Friday, December 27, 2013

நட்சத்திர மீன்



மலைகள் இதழில் வெளியான கவிதைகள்




நட்சத்திர மீன்

கடற்கரையோர
சிப்பிக்கடையில் வாங்கிவந்த
அந்த நட்சத்திர மீன்
வெளிப்புறச்சுவரில் பட்டுத்தெறித்த
ஒரு மழைத்துளியில்
தன்னைச்சிலிர்த்துக்கொண்டது

கடந்து போகிறாய்

நான் வலிந்து அந்தச்சாலையில்
செல்லவில்லை
முன்கூட்டித்தீர்மானித்து
மணி பார்த்துக்கொண்டு
அந்த இடத்தைக்கடக்கவில்லை
இதற்கு முந்தைய
திருப்பத்தில் அந்த விபத்தை
வேண்டுமென்றே நான் நிகழ்த்தவில்லை
இப்போது என் முன்னில்
என்னை நீ கடந்து போகிறாய்

பறவை

பறவைக்கும் கவிஞனுக்கும்
உள்ள தொடர்பே
உனக்கும் எனக்குமானது.

ருசி கண்ட பூனை

கவிஞன் ஒரு
தற்கொலை ருசி கண்ட
பூனை

நினைவு

உங்களுக்கு
மிக முக்கியமானவர்
இந்தக்கவிதையை வாசித்தபின்
முதலில் நினைவுக்கு வருபவர்
எனக்கு எதையும் வாசிக்காமலேயே
உன் ஞாபகம் தான் வருகிறது.



Thursday, December 19, 2013

ஞானப்பறவை


ஞானப்பறவை

பறவைகளுக்கும் அவ்வப்போது
ஞானம் பிறந்துவிடும்
போலிருக்கிறது

அசையாது ஒரே இடத்தில்
நின்றுகொண்டே பறக்கிறது
எத்தனை காற்றடித்தாலும்
மரக்கிளையை விட்டு விழாது
அமர்ந்திருக்கிறது
மழை,புயல்,வெய்யில்
என எதையும்
பொருட்படுத்துவதேயில்லை
கிடைத்ததை உண்டுகொள்கிறது
உடையென எதையும்
உடுத்தி நான் இதுவரை
பார்த்ததில்லை

அவைகளை மட்டுமே
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
எப்போது பிறக்கும் என
நினைத்துக்கொண்டிருக்கும்போது
தமது அழகிய குரலால்
என்னைக்கலைத்துவிட்டது



புரியாத கவிதை

அந்தப்புரியாத
பின்னவீனத்துவக்கவிதையை
தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்
நீயும் என்னுடன் அமர்ந்து வாசியேன்
புரிகிறதா என்று பார்ப்போம்
உன்னை என்னுடன் அமர்த்தி
வைப்பதற்குள் போதும் போதும்
என்றாகிவிடுகிறது
எதோ காதலைப்பற்றித்தான்
இதுவும் பேசுகிறது என்றெண்ணுகிறேன்
உனக்கு எதேனும் புரிகிறதா ?
புரியாவிடில் விட்டுவிடு
நமது காதலைப்போலத்தான்
அதுவும் என்றெண்ணுகிறேன்
இருப்பினும்
மீண்டும் அந்தக்கவிதையை
சிறிது காலம் கழித்தே
வாசிக்கலாமென்றிருக்கிறேன்
இயன்றால் உன்னை அழைப்பேன்
இல்லையேல்..


.

Saturday, December 7, 2013

துளிப்பாக்கள்



காதலின் மொழி
முத்தம்
வா உரையாடலைத்
தொடங்கலாம்!
-
அவனுடன் இப்போது
தொடங்கியிருக்கலாம் ரசவாதம்
எனினும் என்னுடன்
வரலாறே இருக்கிறது
உனக்கு
-
எனக்கென்னவோ
வண்ணத்துப்பூச்சிகளில்
ஆணினம் இருப்பதாகத்
தோன்றுவதேயில்லை
எப்போதும்
-
நீ வருகிறாய் என்பதே
தேசிய கீதம் இசைப்பது போலிருக்கிறது
எழுந்து நின்று விடுகிறேன்