிருந்து இன்ஸ்பையர்டு. Joaquin Rodrigo வின் Concierto de Aranjuez (Adagio). கிட்டாருக்கான பல க்ளாஸிக்கல்களை தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.கிட்டத்தட்ட நாற்பது இசைக்கூறுகள் அங்கனம் என்னிடம் இருப்புண்டு. அதிலொன்று இந்த அடாஜியோ (Adagio). இந்த தாய் மடியில் பாடலில் முதலில் வந்து விழுந்த அந்த கிட்டார் துணுக்கு உடனடியாக எனக்கு ‘அடாஜியோ’ வை ஞாபகப்படுத்திவிட்டது. இதை கம்ப்போஸ் செய்தவர் ஓக்வின் ரோட்ரிகோ (JOAQUIN RODRIGO) ஸ்பானிய தேசத்தை சேர்ந்தவர். அடாஜியோ என்பது "the music is played adagio with very slight dynamic change" என்று கூகுள் கூறுகிறது. இசையில் இதன் பொருள் இத்தாலியனில் ‘மெதுவாக’ Slowly. இதே கிட்டார் இசைத் துணுக்கிற்கென பிகாஸோ ஒரு ஓவியமே வரைந்திருக்கிறார். ஸ்பானிஷ் மக்கள் கலவரம்’ ஏற்பட்ட போது எழுந்த உணர்ச்சிகளை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த அடாஜியோ’ கம்போஸிஷன், பிகாஸோவின் ஓவியம்.

இந்த ’அடாஜியோ’ கிட்டாரின் அலைதலுடன் 00:09 செகண்டில் ஆரம்பிக்கக்கூடிய அந்த இங்கிலீஷ் ஹார்ன்’ (ட்ரம்பட்/ஷெனாய் போல ஒலிக்கும்) கேட்கும் போது கைலாஷ் கேரின் ஆலாபனை முழுக்கவே அதுதான் எனத்தோணும். பிறகும் பாடலின் நீள அகலத்தில் இந்த ‘அடாஜியோ’வின் பங்கு அளப்பரியது. இருப்பினும் அற்புதமான ரெண்டரிங். போகும் வழிக்கு உன் நினைவே துணை.துயரமும் இழப்பும் அழகும் எப்படி பொருந்திப் போகிறது ?

கைலாஷ் கேர் நல்ல உச்சஸ்த்தாயியில் பாடக் கூடியவர். அவரை அவரின் இயல்பின் சுரத்திலிருந்து மாற்றி அப்படியே கீழறிக்கிக் கொண்டு வந்து அடி மட்டக்குரல் கொண்டு பாட வைத்திருக்கிறார். போனால் போகட்டும் என தொடக்க ஆலாபனை மட்டும் கொஞ்சம் சூஃபியிஸம். கொஞ்சம் நுஸ்ரெத் ஃபதே அலிகானின் ஸ்டைல். அற்புதமான பாடல்.



Friday, January 17, 2020

Pianist and Baritone



ஆப்ரா சங்கீதம் அதை வாய்ப்பாட்டாக இதுவரை நேரில் கேட்டு அனுபவித்ததில்லை. யூட்யூபில் அவ்வப்போது பரோக், ஆரட்டோரியா, சிம்ஃபொனி,ஆப்ரா ஆகியனவற்றைத்தேடும் போது  காணக் கிடைத்தாலும் , ஏனோ அதை உட்கார்ந்து கேட்க மனம் ஒப்புவதில்லை. அதிரடியான குரலில் ஏறத்தாழ நமது ‘மதுரை சோமு’ அவர்களின் கணீர்க்குரலில் காதல், கலகம், ரத்தம், சோகம், ஏமாற்றம், விரகம் என எவ்வித ரசத்திற்கும் ஒரே போன்ற ஹைட்ரஜன் பலூன் போல எப்போதும் உச்சாணியைத் தொடும் குரல் என்றால் சலிப்புத்தான் வருமே தவிர ஏனோ ஒட்டுவதேயில்லை எனக்கு.


நேற்று இரவில் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் பெங்களூர் இண்டர்நெஷ்னல் செண்டரில் வழக்கம் போல இசை நிகழ்ச்சி பியானோ மற்றும் பாரிடோன்,Baritone என்றால் விக்கிப்பீடியா இவ்வாறு கூறுகிறது இது ஒரு வகையான ஆண் குரலில் கீழ்ஸ்த்தாயிக்கும் (Bass) ,மேலான உச்சஸ்த்தாயிக்கும் இடையிலான குரல் கொண்டு பாடுவதை Baritone எனலாம்.  எல்லாப்பாடலும் அப்படித்தானே பாடப்படும் ? அதிலும் ஏகப்பட்ட வரைட்டிகள் இருக்கிறதாம். Bass Baritone தான் இவர் பாடியது என நினைக்கிறேன். லூசியானோ பவரொட்டி அவர்களின் குரல் இந்த கேட்டகரியில் வருகிறது. இதே பாரிடொன் ’Heavy Sounding’ என்றும் வகைப்படுத்தப் படுகிறது. பொதுவாக இந்த ஆப்ரா வகை வாய்ப்பாட்டுகள் இத்தாலியர்களுக்கு மட்டுமே கைவரக்கூடிய குரலாக கலையாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். இல்லை நான் இது வரை கேட்ட இந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் அனைவருமே இத்தாலியர் களாகக்கூட இருக்கலாம்.


இங்கு பாடியவர் நிக்கில் கோயல் என்ற இந்தியக்கலைஞர் , போலண்ட்க்கு போய் அங்கு இக்கலையைக் கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்திருக்கிறார். ரஷ்யன், ஜெர்மன், போலிஷ், ஃப்ரென்ச், இட்டாலியன், பிறகு ஆங்கிலத்திலும் என கூப்பாடு போட்டு வெளுத்துக்கட்டுகிறார். எனக்கென்னவோ அவர் அனைத்துப் பாடல்களையுமே ஒரே மொழியில் பாடியதைப் போலத்தான் தோன்றியது. என்னதான் பாடுகிறார் எப்படித்தான் இவரின் ஆலாபனைகள் இருக்கின்றன என அறிந்துகொள்ளவே நிகழ்ச்சி முடியும்வரை அமர்ந்திருந்தேன். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒரு ‘மொளலின் ரூஜ்’ நிகழ்வுக்கு வந்தது போல அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தது போல இருந்தது எனக்கு.  நம்ம ரஹ்மானும் இந்த சேட்டையை கொஞ்சம் ‘ஐ’ படத்தில் காட்டியிருந்தார். (ஐலா ஐலா)



நிக்கில் கோயல் பாடும்போது மைக்கை கீழே வைத்துவிட்டு, அந்தப் பாடலைப்பற்றி அரங்கத்திற்கு அறியத்தரும்போது கையில் பிடித்துக் கொள்கிறார். அந்தக்குரல் ஒவ்வொரு சுவரிலும் பட்டுத்தெறிக்கிறது. சுமார் ஐநூறு பேர் உட்காரும் வசதியுள்ள டால்பி ஸ்ட்டீரியோ வசதியுடன் கூடிய திரைப்படங்களும் காண்பிக்கும் வகையிலான அரங்கம் அது. மைக் இல்லாது அவர் பாடும் பாடல் எந்த மூலையிலிருந்து கேட்டாலும் அதே அட்சரசுதியுடன் பிசிறின்றி ஒலிக்கிறது. இத்தனைக்கும் அரங்கு நிரம்பி வழிந்தது. இதுவரை இப்படி ஒரு கூட்டம் நான் கண்டதில்லை.  அரங்கு நிறைந்து படிக்கட்டுகளிலும் மக்கள் அமர்ந்திருந்து பார்த்தனர். எப்போதும் நிகழ்ச்சிகள் ஆறு ஆறரைக்கு ஆரம்பித்துவிடும் , நேற்று நிகழ்ச்சிகான நேரம் எட்டரையிலிருந்து ஒன்பதரை வரை. அதனால் தான் கூட்டம் செம்மியது.



மொத்தம் ஆறுபாடல்கள் , ஒவ்வொன்றும் ஒரு ஐரொப்பிய மொழியில் பாடினார். ஜாஸ், பிராட்வே, ஆப்ரா என்று வகைவகையாக. என்னவொரு எனர்ஜி. சளைக்கவேயில்லை. இடையில் மூன்று பாடல்கள் முடிந்ததும் இரண்டே இரண்டு நிமிடம் அரங்கத்தின் திரைமறைவுக்கு சென்றார்.  ஆங்கிலத்தில் விளக்கம் கூறிவிட்டு பின்னர் அந்தந்த மொழியில் பாடுகிறார். தமிழ்த்திரையில் இதுபோல பாட தகுதியானவர் ‘ஆன்டிரியா’ மட்டுமே.  ‘Whos the Hero’ (மன்மதன் அம்பு), இதுவரை இல்லாத கனவிது (கோவா) இந்தப்பாடல்களில் காணப்படும் உச்சஸ்த்தாயியை கொஞ்சம் கேட்டுவிட்டு வாருங்கள். இருந்தாலும் இதெல்லாம் லைட் வெர்ஷன் தான் தமிழ்கூறும் நல்லுலகுக்காக :)  ஏன்னா இதெல்லாம் ஆப்ரா சிங்கிங் கிடையாது. இதெல்லாம் ஆரம்பமாக வெச்சுக்கிட்டு தொடங்கலாம்.!  ஸ்ருதிஹாசனைப்பற்றி சொல்வதென்றால் கற்றுக்கொண்டு பாடுவது போல இருக்கும் அவரது வெஸ்ட்டர்ன் டைப் பாடல்கள். ஆனால் ஆன்ட்ரியா தான் ஆதென்ட்டிக்.



இத்தனை ஆண்குரலில் கணீரென அரங்கத்தையே கட்டிப்போட்டாலும் அவர் நடை நளினமாக ஒரு யுவதியின் நடையைப்போலிருந்தது என்னவெனத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை அரங்கை பியானோவை விட்டு விலகி நடக்கும்போது அங்கனமே தோன்றியது எனக்கு,



கூடவந்த  மிக்கால் க்ருப்பா’ பியனிஸ்ட், பல விருதுகளை வாங்கிக் குவித்தவராம் ஐரோப்பிய மேடைகளில். விரல்கள் நடனமாடுகின்றன. இசைக்குறிப்புகள் ஏதுமின்றி தாமே வாசிக்கிறார். பாடலுக்கு பின்னணியில் மட்டும் இசைக்குறிப்புகளுடன் வாசித்தார்.  ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் பேசுகிறார். அதிலும் பனி பொழிகிறது. ஷோப்பின் மற்றும் லிஸ்ட்’ இவர்களின் சின்ன ராப்ஸோடிகளை பியானோவில் குறிப்பின்றி அனுபவித்து வாசித்துக்காண்பித்தார்.



நிகழ்ச்சி தொடங்குமுன் சிறு புத்தகம் போல நிகழ்வில் பாடப்படும் பாடல்கள் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, இசைத்துணுக்கின் கம்ப்போஸர் ஆண்டு ஆகியன அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  ட்ஷைக்காவ்ஸ்க்கியின் பாடலும் இடம் பெற்றது. ராசைய்யா பெருமையாகப் பேசுவார் இவரைப் பற்றி. எல்லோரும் பீத்தோவன்,மொஸார்ட் பற்றிப்பேசும் போது.



நிகழ்வின் இடையில் யாரும் புகைப்படமோ, இல்லை வீடியோப்பதிவோ எடுக்கலாகாது என்று பணிக்கப்பட்டது. நிகழ்வு முடிந்து கலைஞர்களுக்கு பூச்செண்டெல்லாம் கொடுத்தாகிவிட்டது. ஆர்வலர்கள் ஒன்ஸ் மோர் ஒன்ஸ்மோர் எனக்கேட்டதில் மிக்கால் இன்னுமொரு பியானோ மெட்லியும், குறிப்பிடப் படாத ஒரு பாடலை நிக்கிலும் பாடினார். அதுமுடிந்து இன்னொரு நபர் எனக்காக இன்னொரு பாடல் எனக்கேட்டு தொல்லை படுத்த மொத்தம் மூன்று பாடல்கள் எக்ஸ்ட்ரா. எனினும் அதில் ஒன்று கூட துக்கடா இல்லை. எல்லாம் முழுப்பாடல்கள். கலைஞனிடம்  ஒன்ஸ்மோர் கேட்பது என்பது பெங்களூர் சில்க்போர்டு சந்திப்பில் ஒரு வாகனம் கூட இல்லாத சுத்தமாக வழித்தெடுக்கப்பட்ட சாலையை ஒத்ததாகும். :)





Thursday, January 16, 2020

காக்கைப்'பெண்டுலம்'

இதே போன்ற ஒரு பொங்கல் தினத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். நண்பர் ஸ்ரீனி அழைத்தார். சமத்துவப் பொங்கல் இங்க நீலசந்திரா’வில மார்க்சிய தோழர் மாரி ,செளரிராஜன் எல்லாம் கொண்டாடுவாங்க அங்க போகலாம் என்றார். சரி என்று கிளம்பி விட்டேன். இடையில் ஸ்ரீனி அழைத்து இல்ல எனக்கு இன்னும் நேரம் ஆகும் என்றவர் வேலையை முடித்து விட்டு பின்னர் அழைக்கிறேன் என்றார். அதுவே மதியத்துக்கு மேலாகிவிட்டது. ஒருவழியாக தேடிச்சென்று பார்த்தால் அதெல்லாம் பத்து மணிக்கு முன்பேயே முடித்துவிட்டோமே என்றார். பொங்கல் வைத்து முடித்த அடுப்புகளில் இன்னமும் நெருப்பு தணியவில்லை. ஆங்காங்கே இலைகளும் மிஞ்சிய மஞ்சள் துண்டுகளும் சிதறிக்கிடந்தன. 

இப்ப என்ன பண்றது? சமத்துவப்பொங்கல் சாப்பிடலாம் என்ற ஆசையில் நேரம் அனைத்தையும் தின்றுவிட்டது. ஸ்ரீனிக்கு சரியான பசி, வா ராம் பக்கத்துல எதாவது கடை இருக்கிறதான்னு பார்க்கலாம் என்றார். பைக்கை எடுத்துக் கொண்டு சென்றோம். பொங்கல் தினம் எல்லா சாப்பாட்டுக் கடைகளும் மூடிக்கிடந்தன. ஹ்ம்.. எல்லாம் என் வேலையால வந்த வினையென நொந்து கொண்டவருக்கு ஒரு முஸ்லீம் ஓட்டல் மட்டுமே திறந்து பசியாற்றக் காத்துக் கொண்டிருந்தது.

ஓட்டலின் வெளியே க்ரில்லில் நான்கு நான்கு கோழிகள் தம் தலையை இழந்து வெற்றுடம்பாக தணலில் சுற்றிக்கொண்டிருந்தன. அப்படி நான்கு வரிசைகளில் மோட்டார் வைத்து சுழல விட்டதைப்பார்த்துக்கொண்டு நின்றேன். என்ன ராம் உள்ள போய் சாப்டலமா ? என்றவரிடன் ஏங்க , பொங்கலும் அதுவுமா இப்படியா என்றவனிடம் பாருங்க எனக்கு செமப்பசி எதாவது உள்ள இறங்கினாத்தான் நடக்கவே முடியும் போலருக்கு என்றார். சரி வேறு வழியில்லை என்று உள்ளே போய் சரிக்கட்டு கட்டிவிட்டு வெளியில் கிடந்த பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள அமர்ந்தோம்.

அப்போது தான் பார்த்தேன். சாலையின் எதிர்புறத்தில் ஒரு அடர்த்தியான மரங்களடர்ந்த காம்ப்பெளண்டில் ஒரு மரத்தில் இருந்து ஒரு காக்கை தலைகீழாக தொங்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது. யாரோ விட்ட பட்டம் அறுந்து அதன் நூலில் கால்விரல்கள், நகங்கள் சிக்கிக்கொண்டு விடுவிக்க இயலாமல் அலைகிறது. பார்த்தால் ஒரு பெரிய கடிகாரத்தின் பெண்டுலம் போல ஒரு ஐம்பது மீட்டர் ஆரத்தில் அலைந்தது. இருப்பினும் விடா முயற்சி எப்படியேனும் அந்த நூலை அறுத்துவிட்டு பறந்து விட மாட்டோமா என இறக்கைகளை படபடவென அடித்துக்கொண்டு . பட்டத்தின் கயிறு மேலுள்ள மரக்கிளையில் வலுவாக சிக்கிக் கொண்டதில் அங்கிருந்து தொங்கும் பெண்டுலமாக காக்கை மாட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது.

மேலே இரண்டு மூன்று காக்கைகள் அமர்ந்து கொண்டு என்ன செய்வது என வழி தெரியாமல் அலையும் நண்பனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு கரையாது கல்லென சமைந்து போயிருந்தன. ஸ்ரீனி அங்க பாருங்களேன் என்றவனை , அட ஆமா காக்கா ,போய் மாட்டிக்கிச்சு போலயே என்றவரை அழைத்துக் கொண்டு சாலையைக்கடந்து அந்த காம்ப்பெளண்டு சுவர் அருகே சென்றேன். மேலே ஏறி உள்ளே செல்லலாம் என்றால் மதில் சுவரில் முழுக்க கண்ணாடிச் சில்லுகளைக் கொண்டு வேலி போல் அமைத்திருந்தனர். கால் வைத்தால் குருதி கொட்டுவது உறுதி. மேலே ஏறவும் முடியாது. பின்னர் எங்கனம் காக்கையை காப்பாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது , வேண்ணா இந்த காம்ப்பெளண்டை சுற்றிப் பார்ப்போம் ஏதேனும் உள்ளே செல்ல வழியிருக்குமாவெனப் பார்க்கலாம் என ஸ்ரீனி அழைத்தார். நானும் சென்று பார்க்க நடந்தேன். 

கதவு இருந்தது ஆனால் பழங்காலப்பூட்டு ஒன்று வலுவாகப்போடப் பட்டிருந்தது. இதுக்கு சாவி தேட்றதுக்குள்ள காக்கா போய்ச்சேர்ந்துரும் ராம் என்றார். பின்னரும் நடந்து முன்னர் நின்று கொண்டிருந்த சாலைப் பக்கத்திலேயே வந்து நின்று கொண்டோம். நாங்கள் இருவரும் எதோ முயற்சி செய்கிறோம் என்றறிந்து , சாலையில் பைக்கை ஓட்டிச்சென்ற ஒரு இளைஞர் நின்று பார்த்து விட்டு அவரின் நண்பரை அழைத்தார். கொஞ்ச நேரம் கழிந்து அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இதுக்கு என்ன சார் பண்றது என கழிவிரக்கத்துடன் பைக்கை எடுத்து சென்றுவிட்டார். 

சாலையில் இரண்டு போலீஸ்காரர்கள் ரோந்து சென்றவர்கள் எங்களோடு நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முயற்சியும் செய்யவில்லை. ஸ்ரீனி எதோ சொல்லிப்பார்த்தார், அவர்கள் அதற்கு எந்த வித இசைவும் தெரிவிக்கவில்லை. நாங்களிருவரும் பின்னர் போலீஸும் இருந்ததால் சாலையில் நடமாட்டத்தில் சுணக்கம் வந்து பலர் நிற்பதும் காக்கையைப் பார்ப்பதும் பின்னர் தமக்குள் எதோ பேசிக்கொண்டு கலைவதுமாக இருந்தனர். நாங்கள் சாப்பிட்ட ஓட்டல் முதலாளியும் எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டார். இது காலைலருந்து இப்டி அலையுது சார் பாவம் என்றார். இன்னமும் அவர் க்ரில்லில் பதினாறு கோழிகள் தணலில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. இங்கிருந்து பார்த்தாலே எனக்கு தெரிந்தது. 

போலீஸ்காரர்கள் அங்கிருந்து நழுவிவிடத் தலைப்பட்டனர். தெளிவாகவே தெரிந்தது. என்னாலியன்ற முயற்சியாக ப்ளூ க்ராஸின் நம்பர்களை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு நம்பரும் சிக்கவில்லை. மேலும் அன்று விடுமுறை நாளென்பதால் ஒரு நம்பரிலும் யாரும் பதில் சொல்வாரும் இல்லை. ரிங் போய்க் கொண்டே தானிருந்தது. மாலையாகிவிட்டது. வெளிச்சம் குறையத்தொடங்கி விட்டது. காக்கை இன்னமும் தமது பெண்டுல ஆட்டத்தை விட்டதாகத் தெரிய வில்லை. இத்தனை வலுவாகவா இருக்கும் அந்தக்கயிறு. இங்கிருந்து பார்த்தால் எந்தக்கயிறும் தெரியவில்லை. இருப்பினும் காக்கை சுதந்திரமாக பறக்கத்தான் முடியவில்லை. 

அப்போது தான் அந்த பெஸ்காம் (பெங்களூர் மின்வாரியக்கழகம்) மாருதி வேன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. வண்டியின் மேல் ஏணியும் பின்னர் வடக்கயிறும் இருப்பதை தூரத்திலேயே கவனித்துவிட்டேன், மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. ஸ்ரீனி வண்டி வருது பாருங்க என்றேன். வந்து இறங்கியவர்கள் போலீஸ்காரங்கதான் சொன்னாங்க இங்க காக்கா மாட்டிக்கிட்டு இருக்கிறதா என்றவர்கள் எங்களின் பதிலை எதிர்பாராமல் ஏணியை மதில் மேல் சாய்த்து விட்டு, கொண்டு வந்து சாக்கை மெதுவாக இட்டு மதிற்சுவரில் நடந்து அருகிலிருந்த மரத்தின் மீது ஏறிவிட்டனர். 

மேலிருந்த காக்கைகள் சப்தமிட்டன. மெதுவே ஒவ்வொரு மரமாகத் தாவி ஒருவாறு அந்தக்காக்கை மாட்டிக் கொண்டிருந்த கிளையிற்சென்று அந்த மந்திரக்கயிற்றை அறுத்துவிட்டார். என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சரேலேனப் பறந்த காக்கை தடுமாறி உள்ளேயே விழுந்தது. காலை முதல் மாலை வரை பெண்டுலம் ஆடியதில் களைத்துப் போயிருக்கும், பின்னர் ஒரு விசிறலில் பறந்து மேலெழும்பியது , அருகிலிருந்த நட்புக் காக்கைகளும் ஒரு சேரப்பறந்தன.

அந்தச்சாலையையே அந்த மகிழ்வுத்தருணம் ஒட்டிக் கொண்டது போலும். எதோ தாமே விடுபட்டு விட்டதைப்போல கைதட்டி கொண்டாடினர். நானும் தான். அப்போது தான் அந்த கடைக்காரர் காலைலருந்து எல்லாரும் பார்க்கவும் செல்வதுமாக இருந்தனர்,ஆனால் யாருக்கும் இப்படி உதவணும்னு தோணலையே என்றார்., நானும் இதுபோல ஒரு மந்திரக்கயிறால் கட்டப்பட்டுத் தானிருக்கிறேன், என்னை விடுவிப்பது யார் என....ஸ்ரீனியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் .

Monday, January 13, 2020

மைக்ரோகதைகள்

எழுத்தாளர் ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ அவரது ஒரு முகநூல் பதிவில் ’மைக்ரோ கதைகள்’ என்ற பெயரில் எழுதச் சொல்லி சில எடுத்துக் காட்டுகளும் கொடுத்திருந்தார். அதில் சிறந்த 25 கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தமது புத்தகம் ஒன்றைப் பரிசளிக்கிறார். எழுதியதோடு அதை மறந்து விட்டேன்..இன்று மெஸென்ஞரில் வந்து என்ன ராம் உங்க முகவரி கொடுக்கலியே என்றார். எதற்கு கேட்கிறார் என்று கொஞ்சம் சந்தேகம். பிறகு அவரே சொல்கிறார் , எனது புத்தகம் ஒன்றை அனுப்பி வைக்கபோகிறேன் என்று ...ஆஹா....அதோடு மட்டுமல்ல , அந்த 25 கதைகளும் ராணி இதழில் வெளிவருகிறதாம்..! #மைக்ரோகதைகள்
__________________________________________
Pattukkottai Prabakar Pkp
நேற்று, பிற்பகல் 8:23 ·

வீட்டுக்கொரு கற்பனைக்- காரன்/காரி இருப்பதறியாமல் எழுதச்சொல்லிவிட்டேன்.
பின்னூட்டமாகவும் உள் பெட்டியிலுமாக
மொத்தம் வந்த மைக்ரோ கதைகள் 613.

சிலர் கதைகளில் முயற்சி இருந்தது.
சிலர் கதைகளில் பயிற்சி இருந்தது.

பல வகையான கதைகள் சுவாரசியமாக இருந்தன. இதிலிருந்து பத்து கதைகளை மட்டும் தேர்வுசெய்ய சிரமமாக இருந்ததால் 25 மைக்ரோ கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன். சுவாரசியம் கூட்ட சில கதைகளை சற்றே திருத்தியமைத்திருக்கிறேன்.
மற்ற கதைகளையும் ரசித்தேன். அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அர்த்தமல்ல.. இந்த 25 கொஞ்சம் தூக்கலாக மனதில் இடம் பிடித்தவை. அவ்வளவுதான்.
ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவருக்குமே என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
வென்றவர்கள் உள் பெட்டியில் விலாசம் கொடுங்கள். என் அன்புப் பரிசாக நான் எழுதிய ஒரு புத்தகம் தேடி வரும்.
25 மைக்ரோ கதைகள்:
--------------------------------

1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை.
- ஜெயா சிங்காரம்

2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான்.
- பிரபு பாலசுப்பிரமணியன்

3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் சுரேஷ். - தனுஜா ஜெயராமன்
4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம்.
-சி.பி.செந்தில்குமார்

5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை!
-கல்யாணி சேகர்

6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை!
-கவிதா ஹரிஹரன்

7. ஒரு மெளனத்தின் அலறல்!
சைலண்ட் மோடில் செல்போன்!
-மன்னன் உசைன்

8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான்.
-ஆர்.திலகவதி ரவி

9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.
-அ.வேளாங்கண்ணி

10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை!
-Sri Vidya KM

11. அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே!
-தயா.ஜி.வெள்ளைரோஜா

12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு. "கட்'' என்றார் இயக்குனர்.
-விஜி.முருகநாதன்

13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..!
-பழனீஸ்வரி தினகரன்

14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை!
மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்!
-முரளி, மதுரை

15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில். கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்!
-ரெஜி தரகன்

16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள். குழந்தை சிரித்தது. மார்பில் வலி குறைந்தது.
-செல்லம் ஜெரினா

17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா.
'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன்.
-இயக்குனர் ஹரி கணேஷ்

18. "விட்டுடு தம்பி!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன்.
-குமரன் கருப்பையா

19. "Good morning. We are calling from tamil sangam!''
- அப்துல் ரஷீது

20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன்.
-ஜே.குமார் ராம்

21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய!
-லக்‌ஷ்மன் மோகனசந்திரன்

22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக!
-எஸ்.எஸ்.பூங்கதிர்

23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக!
-sridevi மோகன்

24. இன்றுடன் உலகம் அழிகிறது!
முழு விபரம் நாளைய நாளேட்டில்!
-ராம் சின்னப்பயல்

25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு!
-கருணாகரன் கருணாகரன்
__________________________________
________________

Sunday, January 12, 2020

ரெயின்போ லேண்ட்



’கதா சங்கமா’ன்னு ஒரு குறும்படத்துண்டுகளாலான ஒரு கன்னடத் தொகுப்புப்படம் பார்த்தேன். புட்டண்ணா கனகல் என்ற பழம்பெரும் கன்னட இயக்குநரின் உத்தியில் ஏழு படங்கள், ஏழு இயக்குநர்கள்,ஏழு ஒளிப்பதிவாளர்கள் என ஏழு சிறு குறும்படங்களின் தொகுப்பு. நம்ம பாலச்சந்தர் கூட இது போல ‘ஒரு வீடு இரு வாசல்’ன்னு இரண்டு படங்களை ஒரு படத்தில் காட்டினார்.

புட்டண்ணா கனகல் இதே ’கதா சங்கமா’ங்கற பெயரில் மூன்று குறும்படங்களை இயக்கி இருக்கிறார். அவரின் பின்னணியில் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் இப்போது இந்த சங்கமா எடுக்கப் பட்டிருக்கிறது.  புட்டண்ணா எடுத்த அந்த மூன்று கதைகளில் (முனித்தாயி) ஒன்றுதான் ‘கை கொடுக்கும் கை’ என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்தது. ஒரிஜினல் முனித்தாயி’யில் அந்த கண்ணிழந்த பெண்ணை வன்கலவி செய்த கதா பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்( அப்போல்லாம் அவர் வில்லன்ங்ணா :) ) ஆனால் தமிழின் கை கொடுக்கும் கையில் அவர் தான் ஹீரோ.

சரி இப்ப 2019ல் வெளிவந்த கதா சங்கமா’வைப்பற்றி பேசலாம். ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லை. அத்தனை படங்களும் அதனதன் ஜானர்களில் அமைந்திருக்கின்றன. ஏழில் மிகப்பிடித்தவை என்று கூறினால் ’ரெயின்போலேண்ட்’, ’பதுவரஹள்ளி’,’வென் மேஜிக் கெட்ஸ் ரியல்’,  லச்சாவா’ என்ற குறும்படங்கள். மட்டுமே. மற்ற மூன்று படங்களான “கிர்கிட்டில், உத்தரா, கன்ஃப்ளூயன்ஸ் வித் ஓஷன்,” பத்தோடு ஒன்றாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு படமும் அரை மணிக்கூறு மட்டுமே. இருப்பினும் எடுத்துக்கொண்ட அரை மணிக்கூறில் எல்லாவற்றையும் விவரிக்க வேணுமே என்ற அவசரம் எதிலும் இல்லை. அதனதற்கான கால நேரத்தில் எடுக்கப் பட்டிருக்கிறது.

’ரெயின்போ லேன்ட்’குறும்படத்தில் கிஷோர்(’ஆடுகளம்’ வில்லன்) தனது மகளுக்கென ஒரு ரெயின்போ லேண்டை உருவாக்க நினைக்கிறார். மகள் நேற்றைய இரவில் கேட்டுக்கொண்டிருந்த கதையில் வரும் ரெயின்போ லேண்டுக்கு கூட்டிட்டுப்போ என்ற அடம் பிடிப்பதைக்கண்டு ,அடுத்த நாள் காலையில் அலுவலகம் செல்லும் வழியில் , மேம்பாலங்களுக்கு கீழுள்ள சுவர்களில் ஆர்வலர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தாமும் அது போலவே செய்யலாம் என்றெண்ணி கலர் காகிதங்கள், ஜிகினாக்கள், அட்டைப் பெட்டிகள் வண்ண பலூன்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறார் அலுவலகத்துக்கு மட்டம் போட்டு விட்டு. மீதமுள்ள நாள் முழுதும் ரெயின்போ லேண்டை உருவாக்கி விடுகிறார். மகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளை வந்து விடுகிறது. ஆர்வத்துடன் காத்திருப்பவருக்கு இடியாய் அதனுடன் கூடிய மழை பெய்து அத்தனை ரெயின்போ லேண்டையும் கலைத்து வண்ணங்களை நீராய் ஓட்டிக் கொண்டு போய் விடுகிறது. அத்தனையும் வீணாகிவிட்டதே என்று சோர்ந்து போய்க் கிடப்பவருக்கு மகள் வெளியிலிருந்து அழைப்பது கேட்கிறது.

அப்பா ரெயின்போ லேண்ட் ரெயின்போ லேண்ட் எனக்கூவுகிறாள் மகிழ்ச்சியில். இல்லையே எல்லாம் கலைந்து போய்விட்டதே எனக் கலக்கத்துடன் வெளியில் சென்று பார்ப்பவருக்கு மழை விட்டும் தூறல் நிற்காத இயற்கைத் தூவானம் அழகிய வானவில்லை மகளுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. ஆஹா. என்ன அருமையான படமடா... :) கவிதை போல உள்ளக்கிளர்ச்சியைத் தரும் படம்.!

அடுத்த இரண்டு படங்கள் பற்றி பிறகு.

Thursday, January 2, 2020

ஓசூர்ஆட்டோ

ஓலா ஊபர் வந்துருச்சு, அதோட பத்தாயிரம் குடுத்தா பைக் லோன் குடுக்குறான் அதான் சவாரியெல்லாம் கம்மியாருச்சு. இதே ஓசூர்ல நாலு வர்சம் முன்னாடி ஒரு நாளைக்கி ரெண்டாயிரம் மூவாயிரம் வரைக்கும் சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன் . இப்ப ஐநூறு ரூவாய்க்கே நாக்கு தள்ளுது. இந்த ஆட்டோவே கடன்லதான் ஓட்றேன். ஸ்ரீராம் சிட்ல கடன் கேக்கப் போனேன் மாசம் ட்யூ ஒழுங்கா கட்டாம விட்டா, அஞ்சு நாளைக்கி ,பத்து நாளக்கி, பதினெஞ்சு நாளெக்கின்னு டிஸைன் டிஸைனா வட்டி கட்டச் சொல்றான். அதான் வீட்ல இருந்தவங்ககிட்ட பணத்த கிணத்த பொரட்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். ஓலாவில சேத்துவிட்ட ஆட்டோக்காரனும் என்ன கடன்ல தான் ஓட்றான். மாசம் ஒண்ணாந்தீ ஆனா பத்தாயிரம் ஓலாக்காரனுக்கு கட்டியே ஆகணூம், இல்லன்னா வண்டிய சீஸ் பண்ணீட்டு போய்ருவான். அதுக்குப் பயந்து எதோ அஞ்சு பத்து கெடச்சாலும் சரீன்னு நட்டத்துல தான் ஓட்டிக்கிட்டு கிடக்குறாங்ய. 

ஆட்டோ ஒரு உருளைக்கிழங்கு சீவல் கடையைக் கடந்து சென்றது. எனக்குத்தெரிஞ்சு இந்தக் கடைக்காரர் நாலு கடை வெச்சிருந்தார். எல்லாம் சிப்ஸ் கடைதான். அமோகமா ஓடிக்கிட்டு இருந்துச்சு. வரிக்கட்ட முடியாம நொடிச்சுப்போய் இப்ப ஒத்தக்கடை மட்டும் தான் மிஞ்சிக்கிடக்கு. ஆளெல்லாம் வெச்சு வேல வாங்கிக்கிட்டு இருந்தாரு. இப்பப்பாத்தா அவரே எண்ணெச்சட்டி முன்னாடி நிக்கிறாரு.

ஆட்டோவின் சீட் பின்னில் இரண்டு இலைக்கட்டுகள் கிடந்தன. அதா அது ஒரு எழவு வீட்டுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போனாங்ய.. செமத்தண்ணீ ரெண்டு பேரும். வீட்ல கொண்டு போய் எறக்கி விடப் போனா, அப்பத்தான் பொணத்த தூக்கிக்கிட்டு வெளில ஊர்வலம் கெளம்பீருச்சு. இவங்க ரெண்டு பேரும் அவசரத்துல எலக்கட்ட விட்டுட்டு போய்ட்டாங்ய.. ஹ்ம்.. அவன் குடுத்து வெச்சவன் போய்ச் சேந்துட்டான். #ஓசூர்ஆட்டோ