Friday, February 24, 2012

ஒரு கவிதை



ஒரு கவிதை
தன்னை எழுதிக்கொள்ள

சொற்களை எதிர்பார்த்து

காத்துக்கொண்டிருக்கிறது.

என்னிடம்.


இடையே வந்த தென்றல்

கொஞ்சம் அதன் முடியை

மயிலிறகு கொண்டு

நீவிச்சென்றது


அவ்வப்போது பெய்த

சிறு மழைத்துளிகள்

கலைந்த முடிகளை

சிறு கற்றைகளாக்கிச்சென்றது


அக்கற்றைகளிலிருந்து

வடிந்த மழைத்துளிகள்

காதோர மணிகளில்

தொக்கி நிற்க, அதில்

சூரியன் தன் முகம்

பார்த்துச்சென்றது.


இன்னும் தான்

உனக்குப்போதுமான

சொற்கள்

கிடைக்கவில்லையா

என அக்கவிதை

என்னை கேலி

செய்துகொண்டிருக்கிறது.


ஒரு புன்முறுவல்

கிடைத்தால்

இந்தக்கவிதை

முழுமை பெறும்

யாரேனும் அதனிடம்

சொல்வீர்களா..?!


 . 

Saturday, February 18, 2012

என் ஆசிரியனைக்கொல்ல



எனக்கும் ஆசைதான்
என் ஆசிரியனைக்
கொல்லவேணுமென்று

என்ன செய்தாலும்
தவறு கண்டுபிடிப்பார்
எவ்வளவு சரியாக எழுதினாலும்
பிழை கண்டு சொல்வார்

நேரத்தாமதங்களை அவர்
ஒருபோதும் அனுமதித்ததேயில்லை
வீட்டுப்பாடங்களை முடிக்காமல்
வந்தால் முட்டி நிச்சயம் அடுத்தநாள்

ஒப்பிட்டு பேசியே
நாள் முழுதும் ஓட்டிடுவார்,
எரிச்சல் கிளம்பினும்
வாய் திறந்து
ஏதும் சொல்ல இயலாது

அரை மதிப்பெண்ணில்
தவறவிட்ட முதலிடத்தை
எப்போதும் சுட்டிக்காட்டுவார்

காற்றிறக்கிய மிதிவண்டியை
உருட்டிச்செல்லுமவரை
குறுகுறுப்புடன் பார்த்து மகிழ்வேன்
இருக்கையில் வேம்பின்
பிசினை ஒட்டி வைத்து
அவரின் கிழிந்த வேட்டியை
கண்டு மகிழ்வேன்

பிற நண்பர்களுடன் கூடி
கொஞ்சம் அசட்டுத்தைரியத்தில்
அவர் பெயரை கல்லறையில்
எழுதிவைத்தும் இருக்கிறேன்.

வாங்கிச்சரிபார்த்து
மதிப்பெண் இட எத்தனித்த
அவனின் நோட்டுப்புத்தகத்தில்
என் கவிதை
எங்கனம் வந்தது ?


.

Tuesday, February 7, 2012

தோனி – நாட் அவுட்



வருடிச்செல்லும் மயிலின் இறகினையொத்த இசையைப்பற்றி இப்போதுதான் ரசித்தகணத்திற்குள் இன்னுமொரு கூக்ளி ராஜா சாரிடமிருந்து “தோனி” வழியாக.முதலிலேயே சொல்லிவிடுகிறேன் , நீங்கள் ஒரு “நெஞ்சத்தைக் கிள்ளாதே”வையோ “மூடுபனி”யையோ அல்லது ஒரு “முள்ளும் மலரும்” போன்ற இசையை எதிர்பார்த்து இங்கு வந்திருப்பீர்களானால் உங்களை ராஜா இந்தத்தடவை திருப்திப்படுத்த மாட்டார் என்றே சொல்லுவேன்.கொஞ்சம் வித்தியாசமாக, கதைக்களனுக்குப் பொருத்தமான இசையாகத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த “தோனி-நாட் அவுட்”-ன் பாடல்கள் அனைத்தும்.அதிகப்பாடல்களும் இல்லை மொத்தமே நான்கு பாடல்கள்.அனைத்தும் ஒவ்வொரு ரகம்.ஒன்றோடொன்று கலக்காத Different Genre. ராகதேவனுக்கு படைப்பதில் உள்ள ஆனந்தம் வேறேதிலுமில்லை, எனினும் பாடல்களைக்கேட்டு வாங்குபவருக்கே அதிஉன்னத பாடல்கள் கிடைத்திருக்கின்றன என்பது அவரின் எண்பதுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.உதாரணத்துக்கு ஸ்ரீதர் படங்களுக்கு ராஜா சார் இசைத்தது,பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் போன்றோரின் படங்களில் அவர்கள் “சபரி” தேர்ந்தெடுத்த நெல்லிக்கனி போல அவரின் இசை ரசிகர்களுக்கெனெ தேர்ந்தெடுத்த பாடல்கள் என்றென்றும் ராகதேவன் மற்றும் அந்த இயக்குனர்களின் பெருமை பேசிக்கொண்டுதானிருக்கிறது. அவ்வகையில் பிரகாஷ்ராஜ் நல்ல ரசிகராயிருந்த போதிலும், நல்ல தெரிவாளராக  இருக்கிறாரா என்றால் மிஞ்சுவது கொஞ்சம் ஏமாற்றமே.! 




சின்னக்கண்ணிலே

ஷ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் பாடிய துள்ளலிசைப்பாடல். என்னைக்கேட்டால் இந்த இருவரும் “ முன்பே வா என் அன்பே வா “ பாடலை விட இந்தப்பாடலை அருமையாகப் பாடியிருக்கின்றனர் என்றே சொல்லுவேன். நரேஷ் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்று நினைக்கும்போது எனக்கு சிலிர்த்துத்தான் போகிறது. பனிக்கால அதிகாலையில் அனைவருக்குமே உரித்தான கரகரப்பான குரலில் , இருப்பினும் பிசிறு ஏதும் தெரியாமல் தெளிவாகப் பாடியிருக்கிறார்.( ஹ்ம்,,,பாட வைத்தது யாரு..?!:-)) ).  ‘கண்ணுக்குள் நிலவு’ படப்பாடல் “ஒரு நாள் ஒரு கனவு” போலவே இதிலும் பியானோவின் இனிய சீன மணி போன்ற இசைக்கோவையுடன் தொடங்கும் பாடல் , பின்னர் அந்த பியானோவின் ஒலித்துள்ளல் பாடலின் இறுதி வரை இருவரின் குரலோடும் சேர்ந்தே பயணிப்பது தென்றலின் மென்மையை உணரச்செய்யும் அற்புதம். பாடலின் கட்டமைப்பு ஐரோப்பியன் பாணியில் அமைந்த ஒரு Church Choir ஆகத்தான் இருக்கிறது. Verse and Chorus என்ற அவர்களின் பாணியில் அமைந்த பாடல் இது. Verse –ஐ ஷ்ரேயா கோஷல் தொடங்க Chorus- பின் தொடர்கிறது. 0:54-ல் தொடங்கும் Choir சட்டெனெ முடிந்து பின்னர் வயலின் மற்றும் ட்ரெம்பெட்டின் இசைக்குப்பின்னரும் தொடர்கிறது Choir. தமிழனுக்கு ஒரு புதிய அனுபவம்தானிது. இடையிடையே வந்து செல்லும் புல்லாங்குழல் இசை எந்த இடத்திலும் ஷ்ரேயா’வின் குரலை மீறிச்செல்லாமல் பாடலுக்குள் புகுந்து செல்லுதல் இன்னும் அழகு. எங்க நம்ம நரேஷக்காணமேன்னு கொஞ்சம் நம்மள நினைக்கவைத்த ராஜா சார் , அவரை இதோ நானும் பாட்டுல இருக்கேன்னு அறிமுகப்படுத்துகிறார் 2:11 ல்,கொஞ்சம் அடிக்குரலிலேயே ஆரம்பிக்கிறார் ,ஒரு வேள ராஜா சார் என்ன சொல்லுவாரோன்னு பயந்துக்கிட்டே அடிக்குரல்ல ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு :-) . 

அவர் இசையமைத்த பாடல்களில் இரண்டு சரணங்களுக்குமிடையில் அவர் நமது கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு இதுவரை நாம் காணாத, பிறரால் காண்பிக்க இயலாத ஒரு இசைவெளி’க்கு Interludes மூலமாக அழைத்துச்செல்வார் ராஜா. அவர் இசையமைத்த அத்தனை பாடல்களிலும் இந்தப்பயணம் இனிதே நிகழும்.வெறுமனே கண்ணை மட்டும் மூடிக்கொண்டு நம் கையையும், மனதையும் அவரிடம் கொடுத்து விட்டால் , ஒரு கண்ணில்லாதவனை அழைத்துச்சென்று , திடீரென அவனுக்கு கண்ணைக்கொடுத்து, பிறகு அவன் தன் வாழ்நாளில் எப்போதுமே பார்த்தறியாதவற்றைக்காட்டி அவனை அனுபவிக்க வைத்துவிட்டு, அந்த போதையிலேயே அங்கேயே தங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் பிறகு அங்கேயே விட்டுவிடாமல் Interludes முடியும்போது மீண்டும் இந்த உலகிற்கே அழைத்து வருவது என்பது ராஜா சாரால் மட்டுமே சாத்தியம்.

அப்படியான ஒரு அற்புத Interludesஐ இந்தப்படத்தின் எந்தப்பாடல்களிலும் காணக் கிடைக்கவில்லையெனினும் இந்தப்பாடலில் அவர் Choir மூலமாக அந்தக்குறையை தீர்த்துவைக்கிறார். எனினும் இந்த Choir Style முயற்சி அவர் ஏற்கனவே “பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் “கோடைக்காலக்காற்றே” பாடலில் பரீட்சித்துப்பார்த்ததுதான்.!
ஷ்ரேயாவின் குரலுக்கு அவ்வப்போது இடையே வந்து இதம் சேர்ப்பது புல்லாங்குழல் என்றால் நரேஷின் குரலுக்கு பதம் சேர்க்கிறது Synthesizer. 2:33 ல் ஆரம்பிக்கும் ஒரு Interlude ‘இதயம்’ படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் பழயபாடல் போல் உருக்கொண்ட “ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லே “ பாடலின் Interlude ஐ ஒத்திருக்கிறது. அந்தப்பாடலில் 2:46 ல் ஆரம்பிக்கும் Interlude அப்படியே எடுத்துக் கையாளப் பட்டிருக்கிறது இங்கே. ஒண்ணு பண்ணுங்க, இந்த “சின்னக்கண்ணிலே”வை கொஞ்சம் Tempo-வைக்குறைச்சு கேட்டுப்பாருங்க “ஏப்ரல் மேயிலே” வந்துரும்..! :-)




தாவித்தாவிப்போகும்

Opening Music- ல் கிட்டாரும் மணியும் Synthesizer மாக சேர்ந்து ஒலித்து பின்னர் வயலினுமாக ஆரம்பிக்கும் இந்த ராஜா சாரின் குரலில் இருக்கும் பாடல் உங்களைத்தாலாட்டும். இந்தப்பாட்டுக்கு Guitar ல Chords எடுக்கச்சொன்னா என்னால எடுக்கமுடியும்.ஏன்னா அவ்வளவு எளிமையாக இருக்குங்கறத சொல்லவர்றேன். “சின்னத்தாயவள்” என்று நாயகனில் இடம்பெற்ற தாலாட்டிற்குப்பின் இதுதான் நல்ல தாலாட்டு என்றே தோன்றுகிறது எனக்கு. Pathos ஆக இசைக்கப்பட்டிருக்கும் இந்தப்பாடல் தாலாட்டவும் தான் செய்கிறது. முதல் Interlude க்கென 1:16 ல் தொடங்கும் வயலின் , பின்னர் Double Bass உடன் இணைந்து கொண்டு இசைக்க ட்ரெம்பட்டின் அமுக்கமான ஒலியுடன் நம் மனதை கனம் கொள்ள வைக்கிறது. இரண்டாம் Interlude , Guitar உடன் தொடங்கி Violin இழைக்க இழைக்க மெருகு ஏறுகிறது.இந்தப்பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் இரண்டு Interludes களும் பாடலை விட்டு வேறு தளத்தில் பயணித்து பின்னர் பாடல் வரிகளுக்கென ஓய்கின்றன.  சின்ன சிம்ஃபொனி என்றே இந்தப்பாடலைக்கூறலாம் என்னுமளவிற்கு அதிக சங்கதிகள் விரவிக்கிடக்கிறது பாடல் முழுதும்..ராஜாவின் கூடவே பாடும் Violin நமக்கு ஒரு Feelஐ உருவாக்கி நம்மை பாடலோடு ஒன்றத்தான் வைக்கிறது.





விளையாட்டா படகோட்டி

இந்தப்பாடலுக்கு இரண்டு Versions இருக்கு, Male Version க்கு ஹரிஹரனும் , Female Versionக்கு ஷ்ரேயாவுமாக. எனக்கென்னவோ ஷ்ரேயாவின் Version தான் Better ன்னு தோணுது. மேலும் இந்தப்பாடல் முழுக்க “விருமாண்டி”யில் ஷ்ரேயாவும் , கமலும் சேர்ந்து பாடின “ஒன்ன விட” பாடலின் பாணியிலேயே அமைந்தது போலவே இருக்கிறது.பாடல் தொடக்கத்திலிருந்து இடையிலும் , முடிவிலும் கூட அதே பாணியிலேயே தான் , Treatment செய்யப்பட்டிருக்கிறது. Rustic Style ல் Chorus உடன் ‘தந்தனத்தன தந்தன்னா’ என்று தொடங்கும் இந்தப் படகோட்டியின் பாடலில் , ஆழியில் ஆடும் ஓடம் போல் நாமும் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க இயலவில்லை.இந்தப்பாட்டு முடிஞ்ச பிறகும் Loop-ல் வைக்கப்பட்டது போல திரும்பத்திரும்ப என் தலைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது  நாள் பூராவும் , ஏதோ போதை ஏறி பின்னர் இறங்காமல் , அதையே இன்னும் அனுபவித்துக் கொண்டேயிருக்கவேணும் என்பது போன்ற உணர்வை இந்தப்பாடல் தருகிறது. கூடவே இசைக்கப்படும் வயலினுடன் , Sarod-ம் கூடவே சேர்ந்து இசைக்கப்பட்டிருக்கும் என்றே எனக்குப்புலப்படுகிறது கேட்கும் போது. அலையில் மேலேறிக்கீழிறங்குவது போல , சட்டென்று அல்ல, கைதேர்ந்த படகோட்டியின் படகில் பயணித்தால் , அவன் அலையின் முகடுகளுக்கேற்ப படகை திறம்பட செலுத்துபவன் போல ராஜா சார் இசைத்திருக்கிறார் இந்தப்பாடலை. தவறியும் கீழே விழுந்துவிடாமல் அதே நேரம் உங்களை முழுதும் அந்த அலைக்கழிப்பிலேயே வைத்திருப்பதும் இந்தப்பாடலின் சிறப்பு. பல விதமான ஏற்ற இறக்கங்களுடனான நோட்ஸ்களுடன் Violin ன் கற்றைகளால் இசைக்கப்பட்டிருக்கிறது இந்தப்பாடல். இசைத்த Interludes களும் இந்தப்பாடலில் பாடலை விட்டு வேறு திசையில் பயணிக்காது பாட்டின் Tempo விற்குத்தக்கவே வந்து செல்கிறது.

இந்தப்பாடலைக்கேட்பதற்கு நீங்கள் உங்கள் மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.எந்த மனநிலையிலிருப்பினும் உங்களை பாடலின் Mood அதன் திசையில் பயணிக்கவைக்கும் , வழிதவறவிடாமல்.

Male Version- ஐப்பற்றிக்கூற வேண்டுமெனில் , ஹரிஹரனுக்கு பிருகா பாடக்கூடிய குரல்.அதனால் அவர் நிறைய Yodelling- கிற்கு அதிகம் இடம் கொடுப்பார்.பாடலில் அது இல்லாத போதும் வரிகள் முடிந்தபின்னருமான ராகத்தை தொடர்ந்து பாடிக்கொண்டேயிருப்பார் , நல்ல உதாரணத்துக்கு “பொய் சொல்லக்கூடாது காதலில்” பாடலைக்கேட்டீர்களானால் எளிதில் விளங்கும்.அந்த Extra Fittings ராஜா சாரிடம் எடுபடுவதில்லை.அவர் எதையும் , பாடலுக்குத்தேவையானவற்றை மட்டுமே நறுக்கிக்கொடுக்கவைப்பார். அது போல அமைந்தது தான் “ காசி” படத்தில் ஹரிஹரன் பாடிய அத்தனை பாடல்களும், அவரின் இயல்பிலிருந்து முற்றிலும் மாற்றி தமக்கெனப் பாடச்சொல்வார் ராஜா. ( சுருக்கமாகச்சொன்னால் பாடுவதில் சுதந்திரம் கிடைக்காது ராஜா’விடம் :-)). அதனாலேயே இந்த Male Version ல் எனக்கு உடன்பாடில்லை.




கிரிக்கெட்டில் தோனி எப்பவுமே ஸிக்ஸர் அடிக்கிறதில்ல. Ones and Twos மற்றும் சில சமயங்களில் Boundry-யுமாக அடிப்பது போலவே ராஜா சாரின் இசை இந்தப்படத்திற்கு. நாமும் கொஞ்சம் காத்திருக்கலாம் படத்தின் பின்னணி இசையை அனுபவிக்க..!



Saturday, February 4, 2012

தேஜாவு ( Déjà vu )



நான் நிலைப்புடன் நிற்க
உலகம் என்னைச்சுற்றுகிறது
வளைந்து நெளிந்த பிம்பங்கள்
உருவத்தில் தன் இயல்பைவிட
பெரிதாகின்றது
அல்லது சிறிதாகின்றது
இப்போதெல்லாம் என்னை நானே
வெளியிலிருந்து காண முடிகின்றது

எனது கவலைகள் அனைத்தும்
துப்புரவாக நீக்கப்படுகிறது.
என் முழு இதயமும்,
மனமும் உடலும்
உச்சக்கட்ட உணர்வுக்கும்
ஒளிவெள்ளத்துக்கும்
எழுச்சி அடைந்து நிற்கிறது.
எல்லையற்ற பேரானந்தமும்
நம்பிக்கையும் நிறைந்து
நிற்கச்செய்கிறது.

இப்போதெல்லாம்
என்னைக்கொடுமைப்படுத்த
பிறரால் இயல்வதில்லை
அடக்குமுறையை என்னில்
ஏவ அவர்களிடம் ஆற்றல்
இருப்பதில்லை
என்னைத்திட்டமிட்டு கொலை
செய்வதும் அவர்களால்
இயலாது போய்விட்டது.

இது ஏற்கனவே கேட்டது,
இல்லை இது புத்தம் புதியது,
அதி மகிழ்ச்சி,
உச்சக்கட்ட உணர்ச்சிக்குவியல்,
சில சமயம்
கடவுளிடமிருந்தும்
எனக்கு செய்தி வருகிறது.

அந்த ஒளிவெள்ளம்
மீண்டும் எப்போது வரும்
அது கொடுக்கும் இன்பமும்
பெரும் மகிழ்வும்
எனக்கு மிகவும்
பிடித்துதான் போய்விட்டது.



.