Sunday, April 27, 2014

பலகணி இல்லாத வீடு




எங்கள் ஊரில் நான்கைந்து நூலகங்கள் உண்டு. அவற்றில் முதன்மையானது பெருமாள் கோவில் பக்கத்தில் இருக்கும் முதன்மை நூலகம். அரசு நடத்தும் நூலகம் அது. பிறகு நகராட்சி நூலகம் ரவி தியேட்டர் பக்கத்தில் வைகை ஆற்றங்கரையை ஒட்டியது. இன்னொன்று முருகன் கோவிலுக்கு எதிர்த்தாற்போல் ஜனதா தள நூலகம். கட்சி சார்பில் நடத்தப்படுவது. இன்னொன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் லெனின் நூலகம். ஏறக்குறைய எல்லாவற்றிற்கும் நாங்கள் சென்று வருவது வழக்கம். அதிலும் இன்னும் நெருக்கமானது ரவி தியேட்டர் பக்கத்திலிருக்கும் நகராட்சி நூலகம் தான்.

பரமக்குடி நகராட்சி சபை நடத்தும் நூலகம் அது. தியேட்டரை ஒட்டி இருப்பதால் எப்போதும் அவ்வப்போது ஓடும் பகல்காட்சிகளிலிருந்து பாடல்கள் இலவசமாகக்கேட்கும். சின்னக்கட்டிடம் தான் அது. சுவரின் இரண்டு பக்கங்களிலும் பள்ளிக்கூட டெஸ்க்போல கொஞ்சம் நீளமாக நால்வர் அமர்ந்து வாசிக்கும்படியாக அமைந்திருக்கும். பெரும்பாலும் தினசரிகளே காணக்கிடைக்கும். சின்னத்தடுப்பு வைத்து அந்தப்பக்கம் பழைய தினசரிகளை தேடினாலும் கிடைக்காத வகையில் போட்டு வைத்திருப்பர். அந்தத் தடுப்பில்  ‘நூலகம் இல்லாத ஊர் பலகணி இல்லாத வீடே’ என்று பாரதிதாசன் சொன்னதாக எழுதி வைத்திருப்பர். வாரப்பத்திரிக்கைகள் எல்லாம் நகராட்சி ஆணையர் வீட்டுக்குச் சென்றுவிடும். தினமணிக்கதிர், வாரமலர் கூட அங்கு மேசைகளில் காணக் கிடைக்காது. நூலகத்தை பராமரிப்பவர் ஒரு மாற்றுத்திறனாளி, பொய்க்கால்கள் அணிந்து கொண்டு குச்சி வைத்து நடந்து வருவார். ‘என்னங்க ஒரு வாரமலரக் கூடக்காணம்’ என்று கேட்டால் சாயங்காலம் வரும் தம்பி என்பார். ஞாயிற்றுக்கிழமை சரியாக நாலரை மணிக்கெல்லாம் பூட்டிவிட்டு சென்றுவிடுவார். அப்புறம் சாயங்காலமாவது ஒண்ணாவது ?! பள்ளி விடுமுறை நாட்கள் , கல்லூரி செமஸ்ட்டர் விடுமுறை நாட்களில் எங்கள் ஜாகை எப்போதும் இந்த நகராட்சி நூலகத்தில்தான்.

நூலகத்துக்கு வெளியே கல்லாலான பெரிய பெஞ்ச்கள் ஒன்றிரண்டு போட்டிருப்பார்கள். நல்ல மரம் சூழ்ந்த இடம் அது. பட்டை பட்டையாக காய்கள் காய்த்து குலுங்கும் மரங்கள் நிறைந்த அந்த இடம். நீரூற்ற வேணும் என்ற அவசியமிருப்பதில்லை. அருகில் ஆறு என்பதால் நிலத்தடி நீருக்கு துளியும் பஞ்சமில்லை. இலவம் பஞ்சு மரங்கள் காய்த்து வெடித்து பஞ்சு பரவிக்கிடக்கும் பெஞ்சு முழுக்க. விசாலமான அந்த பெஞ்சுகளில் அமர்ந்துகொண்டு அருகில் ( ஒரு காம்ப்பவுண்டு சுவர் மட்டுமே பிரிக்கும்) ரவி தியேட்டரிலிருந்து வரும் திரைப்பாடல்களைக்கேட்ட வண்ணம் அரட்டை அடிப்பது வழக்கம். அப்போது  ஒரு முறை ‘புன்னகை மன்னன்’ படம் ஒடிக்கொண்டிருந்தது. அத்தனை பத்துப்பாடல்களையும் கேட்ட பின்னரே கலைந்து சென்றோம் அது இன்னும் என் நினைவிலிருக்கிறது. பாடல்கள்  வராத இடங்களில் எங்கள் அரட்டை தொடர்வதும்,பாடல்கள் வரும்போது பேச்சு நின்றுவிடுவதுமாக அன்றைய பொழுது கழிந்தது. ‘பேச்சு சுவாரசியத்தில் ‘என்னடா அதுக்குள்ள இந்தப்பாட்டு வந்துருச்சு என்று நேரம் போவது தெரியாது அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம்.

நூலகத்துக்குள் தான் பேசக்கூடாது என்பது விதி. நூலகத்துக்கு வெளியே கலகலத்துப்போவது தியேட்டரின் சினிமா ஒலியையும் மீறிச்செல்லும். அந்த நூலகத்துக்கு அருகே அடுத்த கட்டிடமாக ஒரு சிறிய பள்ளிக்கூடமும் இருக்கும். அந்தப்பள்ளியில் சறுக்கு வைத்திருப்பர். ஃபைபர் க்ளாஸ்,பிளாஸ்டிக் எல்லாம் இல்லை. சாதாரண சிமெண்ட் சறுக்கு தான். ஒரு முறை சறுக்கி விட்டு வந்தால் பேண்ட்/ட்ரவுஸ்ர் கிஞ்சித்தாவது கிழிவது உறுதி. அதையும் நூலகத்தையும் பிரிப்பது சின்னத்தடுப்புச்சுவர். ஏறிக்குதித்தும் செல்லலாம். சுவர் அத்தனை உறுதியாக இருக்காது. இருக்கும் துளைகள் வழி பன்றிகள் குதித்தோடும். கொஞ்சம் பெரிய துளைகள் வழி நாங்கள் அங்குமிங்கும் குதித்து ஓடுவோம் :)

தொடர்ந்தும் நாங்கள் அங்கேயே தங்கிவிடுவதால் அந்தப்பெரியவர் எங்களிடமே பொறுப்பை ஒப்படைத்து விடுவார். குச்சியை கையில் எடுத்துக்கொண்டு ‘தம்பிகளா, இன்னிக்கு நகராச்சில கொஞ்சம் வேல இருக்கு, பாத்துக்குங்க’ என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார். ஒவ்வொரு நாளும் இதையே சொல்லிவிட்டு செல்வார். திரும்ப வருவதற்கு மதியம் இரண்டாகிவிடும். பூட்டிவிட்டு பிறகு மதிய உணவு கழித்து பின்வந்து நான்கு மணிக்கு வந்து திறப்பார். நூலகத்துக்கான கட்டிடக்கதவை மட்டும் பூட்டிவிடுவார். வெளியில் இருக்கும் பெரிய கதவை பூட்ட மாட்டார். நாங்கள் அரட்டை அடித்து ஓய்ந்து பின் நாங்களாக அந்த கம்பிக்கதவை பூட்டி விட்டுச்செல்வது வழக்கம்.

இந்த நகராட்சி நூலகம், பக்கத்துலயே தியேட்டர், அப்புறம் இரண்டுக்கும் பின்னால இருக்கும் அந்த வைகை ஆறு. இந்த மூன்றும் எங்கள் கால் பட்டுப்பட்டு தேய்ந்து போன இடங்கள். உள்ள போய் இருக்கும் செய்தித்தாள்களை வாசிக்கிறோமோ இல்லியோ, அரட்டைக்காகவாவது நூலகத்துக்குச்செல்வது வழக்கம்
இன்னும் தோழமைகள் வரவில்லை என்றால் உள்ளேயே காற்றாடியின் கீழ் அமர்ந்துகொண்டு வாசித்த செய்தித்தாள்களையே மனப்பாடம் செய்யும் அளவுக்கு வாசித்துக்கொண்டு கிடப்பது வழக்கம்.

ரவி தியேட்டரில் கவுண்ட்டர் திறக்கவில்லையெனில்,காத்திருக்கும் நேரத்திற்கு இந்த நூலகத்துக்கு வந்து பேப்பர்களைப்புரட்டி நேரம் போக்கிக் கொண்டிருப்பவர்களும் அதிகம். தியேட்டர் பெல் அடித்தவுடன் போட்டது போட்டபடி ஓடுவார்கள்.

அங்கு ஒரே செய்தித்தாள்களின் பக்கங்களை தைத்து வைக்கும் பழக்கம் இல்லை, அதனால் எல்லாப் பேப்பர்களும் இறைந்து கிடக்கும். ‘சேர்த்துக்கட்டி வெச்சா பேப்பரோட தூக்கிட்டுபோயிர்றாங்க தம்பி’ என்பார். மேலிருக்கும் செய்தித்தாள்களின் பெயரையும் பக்க எண்ணையும் உற்றுப்பார்த்து விட்டு செய்திகளை வாசித்து பின் இன்னபிற பக்கங்களுக்காக காத்துக்கிடப்பது வழக்கம். வாசித்துக் கொண்டிருப்பவர் எப்படா கீழே வைப்பார் எனக்காத்திருந்து சடாரெனத்தாவி அதைக்கையிலெடுப்பது என்பது கிடைத்தற்கரிய கனியைக்கவர்ந்த்து போலிருக்கும். சிலர் இரண்டிரண்டு பக்கங்களை சேர்த்து வைத்துக்கொண்டு வாசிப்பார்கள். போனால் கிடைக்காது என்பதால். அவரருகில் சென்று ‘இப்டில்லாம் பண்ணாதீங்கண்ணே’ என்று சொல்லிவிட்டு அதே போல நாங்களும் நான்கு பக்கங்களைச்சேர்த்து வைத்துக்கொண்டு வாசிப்பது வழக்கம். :)

வரி விளம்பரங்களைக்கூட மனனம் செய்யும் சில் பிரகஸ்பதிகள்கூட வசித்த காலம் அவை. வந்திருக்கும் எம்ப்ளாய்மெண்ட் விளம்பரங்களை நண்பர்கள் யாருமற்ற நேரத்தில் எழுதி வைத்துக்கொண்டு பின்னர் அப்ளை செய்தவர்களும் உண்டு. அதை நாங்கள் ஓரமாக ஒளிந்து நின்று பார்த்துவிட்டு சிரித்துக் கொள்வோம்.

வெளியே போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளின் நடுவே ஒரு நீரூற்று கட்டிவைத்திருந்தனர். அத்தனை பேரும் அதிலேயே விளையாடி விளையாடி தூர்ந்தே போய்விட்டது. பின்னர் மண்ணை நிரப்பி மூடிவிட்டனர் அதைச் சுற்றியிருக்கும் தரையோடு தரையான தடுப்புச்சுவரில் அமர்ந்தும் பேசிக்கொண்டிருப்போம்.

மதிய உணவிற்குப்பின்னர் சாயங்காலம் நாலரை ஐந்து மணிவாக்கில் பின்னரும் எங்கள் அரட்டை தொடரும். வழக்கமாக வரும் முகங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வோம். ஒரு இங்கிலீஷ்காரரும் வருவார் அந்த மாற்றுத்திறனாளியோடு. இவர் எப்படிங்க இந்தப்பட்டிக்காட்டுல ? என்றால் சரியாக விளக்கமே கிடைக்காது. உண்மையில் அவர் வெளிநாட்டுக்காரர் தான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. சிலர் ஊரில் உடல் முழுதும் வெள்ளையாக இருப்பவர் போல உள்ளவர் அல்ல அவர். எங்கிருந்தோ வந்தவர் இங்கேயே தங்கிவிட்டார் எனக்கூறுவர். இரவு எட்டு மணியாகிவிட்டால் நூலகத்தின் வெளிக்கதவையும் பூட்டிவிட எத்தனிப்பார். ‘அப்டியே இருக்கட்டும் இன்னுங்கொஞ்ச நேரம் இருக்கிறோம்’ என்றால் விடமாட்டார். உடைந்த தமிழும்,சைகையுமாக பேசுவார். ‘இல்ல தம்பிகளா, உள்ள ராத்திரில “வேற வேலைகள்”லாம்  நடக்குது என்று சைகை காட்டுவார் நமுட்டுச்சிரிப்போடு, அதனாலதான் இந்தக்கம்பிக்கதவையும் பூட்டீறணும்“ என்று எங்களை வெளியே அனுப்பிவிட்டு பூட்டியே விடுவார். பின்னர் நாங்கள் கொஞ்சம் நடந்து ஆற்றுக்குள் சென்று அமர்ந்து அரட்டை தொடர்வோம்.

இன்னொரு நூலகம் அந்தப்பெருமாள் கோவிலுக்குப்பக்கத்தில் இருக்கும் நூலகம் பெரியது. மாநில நூலகங்களில் ஒன்று. அங்கே இந்த மாதிரி சேட்டைகளெல்லாம் செய்யவியலாது. என்றாலும் அத்தனை வாரப்பத்திரிக்கைகளும், இங்க்லீஷ் தினசரிகளும் கிடைக்கும். அந்த நூலகம் அமைந்திருக்கும் இடம் சௌராஷ்ட்ரா மக்கள் வெகுவாக வாழுமிடம். அதனால சௌராஷ்ட்ரா லைப்ரரி என்றே அழைப்பது வழக்கம் கடைத்தெரு வழியாக சென்று பெருமாள் கோவில் தாண்டி சென்றால் அந்த நூலகத்தை அடையலாம். அத்தனை சுவாரசியம் இருப்பதில்லை அங்கு. காரணம் எதுவும் பேசமுடியாது, குரங்குகள் போல உம்மென்று அமர்ந்து வாசிப்பதைத்தவிர வேறேதும் செய்யவியலாததால் அங்கு செல்வதேயில்லை எங்கள் பட்டாளம். ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’ அங்கு மட்டுமே காணக்கிடைக்கும் :)

பின்னர் இந்த ‘ஜனதா தள வாசகசாலை’ கட்சிக்கொடியின் பின்னணியில் பழைய தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நூலகம். ‘லை’ என்பது பழைய ‘லை’யாக கொம்பு தூக்கிக்கொண்டு இடம் பெற்றிருக்கும்.   எழுத்துகள் முடிந்த இடத்தில் ஒரு ஏருழவன் கலப்பையை சுமந்து கொண்டு செல்வார் அந்தப்படமும் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலும் தினசரிகளே நிறைந்து கிடக்கும். பெரிய ஃபேன் ஒன்று மேலிருந்து தொங்கிக் கொண்டு லொடலெடவென சப்தம் எழுப்பிக்கொண்டிருக்கும். அவ்வப்போது இடம் மாறும் செய்தித்தாள்களின் சலசலப்போடு இந்த சப்தமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கும். உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் வெப்பத்தை தணிக்க ஃபேனை ஆன் செய்துவிட்டே எல்லாரும் அமர்வது வழக்கம். நாளாக நாளாக எலக்ட்ரிசிட்டி பில் எகிறுவதைக்கண்டு ஃபேன் ரெகுலேட்டரை ஒரு பெரிய பெட்டியை வைத்து அடைத்து ஒரு பூட்டும் போட்டுவிட்டனர். நூலகம் நடத்துபவர்கள். இந்த செய்தி தெரியாதவர்கள் உள்ளே நுழைந்ததும் ரெகுலேட்டர் இருக்குமிடம் வரை சென்று பின் ஏமாந்து போவதைப்பார்த்து எங்களுக்குள் சிரித்துக்கொள்வது வழக்கம்.

பின்னர் அந்த ஜனதா தள வாசகசாலைக்கு ஆட்கள் வரத்து குறையத்தொடங்கியது பகலில். இரவில் வழக்கம் போல வந்து போய்க் கொண்டிருந்தனர். இதுவரை கேள்விப்படாத வாரசஞ்சிகைகளையும் அங்கே காணலாம். பெயர் கூட மறந்து போய்விட்டது எனக்கு. அந்த நூலகத்தின் முன்னில் ஒரு தையல்காரர் எப்போதும் தைத்துக் கொண்டேயிருப்பார், அவை எதுவும் புதிதாய் இராது. பின்னில் ஒரு மாட்டுத் தொழுவம் அவ்வப்போது நல்ல மணங்களை அள்ளிவீசும். கூடவே கொசுத்தொல்லையும் மிகுதி :) உள்ளே அவர்களின் கட்சித்தலைவர்கள்,சங்கத்தைச்சேர்ந்தவர் என பல புகைப்படங்கள் சட்டமடித்து தொங்க விட்டிருப்பர். யார் பெயரும்/உருவமும் இப்போது நினைவிலில்லை. எதேனும் காரணமாக எங்கள் நகராட்சி நூலகம் விடுப்பு விட்டிருந்தால் அங்கு செல்வது வழக்கம். கொசுக்கடியும், நறுமணமும் பூட்டி அடைக்கப்பட்ட ரெகுலேட்டர் கொண்ட ஃபேனும் எப்போதும் வரவேற்கும் எங்களை.

அப்புறம் ரெயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இருக்கும் லெனின் லைப்ரரி! அங்கே போகறதுக்கே ஒரு மணிக்கூறு ஆகிவிடும்,சைக்கிளை எடுத்துக்கொண்டு எப்போதாவது போவது வழக்கம். இல்லையெனில் யாரையாவது ட்ரைனில் ஏற்றிவிட்டு வரும்போது உள்ளே நுழைந்து வாசித்துவிட்டு வருவது வழக்கம். அங்கு எனது ஒரு நண்பன் எப்போதும் இருப்பான், பள்ளியில் கூடப்படித்தவன். அவனின் அப்பா கம்யூனிஸ்ட் கட்சி மெம்பர். அதனால் அங்கு கட்சி சம்பந்தமான மற்றும் இன்னபிற நூல்களை விற்பதெற்கென ஒரு சிறிய புத்தகக்கடையும் உண்டு. அங்கு போகும்போதெல்லாம் அவனோடு கொஞ்சம் அரட்டை. ‘டேய் நீ அங்க வாயேண்டா’ என எப்போதும் கூப்பிடுவது வழக்கம். அவனும் வர்றேன் வரேன் என்று சொல்லிவிட்டுப்பின் எப்போதும் வருவதில்லை. அங்கு கிடைக்கும் புத்தகங்களை வாசித்தால் ஒன்றும் புரிபடுவதில்லை. எல்லாம் ரஷ்யப்பெயர்கள் கொண்ட நூல்களாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிடக்கும். ‘வாசிடா’ என்று வருந்திக்கொடுப்பான் அவன். சொன்னானே என்பதற்காக வாசித்தவை அவை.

இப்போது நூலகங்கள் எல்லாம் ஒரு சொடுக்கில் திறக்கின்றன இணையம் வழியாக. என்ன மொழியில் வேணுமானாலும்,எந்த எழுத்தாளர் எழுதியதானாலும் ஒரு சொடுக்கின் தூரத்தில் மண்டிக்கிடக்கின்றன. வாசிக்கத்தான் நேரமில்லை. எனது வேலை சம்பந்தமான தொழில்நுட்பம் சார்ந்த நூல்களும் இப்போதெல்லாம் நிறுவனமே நடத்தும் டிஜிட்டல் லைப்ரரிகளில் மின்னூல்களாக விரவிக்கிடக்கின்றன. தேடுவதும், கண்டடைவதும் வெகு சுலபமாகி விட்டது. இடம் அடைக்கும் பொருளாக நூற்கள் இப்போது இல்லை. இருப்பினும் அந்தப்பஞ்சு நிரம்பிய நீளமான சிமெண்ட் பெஞ்சும், காத்துக்கிடந்து அடித்துப்பிடித்து எடுத்து வாசிக்கும் தினசரிகளும்/நூல்களும், அருகில் கேட்கும் அந்தப்பாடல்களும் கூடவே நேரம் போவது தெரியாது பேசிக்கொண்டிருக்கும் நண்பர்களும் எங்கு தேடினும் கிடைப்பதில்லை.


.

Monday, April 14, 2014

துளிப்பாக்கள்



இலையுதிர்காலம்
புலம் பெயர
நினைக்கும் மரங்கள்

-

எல்லாபேய்களும்
என்னைச்சந்திக்க வருமுன்
லாண்ட்ரிக்குச்சென்றுவிட்டே
வருகின்றன

-

என் வலைப்பூவிற்கும்
அவ்வப்போது தேவைப்படுகிறது
கொஞ்சம் வெய்யில்

-

காற்றை வரைய
முற்பட்டேன்
கலைந்த கிளைகளோடே
நிறுத்திவிட்டேன்

-

தற்கொலை செய்துகொள்ள
மலையுச்சியில் நின்றுகொண்டிருக்கிறேன்
எனக்கு முன்னாலேயே
நிழல் கீழே விழுந்துவிட்டது.

-

எனக்காக பூமி
தன்னைச்சாய்த்துக்கொண்டு
இந்த வெய்யிலை என்
முற்றத்தில் கொணர்ந்திருக்கிறது

-

விழ எத்தனித்த ஒரு துளி
மழைநீரை
அந்தக்காம்பு ஏனோ பிடித்து
வைத்துக்கொண்டிருக்கிறது
ஒரு கணம் தட்டிவிட்டுவிடலாமா
என எண்ணிய எனக்குள்
ஒரு மிடறு
உள்ளிறங்கிக்கொண்டிருக்கிறது

-

எத்தனை காடுமலைகள்
கடந்து வந்திருக்கும்
இந்தக்கைப்பிடி நீர் ?
என் கைகளையும்
ஒரு தரவாக்கிக்கொள்ளும் அது.

-

ஒரு மரத்தைக்கொல்வதும்
ஒரு கவிஞனைக்கொல்வதும் சுலபம்
இரண்டிலிருந்தும்
பறவைகளை நீக்கிவிட்டால்
போதும்

-

நினைத்தவுடன் பறந்துபோய்
மலர்களுக்கிடையே
அமர்ந்துகொள்ளும் பறவை நான்

-

உலகத்தில் இரண்டே பேர்
காதலிக்க நினைப்பவர்களும்
காதலிப்பவர்களும்

-

கனவுக்குள்
உறங்கினால்
வருவது
நனவாகத்தானிருக்கும்

-

மாற்றம் என்ற ஒன்று
எப்போதும் வருவதேயில்லை
அதனாலேயே அது
மாறாதிருக்கிறது.

-

உருளும் கூழாங்கல் நதியை
அதன்போக்கில் அனுபவிக்கிறது.

-

 

 .






Sunday, April 6, 2014

பாடுபொருள்

'மார்ச் 2014 குமுதம் தீராநதியில் வெளிவந்த கவிதை'




என் கவிதை தனக்குள் வந்து உலவ

மழையை, அதனோடு கூடிய தேநீரை
காற்றை, பூக்களை
மயங்கும் புறத்தோற்றத்தின் அழகுடன் கூடிய
எந்தப்பெண்ணையும் அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

வறுமையை, செழுமையை

கடவுளை சாத்தானை,கண்ணாடிகளை,  
அதன் பிம்பங்களை,நிழல்களையும் 
அவற்றின் நிஜங்களை
மயக்கும் மதுவையும்
இன்னபிற லாஹிரி வஸ்த்துக்களையும்
அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

குழந்தைகளை, முதியோரை
சித்ரவதைகளை, காதலை,

நிராகரிப்பை,அறிவுரைகளை
 பிதற்றல்களையும்
அனுமதிக்கவில்லை

என் கவிதை தனக்குள் வந்து உலவ


போரை, அமைதியை, 
அசடனை, அறிவாளனை
பறவையை

ஏன் அதன் ஒற்றைச்சிறகைக்கூட
அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

மாயையை, காட்சிப்பொருளை
சொர்க்கத்தை, நரகத்தை
பொதுவுடைமையை, முதலாளித்துவத்தை
சோஸலிஸத்தை அனுமதிக்கவில்லை


என் கவிதை தனக்குள் வந்து உலவ

ரசிகனை, உருவாக்குபவனை
வழிப்போக்கனை, தேசாந்திரியை
பக்கிரியை அனுமதிக்கவில்லை

கடைசியாக ஒரு உண்மையைக்கூறுகிறேன்
உங்களிடம் மட்டும்,

இந்தக்கவிதை தனக்குள் நுழைந்து உலவ
என்னையே அனுமதிக்கவில்லை.


.