Monday, November 28, 2011

மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்



எங்கும் பறக்கும் பட்டாம்பூச்சியின் மாயாஜால  வர்ணங்கள்
பச்சோந்தியின் உடல் வரை நீள்கிறது.

ஆழ்கடலில் இரை  தேடும் மீன்கள் வெளிவிடும் ஒளி
மின்மினிப்பூச்சியின்  வால் வரை எட்டுகிறது.

புலி அடித்துத்தின்ற காட்டுமானின்
இறைச்சியின் வாசம்  என் தட்டு வரை வீசுகிறது.

என்றும் என்  மனதில் ஊறிக்கொண்டிருக்கும்
என் மொழி இன்று  என் வாய் வரை எட்டியிருக்கிறது

எப்போதோ நின்றுவிட்ட  காற்றாலையின் விசிறிகள்
எனது சீழ்க்கை ஒலிவரும் வரை காத்திருக்கிறது.

எங்கோ சுற்றிக்கொண்டிருக்கும் கோள்கள்
எனது அடுத்த காதலியை நான் தேடுவது வரை காத்திருக்கிறது.

பூமியின் அடியாழத்தில் இருக்கும் பெட்ரோலின் வாசம்
நேற்று அடித்துப்போட்ட போராளியின் உடல் வரை அடிக்கிறது.

செறிவூட்டப்பட்ட அணு உலையின் நிணம்
எரிந்து கொண்டிருக்கும் எனது பிணம் வரை எட்டியிருக்கிறது.

மர்லின் மன்றோவின் ஸ்கர்ட்டின் விசிறலில்
எழும்பிய காற்று செல்ஃபோன் டவர் வரை அடிக்கிறது.


Wednesday, November 23, 2011

துளித்துளி




  
சிலந்தி வலையில்
சிதறித்தெளித்த
மழைத்துளி
சிறைப்பட்டுக்கிடந்த
சிலந்தியின் கால்களையும்
நனைத்திருந்தது ஈரம்.



குடித்துவிட்டுக்கீழே வைத்த
உள்ளிருப்பவை வெளித்தெரியும்
கண்ணாடிக்குவளையில்
அடியிலிருந்து மேலே
வந்த மீதமுள்ள நீர்
சிறு பாசிமணிகள் போல்
அதன் சுவரில்
ஒட்டிக்கொண்டிருந்தது
கண்ணாடிக்குள்ளும் ஈரம்.



அடித்துப்பெய்த
மழையின் சாரல்கள்
என் ஜன்னல் கம்பிகளிலும்
தொக்கி நின்று
கொண்டிருக்கின்றன.
இரும்புக்கம்பிகளிலும் ஈரம்.


Monday, November 21, 2011

ஆதாமிண்டே மகன் அபு



கீற்று இதழில் வெளியான திரைவிமர்சனம்


ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் செய்வதை சித்தரிக்கும் படம்.மது அம்பாட்டின் ஒளி ஓவியத்தில் நம்மையும் கேரளப்பசுமையை ரசிக்கவைத்துக்கொண்டே பயணத்தை எந்தவித வியாபார நோக்கமில்லாமல் வெகு இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர்.

பாங்கு ஒலி கேட்டு நான்கு மணிக்கு எழுந்து ஸுபஹு’வுக்கு செல்ல கிணற்றடியில் குளித்துவிட்டு தொம்தொமென்று மரப்படிகளில் ஏறும் தம்பி அந்தோணிக்கு வாய்க்காதது , “இண்ணல ராத்திரி முழுவன் வயிற்றிலெ வாயு கிடன்னு களிக்குகயாணு” என்று காரும் வீடும் வைத்திருக்கும் டி.எஸ்.ராஜு [ ஹாஜி] க்கு கிடைக்காத வாய்ப்பு, அத்தனை பெரிய ட்ராவல்ஸ்ஸில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் முகேஷுக்கு கிடைக்காத வாய்ப்பு , வெறுமனே அத்தரும்,நறுமணப்பொருட்களும் விற்கும் நம் சலீமிற்கு [ அபு ] ஹஜ் செல்ல வாய்ப்புக்கிடைக்கும்போது நமக்கு உள்ளுர சந்தோஷம் ஏற்படுவது இயற்கை.”நாம நினைக்கும் போது கடவுளைக் காணச்செல்ல இயலாது, அது அவனாக நினைக்கும்போது மட்டுமே நடக்கும்” என்பது இதிலும் மெய்யாகிறது.


வெகு நாட்களாக வளர்த்து வந்த பலாமரமத்தை கலாபவன் மணியிடம் [ஜான்சன்] விற்கச்செல்வதும்,முன்பணம் வாங்கிக்கொண்டு பின் மிச்சத்தையும் வாங்கச்செல்லும்போது “மரம் எதற்கும் உதவாமல் உள்ளுக்குள் உளுத்துப் போய்விட்டது, இருந்தாலும் நான் சொன்ன விலையையே உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று ஜான்சன் சொல்வதும், இப்படி ஒரு சிதைந்த ஒன்றுக்கும் உதவாத மரத்தை விற்று அதில் ஹஜ்ஜுக்கு பயணிப்பதா என்று பணத்தை வாங்க மறுதலிக்கும் போது சலீமின் கதாபாத்திரம் நம்மை சிறிது அசைத்துப்பார்க்கிறது.



எங்கும் எதிலும் எப்போதாவது , அறிந்தோ அறியாமலோ தவறோ தீங்கோ இழைத்திருந்தால் பயணத்தில் தடை ஏற்படும் என உணர்ந்து, இரண்டு செண்ட் நிலத்திற்கென தன்னிடம் சண்டையிட்ட சுலைமானைச்சந்தித்து வரச் செல்வது,அங்கு சுலைமான் , இப்படி உங்களிடம் மன்னிப்பு கேட்க ஒரு சந்திப்பை ஏற்படுத்திக்கொடுக்கவே கடவுள் என்னை இன்னும் உயிருடன் விட்டு வைத்திருக்கிறான் என்று சுலைமான் சொல்வதும் அருமையான காட்சிகள்.

பயணத்தில் தடை ஏற்படுவது சகஜந்தான், அதுவும் முதியவர்களுக்கு இப்படி நேர்வது ஒன்றும் புதிதில்லை, பணப்பிரச்னையை நான் சமாளித்துக்கொள்கிறேன், நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்கன்னு சொல்லும் முகேஷ், மரம் உளுத்துப்போனால் என்ன விலை நிர்ணயித்தது நான் தான், அதனால ஒத்துக்கொண்ட பணத்தை குடுத்திர்றேன்னு சொல்லும் கலாபவன் மணி, பணக்குறைப்பாட்டால பயணம் நிற்க வேண்டாம்னு சொல்லி , கையில் பணத்துடன் வந்து சலீமின் வாசலில் வந்து நிற்கும் நெடுமுடி வேணு என்று எப்படி எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கின்றனர் படம் முழுக்க. ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிறது என்றால் தாமாகவே உதவிகளும் வீடு தேடி வருவது அனைவரின் வாழ்விலும் ஒரு முறையேனும் நிகழ்வது இயற்கை தானா ?




எவ்வளவோ முயற்சி செய்தாச்சு , இன்னும் கொஞ்சம்தான் கிடைக்கணும் ,அதுவும் முடிஞ்சுட்டா பயணம் சிறப்பா அமையும்னு நினைக்கும் போது ,வாசலில் கட்டியிருக்கும் பசு நானும் இருக்கேன் உங்களுக்கு உதவுவதற்கு என தன் குரலெழுப்பிக்காட்டும்போது நமக்கே இந்தப்பயணம் வெகுவாச்சாத்தியப்பட்டு விட்டது என்று நினைக்கத்தோணுகிறது. கடைசியாக பசுவில் கறந்த பாலை எடுத்துக்கொண்டு நெடுமுடி வேணு’வின் வீட்டிற்குச்சென்று அதைக்கொடுப்பதான காட்சி கலங்கடிக்கிறது.

என் ஊரில் அம்மா அதிகாலைல எழுந்து வாசல் தெளித்துகோலம் போடும்போது , கயத்துக்கடை சாகிபு [ முஸ்லீம் அவர் , கேரளாவிலருந்து தென்னங்கயிறுகள் வாங்கி மொத்த வியாபாரம் செய்பவர் ] வீட்டில வெச்சிருக்கிற பசு மாடுகள , அந்த நேரத்தில பால்பண்ணைக்கு கூட்டிட்டு போவாங்க அந்த சாகிபு வீட்டம்மா. அந்த காலை நேரத்தில பசுவினைக் காணுவது என்பது அம்மாவுக்கு லக்ஷ்மியவே பார்த்த மாதிரி,அத அவங்க ரெண்டு பேரோட கண்கள்லயும் அந்த மகிழ்ச்சிய நான் பார்த்திருக்கேன் பல தடவைகள், அந்த பழைய நிகழ்வை ஞாபகப்படுத்துவது போலருந்த இந்தக்காட்சிகள் எனக்குள் குளத்திலெறிந்த கல்லைப்போல அலைகளை உருவாக்கத்தவறவில்லை.




பிறகும் பணம் குறையும் போது , ஏங்க நம்ம பையன் சத்தார் கிட்ட கேட்டா என்ன என்று ஜரீனா கேட்கும் போது , அவன் எப்படி அத சம்பாதிக்கிறானோ , அந்தமாதிரி தவறான வழியில வர்ற பணத்த வெச்சு நாம பயணிக்கணும்னு அவசியமில்லை என்று மறுப்பதும் நமக்குள் ஒரு சிலிர்ப்பை உருவாக்கத்தவறவில்லை.

Passport வாங்கிக்கொள்ள PostOffice திறக்குமுன்னரே அதன் வாயிலில் போய்க்கிடப்பது,”ச்செல நேரத்துக்கு நிங்களுக்கு சிறிய குட்டிகளுடே சுபாவா(ம்) “ [ சில நேரங்களில் நீங்கள் சின்னப்பிள்ளைகள் போலத்தான் நடந்துக்குவீங்க] என்று ஜரீனா சலீமை செல்லமாகக்கடிந்து கொள்வது ,பிறகு வாங்கிக்கொண்டு வந்த Passport-ஐ தன் மனைவி கையால் தொட்டுவிட்டால் அழுக்காகிவிடும் என்று சலீம் தன் கையில் வைத்துக்கொண்டே காண்பிப்பது,இருந்தாலும் பாஸ்போர்ட் போட்டோவில நீ அழகாத்தானிருக்கிற என்று சொல்லும் காட்சிகளில் தம்பதியினரின் நெருக்கம் ஒரு கவிதை.





 “இறந்துபோன என்னோட அம்மா,அப்பாவ ஹஜ்ஜுக்கு அனுப்பறதா நினைச்சுக்கிறேன்னு சொல்ற பிள்ளைக்கு ,நூறு முறை ஹஜ் சென்று வந்ததற்கான புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி பணத்தினை வாங்க மறுப்பதும், உறவினர் தவிர வேறு யாரிடமும் பணம் வாங்குவதோ, கடனாகப்பெற்று செல்வதோ ஆகாது என்று சொல்லி பணத்தை வாங்க மறுப்பதும் , உளுத்த மரத்தினை விற்று உனது நம்பிக்கையை தகர்த்து அதில் கிடைக்கும் பணம் வேண்டாம் என்று அந்தப்பணத்தினையும் மறுப்பதும், அவ்வளவு காசிருந்தா நாங்க குடிச்ச டீக்கும் சேர்த்து குடுக்கவேண்டியது தானே என்று ஏளனம் பேசுபவர்களுக்கும் சேர்த்து காசு கொடுப்பதும்” என சலீம் அத்தனை காட்சிகளிலும் மிளிர்கிறார்.

கடைசிக்காட்சிகளில் பஸ்ஸில் பயணிக்கையில் ,சலீம் மயங்கி விழுவது போன்ற காட்சி படம் அங்கேயே முடிந்து விட்டது போன்ற உணர்வைத்தருவதைத்தவிர்க்க இயலவில்லை.மத நல்லிணக்கத்தைக் காட்டிவிடவேண்டும் என்று நெடுமுடி வேணுவை ஹிந்துவாகவும், கலாபவன் மணியை கிறீஸ்ட்டீனாகவும் வைத்து அவர்களை சலீமின் பயணத்திற்கு உதவுவது போலக்காட்டியிருப்பது கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது.

இஸ்லாமியப்படத்திற்கான பின்னணி இசைக்கென வழக்கமாக நாம் இதுநாள் வரை கேட்டுக்கொண்டிருக்கும் ஷெனாய், மற்றும், மாண்டலின் போன்ற கருவிகளைக்கொண்ட இசையையும் , கூடவே நமது மண்ணின் வாத்தியங்களான புல்லாங்குழல் மற்றும் தபேலாவையும் கூடவே பயன்படுத்தியிருப்பது சிறப்பு. ஐசக் தாமஸ் கோட்டுக்காப்பள்ளி , இவர் பாலுமகேந்திரா’வின் ‘கதை நேரம்’ என்ற பல பிரபல எழுத்தாளர்களின் கதைகள் கொண்ட தொலைக்காட்சித் தொடருக்கான பின்னணி இசையை அளித்தவர். சலீம் பணத்தை எண்ணும் காட்சிகளில் சந்தூர், புல்லாங்குழல் மற்றும் மற்றும் தபேலா கொண்டு இவர் இசைத்திருக்கும் சிறிய இசைக்கோவை ஒரு மகிழ்வை சலீமோடு சேர்த்து நமக்குள்ளும் உண்டாக்கத் தவறவில்லை.




குறைகள் என்று சொல்ல வேண்டுமென்றால் பாடல்கள் வருவதை சொல்லலாம். பாடல் காட்சிகளினூடே படத்தை நகர்த்தி செல்வது என்பது சாதாரண வணிகப்படங்களை ஞாபகப்படுத்துகிறது. Passport Verification க்காக Police Station செல்லும்போது , அந்த இன்ஸ்பெக்டர், சலீமை “ஆதாமிண்டே மகன் அபு “ என்று படத்தின் பெயரை சொல்லி அழைப்பது, அதுவும் இரண்டு முறை சொல்வது, பிறகு அதையே சலீமும் சொல்லிக்கொண்டே அவருக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற காட்சிகளில் சாதாரண வணிகப்படங்களின் சாயல் தெரிவது என்பன போன்றவைகளை குறைகளாகச்சொல்லலாம். எதிர்த்தவர்கள் பின் திருந்தி உதவுவதும், நண்பர்கள் அனைவரும் சலீமிற்கு உதவுவதற்கெனவே இருப்பது போலவும் காட்டியிருப்பது , போன்ற காட்சிகள் , இந்தப்படத்தை வெளிநாட்டுப்பட வரிசை’க்கான ஆஸ்கார் விருதைப்பெற வரிசையில் சற்றுப் பின்னே தள்ளும் என்பதில் ஐயமில்லை.

எதிர்ப்பாராத இடங்களிலிருந்தும் , எதிர்பார்த்த இடங்களிலிருந்தும் உதவி கிடைத்தும்,பயணம் ஏன் தடைப்படுகிறது என்று யோசித்து இன்னமும் ஏதோ குறை இருப்பதை என்பதை எண்ணி , ஒரு உயிர் வாழும் ஜீவனை வெட்டி வீழ்த்தி அதை விற்ற காசில் பயணிக்க நினைப்பதே குறை என்றுணர்ந்து மரக்கன்றை ஊன்றி நீருற்றுவதில் அடுத்த முறை பயணிப்பதற்கான நம்பிக்கை சலீமிற்கும் ,நமக்கும் உறுதிப்படுத்தப்படுகிறது.


.

Thursday, November 17, 2011

மெட்டமார்ஃபஸிஸ்

நவீனவிருட்சத்தில் வெளியான கவிதை


எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.

சில நாட்கள் கழித்து
பின்னர் அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்

சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.
சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.

இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்
.



Saturday, November 12, 2011

பறவைகளின் திசை

நவீனவிருட்சம் இதழில் வெளியான கவிதை


அன்று அந்திக்கருக்கலில்
கூட்டமாக வெண் பறவைகள்
திரும்பத்திரும்ப முன்னும்
பின்னுமாகப்பறந்து கொண்டிருந்தன
அந்தக்காரிருளில் அவை
திட்டுத்திட்டாக தெளிவாகத்தெரிந்தன

நானும் பல தடவைகள்
இருட்டிவிட்டால் அடுத்த தெருக்களில்
சுற்றிக்கொண்டு எங்கள்
வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன்
அதுபோலவே அவைகளும்
தமது கூட்டின்
திசையைத்தவறவிட்டதுபோல்
எனக்குத்தோணியது

எனக்கொன்றும் புரியவில்லை
எப்போதும் அம்மா சொல்வாள்
அவை என்றும் திசை அறியக்கூடியவை
ஆதலால் ஒருபோதும் அவற்றின் திசை
தப்புவதில்லை என்று
மேலும் அவை நாடு கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
கடல் கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்

அன்று நள்ளிரவு கடந்தும்
நானும் அம்மாவும்
வீட்டு வாயிற்படியிலேயே
அமர்ந்திருந்தோம்
நான் கரு நிற வானத்தையும்
அந்தப்பறவைகளையுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்
அம்மாவோ வைத்த கண்வாங்காமல்
தெருக்கோடியையும்
அதன் முனையையுமே
பார்த்துக்கொண்டிருந்தாள்.



Wednesday, November 9, 2011

எனக்கு மூன்று மனதுகள்






யோசித்துப்பார்க்கையில்
அது உண்மை என்று தான்
தோணுகிறது.

எப்போதும் வேண்டும் என்று கூறும் ஒன்று
எப்போதும் வேண்டாம் என்று கூறும் ஒன்று
பரவாயில்லை,
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறும் ஒன்று

ஆக மூன்று மனதுகள்
சரிதானே ?
ஆம் சரிதான்
என்று கூறியது
நான்காவது மனது.





Thursday, November 3, 2011

பறவை



திருப்பிப்போடப்பட்ட 'எஃப்' வடிவத்தில்
அமர்ந்திருந்தது ஒரு பறவை அந்தக்கிளையில்
நீள அலகு , கால்கள் சிறகுக்குள் புதைந்து,
விரல்களின் நகங்கள் மட்டும் நீண்டு
மரக்கிளையை கவ்விக்கொண்டு நின்றது.
வால் சிறிது நீண்டு மரக்கிளைக்கு
கீழே வரை தெரிந்தது.

கச்சிதமான "எஃப்" தான்.
எஃப்'பைத்திருப்பி சரியாக்கினால்
என்ன எனத்தொன்றி
கல்லை விட்டெறிந்தேன் அதன்மேல்
பறந்து செல்கையில்
ஒரு எழுத்தையும் போல அல்லாமல்
நீண்ட கோடாகப்பறந்தது.

எஃப்'ம் கோடும் எனக்குத்தெரிகிறது
அந்தப்பறவைக்குத்தெரியுமா ?!