Wednesday, April 25, 2012

நான் இப்போது கொல்லப்படப்போகிறேன்







நான் இப்போது கொல்லப்படப்போகிறேன்
என்று அவன் என்னிடம் கூறினான்

துப்பாக்கி முனையை உற்று நோக்கிக்கொண்டே
கடைசியாக கொஞ்சம் இனிப்பு வேண்டும்
என அவனிடம் யாசித்தேன்

எவ்வளவோ முயற்சி செய்தும் அவை எதையும்
செயல்படுத்த இயலாமல் வகையாக மாட்டிக்கொண்டோமே என்று
பிறர் அறியாவண்ணம் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

என் காதலியின் புகைப்படத்தை அருகில்
வைத்துக்கொள்ள அனுமதி கேட்டேன்.

கடைசியாகச் சென்று வந்த வெளியூரின் அடையாளங்களை
மீள நினைவு படுத்திப்பார்த்தேன்.
அல்லது முன்னெப்போதோ தாவி வந்து அமர்ந்த உன் ஆட்டுக்குட்டியின்
அரவணைப்பை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.

நண்பர்களுடன் கழித்த நாட்களை எண்ணிப்பார்த்துக்கொள்ள
கால அவகாசம் கேட்டுப்பார்த்தேன்.

அல்லது நான் இல்லாது போகும் இந்த உலகை இப்போதே காண
ஏதேனும் வழி உள்ளதா என எனக்குள் யோசித்துக்கொண்டேன்.

என்னைத்தவறுதலாக அழைத்து வந்துவிட்டீர்கள் , அது நான் அல்ல
என்று கடைசி நேர யாசிப்புகளைத்தொடங்க எத்தனித்தேன்.

எப்படியாகிலும் தப்பிவிடவேண்டும் என்று பதைபதைத்து
அடுக்கடுக்காக பள்ளி ஆசிரியரிடம் வழக்கமாக கூறும்
பொய்க்காரணங்களை அடுக்க முயற்சி செய்தாலென்ன என்று
உள்ளுக்குள் குமைந்துகொண்டேன்

கணநேரத்தில் புத்தனாகி மரணதண்டனை இவ்வுலகில் 
இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று கூச்சலிடலாம் என்று எண்ணினேன்

எந்தச் சூழ்நிலையிலிருப்பினும் தமது அகங்கார மனப்பாங்குடன்
சுடவந்தவனின் காதலியை இன்று மட்டும் சுவைக்க வேண்டும் என்று
அவனிடமே எள்ளல் செய்ய நினைத்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்.
இத்தனை அகக்கேள்விகளும் கேட்டு அதன் பதிலை
எதிர்பார்த்துக்காத்திருப்பதை விட ஒரு தோட்டாவில் சாய்த்துவிடு
என்று அவனுக்கே கட்டளை பிறப்பித்தாலென்ன ?

என் கூட வந்தவர்களையெல்லாம் ஏற்கனவே சாய்த்துவிட்டாயா
என்று கேட்டு எல்லோரும் போய்விட்டனர், நிம்மதியென அகமகிழலாமா
என்று கூட நினைத்துக்கொண்டேன்

கடைசி நேரத்தப்பித்தலுக்கென முயற்சி செய்கிறேன் பேர்வழி
என்று கருதி அவனிடமுள்ள துப்பாக்கியைப்பாய்ந்து பிடுங்க
முயற்சி செய்தாலென்ன ?

அல்லது எல்லாம் அறிந்தவன் போல இந்தத்துப்பாக்கியால்
சுடவேண்டுமெனில் இத்தனை தொலைவிலிருந்து
மட்டுமே சுடவேண்டும் என தொழில்நுட்பங்களைக்கூறி
அவனைத்திசை திருப்ப முற்பட எத்தனித்தேன்

அளவுக்கதிகமாகப் பேச்சுக்கொடுத்து அவன் கவனத்தைக் கலைத்து
இந்த உயிர்ப்பலியிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிகளைத்தேட முயற்சித்தேன்.

அல்லது என்னைக்கொன்றுவிட்டு எங்கனம் நீ தப்பிப்பாய் என்று
கேட்டு அவனையே கொஞ்சம் நிலைகுலையச்செய்ய நினைத்தேன்.

இந்தக்கொலையை ஆவணப்படுத்த ஏதேனும் முயற்சிகள் நடக்கின்றனவா
என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றேன்

என்னைக்கொன்றுவிட்டு இவ்வுலகில் நிம்மதியாக வாழமுடியுமா
என்று வழக்கமான வசனங்களை அவன்முன்வைக்கலாம்
என எண்ணினேன்

வெறுமனே கொல்லப்போகிறேன் கொல்லப்போகிறேன்
என்று போக்குக்காட்டி என்னைப்பயமுறுத்திவிட்டு என்னில்
அந்த மரணபயத்தை கண்கூடாகப்பார்த்த மகிழ்வில்
இனியும் இவனால் தமக்கு எந்த ஆபத்தும் இல்லை எனக்கருதி
அப்படியே விட்டுவிட்டுச்சென்றுவிட மாட்டானா என்று
கழிவிரக்கத்தில் அழத்தொடங்கினேன்

நாளைய செய்தித்தாள்களில் எனது உயிரற்ற உடலைக்கண்டு
பிறர் தம்மீது அனுதாபப்படுவர் எண்ணி உள்ளுக்குள் மாய்ந்துபோனேன்
 
மேற்கூறிய எதுவுமின்றி
நமக்கு விதித்தது இவ்வளவுதான் என்று
எனக்குள் இறுகிப்போய்
அமைதியாக மரணத்தை எதிர்கொள்ளத்தயாரானேன்
கதவு சார்த்தப்பட்டது
துப்பாக்கியை அவன் உயர்த்திப்பிடித்தான்.



Tuesday, April 17, 2012

கடவுள் வருவார்



இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்து
படையல்
 செய்ய துணிந்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
பிள்ளைக்கறி சமைத்து
படையல் வைக்கமுயன்றவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
சுண்ணாம்புக்காளவாயில்
தம்மையே சுடமுயன்றவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
கிடைக்காத சந்தனக்கட்டைகளுக்கெனத்
தம் கைகளையே எலும்பு வரை 
தேய்த்து எடுத்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
தம் சுயத்தை நிரூபிக்க
தீயினிற்புகவும் முயற்சித்தவரின்
வன்முறையைத்தடுத்தாட்கொள்ள
கடவுள் வந்தார்

 
தம் கால்களை முதலையின்
வாயிற்கொடுத்து கதறிய  அஃறிணையின் மீதான
வன்முறையைத்தடுத்தாட்கொள்ளக்கூட

கடவுள் வந்தார்

 
அருகில் நடந்த வன்முறைகளை
இதுகாறும் கண்டுகொள்ளாமலிருந்த
அதே கடவுளை யாசிக்க
இந்தக்கவிதையை நேர்மறையாக
முடிக்க விரும்பி

 
தலைப்பை மீள வாசிக்கக்கோருகிறேன்.
அதுவே உங்களுக்கும் விருப்பமெனில்




.
 

Tuesday, April 10, 2012

பறந்து வந்து விழுந்த இலை





மரந்தங்காத இலை
அது பழுத்துதான் இருக்க
வேண்டுமென்பதில்லை


சட்டெனப் பறந்த அவசரப்பறவையின்
அதிர்வில் கிளையின் நுனியில் இருந்த
பிஞ்சு இலையாகக்கூட இருக்கலாம்


அந்தப் பறவையின் எச்சத்தின்
எடை தாங்காது தானே முறிந்து கொண்ட
இலையாகக்கூட இருக்கலாம்.


அல்லது தம்மீது விழுந்துவிட்ட
எச்சத்தைக்கழுவிக்கொள்ள
இன்னொரு மழையை எப்போதும்
எதிர்பார்த்துக்காத்திருக்கும் மற்றுமொரு
இலையாக தன்னைக்கருதிக்கொள்ள
விரும்பாமல் விழுந்திருக்கலாம்.


மரத்தின் உச்சாணிக்கொம்பில்
துளிர்க்க இயலாது போகும்வரும்
அனைவரும் எட்டிப்பிடிக்க,தட்டிவிட
ஏதுவாக தாழ்வான கிளையில்
இருந்த இலையாக இருக்கலாம்.


மரத்தின் கிளைகளில்
அவ்வப்போது வந்தமரும் பறவைகளின்
உல்லாசப் பறப்பை தானும் அனுபவித்துப்
பார்க்க முயற்சித்திருக்கலாம்.


வரப்போகும் இலையுதிர்காலத்திற்கு
அச்சாரம் போடுவதற்கென மரம் தம்மை
சோதித்துப்பார்த்திருக்கலாம்


இப்போது பழுக்கத்தொடங்கியிருக்கும்
இன்னொரு இலை தம்மைப்பார்த்து
விசனப்பட்டுக்கொள்வதை
தாங்கிக்கொள்ள இயலாத இயல்பான
வெறுப்பாலுமிருக்கலாம்.


தொடர்ந்து அடிக்கும் வெய்யில்
தம்மீது மட்டுமே பட்ட கோபத்தில்
தன்னைத்தானே வீழ்த்தியும் இருக்கலாம்


எங்கும் போகாது அசையாது
தமது இடத்தில் மட்டுமே எப்போதும்
நின்று கொண்டிருக்கும்
மரத்தைப்பற்றி காற்றின் திசையெங்கும்
தான் செல்லுமிடங்களில் பறைசாற்ற
தம்மை விருப்பார்வத்தொண்டனாகக் கருதியிருக்கலாம்.


துளிர்க்கும்போதிருந்தே தம்மை
எப்போதும் மறைத்திருக்கும் அடர்ந்த
பெரிய கிளையின் நிழலில்
மட்டுமே வளரமுடிந்ததை,
வெய்யிலையும் மழையையும் தன்னால்
நேரே கண்டுணர இயலாத இயல்பான
ஆதங்கத்தினாலும் வீழ்ந்திருக்கலாம்.


விழுந்துவிட்ட பிற இலைகளின்
தழும்பிலிருந்து கண்டுணர்ந்து கொள்ளாது
தாமே தனது தழும்பைப் பார்க்க
முயற்சித்த ஒரு விபரீத எத்தனிப்பாலுமிருக்கலாம்.


தம்மைச்சுற்றி இருக்கும் மரத்தின்
பாகங்களை மட்டுமே எப்போதும்
பார்த்துக்கொண்டிருப்பதிலிருந்து
தம்மை விடுவித்து பிற பாகங்களையும்
காண முயற்சித்த ஆர்வக்கோளாறாலுமிருக்கலாம்.




எப்போதும் நேரடி வெய்யிலிலும் மழையிலும்
காய்ந்து நனைந்து அலுத்துப்போயிருக்கலாம்


வந்தமரும் பறவைகளின் காதல் மொழியை
இனியும் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம்.


தன்னை ஒட்டி வளர்ந்த பூ காயாகி
பின் பிதுங்கி பழமான இடநெருக்கடியில்,
தம்மைத்தாமே விடுவித்துக்கொண்டுமிருக்கலாம்


தம்மீதேறித்தாவிச்செல்லும் அணிற்கால்களின்
கூரிய நகம் பட்டு விழுந்துவிட்ட
தன் சகோதர இலையின் பிரிவு தாங்காமல்
மனமுவந்து தம்மை வீழ்த்தியிருக்கலாம்.


அல்லது எதிர்காலம் பற்றிய கனவில்
திளைத்து தனது நிலை மறந்து
ஊறியிருக்கும் தளர்வான நிலையில்,
தமது காதலின் களிப்பில் மரத்தின்
அத்தனை கிளைகளிலும்,விரட்டிச்சென்று
இணையைப்பிடிக்க முயன்ற
அதே அணிலின் விளையாட்டால்
கூட விழுந்திருக்கலாம்.


வழக்கமான இயற்கைச்சுழற்சியை விடுத்து
பிறிதொரு தமக்கு இணக்கமான சுழற்சிக்கு
தம்மை ஆட்படுத்திக்கொள்ள முயற்சித்திருக்கலாம்.


இவ்வாறெல்லாம் பரிணாமத்தை மீறிய
சிந்தனை கொண்ட அதை
பிஞ்சில் பழுத்த இலையெனக் கருதி மரமே
உதிர்த்தும்விட்டிருக்கலாம்.


தம்மை விட்டுப்பிரிந்த இலைகளை
மரம் தமக்கு உரமாக மட்டுமே
ஆக்கிக்கொள்வதை அறிந்து முன்னரே
தம்மை விடுவித்துக் கொண்டதாகக்கூட
இருக்கலாம்.


அல்லது தனது மரத்தை
விட்டுப்பிரிந்த இலை
பின் மீண்டும் தம்மால்
மரத்தைச்சேரவே இயலாது என்று
எல்லாவற்றையும் போல
பிறகு உணரும் சாதாரண
இன்னொரு இலையாகக்கூட இருக்கலாம்.




.

Wednesday, April 4, 2012

என்னவென்று அழைப்பது ?



எழுதியவன்
தமது குறைகள் எதையும்
சொல்ல விழையாத
நாட்குறிப்பு போல
உன் பேச்சு இன்று
செயற்கையாக இருக்கிறது

பலநாட்கள் தூசி
படிந்து திடீரெனப்பெய்த
மழையில் கழுவிவிடப்பட்ட
இலைகள் போல
உன் பேச்சு இன்று
இயற்கையாக இருக்கிறது.

நாட்குறிப்பின் பக்கங்கள்
போலிருக்கும் இலைகளை
அந்த மரம் உதிர்த்து விடும்
பொழுது உன்னிலையை
என்னவென்று அழைப்பது ?



.