Sunday, May 14, 2017

வடக்கின் வசந்தம் (El Norte)


டெரி' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் 'எல் நார்ட்டி' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர். மாயன் பழங்குடியினர் அண்ணனும் தங்கையுமாக பிழைக்க வழியின்றி வட அமேரிக்காவுக்கு சட்ட விரோதமாக பயணம் செய்வது பின்னர் அங்கேயும் வாழ இயலாது பல இன்னல்களுக்கு உள்ளாவது என்ற பிரச்னையைப்பற்றியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் படம். போய்ச்சேருவதற்கு நேரமாகிவிட்டது. அத்தனை ட்ராஃபிக்கில் சிக்கி சென்று அரங்கு நுழைந்து இருக்கை தேடி அமர்வது என்பதை படத்துடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட தமிழினத்திற்கும் இது போன்றே இன்னல்களும் இடர்ப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.

குவாட்டமாலயிலிருந்து வட அமெரிக்கா நோக்கி பயணிப்பது அதுவும் சட்டவிரோதமாக என்பது தற்கொலைக்கு சமம். கண்டவுடன் சுட்டுவிடுவர் இல்லையேல் தலையைக்கொய்து விடுவர். மெக்ஸிகோ'விலிருந்தும் இது போன்ற சட்டவிரோத நகர்வுகள் சகஜம் என்பதால் பெரிய சுவர் எழுப்பியிருக்கிறார்கள் . ட்ரம்ப் கூட அதைப்பற்றி கேலியாக ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

இப்படி பயணிப்பவரை அமெரிக்க எல்லை வரை கொண்டு சேர்ப்பதற்கு கயோட்டிகள் என்றழைக்கப்படும் உள்ளூர் கடத்தல்காரர்கள் உதவுகின்றனர். தலைக்கு 100/200 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துகொண்டு (அதுவும் உத்திரவாதமில்லை!) அடுத்த கரை வரை கொண்டு சேர்த்தவுடன் அவர்களின் பணி முடிந்துவிடும், பிறகு சென்றவர்கள் பாடு, வசிப்பதும் மடிவதுமென.

பயணம் என்பது அடர்த்தியான காட்டு மிருகங்கள் வசிக்கும் காட்டின் ஊடே. வழிப்பறி கொள்ளைகளும் , சகஜமான கொலைகளும் வழக்கமாக நடக்கக்கூடியவை. யாரும் கேள்வி கேட்பார் இல்லை. ஹெலிகாப்டரில் வளைத்து வளைத்து ரோந்துப்பணிகள் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து கொண்டிருக்கும். சந்தேகத்துக்குரிய வகையில் யாரும் சென்றால் கைது/கொலை.இந்த என்ரிக்கே/ரோஸா இருவரும் தெரிந்த ஒருவரின் பெயர் சொல்லிக்கொண்டு இக்கரை வரை வந்து சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் அவரைத்தேடிப்பிடிப்பது என்பது படாத பாடு. அதற்குள்ளாக இவர்களின் அமெச்சூர்த்தனமான முகம் கண்டு ஏமாற்ற நினைக்கும் கயவர்கள். பின்னிலும் அதிலொருவன் நைச்சியமாகப்பேசி இரவில் காடு வழி கொண்டு சேர்க்கிறேன் எனச்சொல்லி பணத்தைக்கையாட எண்ணுகிறான். அவனை அடித்து மீண்டு வருவதற்குள் இருவருக்கும் போதும் போதுமென்றாகிவிடுகிறது.( சில ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சில சட்ட விரோதப்பயணிகள் விமானத்தின் டயரில் அமர்ந்துகொண்டு பயணிப்பதாக செய்திகள் வந்திருந்தன )

ஒரு வழியாக அந்த தெரிந்த நண்பரை ஒரு சிறிய ஓட்டலில் சந்திக்கிறான். தொடர்ந்த கெஞ்சல்களுக்குப்பின் வட அமெரிக்காவிற்கு அவர்களை கொண்டு செல்ல சம்மதிக்கிறான். இருப்பினும் காட்டு வழியல்ல. சில பயன்படுத்தாத/புழக்கத்தில் இல்லாத பழைய டனல்கள் (குழாய்கள்) வழியாக. பாதுகாப்பானது, யாராலும் சந்தேகிக்க இயலாது என்றெல்லாம் கூறி தலைக்கு 100 டாலர் வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கிறான். மூக்கில் கர்ச்சீஃப் கட்டிக்கொள்ள கூறி கிட்டத்தட்ட பல கிலோமீட்டர்கள் இருக்கும் அந்த காட்டை குழாய்கள் வழி கடக்கச் சொல்கிறான். வேறு வழியின்றி அவர்களும் செல்ல ஒத்துக்கொள்கின்றனர். அடுத்த பக்கம் வெளியே நீங்கள் வரும்போது அங்கே நான் உங்களுக்காக காத்து நிற்பேன் என்கிறான்.

உள்ளே நுழைந்தால் ஒரே கும்மிருட்டு, வழியே தெரியவில்லை. கையிலிருக்கும் டாச்சை அடிக்கிறான் என்ரிக்கே. அத்தனை குப்பை கூளம், பூனைகள் இறந்து கிடக்கின்றன. பெயர் தெரியாத பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன. பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த வழி சென்றே ஆகவேண்டியிருக்கிறது.கொடிய பயணம். யாருக்கும் வாய்க்கக்கூடாதது/.கொஞ்ச நாட்கள் முன்னால் கருட புராணம் வாசித்துக்கொண்டிருந்தேன் ( சும்மாதான் வாட்ஸப்பில் கிடைத்த பிடிஎப்ஃ) இறந்த உயிர் பயணிப்பது பல லட்சம் காதம் என்றும் , பாதை அத்தனை கொடிது எனவும், அதுவும் அவரவர் செய்த பஞ்சமாபாதகங்களுக்கு ஏற்றாற்போல் அத்தனை சித்திரவதைகளும் பயணத்தில் கிடைக்குமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோன்ற நரகம் நோக்கிய பயணம் அவர்களுக்கு. மூச்சு விட வழியில்லை. பல கிலோமீட்டர்கள் முட்டி போட்டுக்கொண்டு கைகளை ஊன்றி தவழ்ந்தே செல்லவேண்டிய துயரம்.

வழியில் இடையில் எங்கிருந்தோ வரும் கூட்டமான எலிகள் கடித்துக்குதறத்தொடங்குகின்றன இந்த இருவரையும். தப்பிக்க வழியில்லை, திரும்பிப்போவது என்பது இயலாத காரியம். கைகளை உயர்த்தியோ இல்லை உடலை வளைத்தோ எலிகளைத்தவிர்ப்பது என்பதெல்லாம் செய்யவே இயலாது. கொடுமை என்றால் அப்படி ஒரு கொடுமை. கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நிமிடங்கள் தொடரும் அவலம். ஒரு வழியாக கைகளைக்கொண்டு அடித்தும் நசுக்கியும் பல எலிகளைக்கொன்று போட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். எப்போதடா இங்கிருந்து விலகிச்செல்வர் என பார்ப்போர் மனதை கரைக்கிறது.

ஒருவழியாக குழாய்களின் முடிவு தெரிகிறது, வெளிச்சம். குழாயின் தொடுவாய் சென்றடையும் போது அமெரிக்க ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறது , இவர்கள் வெளிவரும் குழாயின் முகத்துவாரத்தில் .விக்கித்து உள்ளுக்குள்ளேயே பதுங்கிக் கொள்கின்றனர். இந்த அவலம் சிறிது நேரம். ஒரு வழியாக ஹெலி சென்றதும் குழாயின் வெளியே வந்து அமர்கின்றனர். சொன்னது போல அந்த கயோட்டி' அங்கே நிற்கிறான்மீண்டு வந்தவர்களை ஒரு ஏஜண்ட்டிடம் ஒப்படைக்கிறான். அந்த ஏஜண்ட் இதுபோன்ற சட்டவிரோத பயணிகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதற்கும் காசு வாங்கிக்கொண்டு தான். உள்ளூர் ஓட்டல்களில், துணி தைக்கும் நிறுவனங்களில், கட்டிட வேலைகளுக்கு என இவர்களை வைத்துக்கொண்டு சீப் லேபர்களை சப்ளை செய்கிறான். எந்த நேரமும் அமேரிக்க குடியுரிமை இந்த நிறுவனங்களுக்கு ரெய்ட் வருவது என்பது சகஜம், அங்கனம் வரும்போது பிடிபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனை , நாடு கடத்துதல் இன்னும் என்னென்னவோ தண்டனைகள். (பங்களாதேஷ் மக்கள் இப்படித்தான் இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கின்றனர். பாம்பேயில் பால் தாக்கரே ஆட்சி வந்ததும் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.)

எங்கு சென்றாலும் நிம்மதியின்மை. குடியுரிமை இல்லாது ஒரு மருத்துவமனைக்கோ இல்லை பொது இடங்களுக்கோ செல்வது என்பது இயலாத காரியம் . வேலை முடிந்து விட்டால் அந்த ஒரு அறைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம். இருப்பினும் உள்ளூர் அமெரிக்கர்களை விட ஏகத்துக்கும் குறைவான சம்பளமே. வேலைக்கு சேர்க்கும் முதலாளிகளும் இதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அவர்களுக்கு தேவையானதெல்லாம் சீப் லேபர்ஸ்.! யார் வந்து பிடித்துக்கொண்டு போனால் என்னவென விட்டுவிடுவார்கள். ஏனெனில் இப்படி நாளொன்றுக்கு வருபவர்கள் ஆயிரக்கணக்கில். அப்படி அரசாங்கம் பிடித்துக்கொண்டு போனவர்களின் குழந்தைகளை அநாதை விடுதிகளுக்கு விற்றுவிடுவான் இந்த ஏஜண்ட். அதுமட்டுமின்றி கூட வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த விவரம் தெரிந்து போலீஸுக்கு தகவல் சொல்லி பிடித்துக்கொடுத்து பணம் சம்பாதிப்பர் சிலர்.சொல்லொணாத்துயரம். சொந்த நாட்டை விட்டு பஞ்சம் பிழைக்க/ உயிர் பிழைக்க வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வது என்பதெல்லாம் அனுபவித்துப்பார்ப்பவர்க்கு தெரியும் . இந்தப்படம் எண்பதுகளில் வெளிவந்திருக்கிறது. இதே அரங்கில் வரிசையாக உள்ளூர் இஸ்ரேலிய தூதரகம் அவர்கள் நாட்டு திரைப்படங்களை திரையிட்டனர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அது போல இந்தப்படமும். ஆஸ்கர் நாமினேஷன் ஆகியிருக்கிறது இரண்டொரு விருதுகளையும் வென்றிருக்கிறது.


சம்பாதிப்பதுஅங்கேயே செலவாகிவிடுகிறது , சேமிக்க ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் நிலையற்ற தன்மை.சலிப்பு மேலிடுகிறது இருவருக்கும். இடையில் ரோசா வேலை செய்துகொண்டிருக்கும்போது மயங்கி விழுகிறாள். என்ரிக்கே'விற்கு சிக்காகோ செல்ல ஒரு பெருமாட்டியின் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. க்ரீன் கார்ட் வாங்கித்தரவும் சம்மதிக்கிறாள். சிக்காகோ செல்ல ஆயத்தமாகிவிட்ட நிலையில் ரோசா'வின் மரணம் என்று வாழ்க்கையில் மீண்டும் ஒரு சுழற்சியில் சிக்கிக்கொள்கிறான் என்ரிக்கே.

யூட்யூபில் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.முழுதும் பார்க்க இயலாமலேயே போகும். அத்தனையும் துயரம்.
.

2 comments:

 1. How Cruel you are to compare your traffic jam with those people who really suffer. I am just joking. Could you give me the "Karudapuranam" PDF link and still do you believe in those?

  ReplyDelete
  Replies
  1. hm... i expect someone ask this. as a city animal I can have only this much of hardships, cant even realize the one they (in movie) faced.

   PDF link don't have it.believing ????...hahhaaha

   Delete