Friday, December 9, 2011

நெகட்டிவ்கள் சேமிக்கப்படும்



எனது தேவைக்கென
பிரதிகள் எடுத்துக்கொள்ள
வசதியாய் நெகட்டிவ்கள்
சேமித்து வைக்கிறேன்
பிறர் அவ்வளவு விரைவில்
அறியாவண்ணம் அவற்றைப்
பெட்டகத்தினுள்
சேமித்து வைக்கிறேன்.

அந்த நெகடிவ்வின் அருகில்
புதிதாக எடுக்கப்பட்ட
பாஸிட்டிவ்வை வைத்து
நோக்கும் போது இன்னும்
பொலிவுடன் நெகட்டிவ்வே
பரிமளிக்கிறது

எத்தனை பாஸிட்டிவ்கள்
உண்டாக்கப்படினும்
நெகட்டிவ்வில் உள்ள
பூதம் போன்ற பிம்பமே
மனதில் பாசி போல்
படிந்து கிடக்கிறது.





நாட்கள் கடந்து போவதால்
நெகட்டிவ்களின் மேல்
உண்டாகும் சிறு கறைகள்
மேலும் அதன் மீதான
ஞாபகங்களை வலிய
மனதில் படியச்செய்கின்றன

நெகட்டிவ்களை வெறுமனே
கையில் வைத்துப்பார்ப்பதில்
இன்பம் இருப்பதில்லை
அதை சற்று உடம்பிலிருந்து
தொலைவில் வைத்துப்பார்ப்பதில்
எனக்கு அலாதிப்பிரியம்.

சில நெகட்டிவ்கள் தாம்
அடங்கியிருக்கும்
உறைகளின் மேல்
தேதி குறிப்பிடப்படாவிடினும்
அது பற்றிய ஞாபகங்களை
தானாகவே என்னுள்ளிருந்து
வெளிக்கொணர்ந்து விடுகிறது



பல சமயங்களில்
அந்த நெகட்டிவ்களிலிருந்து
பாஸிட்டிவ்களை
உண்டாக்க நான் விழைவதில்லை
அவற்றை வெளி உலகிற்கு
காண்பிப்பதில் எனக்கு
உடன்பாடிருப்பதில்லை

பாதுகாப்புக்கருதி
கண்ணாடி உறைக்குள்
வைத்திருப்பினும்
கண்ணாடி உறை
வழியாகத்தெரியும்
நெகட்டிவ்வே
சலிக்காமல்
பார்க்கத்தூண்டுகிறது

நான் எப்போதும்
பாஸிட்டிவ்களை
சேமித்து வைப்பதில்லை
மேலும் அவை சேமித்து
வைக்குமளவிற்கு
பெறுமானமுமில்லை.


.

No comments:

Post a Comment