Sunday, June 7, 2015

ஆடு மேய்ப்பவனின் பாடல்



ரஹ்மானின் பாடல்களைக்கொஞ்சம்
ஆழமாகக்கீறிப்பார்த்தால்
ராசைய்யா தெரிவார்
உன்னை ஆழமாகக்கீறிப்பார்த்தால்…
இல்லை நீ கீறிப்பார்த்துவிட்டு வா
பிறகு சொல்கிறேன்.

*******

என்னைச்சாகடிப்பது
வெகு சுலபம்
நான் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலை
நிறுத்திவிடு

*******

தனியே செல்லும் வழிப்போக்கனின்
பாதி நிறுத்தப்பாடலை ஒத்திருக்கிறது
எந்தன் மனது.

*******


ஆடு மேய்ப்பவனின் பாடலை பிரதி எடுக்க
முயல்கிறேன்
குளம்பொலிகளும் கழுத்துமணியொலிகளும்
அள்ளி வீசும் புழுதியுமின்றி மீளுருவாக்கப்பாடலை
ஒத்திருக்கிறது

********


கைகளை விரித்தபடி
ஏசுவின் சிலை
அவரும் மழையை
ரசிக்கிறார்.

*******

மலைகளையே
மிதக்க வைக்கின்றன
அருகிலிருக்கும்
சிறுகுளங்கள்

*******


குருதி துடைக்க
சிறு இலை பறித்தேன்
செடி அழுகிறது

*******


கழனித்தொட்டியில்
நிலா தீரும் வரை
அந்தப்பசு வழித்துக்குடிக்கிறது

*******


குரல்வளை இறுக்கும் குளிர்
தண்மியில் மட்டுமே
தண்ணீர்

*******


'மலைகள்' இணைய இதழில் வெளியானவை
http://malaigal.com/?p=6767
.