Friday, September 20, 2013

என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன்

முகநூலில் நான் எழுதியிருந்த இந்தப்பதிவிற்கு என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் ஆமோதிப்பும் கூடவே இணக்கமான பாராட்டுதலும். இத்தனை நுணுக்கமாக ஒரு பதிவை உற்றுநோக்கி அதனுள் உறைந்துகிடக்கும் அடிப்படை மனித உணர்வுகளை அவரின் என்றைக்குமான கவிதைகள் போலவே எடுத்துக்கூறிய என் பிரிய எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு என் நன்றிகள்.!

அந்தப்பதிவு



பெங்களூர் கோரமங்கலா 80 ஃபீட் ரோட்லருந்து சில்க் போர்டு வர்றதுக்கு எந்த ஆட்டோவாவது ஒத்துக்கொண்டதுன்னா அவர ஒபாமா ஆக்கீறலாம். ஆனாலும் எனக்கு ஒரு ஒபாமா கெடச்சார் அன்னிக்கு. ஏகத்துக்கு ட்ராஃபிக். வண்டி ஒரு இம்மி கூட நகரல. கைல வெச்சிருந்த ஃபைலை அப்படி ஆட்டோ சீட்டில் வைத்துவிட்டு, அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். இப்பல்லாம் எலெக்ட்ரானிக் மீட்டர், வெய்ட்டிங்க் டைம் ‘டிக்’கிக்கொண்டிருந்தது. ‘ஏகப்பட்ட ட்ராஃபிக் ஆயிப்போச்சு தம்பி, பெங்களூர்ல இருக்கிற அமைப்புக்கு 15 லெட்சம் வண்டி தான் ஓட முடியும் (?) ஆனா இப்ப 45 லெட்சம் வண்டிக ஓடுது. எங்கருந்து எடம் கெடைக்கும் ? தம்பி எப்டி போலாம்ங்க்றீங்க’ என்றார். ‘சேவா சதன் வழியா போயி அந்த கிருபாநிதி காலேஜ் கட்ல ரைட் எடுங்கன்னேன்.’ ‘இல்ல வர்றவங்க இந்த ரூட்ல போங்க அப்பதான் மீட்டர் கம்மியாவும்னு சொல்லுவாங்க அதான் கேட்டேன்னார்’. அப்பல்லாம் என்ன இத்தினி ஆட்டோ வண்டில்லாம் கெடயாது, பஸ்களோட ப்ளீமூத், மாரீஸ் மைனர், எப்பவாச்சும் ரோல்ஸ் ராய்ஸ், அப்பறம் நம்ம அம்பாஸிடர் இவ்வளவுதான் ஓடும். அப்பால பிரிமியர் பத்மினி வந்துச்சு, எடமும் விசாலமா இருந்துச்சு, ட்ராஃபிக்கும் கெடயாது. இப்ப இந்த ஐடி’காரங்க வந்ததுலருந்து சொம்மா பேங்க் லோன் குடுத்து குடுத்து வண்டிக பெருகிப்போச்சு.

64’ல HMTல வேலக்கி சேர்ந்தேன் தம்பி அப்ப எனக்கு 69 ரூபா மாசச்சம்பளம், ‘HMT-ன்னா வாட்ச் தயார் பண்ணுவீங்களோ’ இல்ல நான் டூல் செக்ஷன்ல இருந்தேன்’ என்றார். அப்ப தான் எனக்கு கல்யாணம் ஆச்சு. வாங்கிற சம்பளத்த பூரா எங்கப்பா கைல குடுத்துருவேன். ஒரு சினிமா பார்க் போகணுன்னா கூட அவர் கிட்ட தான் எதிர்பாக்கணும்.சனி ஞாயிறு தயங்கித்தயங்கி நிக்கிறத பாத்துட்டு அங்க அண்ணன்தான் அஞ்சுபத்து கொடுத்து ‘பொண்டாட்டிய சினிமா கினிமா கூட்டீட்டுப்போய்ட்டு வாடா’ன்னு அனுப்பி வெப்பார். எம்ஜியார் படம் ரெண்டு பேரும் பால்க்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் பாத்துட்டு , அப்டியே ஓட்டல்ல சாப்ட்டுட்டு வீடு வந்த சேர்ந்தா மிச்சம் சில்லறை கைல இருக்கும். இப்ப ?! ‘நேத்து ஐநூறு ரூபா குடுத்து வீட்டுக்காய்கறி , மளிகை எல்லாம் வாங்கிக்கன்னு சொல்லீட்டு சவாரி போயிட்டு சாயங்காலம் திரும்பி வந்தா இன்னும் கொஞ்சம் காசு குடூன்னு கேக்றா என் பொண்டாட்டி. என்னம்மான்னேன், என்னா செய்றது எல்லாம் செலவாயிட்டுதூங்கறா என்று கூறிச்சிரித்தார்.’ இத்தனைக்கும் நான் அவர எதுவுமே கேட்கல. அவராகவே சொல்லிக்கிட்டேயிருந்தார். ‘அப்புறம் 25 வருஷ சர்வீஸுக்கப்புறம் வீஆரெஸ் வாங்கிட்டு இந்த ஆட்டோவ வாங்கி ஓட்டிட்டிருக்கேன்.’ அவன் இப்பவே , இப்பந்தான் படிச்சிக்கிட்டிருக்கான் அதுக்குள்ள பல்ஸர் வேணூங்கறான்’ ‘யாரு ? ’ ‘என் மகன் தம்பி ‘

'எனக்கு ஒரே பையன் தம்பி , இங்க தான் KR-புரத்துல ஒரு எஞ்சீனியரிங் காலேஜ்ல சேத்துவிட்டுருக்கேன். காலை  டிஃபன்  வீட்டில சாப்ட்டுட்டு மத்தியானத்துக்கு வீட்டுலருந்தே கட்டீட்டும் போயிடுவான் , அப்டியும் தெனத்துக்கு அம்பது ரூபா கைல குடுத்துவிடுவா அவன் அம்மா. இப்ப அதுவும் பத்தல இன்னும் அம்பது குடூங்கறான் தம்பி. ‘ஒண்ணரை காலன் பெட்ரோல்,ரெண்டே கால் ரூபா அப்ப, இப்பத்தி கணக்குக்கு மூணேமுக்கா லிட்டர் வரும்,இப்ப பாரூங்க தம்பி 75-ரூபா விக்கிது பெட்ரோல் ஒரு லிட்டருக்கு.’ அவர் பேச்சில் முழுக்க கன்னட வாடை தான் அடித்தது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி ஒதுங்குப்புறமாகப்போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். பிறகு உட்கார உள்ளே நுழைந்தவர் கை இரண்டையும் சீட்டின் மேல் வைத்துக் கொண்டு, தலையை மட்டும் என் பக்கம் திருப்பி ‘எங்க தம்பி இப்ப இருக்கிற புள்ளைங்கல்லாம் கடுமையா ஓழச்சி வேல செஞ்சி சம்பாதிக்கிறதுன்னா அவ்வளவு யோசிக்கிதுங்க, ஆனா காசு மட்டும் நெறயக் கொட்டணும்னு எதிர்பாக்குதுங்க’ என்றார். 
 




Saturday, September 14, 2013

சருகுகள்



ஆறிய தேநீர்

நான் இல்லாமல் போகும்போது
நீங்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொள்வதற்கென
ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறேன்
ஒரு சிறு தேநீர் குடிக்கச் சென்று வரும்
நேரத்திற்குள் அதைப் பார்வையிட்டு விடுங்கள்
ஏனெனில் எனக்கு
ஆறிய தேநீர் அத்தனை பிடித்தமில்லை

சருகுகள்

அது வரை
சப்தமிட்டுக்கொண்டிருந்த
காய்ந்த சருகுகள்
மழை பெய்த ஈரத்தில்
தமக்குள் புழுங்கி
அமைதியாகிவிட்டன
கொஞ்சம் ஈரம்
எல்லா ஆற்றாமைகளையும்
அணைத்துத்தான் விடுகிறது.

வயது

என் வயதைக்கேட்கும்
அனைவரும்
தம் வயதில் இரண்டைக்கூட்டி
வைத்துக்கொண்டு
அதுதானே
என்றே கேட்கின்றனர்
உன் வயதை நான் எப்போதும்
என்னிலிருந்து
இரண்டைக்கழித்து விட்டே
நினைத்துக்கொள்கிறேன்


Wednesday, September 4, 2013

‘யுகம் யுகமாய் யுவன்’




அரவிந்தனி’ல் தொடங்கி ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் வெகுவாகப்பேசப்பட்ட யுவன் கடந்து வந்திருக்கும் தூரம் மிக அதிகம். தீபாவளி, மௌனம் பேசியதே, இரண்டு பில்லா’க்கள், 7G ரெயின்போ காலனி, ராம், கற்றது தமிழ்,மன்மதன்,புதுப்பேட்டை,பருத்திவீரன், என இன்னும் எத்தனையோ அற்புதமான ஆல்பங்களை கொடுத்து இன்னமும் இப்போது வந்திருக்கும் அனைத்து இளம் இசையமைப்பாளர்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு புதுசு புதுசாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் யுவன். ‘ஆரண்ய காண்டம்’ போன்ற ஒரு சப்ஜெக்ட் ராஜாவுக்கோ ஏன் ரஹ்மானுக்கோ கூட கிடைக்கவில்லை. அத்தனை அற்புதமான இசை எங்கும் கேட்டிராத ஸ்பானிஷ் பின்னணியில் இசைத்த இசைக்கோவை அது. பின்னணி இசையிலும் சாதனை படைத்திருக்கிறார். ‘புதுப்பேட்டை’ படத்தின் பின்னணி இசை ஒரு முழுமையான ஸிம்ஃபொனி போலவே ஒலிக்கும். இதைப்போல நிறைய Feathers அவரது Cap-ல். என்ன ஒரு குறை இன்னமும் தேசிய விருதுகள் அவரை எட்டிப்பார்க்கவில்லை என்பது மட்டுந்தான்.

சிலர் எப்போதும் யுவனின் மீது குற்றச்சாட்டு வைப்பதுண்டு, அவரின் இசையில் இரைச்சல் அதிகம் என்று. ராஜா’வும் அதே குற்றச்சாட்டிற்கு ஆளானவர் தான். வரிகளை அவரின் இசை விழுங்கிவிடுகிறது என்ற குறை ரஹ்மானையும் கூட விட்டுவைக்கவில்லை. இசைக்கலப்பில் தேவையற்ற இசைக்கருவிகள் மேலே ஒலிப்பது போன்ற தோற்றமே இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணம். டெக்னிக்கலாக எல்லா விஷயத்தையும் ஒழுங்காகச்செய்து விட்டு, அற்புதமான ஒலிச் சேர்க்கையும் கூட்டி வைத்து பாடல் இதயத்தைத்தொடாமல் போனால் அந்தப்பாடலால் ஒரு பயனுமில்லை.

நூறு என்பது ஒரு மேஜிக்கல் ஃபிகர். அதை எட்டிப்பிடிப்பது என்பது உள்ளூர ஒரு பயத்தை உண்டுபண்ணக் கூடிய விஷயம் தான் எல்லாருக்கும். கிரிக்கெட்டிலும் பார்ப்பவர் மனதை படபடப்புக்குள்ளாக்கும் அந்தப் பரபரப்பு நிமிடங்கள். இருப்பினும் எண்ணிக்கையில் அத்தனை நம்பிக்கை கொண்டவரல்ல யுவன். அந்த நூறாவது ஆல்பமாக வெளிவந்திருக்கும் இந்த பிரியாணி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்.

இதுவரை செய்யாத விஷயங்களை,புதியதான சங்கதிகளை கொண்டு வந்து சேர்த்திருக்கும் ஆல்பம் இந்தப் பிரியாணி. ‘புன்னகை மன்னன்’ வந்தபோது ராஜா எதோ புதிதாகச்செய்ய முயன்றிருக்கிறார் என்ற அத்தனை பேரின் விமர்சனங்களும் இப்போது யுவனை நோக்கி திரும்பியிருக்கிறது. புதிதாக ட்ரெண்ட் செட் செய்யவேணும் என்கிற ஆர்வம் எப்போதும் உள்ளது போல இந்த ஆல்பமும் முன்னதாக வந்த எதற்குள்ளும் சிக்காமல் ஒலிக்கிறது.

முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான ஆல்பம் இது. ஒரு ‘இதயம் இதயம்’ அல்லது ஒரு ‘ஆனந்த யாழை’யோ இங்கு எதிர்பார்க்கவியலாது. Out and Out Youth Album இது. முழுக்க முழுக்க கொண்ட்டாங்களுக்கென இசைக்கப்பட்ட ஆல்பம் இது.


பிரியாணி

பிரியாணி ,கொஞ்சமும் பிசிறில்லாமல் பின்னணியில் ஒலிக்கும் அந்த ‘Hypnotic Flute’ மயக்குகிறதப்பா. தொடர்ந்து வருகிறது என் மண்டைக்குள் சுற்றி சுற்றி வந்துகொண்டேயிருக்கிறது. தன்வி ஷா, பவதாரிணி மற்றும் விலாசினி பாடியபாடல். ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட ‘ராப்’ இது போகிற போக்கில் அத்தனை வேகம் பிடிக்காமல் அதே Tempo’ வுடனேயே பாட்டு முழுக்கச்செல்கிறது. Repeating Rhythm நம்மைக்கேட்கச் சொல்லிக்கட்டிப்போடுகிறது MTV and Channel V-ல்  எந்தவிதத் தயக்கமுமில்லாமல் ஒலிக்கச்செய்யலாம்.மொழிப்பிரச்னையே கிடையாது இந்தப்பாடலுக்கு, :) பாடிய மூன்று பெண்களின் குரல்களும் ஒரே சுதியில் ஒலிப்பது சிறப்பு. கூட இருந்து பாட வைத்திருப்பார் போல யுவன் ;)

ஓரளவு ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் வந்த அந்த ‘I Will Hide It’ ன் இன்ஸ்பிரேஷனில் ஒலித்தது போல இருக்கிறது இந்தப்பாடல். இதுவரை இசைத்த ராப்களில் இது விலகி நிற்கிறது.ஆதி பகவனில் அதிரடியாக ஒலிக்கச்செய்தது போல அல்லாமல் மறைந்திருந்து ஒலிக்கும் இந்த ராப்பாடல் ஆல்பத்திலேயே முதலிடத்தில் :) Truly International Song Indeed. வீட்டில Philips 5.1 DVD ல இந்தப் பாட்டைக் கேட்டேன். வரிகளால் விளக்கவியலாத இழைகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கிறது. இதுவரை எங்கும் கேட்டிராத சப்தங்களால் நிறைந்து கிடக்கிறது பாடல். தொடர்ந்தும் ஒரே ராகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த Hypnotic Flute என்னமோ பண்ணுதுய்யா :)

‘Come and get some Biriyaani இந்தப்பக்கம் வந்து தரியா நீ ?

நா நா நா – தேவன்

முதல் பாடல் ராப்’ என்றால் அடுத்த பாடல் Pop. இந்தப்பாடலே மூன்று முறை ஒலிக்கிறது ஆல்பம் முழுக்க. Straight Pop version , New Jack Swing Version and Extended Dance Mix Version என மூன்று விதம். எனக்கென்னவோ அந்த யுவனின் New Jack Swing Pop Version தான் பிடித்திருக்கிறது. ( ‘பட்டியல்’ படத்தில் இதே முயற்சி செய்திருக்கிறார் யுவன். ‘கண்ணை விட்டுக்கண்ணிமைகள் விடை கேட்டால்’ ) மிகச்சரியாக பொருந்தும் தேவனின் குரல் தாளத்துடன் சேர்ந்து ஒலிக்கிறது. இந்தப்பாட்டு கேட்பதற்காக அல்ல. இதைப்பின்னணியில் ஒலிக்கவிட்டுவிட்டு எல்லோருமாகச்சேர்ந்து ஆடத்தான் வேண்டும் :) கேரளாவில் மாப்பிள்ளைப்பாடல் என்று ஒரு வகை உண்டு. கைகொட்டிப் பாடுவார்கள் அதுபோல் கைகொட்டிக்கொண்டு நன்கு பாடிக்களிக்கலாம் இந்தப்பாடலை. இந்த ஆல்பத்தில் அத்தனை பாடலும் ஏகத்துக்கு ஜாலி மூடில் இருந்து கொண்டு இசைத்தது போல ஒலிக்கிறது. ‘ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்’ :)

பொம் பொம் பெண்ணே

அருமையான பியானோவில் பாடலின் ராகத்தை வாசித்துக்கொண்டே ஆரம்பிக்கும் மனதைத்தொடும் பாடல் இது. ‘நெஞ்சைத்தாக்கிடும் இசையே நில்லடி உனக்காய்த்தீட்டிய வரியோ நானடி’  இது கொஞ்சம் ஜாஸ் கலந்து அடித்த இசை. Trumpets-ம், தடலாடியான Drums-ம் கொண்டு, பலவித தாளகதியில் ஒலிக்கும் இந்தப்பாடல். Perfect Jazz. நிறையப்பேர் இதை முயற்சி செய்திருக்கின்றனர். ரஹ்மான் கூட இதே போன்ற Genre ல் ஒலிக்கும் ஒரு பாடலை இசைத்திருக்கிறார். ‘ஸ்ட்ராபெர்ரிக் கண்ணேஎன மின்சாரக்கனவில். யுவன் அதையே எடுத்துப்போட்டுக் கொள்ளவில்லை அதே போல Genre  என்றுதான் சொல்லியிருக்கிறேன். இந்த மாதிரிப்பாடல்கள் கொஞ்சம் இடைவெளிவிட்டு வேறு தாளத்தில் ஆரம்பித்து பின்னரும் முதலில் பாடிய இடத்திற்கே வந்து சேரும். நமக்கு இந்த வடிவம் பிடிபடுவதில்லை பிடிப்பதில்லை, முழுக்க முழுக்க Western Style இது. அந்தக்காலங்களில் வந்த ஆங்கிலப்படங்களில் பாடல்களும் இடப்பெற்றிருந்த போது இந்த முறையிலான பாடல்கள் மிகவும் பிரபலம்.

மேடையில் ஆடிப்பாடிக்கொண்டிருப்பவர்கள் கீழேயும் இறங்கி பார்வையாளர்கள் மத்தியில் வந்து ஆடிவிட்டு பின்னரும் மேடையேறிச்செல்வது போல பல்வேறு இடங்களில் பயணிக்கும் இந்த வகைப்பாடல்கள் நமக்கு கொஞ்சம் அந்நியம் தான் எப்போதும். யுவனைப்பற்றிச் சொல்லவேணுமானால் இதுவே அவருக்கு முதல் முறை. இதுவரை இதுபோல் இசைத்ததில்லை அவர். ரொம்பத்தயங்குவதற்கான காரணமும் அதுவே. அத்தனை பிரபலமாவதில்லை , பலரால் விரும்பிக்கேட்கப்படுவதும் இல்லை :) ட்விஸ்ட் ஆடுவதற்கும் , கூடவே பாடிக்கொண்டே ஆடுவதற்குமான இந்த Jazz :) Enjoy .!

Run For Life

Psycho Unit-ம் கானாபாலாவும் கலந்து பாடிய பாடல் இது. Typical Hip Hop mixed with Perfect Rap and Local gana. 0.22 ல் ஆரம்பிக்கும் அந்த மேண்டலின் இஸ்லாமிய வீடுகளில் பிரியாணி சாப்பிடும் அனுபவத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ‘முத்தைத்திரு பத்தித்திரு’விலேயே அருணகிரிநாதர் ஆரம்பித்து வைத்த Rap Music இன்னும் நம்மை விட்டு அகல மறுக்கிறது. 2:40-ல் Local Chennai Beats வரும்போது இன்னும் பாடல் ருசிக்கிறது. இந்த வரிகள் வரும்போது , கானா பாலா’வின் குரல் ஊரில் திருவிழாவில் Loud Speaker குழாயில் ஒலிப்பதுபோல Effect இன்னும் பாடலை நமக்கு அருகில் கொண்டுவந்து சேர்க்கிறது :) ஈஸியாக ஹிப் ஹாப்’புடன் இந்த ராப் கலந்து விடுவதால் இன்னமும் உயிர் பிழைத்திருக்கிறது.

எதிர்த்து நில்

யுவன் 100-க்காக இப்போது பிரபலமாக இருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களும் சேர்ந்து பாடியது. ‘அடங்காதே அத்து மீறு’ வகையில் வெளிவந்திருக்கும் பாட்டு. ‘சரோஜா’வில் ஏற்கனவே வந்த பாடல் போல ஒலிக்கிறது..அங்க ‘நிமிர்ந்து நில்’ இங்க ‘எதிர்த்து நில்’ Same Genre , வேறொன்றும் இல்லை. நாடோடிகள் ‘சம்போ சிவ சம்போ’ வையும் கூட சொல்லலாம் எனக்கென்னவோ அந்த Stuff இதில் கொஞ்சம் குறைந்து போனது போலவே இருக்கிறது. யாருடைய குரல் எங்கு ஒலிக்கிறது என்பதிலும் குழப்பம். எனக்கென்னவோ ரஹ்மானின் குரலும் ஒலிப்பது போல இருக்கிறது. 3:25ல் கேளுங்க.! தொடர்ந்தும் மேலே ஏறிச்செல்லும் தாளகதி பாடலை அதன் இயல்பில் நியாயப்படுத்துகிறது. கீழிறங்கும் சுரங்களே இல்லை, கூர்ந்து கவனித்தால் தெரியும் :)

நா நா நா – யுவன் ரீமிக்ஸ்

தொண்ணூறுகளில் யுவனை ரீமிக்ஸ் மட்டுமே செய்யத்தெரிந்தவர் என்றே அழைத்த காலமும் உண்டு, இப்போது அது ரீக்றியேட் ஆகியிருக்கிறது. It’s a Perfect Remix , 90’s G-Funk Era reappeared again. மீள்கலவை’யில் எப்போதுமே அடித்துக்கொள்ள இயலாது யுவனை. பட்டியல் படத்தில் ‘ ஆடலுடன் பாடலை’ என்ற எம்ஜியாரின் பாடலை ‘நம்ம காட்டில’ என மீளுருவாக்கம் செய்தது, பின் அதே படத்தில் ‘தீப்பிடிக்க தீப்பிடிக்க’ என்று கலக்கியிருந்தார் யுவன். சொல்லப்போனால் அவர் செல்ல வேண்டிய இடங்களே வேறே..தமிழ் தெலுங்கு என்று மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறார். ரீமிக்ஸ் என்பது பாடலை அப்படியே எடுத்துக்கொண்டு 6-8ல் தாளத்தை வேகப்படுத்தி இசைப்பது மட்டுமல்ல. அதற்கும் மேலான விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஒரு இலக்கணமாகவே கொண்டு வந்தவர் யுவன். தீப்பிடித்த ஒரு பாடல் போதும்.

அவர் பாடலையே தானே ரீமிக்ஸ் செய்து அதே ஆல்பத்தில் வெளியிடுவது என்பது முன்னரே தொடங்கியது தான். ஆனாலும் இந்த ‘நா நா நா’ உட்கார்ந்து செய்தது போல அப்படியே அமிழ்த்துகிறது கேட்பவனை. ‘யா யா யா’ என்ற குரல் பின்னால் ஒலித்துக்கொண்டே இருக்கிறது நாமும் அதோடு சேர்ந்து கொஞ்ச நேரத்திலேயே சொல்ல ஆரம்பித்துவிடுவது பாடலுக்கு வெற்றி.

மூன்றாவது வெர்ஷனாக Extended Dance Mix ஆக உருவெடுத்திருக்கும் அந்த வெர்ஷன் அத்தனை பிடிக்கவில்லை எனக்கு.Night Pub-களில் என்ன பாடுகிறது என்றே தெரியாமல் ,விடாமல் எதேனும் சப்தம் வந்து கொண்டிருந்தால் போதும் என்ற மாஸு’க்காக வேணுமானால் இசைத்திருக்கலாம். அத்தனை ரசிக்கும்படியாக இல்லை. பாடலின் வேகம் தானாகக்கூடிவிட்ட கேஸட்டைப்போல ஒலிக்கிறது.

மிஸ்ஸிஸிப்பி

அத்தனை பாடல்களைக்காட்டிலும் ஒரு Off Beat- ஆக ஒலிக்கிறது இந்த மிஸ்ஸிஸிப்பி. அத்தனை சுரத்து இல்லாமல்,ஆல்பத்தில் கடைசி இடம் பெறுகிறது. ட்ரம்ஸும் அந்த தபேலாவும் ஏனோ ஒட்டவேயில்லை. தனியாக நிற்கிறது. கார்த்திக்’கின் குரல் எனக்கென்னவோ அவர் வசனம் பேசுவது போலவே இருக்கிறது. இந்தக்களேபரத்தில் பிறேம்ஜி வேறே. ஹ்ம்..! தண்ணியப்போட்டுவிட்டு பாடுவது போல பாடல் தள்ளாடுகிறது.