Thursday, December 19, 2019

யாதும்ஊரே யாவரும்கேளிர்

மனித இனமே மேய்ச்சல் நிலங்கள் தேடி புலம் பெயர்ந்தது தான் வரலாறு. ஆற்றுப்படுகை நாகரீகங்களெல்லாம் அதைத்தான் சொல்கின்றன. ஒவ்வொருவரின் டிஎன்ஏ’வைப்பரிசோதித்துப் பார்த்தால் யாரும் தாம் வாழும் தற்கால நிலத்துக்குச் சொந்தமானவர் என நிரூபிக்க வாய்ப்புகள் குறைவு. இதில் நாடென்ன மதமென்ன ? குறுகிய மனங்களின் விகாரங்கள் தான் இவை. குழு மனப்பான்மையை விட்டு பல்கிப் பெருகி சமுதாயமாக வாழ முற்பட்ட மனித இனத்தை மீண்டும் கூண்டில் அடைக்க நினைக்கும் சிறுபிள்ளைத்தனம். சுற்றியிருக்கும் நாடுகளும் இதே பாணியைப் பின்பற்றி பெரும்பான்மை சமூகத்திற்கெனவே பேசுவது ,அதையே உறுதிப்படுத்துவது என்பன எல்லாம் கற்காலத்துக்கு மட்டுமே இட்டுச்செல்லும். #யாதும்ஊரேயாவரும்கேளிர்

Sunday, December 1, 2019

ஏர்ஹோஸ்ட்டஸ்

எமது அலுவலகத்தில் ஒரு இளைஞி வேலைக்கு சேர்ந்தார். உள்ளூர் கன்னடிகா ஹுடுகி. கொஞ்சம் அலட்டலான ஒப்பனையோடேயே வலம் வருவார். டஸ்க்கி ப்யூட்டீன்னுல்லாம் சொல்ல முடியாது. நம்மூர் பொண்ணுகளைப் போலவே கருமை நிறத்தில் தான் இருப்பார். பிறகு பேச்சு கொடுத்தபோது தெரிய வந்தது, அவர் ஏர் ஹோஸ்ட்டஸ் பணிக்கென பயிற்சி எடுத்தவர் என. பெங்களூர்ல ஏகப்பட்ட இன்ஸ்ட்டிட்யூட் இதெற்கென இயங்கி வருகிறது. பயிற்சிக்கென விலை ஏகத்துக்கு கொட்டிக் கொடுக்க வேணும் லட்சங்களில். ஹிந்தி கண்டிப்பாக அறிந்திருக்க வேணும். நுனி நாக்கு ஆங்கிலத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாம் அவரிடம் இருக்கிறது.

ஒரே ஒரு பிரச்னை என்னவெனில் அவரின் இயல்பான நிறம். அதை மறக்கடிக்கும் அளவு தம்மை முன்னிறுத்த அவர் செய்த முயற்சிகளைப் பற்றி கதையாக சொல்வார். விமான பணிப்பெண்ணுக் கென கண்ணை மூடிக்கொண்டு நேபாளிகளை தேர்ந்தெடுத்து எடுத்துவிடுவார்கள் என. அத்தனை வெள்ளை அவர்கள். முகத்தில் சிறு பருத்தடம் கூட இருந்து விடக்கூடாது என்பதில் வெகு கண்டிப்பாக இருப்பார்கள் என்றார். மேலும் இவரின் கையில் முழங்கை அருகே பெரிய தழும்பு ஒன்று இருந்து போனது. அதை நீக்கி விட்டு வாருங்கள் என விடாப்பிடியாக கூறிவிட்டனர். அதற்கென பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிறகு தழும்பு போக வழியிருக்கிறது, ஆனாலும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளால். கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் சொல்லி விட்டனர் என்றார். இப்பெண்ணின் தந்தையோ அதெல்லாம் வேணாம், நீ உள்ள வேலையைப் பார் என்று கூறியிருக்கிறார்.

பெரிய விமான நிறுவனங்களில் தென்னிந்தியப் பெண்களே இல்லாது இருக்க இதுவே காரணம். என்ன வெள்ளாவி வைத்தாலும் நம்மவர்கள் வெள்ளையாக ஆக முடியாது. இதை விடலாம். வெளிநாட்டு விமான நிறுவனங்களில் ஆப்ரிக்க பெண்கள் பணி புரிவதை நானும் கண்டிருக்கிறேன். இங்கு மட்டும் என்ன இப்படி ஒரு நிபந்தனை ? எல்லாம் சினிமாவில் தான் நடக்கும் போலிருக்கிறது , பார்வதி நடித்து வெளிவந்த மலையாள ‘உயரே’வில் அவரின் காதலன் முகத்தில் அமிலம் வீசி அவரின் வாழ்க்கையை முடக்கி விடுவான், எனினும் ஒரு விமான நிறுவனம் அவருக்கு விமானப் பணிப் பெண்ணாகவே வேலை கொடுப்பார்கள்.! விமானப் பயணிகள் அனைவரும் அவரின் மன உறுதியைப் பாராட்டுவர்.! ஹ்ம்.... எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் ! #ஏர்ஹோஸ்ட்டஸ்