Wednesday, August 16, 2017

புதிதாய்ப்பிறந்த மகள்


நேற்று புதிதாய்ப்பிறந்த கேகேயின் புது மகளைக்காண இன்று ஓசூர் சென்றிருந்தேன் செந்திலுடன். அரைமணி விழித்திருப்பை பார்க்க வாய்க்கவில்லை. பாட்டியின் மடியில் கைகளை அசைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். வரவேற்ற பெரியசாமி 'குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்' தொகுப்பைக் கொடுத்து வாசித்துப் பாருங்கள் என்றார். வெளியில் தேநீர் அருந்த வந்த போது அடை மழை. கவிஞனுக்கு பிடித்தது வெறும் சிறுமழை. ஒரு மணிக்கும் கூடுதல் மழை. ஒதுங்கி நின்றோம் நானும் செந்தில் மற்றும் முகிலனும். 

முகிலன் இந்தோனேஷியக்கதைகளை விலாவரியாக விளக்கிக் கொண்டிருந்தார். எட்டு மணி நேர வேலை மட்டும்.பதவி உயர்வே தேவையில்லை, நான் இப்படியே ஓய்வுறும்வரை பணீயாற்றவே விருப்பம் என எழுதிக்கொடுத்து விட்டு வேலை செய்யலாமாம். ஹ்ம். அதெல்லாம் நம்ம ஐ.டி' யில் நடக்கிற காரியமா ? ஆறுமணி நேரப்பயணம் கடந்தே பணிக்கு செல்லவும் வீடு திரும்பவும் அத்தனை ட்ராஃபிக். பொதுப் பேருந்துகளே இல்லை என சொல்லிக்கொண்டே இருந்தார். மழை வலுத்தது. குளம் போல கணுக்கால் வரை நனைத்தது. வீட்டுக்குள் மழை புகுந்துவிட்டதாம் எனக்கூறி விட்டு சென்றுவிட்டார்.

பொழுது போகவில்லை மழையின் ஒச்சை அடங்கமறுத்தது. கிளி ஜோசியக்காரர் மழைக்கு ஒதுங்கி தமக்கு தேநீர் அருந்த வந்திருந்தார். வலுவான மழை. பெட்டியைக்கீழே வைத்துவிட்டு குடித்துக் கொண்டிருந்தார். உள்ளுக்குள் கிளி மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. செந்திலுக்கு ஒரு சிறிய விருப்பம். ராம் கிளி ஜோசியம் பார்க்கலாமா? (என்னைக்கேட்டா கிளிக்கு வேண்ணா ஜோசியம் பார்க்கிறேன்.) வேணுன்னா நீங்க பாருங்க என்றேன். தேநீர்க்கடை உரிமையாளரிடம் அனுமதி வாங்கி கடை விரித்தார். நீங்க உட்காரணும்னு அவசியமில்லை. தட்சிணை வைத்து விட்டு பேர் சொல்லுங்க என்றார். கிளி வெளியே வந்தது, யார் பேருக்கு சீட்டு எடுக்கிறாய் என்றார். செந்திலின் காலடியைத் தொட்டு விட்டு வந்து மூன்றாவது சீட்டை எடுத்துக் கொடுத்து விட்டு தாமாக உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டது.

பலன் சொல்லி முடித்தார். செந்தில் ஏதும் பேசவில்லை. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன். 'ஐயா நீங்க இந்த கம்பளத்தார்' வகையைச் சேர்ந்தவரா என வினவினேன். ஆமா தம்பி, இப்பல்லாம் யார் தம்பி ஜோசியம் பார்க்கிறா, தொழில் செய்யத்தெரியாதவ ரெல்லாம் இதை செய்ய ஆரம்பித்து விட்டனர். சிபாரிசுகள் மற்றும் அறிந்தவர் மட்டுமே இப்போது தம்மிடம் பார்க்க வருகின்றனர் என்றார். கைரேகையெல்லாம் பார்ப்பீங்களா ..இல்லை தம்பி அது எனக்கு பழக்கமில்லை. கிளியை நீங்க பழக்கினீங்களா என்றேன். இல்லை இது பழக்கியே வைத்திருந்த கிளி அதை வாங்கி இப்போது இருபது வருசமா வைத்திருக்கிறேன், சோறு,பழம், நெல்லு இதை மட்டும் நேரா நேரத்துக்கு கொடுத்துவிட்டால் அது பாட்டுக்கு இருக்கும் தம்பி என்றார். 

அவருக்கும் பொழுது போகவில்லை.மழை விடாது பெய்து கொண்டிருந்தது. கேகேவிடம் சொல்லிவிட்டு இப்படியே பெங்களூர் திரும்பலாம் என்று நினைத்தோம் பின்னரும் இன்ன பிற நண்பர்கள் மருத்துவமனை வந்திருப்பதை அறிந்து ஜீன்ஸை மூட்டு வரை ஏற்றிக் கட்டிக்கொண்டு நீந்தி சென்றடைந்தோம். 

திரும்ப பெங்களூர் வரும்போதும் அடை மழை. பேருந்தில் நிற்கவும் இடமில்லை. கடைசி இருக்கை அருகில் சென்று ஒண்டிக்கொண்டேன். பெரியசாமி'யின் கவிதைப்புத்தகத்தை விரித்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு கவிதை

தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாகக்கூறிச்சென்றான்
வர்ணங்களைச் சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவரப் பணித்தான்
மகாபாரதம் தொடரில் கண்ணுற்ற
ரதம் ஒன்றை செய்யத்துவங்கினான்
ஒளிர்வில் வீடு மினுங்க
நின்றது பேரழகோடு


மற்றொரு நாளில்
புரவிகளை உயிர்ப்பித்துப்பூட்டினான்
அதிசயித்து ஊர் நோக்க
வானில்
பவனி வந்தான்.

Friday, August 11, 2017

மெர்சல்


எண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை வைத்துக்கொண்டு சம்பளத்துக்கு கடனே என வாசிப்பார்கள்,கொஞ்சமும் கேட்டே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இசைத்தது போலிருக்கும். இங்கும் அதே போல கைலாஷ் கேர்,ரஹ்மான், தீபக்,சத்யப்ரகாஷ், மற்றும் தீபா என ஆஸ்தான வித்துவான்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கோஷ்டி கானம். புதிய கற்பனை என்ற வஸ்துவே கரைந்துவிட்டது போல என்ன தான் சொல்வது ?. இடையிசை எல்லாம் ரஹ்மான் தானா என கேட்கவைக்கின்றன.

பொதுவாக முதல் பாடல் வெளியீடு என்பது மிரட்டலான பாடல்களாகவே இருக்கும். அதுவே இப்படி என்றால் ?! சொய்வு தெரிகிறது. அவரே இசைத்த பழைய பாடல்களின் அத்தனை சாயல்களும் தெள்ளத் தெளிவாக தெரிவது சலிப்பு. கேட்கப்போனால் 'ரெட்ரொ' என்ற சப்பைக்கட்டு பதில் வரும். பொதுவாகவே ரஹ்மானுக்கும் விஜய்'க்கும் அத்தனை ராசி இருப்பதில்லை. அவர் இவருக்கென இசைத்தவை எல்லாம் காற்றோடு என்றோ கரைந்து போய்விட்டன. அத்தோடு இதுவும் ஒன்றாகும்.

இப்போது ராசைய்யாவும் மலையாள 'க்ளிண்ட்'ல் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்பதே நிஜம். பாஸ்ட் லாரல்ஸ்ஸுடன் (Past Laurels) இருந்துகொள்ள வேண்டியது தான்,
#மெர்சல்

பாடலின் சுட்டி


https://www.saavn.com/p/album/tamil/Aalaporaan-Thamizhan-From-Mersal-2017/vKRNQcDdNqQ_


.

Thursday, August 10, 2017

வெண்ணிலாவும் மின்னலும்


தீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்தில தமிழ்ல பேசும் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில். அதே படம் முழுக்க வரும் ஃப்ரென்ச்சுக்கு இல்லை. என்ன கொடுமை. ஒண்டுமே விளங்க இல்ல. :) தமிழர்களுக்கு அண்டர் ஆக்டிங்கெல்லாம் வரவே வராது. இங்கும் அதுவே. அந்தோனிதாசனும் அப்படியே. உறுமிக்கொண்டிருந்த புலியை கூண்டில் அடைத்துவைத்த போதும் உறுமத்தான் செய்யும் உள்ளுக்குள்ளாவது. அதை வெளிக்காட்டவே தெரியவில்லை. யாழினி'யாக நடித்தவர் தேவலை. 

இதையே ஒரு நல்ல தமிழ் இயக்குனரிடம் கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக வடிவமைத்திருப்பார். அதெல்லாம் சரி எதுக்கு யானையை இரண்டுமுறை காட்டுகிறார். இலங்கைக்காட்டில் யானையா மதம் கொண்டது அடப்பாவமே.. நந்திக்கடல்லயே எல்லாம் முடிஞ்சுபோய்ட்டுது என்னும் காட்சி பரவாயில்லை. பிறகு வீறு கொண்டு ஒரு வீரமிகு பாடல் தமிழில் பாடுகிறார். ஹ்ம்.. என்னவோ அந்தோனி தாசன் உருவத்துக்கு,உடலுக்கு குரல் கொஞ்சமும் பொருந்தவேயில்லை. பூனைக்குரல் போல இருக்கிறது, இயல்புக்குரலே அது தானா இல்லை டப் செய்ததா?!

சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பவரிடையே காதல் வருவது, எதோ ஒரு அட்ஜெஸ்மண்டில் கூடவே இருக்கும் சிறுபெண் மீது பாசம் வருவது என்பதெல்லாம் கடைந்தெடுத்த க்ளீஷே. ஃப்ரெஞ்ச் குடியுரிமை அதிகாரி தலைவனை நோக்கி கேள்வி கேட்கும் காட்சிகள் 'ஸ்கார்ஃபேஸை' ஞாபகப் படுத்துவது போல இல்லை என்பது அல்ல பிரச்னை,அதன் அருகில் கூட அந்தக்காட்சி போகவில்லை என்பதே வருத்தம்.

தமிழ்ப்படம் என்பதாலோ என்னவோ அரங்கில் அத்தனை கூட்டமில்லை. குளிரைக்கூட்டிக் கொண்டு ஏசி ஓடிக்கொண்டிருந்தது. நோ ஃபையர் ஸோன்' என்று அறைகூவல் விடுக்கிறார். ஹ்ம்.. சம்மதிக்கலாம் அதன் பிறகு அந்தக்கோடு என்னவாயிற்று. உள்ளுக்குள் போய் குண்டுமழை பொழியவே அந்தக்கோடுகள். கடைசிக் காட்சிகளை மிகச்சரியான தமிழ்ப்பட உச்சக்கட்ட காட்சிபோலவே அமைத்திருப்பது சலிப்பு. சிவதாஸன் அத்தனை சுகமில்லை.#தீபன்

.
 

Saturday, July 29, 2017

I'm just talking to myself
இந்தப்பாடலைப்பாடிய லீட் ஸிங்கர் 'செஸ்ட்டர் பெனிங்டன்' இறந்து கிடந்தார். இந்தப்பாடல் வெளிவரும் நாளில் 20 ஜுலை 2017. லிங்க்கின் பார்க்' புகழ்பெற்ற ராக் பேண்ட் பாய் பேண்ட். லைட்டாக கொஞ்சம் பாப்' ஸ்டைலில் இந்த ராக் பாடல். வலுக்கட்டாயமாக உச்சஸ்த்தாயியில் பாடியே ஆகவேணும் என்று பாடியதைப்போல , எல்லா ராக் பாடல்களும் அப்டித்தாங்ணா.


வரிகள் எல்லாம் சூப் பாய்ஸ் லைன்ஸ்தான். ‘ எனக்குள்ளேயே பேசிக்கொள்கிறேன்' அதத்தான் செய்ய முடியும் வேறு என்ன செய்வது ? I'm just talking to myself இதே குழுவின் இன்னொரு பாடகரும் இதே போல் தற்கொலை செய்துகொண்டார் சில ஆண்டுகளுக்கு முன்னர். இசை கொல்லுமா? ஹ்ம்.. கொலையும் செய்யும் போலிருக்கிறது


இந்தக்காட்டுக்கத்தலை பொறுத்துக்கொள்ளும் மனமிருந்தால் பாடலை ரசிக்கலாம். Pure Rock Band Song. இந்த வீடியோ ஸீக்வென்ஸை கட் செய்து முடித்து இயக்குநர் யூட்யூபில் ஏற்றி சில மணிகளுக்குப் பிறகே இறப்பு நிகழ்ந்திருக்கிறது. I'm just talking to myself கடைசியில் ஒலிக்கும் அந்த கிட்டார் பீஸ். மாயம்.

கடந்த இரண்டு நாட்களாக லிங்கின் பார்க்' குழுவிற்காக ட்ரிப்யூட் என 'விஎச்1’ சேனலில் தொடர்ந்து இக்குழுவினரின் பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாக இந்தப்பாடல். மேலும் இக்குழுவினரின் பாடல்கள் மட்டுமே அடங்கிய 'டாப் 20’ பல முறை ஒளிபரப்பாகியது.

The truth is, you turn into someone else
You keep running like the sky is falling
I can whisper, I can yell
But I know, yeah I know, yeah I know
I'm just talking to myself
Talking to myself

மிஸஸ் டவுட்ஃபையரில் நடித்த (அவ்வை சண்முகி ஆங்கில மூலம்) ரொபின் வில்லியம்ஸும் இதே போல தற்கொலை செய்துகொண்டே இறந்தார். அதீத மன அழுத்தம் காரணமாக. அப்போது நம்ம கமல் அவரைக்கடிந்து கொண்டார். (இங்கயும் கமல் வந்துட்டாரா ?!) அதீத மன அழுத்தமோ அல்லது தாங்க முடியாத துயரோ ஏற்படும்போது காட்டுக்கூச்சல் போட்டுக் கத்தினால் அத்தனை ரிலீஃப் ஆக இருக்கும். செய்து பாருங்களேன். பிறகேன் செஸ்ட்டர் இந்த முடிவை எடுத்தார் ??? இந்தக்குழுவிட ம் இல்லாத பணமோ ,புகழோ,  ஏகத்துக்கு ரசிகர் கூட்டமோ என வேறேந்தெக்குழுவிற்கும் இல்லை. எல்லாருமிருந்தும் இப்படி ஒரு முடிவு.!
# I'mJustTalkingToMyself

Sunday, July 23, 2017

நீர்மூழ்கி - வார் சிம்ஃபொனிஇசைக்கு மயங்காதோர் உண்டோ இவ்வுலகில்
. இதோட நூறு முறைக்கும் மேலே கேட்டிருப்பேன் இதை. பெர்ஃபெக்ட் வார் சிம்ஃபொனி...03:40ல் எங்கிருந்தோ வருவது நம்மைக்கடந்து செல்ல ஆறு நொடிகள் ஆகிறது. அதே போல 0420லும். ஹ்ம்.. இடையிடயே உருட்டுக்கட்டைகளை மொஸைக் தரையில் உருட்டிவிட்டது போல உருண்டோடும் இசை
 


எம்ப்பி3 கிடக்குதானு பாத்து தரவிறக்கி டிவீடி ப்ளேயரில ஒலிக்கவிட்டா நல்ல சலூன் கடைல வெட்டிப்போட்ட இது மாதிரி கேக்குது...அடச்சை ..அடக்கண்றாவியே.. ஹ்ம்.. ஐநாக்ஸ்ல தான் கேக்கணூம்..ஹிஹி... 0530-ல் ஒரு வாரியாக முடிந்தேவிட்டது என்று நினைக்கும்போது மீண்டும் ஆரம்பிக்கிறது இன்னமும் அதி வேகத்தில...அட அட...  நோலா.. எப்டீல்லாம் செலக்ட் பண்றான்டா இவன்... ஹான்ஸ் ஸிம்மர் இசைக்கு இவ்வாண்டு ஆஸ்கார் உறுதி

.

Sunday, July 16, 2017

I Support Rahman!
எனக்கு முன்னால் பிறந்த ஜெனரேஷன்கள் வேணுமானால் இந்திப்பாடல்களின் பிரியராக இருந்திருக்கலாம். அந்தக்காலக்கட்டத்தில் பிறக்காத/வாழாத என்னால் அதைப்பற்றி கருத்து எதும் கூறவியலாது. இங்கு இந்திப்பாடல்களை ஒவ்வொரு ஐ போனிலும், ஆன்றாய்டிலுமாக பொதிந்து வைத்துக்கொண்டு அலையும் பெண்டுகள்/ பிள்ளைகள் பற்றி என்ன சொல்வது? ராசைய்யாவும் ரஹ்மானிடமும் உள்ள இசைச்செறிவு அவர்களின் இசையில் நான் கேட்டதில்லை. வழக்கம்போன்ற இந்துஸ்தானியில் எந்தவித முயற்சியும் செய்யாது அதை மெருகூட்டக்கூட இயலாது அதன் உண்மை வடிவிலேயே கொடுப்பதே அவர்களின் வழக்கம். ஐயா சாமிகளே கொஞ்சம் இசை பற்றிய அறிவு இருப்பதாலேயே இதை எழுதுகிறேன். சில இசைக்கருவிகளை மேடையில் வாசிக்குமளவிற்கு ஞானமும் உண்டு.

கொஞ்சமும் மாற்றாது அதை அதன் வடிவிலேயே கொடுக்க செவ்வியல் கச்சேரி மேடைகள் இருக்கின்றன. கற்பனை கலக்காத ,மெருகூட்டப் படாத ஒன்று இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன?. கூட இருக்கும் நண்பர்கள் கேலி செய்வர். எப்படி தமிழ்ப்பாடல்களை மட்டுமே சிலாகிக்கிறாய் , விட்டால் இங்கிலீஷுக்கு தாவிவிடுகிறாய் என்று. செறிவு இல்லை மக்கா உங்கள் இசையில். புது முயற்சிகள் இல்லை. விதிவிலக்கு அமித் த்ரிவேதி மட்டுமே. அவரை எத்தனை பேர் விரும்புவர் என விரல் விட்டு எண்ணி விடலாம். சமகாலத்தில் இசைக்கும் அமித் தவிர எவரின் இந்தி இசையையுமென்னால் இரண்டு நிமிடம் கூட கேட்கவியலாது. ஷங்கர் எஹ்ஸான் லாய் செய்வதெல்லாம் கத்துக்குட்டிகள் செய்து விடும் நம்முலகில். நதீம் ஷ்ரவன் பாடல்கள் எல்லாம் பழஞ்சரக்கு.

நவ்ஷாத், சலீல் சௌத்ரி போன்றோரின் இசை கேட்டதேயில்லையா என வினவுவர் என்னிடம். கொஞ்சம் கேட்கிறேன். அடிப்படையாகவே வட ஹிந்தியர்களின் மனப்பாங்கு அங்கனமே. மொழி என்றால் இந்தி , பாடல்கள் என்றால் இந்திப்பாடல்கள், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே இசை. அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நான் கவனத்தில் கொள்கிறேன். ஒட்டுமொத்த குழு மனப்பான்மையாக வேற்று மொழிப்பாடல்கள் என்றாலே கேவலம் அவர்களுக்கு. அதிலும் சவுத் இண்டியன் பாடல்கள் என்றால் 'கல்லை தகர டப்பாவில்' போட்டு குலுக்குவது என்ற பதம். இதையே நான் பத்து ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் கொஞ்சம் சொலவடையையாவது மாத்துங்கடா.! அடிப்படை வெறுப்பு மண்டிக்கிடக்கிறது அவர்களின் மனதில்.

அடிப்படையில் வட ஹிந்தியர்களுக்கு தாய்மொழிப்பற்று என்பது பற்றி கொஞ்சமும் ஞானம் இல்லை. அவர்கள் குஜராத்தியோ /மராட்டியோ/இல்லை போஜ்புரியோ எல்லாம் நமது தாய் மொழியில் வேணும் என்று கேட்கும் மனப்பாங்கே இல்லை. எதுவாயினும் இந்தியில் கிடைத்தாற் போதும். பெங்காலிகள் இந்திப்பாடல்ளை பொதிந்து வைத்துக்கொண்டு கேட்பதை பல நேரங்களில் விமர்சித்திருக்கிறேன். ஏன் பெங்காலியில் பாடல்களே இல்லையா, இல்லை உருவாக்குபவர்கள் அனைவரும் ஹிந்திக்கு இடம் பெயர்ந்து விட்டனரா என்று.

ராசைய்யா என்ன காரணத்தினால் இந்திப்படங்களுக்கு இசைக்கவில்லை என்ற காரணம் எனக்கு தெரியவில்லை. வந்த வாய்ப்புகளை வேண்டாமென்றாரா இல்லை , அத்தனை உச்சத்திலிருந்த அவரால் இந்தியில் கவனம் செலுத்த இயலவில்லையா என்றும் தெரியவில்லை. அப்படி அங்கும் இசைத்திருப்பாரானால் ஒரு வேளை இந்த வெற்றுக்கூச்சல் அப்போதே கூட கிளம்பியிருக்க வாய்ப்பிருக்கிறது. அமிதாப் பலமுறை சொல்லியிருக்கிறார் ராசைய்யாவை ஏன் இந்திப்படவுலகு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று.

இதே ரஹ்மானிடம் என்டிடீவி'யில் ஏன் இசைப்பள்ளியை சென்னையில் தொடங்கினீர்கள் என்று கேட்டார் பேட்டி எடுப்பவர். எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. வட நாட்டு ஊடகங்களில் பணி புரிபவர்கள் கூட அந்த வெறுப்பை அடியாழத்தில் சுமந்து கொண்டே திரிகின்றனர். அவரவர் அடையாளத்தோடு வாழவே துணைக்கண்டம். சக புரிதல்களோடு கூடி வாழவே இந்தக்கட்டமைப்பு. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பெங்களூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முதல்வர் சித்தாராமய்யா தமிழர்களைப்போல மொழி உணர்வு கொள்ளவேணும் என அறைகூவல் விடுக்கிறார்.

எனினும் கலைஞர்களுக்கு மொழியில்லை. கேட்பவர்களின் அதை ரசிப்பவர்களின் மனநிலையும் அவ்வாறே மாற வேண்டும். #I Support Rahman.

Friday, July 14, 2017

பாஸு பாஸு பாஸுசோ அடிக்கடி வடமாநில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கும் போது எப்போதும் சொல்வார். முதலில் என்ன ஃபேஷனாக இருந்தாலும், புதிய மோஸ்தர்கள் முயற்சியாய் இருந்தாலும், நிகழ்ச்சிகள், இன்னபிற மற்ற ஊடக உத்திகள் எல்லாம் முதலில் பாம்பேக்கு வந்தபிறகு தான் சென்னைக்கு வருமென. (அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் அது வேறே விஷயம் ) அதே தான் இந்த பிக் பாஸும். என்ன மாறினாலும் இந்த காலனிய மனப்பான்மை நம்மை விட்டு மாறாது போலிருக்கிறது.

அத்தனையும் திறம்பட எழுதிய திரைக்கதைகள். கமலுக்கு வழக்கம் போல அவர் பாணியை கிஞ்சித்தும் மாற்றாது வெளிநாட்டு பாணியில் நடிக்கவேண்டிய கட்டாயம். என்ன ஒன்று மேனரிஸங்கள் ஏதும் இல்லை. கடல் மீன்களில் மார்லன் ப்ராண்டோ'வின் காட்ஃபாதர் ஸ்டைல் போல (குரலைச்செருமி உச்சந்தலையை சிறிதே சொறியும் )இங்கு ஏதும் செய்ய வாய்க்கவில்லை. அவ்வளவே. நான் இதுவரை ஒரு நிகழ்ச்சி கூடப் பார்த்ததில்லை,நேரமும் இல்லை. கமலின் பேட்டியும் ஆங்காங்கே தூவப்பட்டிருந்த சில காட்சிகளும் மட்டுமே பார்த்திருக்கிறேன். அத்தனை ஈர்ப்பு ஒன்றும் இல்லை. அடுத்தவர் வீட்டை படுக்கையறையை எட்டிப் பார்க்க விருப்பமில்லை என்றெல்லாம் சினிமா வசனம் பேசவெல்லாம் தோணலை. நேர விரயம்

கமலின் நிழல்/வாசம் கூட பிடிக்காத சாரு அந்த நிகழ்ச்சியைப்பற்றி இத்தனை ஏன் சிலாகிக்கிறார் என்று தெரியவில்லை. எழுதிக் கொண்டிருக்கும் புதிய புதினத்துக்கு ஏதேனும் இப்படி உத்திகள் கிடைக்குமாவென ஏங்குகிறார் போல. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் ஏற்கனவே வந்து வெளிநாடுகளில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக செய்யப்பட்ட/புனையப்பட்ட நிகழ்ச்சி தானிது. ஷரோன் ஸ்டோன் நடித்து வெளியான ஸ்லைவர், இன்னொரு ஜிம் கேரி நடித்து வெளியான (பெயர் மறந்துவிட்டது) போன்ற படங்களில் இயல்பில் கேமரா வைத்து முழுக்க முழுக்க லைவ்'வாக குடும்பம்/தனி மனிதன் போன்றோரைக் கண்காணிப்பதை பொழுது போக்காகக்கொண்ட புனைவுகளில் வெளியானவை.எல்லாம் வெளிநாட்டு சரக்கு. அதற்கு கமலே பிரதானம் என்பதில் ஒரு ஆச்சரியமுமில்லை. அவர் நடித்த ,இயக்கிய மேலும் மற்ற இயக்குநர்களின் அத்தனை படங்களும் ஏதோவொரு ஹாலிவுட் படங்களின் சாயலே.

அவருக்கு பணமுடை.நடிக்க வந்துவிட்டார் சின்னத்திரைக்கும் கூட. ஒரு படத்தில் சத்யராஜைப்பார்த்து ஒரு சின்னத்திரை கலைஞர் இப்படி ஏசுவார். எல்லாம் சரக்கு தீந்துருச்சுன்னா டெலிவிஷனுக்கு வந்து தான் ஆகணூம்னு. அதான். சரி விடுங்க. அவர் கொடுத்த பேட்டிதான் எனக்கு ரொம்பப்பிடித்தது. ஒரு வேளை அதுகூட ஸ்க்ரிப்ட் எழுதி இயக்கப்பட்டதாவென அத்தனை கச்சிதமான கேள்விகள்/பதில்கள். ஊடகத்திற்கு எத்தை விற்றால் பித்தம் தெளியும் என்ற நிலை. பார்வையாளனுக்கு அலுங்காம குலுங்காம அடுத்த வீட்டில என்ன நடக்குதூன்னு பாக்கணும்னு கொஞ்சம் குஜ்லி. அவ்ளவ்தான். விஜய் டீவியின் பங்குகளைப்பற்றி மனிகண்ட்ரொல்.காம்-ல் பார்த்தால் எல்லாம் விளங்கும். நமக்கு கதிராமங்கலம் முக்கியமில்லை. கச்சத்தீவு முக்கியமில்லை. உலகமே நாடகமேடை. அதில் அனைவரும் நடிகர்கள். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். அவளோடு சேர்ந்து நாமும் பார்க்கலாம். கொண்டாடலாம். வாக்களிக்கலாம். பாஸு பாஸு பாஸு என் பேரேதாண்டா பாஸூஊஊஊஊஊ.!.

Monday, July 10, 2017

'தலை விடுதலை'


'தலை விடுதலை' பெர்ஃபெக்ட் ராக் தம்பி அநிருத்திடமிருந்து. mettalicaவை hard rock cafe’யில் கேட்டது போல அத்தனை ஒரிஜினல். வெள்ளமெனப் பாயும் அற்புத ராக். என்ன ஆச்சரியம் இந்த முறை ராப்'போ ஹிப் ஹாப்'போ கலக்கவில்லை. சிக்கரி கலக்காத அதி உத்தம காப்பி. குளம்பி. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இப்படிப்பட்ட அதி தூய ராக் இசை அத்தனை பரிச்சயமில்லை. கேட்பதில்லை. இதே பிரச்னையில் விஐபி' யில் அந்தப்பாட்டு ராக்'கில் ஆரம்பித்த போதும் பின்னர் ராப் கலந்து பிளாக் காப்பியில் கொஞ்சம் பாலைக்கலந்து காப்பியாக கொடுத்தார். ‘வேலையில்லாப்பட்டதாரீஈஈஈ' அந்தப்பாடல். தமிழ் ரசிகர்கள் கேட்பார்களோ இல்லையோ என்ற சிறிய ஐயத்தில் எப்போதுமான பாணியில் அந்தக்கலவை நிகழ்ந்தது. அதே பாணியைத்தான் சந்தோஷ் நாராயணனும் செய்திருந்தார் 'நெருப்புடா'வில்.

ராக்'கிற்கு நம்முலகில் இன்னமும் ரசிகர்கள் உருவாகவில்லை என்பதே வருத்தம். இங்கு அதன் இலக்கணம் கிஞ்சித்தும் பிறழாமல் அடிதடியான ட்ரம்ஸ் பெர்குஷன்ஸ் மற்றும் மிக அதிர்வெண் அலைகள் கொண்ட எலெக்ட்ரிக் கிட்டார்கள் பொழிந்து நனைக்கவில்லை. தரைமட்டமாக ஆக்குகிறது. கரைந்து ஓடியே ஆகவேண்டும். மனதளவில் இன்னமும் தயாராகத தமிழ் கூறும் நல்லுலகம் இதை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்று இன்னமும் விளங்கவில்லை.

அலறும் குரல்கள், இன்னதான் சொல்கிறாரென்று சொற்களைக் கேட்கவிடாத கிட்டாரின் அரற்றல்கள், பின்னில் அதி உயர் டெசிபல்களைக்கொண்டு செவிப்பறை கிழியவைக்கும் இசை. இவையெல்லாம் இலக்கணம். அதே தான்! ராக்! இருப்பினும் ராக் இசைக்கலைஞர்களை மிஞ்சும் கிட்டார் கார்டுகள் எடுக்க இன்னமும் யாரும் பிறக்கவில்லை.

Never Ever Give up என்ற ஒவ்வொர் சொல்லுக்கும் இடையில் ஒலிக்கும் அந்த இசை,சுதி ஏற்றி அடுத்த என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ,அட்ரினலை பம்ப் செய்து வெடிக்க வைக்கும். ஒவ்வொரு சொல்லாக பின்னில் கிட்டாரும் அதையே பாடுகிறது. அலை கிளம்பி சிதறி அடித்து சுனாமி முடிவுற்றது போல உணர்வு. முன்னில் வெளிவந்த எந்தப் பாடலையும் நினைவுறுத்தாத பாடல் இது. அத்தனையும் ஒரிஜினல். அடித்துப்பெய்த மழை சட்டென ஓய்ந்து விட்டாற்போல ஒரு உணர்வு. இத்தனை ஒரிஜினல் ராக்' இசையை நம்ம சனம் ஏற்றுக்கொள்ளுமா ?! ஹ்ம்… 0241 லிருந்து 0253 வரை சொர்க்கம். இதுதான் பேஸ்லைன் பாடலுக்கு. இடையிடையே ஒலிக்கும் அந்த 'ஹா' ஆஹா!!

ஷரிஷ் ஸ்வாமிநாதன் இடையியே பாடினாலும் அநிருத்தின் குரலே அத்தனை இரைச்சல்களையும் கடந்து ஒலிக்கிறது. இங்கும் அருண்ராஜ் (நெருப்புடா) தவிர்க்கப்பட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.
 
மென்மையான பாடல்கள் எப்போதும் வெல்லும். இந்து மாதிரியான தமிழ் நெஞ்சங்களின் மொழியில் சொல்லுவதென்றால் இரைச்சல்கள் எப்போதாவது வெல்லும். இப்போது வெல்லும் இந்தப்பாடல்.

இம்முறை யூட்யூபில் வெளியாகாது சாவனில் வெளியாகி இருக்கிறது இந்த டீசர்! 


.

Sunday, July 9, 2017

down down.....இந்தக்குழுவின் பாடல்கள் இப்போது அத்தனை எடுபட மறுக்கிறது. எப்போது கேமிலா கேபலா நீங்கினாரோ அப்போதிலிருந்தே கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது, இப்போ அவர் 'crying in the club' என்று அழப்போய் விட்டார் :) , இந்தப்பாடலில் இடம்பெறாமல் போனதற்கு சரியானபதில் சொல்லாது,பரவால்ல அவங்க ஆல்பம் நல்லா வந்தா போதும் என்று மழுப்பியிருக்கிறார். இப்போது வெளிவந்திருக்கும் 'டவுன்' பாடல் உண்மையிலேயே டவுன் தான் :). Work from Home போன்றே இருப்பது க்ளீஷே
ஒரே மாதிரியான பாணியில் பாடல்கள் அமைப்பது என்ற வியாதி பிடித்தாட்டுகிறது. பாப்பில் ஆரம்பித்து பின்னர் கருப்பின ஒரிஜினல்களை வைத்து ராப்'பில் பாடவத்து பாடல் உருவாக்குவது என்ற பாணி சலிக்கிறது அம்மணிகளே. இந்த குழு மட்டுமல்ல பெரும்பாலும் இதே பாணியில் அத்தனை பாடல்களும் தொடர்ந்தும் வருவது சீக்கு ! ஐவரானோம் என்றிருந்து விட்டு கேமிலா நீங்கிய பின்னும் குழுவின் பெயரை இன்னமும் மாற்றாது ஃபிஃப்த் ஹார்மனி என்றே வைத்திருப்பதை மட்டும் வேணுமானால் மெச்சிக்கொள்ளலாம். Its Just a Fourth Harmony :) #downdown

.

Sunday, July 2, 2017

என்னுடன் இரு !

Stay !

இப்பல்லாம் ஹம்மிங் , ஹார்மனியில் ஆரம்பிக்கும் பாடல்களே இல்லாது போயிற்று, ராசையாவின் காலத்தோட போயிற்று அந்த அற்புதங்களெல்லாம். கிட்டதட்ட ஏகாந்தங்களிலெல்லாம் இந்த ஹம்மிங் வந்து கொல்லும். எகாவாக 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடலைச்சொல்லலாம் முள்ளும் மலருமிலிருந்து. ஆஹா..

இந்தப்பாடலும் ஹம்மிங்கிலேயே ஆரம்பிக்கிறது.இங்கு 'தங்கு என்னுடன்' என்கிறாள். அதே தொடராதா என்ற கேவல் நம்முள் எழும். முதல் 29 செகண்ட்களுக்கு வேறொரு ராகம். பின்னர் மெலியதான பாப்' இசையில் தொடங்கி பாடல் முழுக்க பயணிக்கிறது. தாளம் கணிக்க முடியாது வேறேங்கெங்கோ பயணித்தபோதும் ஒன்றிப்போக முடிகிறது. பிறகு புதிதாக ஆங்கிலம் பேசுபவர்களிடம் பேசுவது போல ஒவ்வொரு சொல்லாக ராப்'பில் (ஹிப் ஹாப் ஸ்டைல் கூட இது தான்) பாடுகிறார். கிட்டத்தட்ட சிம்ஃபொனி. ஒத்திசைவான இசையமைப்புகளில்லாத போதும் இருத்திவைத்து கேட்கவைக்கும் இசைக்கோவைகள்.

இது போல இந்த ராசைய்யாவின் பாடலில் எனக்கு இன்றளவும் சம்மதேமேயில்லாத சரணம் என்றால் 'நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று' என்ற பாடல், பல்லவி ஒரு ராகம் , சரணங்கள் இன்னொரு ராகம். இரண்டுக்கும் சம்பந்தமேயில்லாத தத்தமது தாளங்களில் பயணிப்பவை. இரண்டையும் இடையிசை கொண்டு இணைத்து இன்றளவும் கேட்க வைத்திருப்பார். ஒரே ராகத்தை வைத்துக்கொண்டு அதையே சோகத்துக்கும் ,மகிழ்வுக்குமாக இசைப்பது போல. தாளத்தை துரிதப்படுத்தினால் மகிழ்ச்சி, கீழிறக்கி மெதுவாக , பாடலில் குழையவிட்டால் சோகம் என கேட்பவரை மயக்கவைக்கும் அற்புதங்கள் நிகழும். கடவுள் தான் அற்புதங்கள் நிகழ்த்தவேணும் என்பதில்லை. இத்தகைய தருணங்களிலும் அது நிகழும். இது இடமாறு தோற்றப்பிழை அல்ல. தோற்ற மயக்கங்கள்.

ரஹ்மானும் இதுபோல பல செய்வார். மன்னிப்பாயா பாடலில் மிகத்தெளிவாக தெரியக்கூடியது அந்த பல ஏற்ற இறக்கங்கள் ஒரு வரி கொண்டு , பல ராகங்களில் ஒரு சொல்லை பாடவைப்பார். ஐந்து விதமான மன்னிப்பாயா, அடப்பாவி , இப்டீல்லாம் கேட்டா எந்தப்பய தான் மன்னிக்க மாட்டான். அப்டியும் அவன் மன்னிக்கலைன்னா அது மனுஷப்பிறவியே இல்லை.! ‘ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்; என்ற வரிகளை முதலில் கொஞ்சம் குழைவாகவும் , பின்னர் ஒரு நாள் சிரித்தேன் ஒரு நாள் வெறுத்தேன் , சரியா நான் இவ்வளவு கேக்றேன்ல, ஏன் மன்னிக்கமாட்டாய் என்ற கோபத்தில் கொஞ்சம் வேகம் எடுத்து பாடுவார் ஷ்ரேயா. இதே டெக்னிக்கில் தான் அத்தனை பாடல் போட்டிகளிலும் பாடச்சொல்லி பரீட்சை செய்வர் புதுப்பாடகர்களை.

இங்கே ஸ்டே'யில் அதையே பயன்படுத்தியிருக்கிறார் குளித்துவிட்டு சரியாக தலை துவட்டாமல் அப்படியே வந்து பாடும் அலஸ்ஸீயா ! இங்கு பாடலில் Clock is Ticking’ எனும்போதெல்லாம் பின்னில் கடிகார ஒலி.ராசைய்யா இப்போது 'நீ தானே பொன்வசந்தம்'ல் சற்றுமுன்பு பார்த்த' பாடலில் அத்தனையும் காலத்தின் அடிப்படையில் அமர்ந்திருப்பதால் பாடல் முழுக்கவே பின்னில் தாளம் கடிகார டிக் ஒலி தான். கூர்ந்து கவனிக்கலாம். காலத்தை கணிக்க கடிகாரம் தவிர மேறு மானி ஏதும் கிடையாதா ?! ஹ்ம்..

Make it on my own, but I don't wanna grow up
We can stay forever young

எப்போதும் இளமையில் இருக்கலாம் , இருந்துவிட இயலுமா, மனதிற்கு மட்டும் கடிகாரங்கள் இல்லை எப்போதும். அதே காலத்தில் உறைந்து போய்விடுகிறது. All you have to do is stay a minute , ஒண்ணும் வேணாம் எங்கூட இருந்தா போதும். ஆயிரம் காரணங்கள் சொல்லமுடியும் என்னுடன் நீ இருக்கவேணும் என்பதற்கு. என்ன செய்வது அதான் வாய்ப்பதில்லை.!

01:05ல் தொட்டவுடன் நொறுங்கும் கண்ணாடி மனது இப்படித்தான் சில கணங்களுக்காக வாழ்நாள் பூராவும் காத்துக்கிடக்கும் ஜீவன்கள். 02:53ல் காற்றலையில் கரையும் குரல் பாடலை ஏகாந்தத்தில் அனுபவிக்க விடும். அருகில் இருந்து கேட்கும் பாடலைவிட காற்றில் கலந்து பயணித்து தாமாக வருவது அதிகம் அலைக்கழிக்கும். எதிர்பாராமல் வந்து விழுகிறதல்லவா!

பல தருணங்கள் இப்படி ஒரு முழு வாழ்வையும் மூன்று நிமிடத்தில் முடித்துவிடுகிறார். இப்படி ஒரு மூன்று நிமிடத்தில் அத்தனையும் அனுபவித்து முடித்துவிடும் வாழ்வு கிடைக்குமா?! கூட்டிக்கழித்துப்பார்த்தால் வாழும் அறுபதாண்டுகளில் மிஞ்சக்கூடியது இப்படியான மூன்று நான்கு நிமிடங்கள் மட்டுமே.

உணவு மேசையில் இருக்கும் உப்பை/சர்க்கரையைக்கொட்டி அதில் பேரெழுதி விளையாடுவது பின்னர் மேசையில் நீர்க்கோலம் இடுவது என்பதெல்லாம் வேறு எதையோ யோசித்துக் கொண்டு செய்யும் செயல்கள். இதெற்கெல்லாமாக என்னுடன் இரு Stay….!! 

.
 

Sunday, June 25, 2017

மேற்கே நடந்தேன்பாலையை நடந்தே கடந்த முகமது
கந்தனிடம் மயிலைக்கேட்டிருக்கலாம்
சிலுவையுடன் பல கல் தொலைதூரத்தை
தோளில் சுமந்தே கடந்த ஏசு
அதே கந்தனிடம் தொற்றிக்கொள்ள
வேண்டியிருக்கலாம்

*** 

உன்
நிர்வாணத்தைப்
பார்க்கத்தூண்டும்
ஆடை

*** 

மலையில்
வளைந்து நெளிந்து
செல்கிறது பாதை
யாரைத்தேடி ?

*** 

காகம் அடைகாத்த
குயில் நீ
குயில் அடைகாத்த
காகம் நான்

*** 

மேற்கே நடந்தேன் இடித்தான் ஒரு கம்யூனிஸ்ட்
தெற்கே நடந்தேன் இடித்தான் ஒரு ஆர் எஸ் எஸ்
வடக்கே நடந்தேன் இடித்தான் ஒரு காங்கிரஸ்
கிழக்கே நடந்தேன் இடித்தான் ஒரு வஹாபி
குறுக்கே நடந்தேன் இடித்தான் ஒரு மாவோயிஸ்ட்
எம்பிக் குதித்தேன் இடித்தான் ஒரு பிஜேபி
சும்மா இருந்தேன் இடித்தான் ஒரு திராவிடன்

*** 

கிளிகள்
பேசத்தொடங்கியதும்
கூண்டுகளில்
அடைபட்டன

*** 

இன்மையை எழுதுகிறேன்
அதில்
இருக்கிறாய்
*** 

குடையை
மடக்கி வைத்துவிட்டு
மழையில் நடக்கலாம்
கொஞ்சம் குடையும்
நனையட்டும்

*** 


 மலைகள் இதழில் வெளியானவை

Wednesday, June 21, 2017

சர்வைவா!
எனக்கே தெரியாம சாயங்காலம் ஆறுமணிக்கே லிரிக்ஸ் வீடியோவோட பாட்டை ரிலிஸ் பண்ணி விட்டான் தம்பி அநிருத் :) நல்லவேளை 'நெருப்புடா' புகழ் அருண்ராஜ் காமராஜ் பாடவில்லை இந்தப்பாடலை. இல்லன்னா ஒரே க்ளீஷேவா போயிருக்கும். கவனமாத்தவிர்த்து விட்டான் தம்பி :) யோகிபி - திரும்ப வந்திருக்கார். அவரோகணம் கீழிறங்கும் ஸ்ருதிகள் இல்லாத பாடல் போல இதுவும் ஒன்று. ஒவ்வொரு நிமிடத்துக்கும் இடைவெளியில் மீண்டும் மீண்டுமாக மேலேயே பயணித்துக்கொண்டிருக்கும் பாடல். இப்டி வெச்சுக்கலாம் , யுவன் சரோஜால 'நிமிர்ந்து நில்' அப்டீன்னு ஒரு பாட்டு போட்ருந்தார். இந்தப்பாடல் கூட சொல்லலாம் (யுவனின் இன்னொரு பாடலும் அதேபோல மேல் ஸ்ருதியிலேயே நின்றுகொண்டிருக்கும் 'இறகைப்போலே அலைகிறேனே' இங்க காதல் வீழ்ச்சியைக்கண்டு விடக்கூடாது என்பதற்காக வெறுமனே மேல் ஸ்ருதி மட்டுமே,,மேலேயே முன்னேறிச்செல்லவேணும் என்று ..ஹிஹி ) அப்புறம் 'நாடோடிகள்' படத்துல நம்ம சுந்தர் சி பாபு பாடகர் 'சங்கர் மஹாதேவனை'ப்பாட வைத்து 'சம்போ சிவசம்போ சிவசிவசம்போ'ன்னு ஒரு பாட்டு போட்டிருந்தார்


இவையெல்லாம் ஒரு வகையிலான பாடல்கள், எழுப்புதல் கூட்டம் போல..ஹிஹி.. புரட்சி வெடிக்கும், வென்றே தீருவோம் துவண்டு விடல் கூடாது என்று அறிவுரை சொல்லாது உணர்வில் வெளிக்காட்ட வைக்கும் அற்புதப்பாக்கள் :) வணிக நாயகனுக்கு தோல்வி இல்லை என்பது போல எப்போதும் மேலேயே சென்றுகொண்டு இருப்பார். ஆஹா! என்னே ஒரு சிந்தனை!


இங்கு முகப்பிசை 'டெய்லர் ஸ்விஃப்ட்டின் - Say you'll remember me’ பாடலை ஞாபகப் படுத்துகிறது. ஸ்விப்ட்டின் பாடலில் “Standing in a nice dress,Staring at the sunset, babe “ இந்த இரண்டு வரிகளைப்பிசைந்து எடுத்து வைத்துக் கொண்டது போன்ற முகப்பிசை. பின்னர் தொடரும் அந்த லலலலா ல்லலாஆவும் :) இந்த ஒல்லிப்பாச்சி ஸ்விஃப்ட் இப்ப புதுசா பாட்டு ஒண்ணும் ரிலீஸ் பண்ணலை. இப்போதெல்லாம் சின்னக்குட்டி நாத்தனார்கள் தான் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். ஏரியானா க்ராண்டி அப்புறம் செலீனா கோமெஸ் (ஆஹா..ஹ்ம்) போன்ற சிறு பெண்மணிகள் ..ஹிஹி.. :)

யோகி பி இப்பதான் பொல்லாதவன்ல ஒரு ரீமிக்ஸ் ஐயா எமெஸ்வி'யின் 'எங்கேயும் எப்போதும்'னு பாடீருந்தார். என்னவோ அதையே ஞாபகப் படுத்துகிறது , பாடல் அதற்கு அருகில் கூட இல்லாத போதிலும், அவர் குரலும் பாடும் விதமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் . பாடலை இடையில் தம்பி அநிருத் தான் பாட்றான். இத்தனை முரட்டுக்குரலுக்குள் சிக்கி எலி போல எழும்புகிறது அவனின் குரல் . லல்லாலான்னு லல்லாபி பாட்றதெல்லாம் ராசைய்யா காலத்துலயே முடிஞ்சு போச்சே.. இப்ப திரும்ப தூசி தட்டி கொண்டு வந்துருக்கான் போல :) ஆனாலும் இந்த இடங்களில் இசை தெறிக்கிறது ட்ரெம்ஸும் முறுக்கேற்றும் எலெக்ட்ரிக் கிட்டாரின் பாஸுமாக. ஆஹா..! மேலும் 'சென்னை சிட்டி கேங்க்ஸ்ட்டா' பாட்டில் வரும் You ain’t got no goa beach You ain’t got no sharukh khan ,You ain’t got no India gate என்ற வரிகள் போன்று இங்கு 'முயன்றால் தான் சாத்தியம்' எனும் சில இடங்களில் தெரிவதும் குறை.

ஆனாலும் எவ்வளவு சொன்னாலும் நம்ம தர லோக்கலு 'ஆலுமா டொலுமா' மேரி இல்ல கண்ணு ! இந்த ராப்/ஹிப் ஹாப்பை எத்தன வாட்டி தான் கேக்றது ?! ஹ்ம்..! Gotta Getup ! #Surviva


Saturday, June 17, 2017

நாயினும் கடையேன்


இன்று பெங்களூரில் மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய மழை நிற்காது பெய்து கொண்டேயிருந்தது. நிகழ்ச்சி 0630க்கு எனினும் அத்தனை மழையில் ட்ராஃபிக் தொநதரவில் போய்ச்சேரவே 0635 ஆகிவிட்டது. உள்ளே நுழையும் போது மிகச்சரியாக புத்தக வெளியீடு தொடங்கிவிட்டது. பெங்களூர் இன்டர்நேஷனலில் நடைபெற்ற திரு தியோடர் பாஸ்கரனின் 'the book of indian dogs' நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். ராமச்சந்திர குகா வெளியிட்டார். பிறகு தியொடர் அவர்களின் பேச்சு. நாய்களில் இத்தனை வகைகளா?..என்னென்னவொ பெயர் சொல்லி அவைகளின் குணநலன்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

நிறைய சுவாரசியமான தகவல்கள். இந்தியாவில் போலீஸ் நாய்கள், ராணுவத்துக்கு பயன்படும் நாய்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தெரிவித்தார். இன்டியன் ப்ரீட்ஸ்களை தயார்ப்படுத்துவதில்லை. எகிப்து மற்றும் மொகஞ்சதாரோ காலங்களின் வரலாற்று குறிப்புகளை எடுத்து படங்களுடன் காட்டினார். தமிழ்நாட்டில் நடுகற்கள் நாய்களைப்பற்றியும் குறிப்பிடுபவனாக இருப்பதையும் காண்பித்தார். நாய்க்கென கோவில் கட்டியிருப்பது,நாய்களை தம் பிள்ளைகள் போலப்பார்த்துக்கொள்வது என தொடர்ந்தும் பேசினார். வெள்ளைக்காரர்கள் எப்போதும் இன்டியன் ப்ரீட்ஸ் ஒரிஜினல்ஸ் என அழைக்கத் தவறுவதில்லை

பழங்காலத்திலேயே நாய்களை வளர்ப்பு மிருகங்களாக வீட்டில் வைத்து பாதுகாக்கும் முறை இருந்து வந்தது. அவற்றின் கழுத்தில் பட்டி இட்டு பெட் டாக்ஸ்- களாக அவற்றை வளர்த்ததும் தெரிய வருகிறது. இந்தியாவில் அவை இன்னமும் வேட்டையாடவும், பாதுகாப்புக்கெனவுமே அதிக அளவில் பயன்படுகிறது.


நமக்குத்தெரிந்ததெல்லாம் தெரு நாய்கள் தான். இரவில் நடக்கமுடியாதபடி ஊரையே ஆண்டுகொண்டிருப்பவை. கிரீஷ் கர்னாட் வந்திருந்தார். அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருந்தார். ராமச்சந்திர குகா தமிழராம்.( எனக்கு இப்பத்தான் தெரியும்) பரபரவென இருக்கிறார், ஒரு இடத்தில் நிலை கொள்ளாது :) புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுத்துக்காட்டி பேசினார். வீரப்பனைப்போல வடநாட்டில் ஒரு கொள்ளையன் இருந்ததாகவும் அவனது அடியாட்களை அவன் வளர்த்து வந்த நாய்களே பிடித்துக்கொடுத்ததாகவும் ஜிம் கார்பெட் புத்தகத்தில் இருக்கிறது, (இந்த சாட்சிகளை எங்கனம் ஒத்துக்கொள்ளாதிருப்பது என அடியாட்கள் சரணடைந்ததாகவும்.)

கொள்ளையனைப் பிடித்தாகிவிட்டது . அவனின் அடியாட்கள் தப்பித்து ஓடும்போது போலீஸ் சுட்டதில் ஒருவனுக்கு மூக்கை அறுத்துக்கொண்டு போயிற்று. இந்த இருவரும் வெளியூர் தப்பிச்செல்ல ரயில்வே ஸ்டேஷ்னில் காத்திருந்த போது அங்கு தேடுதல் வேட்டைக்கு மாறு வேடத்தில் வந்த கமிஷ்னர் , வாருங்கள் ரயில் வர இன்னமும் நேரமிருக்கிறது என்றழைத்துக்கொண்டு அவர்களை வீட்டுக்கு கூட்டிச்சென்றார் அங்கு அந்த கொள்ளைக்காரனின் நாய் இருந்தது இவர்களை பார்த்ததும் பழக்க தோஷத்தில் வாலாட்டிக்கொண்டு கால்களை நக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கெனவே காத்திருந்த அதிகாரி அவர்களைக்கைது செய்தார்.
 
மேலும் கொள்ளைக்காரனை தூக்கிலிடும்போது கடைசி ஆசையாக தமது வளர்ப்பு நாயை யாரேனும் வளர்க்க வேணும் என்று கேட்டுகொண்டான் என்ற சுவாரசியமான தகவல்கள் பகிர்ந்து கொண்டார். வீரப்பன் நாயேதும் வளர்த்தானா என்றவரிடம் , அப்படி வளர்த்திருந்தால் சீக்கிரம் பிடிபட்டிருப்பான் என்றார் பாஸ்கரன்.


 
புத்தகத்தில் இருந்து சில துளிகள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் , பல இடங்களில் 'நாயினும் கடையேன்' என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். நாய்களையும் , பசு மாடுகள் இன்னபிற வளர்ப்பு மிருகங்களை வீட்டினுள் வைத்து வளர்ப்பது தமிழரின் வழக்கம். இது தெரியாது ஜல்லிக்கட்டுக்கு தடை என அறிவிலித்தனமான விஷயங்களை எதிர்க்க தமிழ்நாடே போராட வேண்டியிருந்தது.

நிறைய ஆதாரங்களைக்காட்டி பேசினார் பாஸ்கரன். தெருவில் தனியே சுற்றிக் கொண்டிருப்பவைகளிலும் வகைகள் உள்ளன. சென்னையில் ஒரு முறை தெருநாய்களை சுட்டுத்தள்ளவேண்டும் என அரசு முடிவெடுத்தபோது அதை எதிர்த்து அனிமல் ரைட்ஸ் குழுவினர் போராட்டம் நடத்தினர், அங்கு வந்த அப்போதைய கமிஷ்னர் இதில் எத்தனை பேர் அந்த தெரு நாய்களை தத்தெடுக்கத்தயார் எனக்கேட்ட போது நான்கே பேர் கை தூக்கினர். பின்னர் கூட்டம் முடியும்போது அவர்களும் காணாது போயினர் என்ற போது அரங்கில் சிரிப்பலை. தெரு நாய்கள் என்ற பதத்தை அவர் பயன்படுத்தவேயில்லை. யாரும் சொந்தம் கொண்டாடாத நாய்கள் என்றே கூறுகிறார். (Owner less Dogs) 

மேலும் நாய்களுக்கு 'ரேபிஸ்' வராது தடுக்க ஆண்டுதோறும் ஊசி போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அது ஒரு முறையில் சரியாகும் விடயமில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஊசி போடவேண்டும், அப்போது தான் தடுக்க இயலும்,எந்த அரசு செய்கிறது தெரு நாய்களின் கூட்டத்தை தடுக்க கருத்தடை செய்யலாம் என்ற யோசனையும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆடுகளை வேட்டையாடும் நாய்களைச்சுட ஹெலிகாப்டர்களில் செல்வார்கள் என்றார். அங்குள்ள கிராமத்தினர் அவை வேட்டை தான் ஆடுகின்றன. ஆடுகளைப்புணர அல்ல. அதனால் அவற்றை கொல்லுவது பாவம் என்று தடுத்துவிட்டனர்.


 
ராமச்சந்திர குகா பேசுகையில் தமிழனாக இருந்த போதும் இதுவரை தமிழில் எழுதவில்லை. எனக்கு தமிழ் எழுத வராது என்றவர், பாஸ்கரனை நோக்கி இவர் இருமொழியில் எழுதும் வல்லவர். இவரும் ஒரு ரேர் ப்ரீட் என்றார் :)

பாஸ்கரன் வேலை பார்த்தது போஸ்ட் ஆபீஸ் ஜெனரலாக. அவர் இருந்தவரையில் ரேர் ப்ரீட்ஸ் நாய்களின் தபால் தலைகள் கொண்டு வர பகீரத முயற்சி எடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. அவர் ஒய்வு பெற்றதும் பின்னர் கமிட்டியில் உள்ளவர்களின் சிபாரிசின் பேரில் அவை தற்போது கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். சில தபால் தலைகளின் புகைப்படங்களை காட்டினார்.


பின்னர் பேச்சைக்கேட்க வந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். வெளிநாட்டில் இருந்து 'ஹஸ்கி' நாய்கள் வாங்கி வந்திருப்பதாகவும் அவை இங்கு நிலைக்குமா என்ற கேள்விக்கு அவை எப்போதும் தம்மை இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் திறனுள்ளவை என்றவர், லடாக் பகுதியில் உள்ள நாய்களை வளர்க்கவென இங்கு கொணர்ந்தபோது சென்னை மெரீனாவில் அத்தனை வெய்யிலில் தம்போக்கில் விளையாடிக்கொண்டு இருந்தன என்றார். இந்திய நாய்களை ஏன் உள்ளூர் காவல்/ராணுவப்பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்வதில்லை என்ற கேள்விக்கு அவற்றுக்கு பயிற்சி கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அலட்சியமும் ஒரு காரணம். 1972ல் ஒரு வழக்கில் உள்ளூர் கோம்பை வகை நாயை சாட்சியாக கொண்டு வந்து நிறுத்திய போது 'நாட்டு நாயெல்லாம் சாட்சி சொல்லவந்துருச்சா' என்று நீதிபதி கேலி பேசியதாக ஒரு செய்தி இருக்கிறது என்றார்..