Saturday, June 22, 2013

குறை கூறும் என் கவிதை

என்னை எழுதி விட்டுச்சென்றுவிட்டாய்
குறை கூறுகிறது என் கவிதை


உனக்கென காட்சிகளை முன்வைத்தேன்
அதனுள் வலிந்து
ஒரு சிறு பறவையையும் பறக்கவைத்தேன்
மெல்லிய சிறகுகளின் காற்றை
உணரச்செய்தேன்
தின்று எறிந்த பழத்தின் கொட்டைகளை
முன் அலகால் கொத்தி வரச்செய்தேன்
அலகினின்று கீழ் விழும் அதன் அதிர்வை
உணரச்செய்தேன்
நீயருகில் வரும்போது
அதை விர்ர்ரென்று பறந்து செல்லப்
பணித்தேன்


இவையாவற்றையும் கண்கொண்டுணர்ந்து
எழுதச்செய்த என்னை
வேலை முடிந்ததும் அந்தப்பறவை போலவே
விட்டுப்பறந்து செல்வது ஏனோ ?


எழுதி முடித்ததும் உறவை முறித்துக்கொள்தல்
கடவுளுக்கும் கவிஞனுக்கும்
வழமை போலிருக்கிறது.


.

Sunday, June 16, 2013

எதுதான் கவிதை?


எழுதறதெல்லாம் கவிதைதானாங்கற சந்தேகம் எல்லோரையும் போல எனக்குள்ளும் வந்து போய்க் கொண்டுதானிருக்கிறது. அதிக வாசிப்புக்கு நேரம் கிடைப்பதில்லை. அதோடு அணுக்க நண்பர்கள் எல்லாம்  நீங்க நிறைய ஆங்கில இலக்கியம் வாசிங்க, இன்னும் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்று. என்னதான் முயற்சி செய்தாலும் , தொழில் சார்ந்த விஷயங்களைத்தவிர்த்து  , வேறேதையும் பிற மொழிகளில் வாசித்து அதன் உட்கருத்தை உணர்ந்து கொள்வதென்பது எனக்கென்னவோ கம்பளிப்பூச்சி ஊருவது போலவே தோன்றுகிறது. புதிய விஷயங்கள் தொடமுடிவதில்லை, தோற்ற காதலையும், தோற்கவிருக்கும் காதலயும், வெற்று மனத்தையும்,ஏகாந்தத்தையும்,சுற்றியுள்ள பறவைகளைப் பற்றியும் மட்டுமே எழுத முடிகிறது திரும்பத் திரும்ப. எனக்குள்ளாகவே ஒரு சலிப்பு வந்துவிட்டதை கண்கூடாக உணரமுடிகிறது. என்னதான் எழுதுவது? எதுதான் கவிதை ?.

தொடர்ந்தும் விட முடியாத சில சொற்களிலும், சில வாக்கியங்களிலும் பலர் சிக்கித்தவிப்பதை பலமுறை நான் கண்டிருக்கிறேன். அதெல்லாம் க்ளீஷேக்களாகி அவர்களையே சில நேரங்களில் சாய்த்துத்தான் விடுகிறது. எனக்கும் கூட பல நேரங்களில் அவ்வாறு நேர்ந்துவிடுகிறது.

ஒரு பிரபல எழுத்தாளர்,நிறைய அச்சுப்பத்திரிக்கைகளில் பணியாற்றியவர், இப்போது வெகு விமரிசையாக வாசிக்கப்படும் இணையப் பத்திரிக்கை வைத்து நடத்துபவர் , தம்பி நீங்க எழுதுவதெல்லாம் கவிதையே இல்லை , இனி உரைநடைகள் எழுதிப்பழகுங்கள், உங்களுக்கு கவிதைக்கான மொழி கைகூடவில்லை என்று ஒரு பெரிய குண்டைத்தூக்கிப்போட்டார், என்னிடம் மட்டுமல்ல , என்னோடு சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை முகிழ்க்கும் எழுத்தாளர்களிடமும் இதையே சொல்லி பயமுறுத்தியிருக்கிறார். எப்போதும் நாங்கள் முகிழ்ப்பவர்கள் தான் , அமேரிக்கா எப்போதும் மூன்றாம் உலக நாடுகள் என்றே நம்மை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதைப்போல.மொழி ஆளுமை,புதிய சொற்கள் எதுமில்லாது எழுதுவது என்பதெல்லாம் கவிதையேயல்ல என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார்.

காலை முதல் மாலைவரை, அமேரிக்கர்களிடம் பேசிப்பேசியே , அவர்தம் தாய்மொழியில், சரிக்கட்டி வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடும் நிலையில், புதுச்சொற்களுக்கும், மொழி ஆளுமைக்கும் எங்கே போவது ?! எனக்கு சத்தியமாக தெரியவில்லை. உணர்வதையும், தமக்குள்ளான புழுக்கத்தையும், விடுபட்டு நிற்க நினைக்கும் உணர்வுகளையும் , நான்கு வரிகள் சேர்ந்தாற்போல் எழுதிவிட்டுச்செல்வதில் என்ன குற்றம் என்று புரியவில்லை. இங்கு யாரும் தமிழை எழுதி வாழவைக்க வந்துவிடவில்லை. ஏதோ அகஸ்மாத்தாக தமிழனாகப்பிறந்து விட்ட படியால் தான் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறோம். என்னோடு பணி செய்யும் பிற மொழிக்காரர்களும் இதையே சொல்லிக் கேட்டிருக்கிறேன் நான்.

எதெல்லாந்தான் கவிதை,எதெல்லாம் தெளிவாக ஒற்றை வாசிப்பில் புரிகிறதோ , அதெல்லாம் கவிதையே இல்லை என்று கூப்பாடு போடுவதற்கு ஒரு கூட்டமே காத்துக்கிடக்கிறது.‘எழுதுபவனுக்குப் புரியாவிட்டாலும்  வாசிப்பவனுக்குப் புரிந்து விடும் அது’ என்று பிரபல கவிஞர் எழுதிவைத்துவிட்டுப் போனதையும் நான் வாசித்திருக்கிறேன்.

பல படிகள் பின்னோக்கிச்சென்று , சொல்லவந்ததை நேரிடையாகச்சொல்லாமல் , வாசிப்பவனைத் தவிக்கவிட்டு, சுழலவிட்டு பின்னர் அவனாகவே அதற்குள் ஒரு பொருளைக் கண்டுகொள்வதான சிலருடைய கவிதைகள், இன்னபிற கவிதைகள், பிரபல நாளிதழ்களின் தலைப்புச்செய்திகளை வெட்டி வெட்டி நறுக்கி ஓட்டி, படியிறங்கிச்செல்வது போல எழுதி வைத்துவிடுவது சிலருடைய கவிதைகள். நல்ல வாக்கியங்களை மடித்துப்போட்டு சொற்களை வரிசைப்படுத்தி வைத்துவிட்டு, அதையே கவிதை என்பவரும் பலர். சிறுகதைக்கான திடீர் திருப்ப முடிவுடன் இருக்கும் சில கவிதைகள். 

ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் துளியும் சம்பந்தமின்றி காயப்போட்ட மீன்களைப்போல சில கவிதைகள் விரவிக்கிடக்கும், நாமாக கூட்டுச்சேர்த்து வாசித்துப் புரிந்துகொள்ளும்படியான சில கவிதைகள், எதையோ தாமாக நினைத்து இதுவரை கண்டேயிராத சொற்களை, சிலம்பிலும், குறுந்தொகையிலும் மட்டுமே காணக்கிடைக்கும் சொற்களை வைத்து, சொற்சிலம்பாட்டங்களாக சிலருடைய எப்போதுமான கவிதைகள் எனப்பலவகைகளாக விரவிக்கிடைக்கிறது வெளியெங்கும். இல்லாத பின்னவீனத்துவத்தை தமிழில் முதலில் அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று படுத்துபவர்கள் பலர். அதே கேள்வி இப்போதும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது எதுதான் கவிதை ?

என் மனம் பாடநினைப்பதை, எனக்குள்ளாக நான் சொல்லிக்கொள்ள விழைவதை, நான் கண்ட,கேட்ட விஷயங்களை எனக்குத்தெரிந்த மொழியில், சொற்களில் எழுதி வைத்துவிட்டுப்போகிறேன். பிறர் எதிர்பார்ப்புக்கென எழுத ஆரம்பித்து என்னுடைய பாதுகாப்பான சூழலிலிருந்து விடுபட்டு , புதிதாக ஏதோ செய்வதில் ,செய்ய உந்தப்படுவதில் எனக்குத்துளியும் சம்மதமில்லை. 

.

Monday, June 10, 2013

எலிப்பத்தாயம்

தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன்
அந்த எலி இந்த நேரத்தில் தான் வருகிறது.
வந்தவுடன் கவிழ்ந்து கிடக்கும் பீங்கான் குவளையை
உள்ளுக்குள் எதேனும் இருக்கிறதா என
சுற்றி ஒரு வட்டம் போட்டு பார்த்துவிட்டு
அடுக்களையின் அடுத்த இடங்களுக்கும் செல்கிறது.
ஒன்றை விடுவதில்லை
மீந்து கிடக்கும் ரொட்டித்துண்டுகள்
சிந்திய பால் , கடித்து மீதம் வைத்த கடலை மிட்டாய்,
தக்காளியின் மேல் செதில்கள்,
உரித்துப்போட்ட பூண்டுத்தொலிகள் என
இருக்கட்டும் என்று விட்டுவைத்தேன்
ஒன்றும் கிடைக்காத நாட்களில்
பரணில் கிடக்கும் வீணான உளுத்துப்போன
கட்டைகளை பற்கள் கொண்டு ராவுவது
தொடர்ந்தும் கேட்கும்.
இன்று விடக்கூடாது என்று
“வீட்டிற்குள் தின்றுவிட்டு வெளியே போய்ச்சாகும் “
என்று குறிப்பிட்டிருந்த பாஷாணம் வாங்கிவந்தேன்.
இன்றும் வருகிறதா என்று பார்த்துவிட்டு
நாளை வைக்கலாம் என்று ஓரமாய்
பாக்கெட் பிரிக்காமல் வைத்துவிட்டேன்.
வந்தது,இரவில் அதே நேரத்திற்கு
எனக்கும் எழுப்புமணி இல்லாது விழிப்பு வந்துவிட்டது.
என்றும் போல அதே குவளையை வளைய வந்து விட்டு
அடுக்களையின் அனைத்து மூலைகளுக்கும்
சென்று வருவது புலப்பட்டது.
சிந்தியவை துடைக்கப்பட்டிருந்தது
மீந்தவை காலியாக்கப்பட்டிருந்தது
தொலிகளின் சுவடே இல்லை..
இருப்பினும்
பாக்கெட் பிரித்து வைக்க மனமேயில்லை எனக்கு.

என்ன ஒன்று
பூனைகளைப்போல அத்தனை இலகுவில்
நம்மருகில் வந்து பழகுவதில்லை எலிகள்.


.

Tuesday, June 4, 2013

நீயும் நானும்எதிலும் முதல்
என்பது
கடைசி வரை
ஞாபகத்தில் இருக்கிறது


ஒவ்வொரு முறையும்
எனை நீ
விலக்கும்போதும்
மீளச்சேர்வாய் என்ற எண்ணமே
என்னை உயிர்ப்புடன்
இருக்க வைக்கிறது


 இந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம்
நீ திரும்பக் கொடுக்கும்போது
எவையும் என்னைத் தைக்காத வகையில்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்

                                                                       
                                                    தினமும் பிணத்தை
                                                    எதிர்நோக்கி அதை
                                              வெளிச் சொல்லவியலாத
                                               வெட்டியானின் புழுக்கம்
                                                     உன் வருகையை
                                                     நோக்கிய எனதும்.

                                                             


.