Wednesday, November 28, 2018

ம்யூஸிக் ரவுடி




ஒரு காலத்துல ம்யூஸிக் ரவுடியா இருந்த யுவன்...இங்க ஐயோ பாவமா இருக்கார். பழைய ட்யூன், அதே பழைய மெதட் ஆஃப் சாங் மேக்கிங். என்ன பண்றது, பசங்கல்லாம் வளர்ந்து வந்து அடிபின்றானுங்களே.. என்ன பண்றது ..ஹ்ம்..?  ராப்/ஹிப் ஹாப்ல ட்ரை பண்ணீருக்கலாம். இது குத்து மாதிரியும் இல்லை,  சும்மா பாப்'மேரியும் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னில் ட்ரெம்ப்பெட் வருவதெல்லாம் அரதப்பழசு யுவன். 

ஒமக்கு என்னாதான் ஆச்சு.? கிளர்ந்தெழச்செய்யாத இசை. வயசாயிருச்சா?!. இந்த ஜானர் ஒத்து வரல.இதுக்கெல்லாம் யூத் மனசு வேணும். அதான் தம்பி அநிருத் இப்ப இந்த மாதிரி ஜானலர்ல கலக்கிக்கிட்டு இருக்கான். சிங்காரி சரக்கு'ல்லாம் ராசைய்யா உச்சத்தில இருந்தப்ப போட்டது..ஹ்ம்...என்ன சொல்றது ?! தனுசுவின் லிரிக்ஸ் எங்கயுமே ஒக்காரலை. ஒட்டு மொத்தமா ஃப்ளாப்.  #ரவுடி

.

Tuesday, November 13, 2018

காகித உறைகள்

இன்னிக்கு பக்கத்தில இருக்கிற மெடிக்கல் ஷாப்பில சில மாத்திரைகள் வாங்கப்போயிருந்தேன். ஆச்சரியம் மாத்திரைகளை ஒரு காகித உறையில் போட்டுக்கொடுத்தார். அந்தக்காகிதம் எதோ ஒரு புத்தகத்தின் ஒரு பக்கமாக இருந்திருக்கக்கூடும். 

அப்போதைய காலங்களில் எல்லாப்பொருட்களுமே காகித உறைகளிலேயே வழங்கப்படுவது வழக்கம். அப்படிக்கிடைத்த உறைகளை புரட்டிப்புரட்டிப்பார்த்து அதில் எழுதியிருப்பவற்றை வாசிப்பது வழக்கம் எனக்கு. சில சமயம் விகடன்/குமுதம் போன்றவைகளின் பக்கங்களிலும் உறைகள் செய்யப் பட்டிருக்கும். வாய்ப்பிருப்பின் சிறுகதைகளின் ஒரு பக்கத்தை நான்காக மடித்து பசை ஒட்டி அந்த உறையை அளவிற்கேற்ப தயாரித்து வைத்திருப்பர். பொதிந்து கொடுக்க. அப்படி சில சிறுகதைகளை அந்த சிறுமடிப்பிலேயே வாசித்துவிடுவது என்பதில் உள்ள சுகம் அலாதி. 

வீட்டிற்கு வந்து அதனுள் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு கவனமாக அந்த பசையை நீக்கி,(சில சமயம் கிழிந்து கொண்டே போகும் :)) , கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முழுப்பக்கத்தையும் வாசிப்பது என்பது சால சுகம். சில சமயங்களில் அந்தக்கதைப்பகுதி மிகப்பெரிதாக இருக்கும் பட்சத்தில் , மீதக்கதையை நமக்குள்ளேயே புனைந்து கொள்வதும், இன்னொரு பொருள் வாங்கியிருந்தால் அதன் தொடர்ச்சி அடுத்த காகித உறையில் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே என்ற நப்பாசையும் கிளர்ந்தெழும். 

இப்பொதெல்லாம் மால் கலாச்சாரம் , காகித உறைகளையோ , இல்லை அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகதை, கட்டுரைகளையோ வாசிக்கவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும் இன்று வாங்கிய காகித உறை , எதோ ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கை போல வழவழவென இருந்த பக்கம், சுவைக்கவியலாத கட்டுரை. இருப்பினும் அந்தக்கால நினைவுகளை கிளறத்தவறவில்லை. இன்று கடலை வாங்கினால் கூட காகிதத்தில் வருவதில்லை. எல்லாம் அந்தக்கடையின் விளம்பரம் தவிர சுவாரசியமான பத்திகள் வாசிக்கவென எதுவும் வாய்ப்பதில்லை. ஒரே ஆறுதல், தீபாவளிக்கு வெடிகள் வெடித்து மிச்சக்குப்பைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன தெருவில் இங்கு, அவையனைத்தும் தினத்தந்தி நாளிதழின் பக்கங்கள்...! #காகிதஉறைகள்

.

Tuesday, November 6, 2018

ஜானூ.....



இசை அற்புதம். இதுவரை யாரும் இசைத்ததில்லை இத்தனை அருமையான பின்னணி. கோவிந்த வஸந்த். தாய்க்குடம் குழுவிலிருந்து ராசைய்யாவின் நிகழ்ச்சியில் பங்குகொண்டவர். படம் முழுக்க இழையோடும் இசை மாயாஜாலங்களைக் காட்டுகிறது. அளவோடு ராசைய்யாவின் பாடல்களைப் பயன்படுத்திக்கொண்டதில் இனிமை. அவருக்குப்பிறகும் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்திருந்த போதிலும் அவரின் இசையே இக்காலங்களில் மீள் வாசிக்கப்படுகிறது. 96 என்பது இசைப்புயலின் காலம். அவர் உச்சத்திலிருந்த காலம். ஆச்சரியமான இசைக்கோவைகளை ராசைய்யா ஒதுக்கி வைத்தவற்றைத்தொட்டு உச்சம் காட்டிக்கொண்டிருந்தார். ஜானு எப்படி ராசைய்யாவின் பாடலையே பாடிக்கொண்டிருந்தாள். ஆச்சரியம் தான். கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம், ஆசை அதிகம் வெச்சு, தென்றல் வந்து தீண்டும் போது, யமுனை ஆற்றிலே இப்படி நாலே நாலு பாட்டுதான் படமே முடிஞ்சிருச்சிடா. வெறுமனே ராசைய்யாவோட பாட்ட மட்டும் வெச்சிக்கிட்டு கதை தயார் பண்ணி சில்வர் ஜூப்ளி அடிக்கலாம்டே. இன்றைக்கும் பெண்கள் கல்லூரி மாணவிகள் ராசைய்யாவோடு இணைந்து ஹார்மனியாக பாடியதெல்லாம் நிகழ்கால அற்புதம்.

படம் மலர் டீச்சரை ஞாபகப்படுத்தியபோதும் சலிக்கவில்லை. கிளறிவிடவும் தயங்கவில்லை. கடைசி வரைக்கும் காதலையே சொல்லாத இதயம் முரளி மாதிரில்லாம் இல்லை. கொஞ்சம் தைரியம் இருக்கு ராமுக்கு.வீட்டுக்கு கூட்டிப்போகும் வரைக்கும். தொடாமல் தள்ளியே நிற்பது,கூச்சம், இன்னும் இருக்கும் அந்த உள்ளூர அச்சமெல்லாம் அற்புதம் விஜய் சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும்-க்குப்பிறகு விசேக்கு ஒரு அருமையான படம். நா முத்துக்குமார் எழுதின கவிதை ஒன்று இருக்கிறது. ' இன்னமும் அவள் பத்தாவதில் தான் இருக்கிறாள்'என அந்த ஒன் லைனரை வைத்துக்கொண்டு பிழிந்து எடுத்திருக்கிறார் 96.

மாமி இன்னமும் 35லும் 16 தான். இந்தப்படத்தை டீவியில் அதற்குள் ஏனென்று ட்வீட்டியெல்லாம் பார்த்தார் மாமி. ஒன்றும் நடக்கவில்லை. அந்த ராமச்சந்திரன் ஜானகி தேவியைத்தேடி கடல் கடந்து இலங்கை போனான். இந்த ஜானகி தேவி கடல்கடந்து ராமச்சந்திரனைப்பார்க்க வந்திருக்கிறார்.

அந்த சலூன்காரன் 'எல்லாந்தெரியும் போ' என்பது, வசனங்களே தேவையில்லை. இந்த மாதிரி படங்களுக்கு. முதலில் விஜய் சேதுபதி பாடும் பாடல் சமுராய் படத்தில் விக்ரம் பாடும் பாடல் போலவே அமைந்திருக்கிறது. மற்ற பாடல்கள் கதையோட்டத்தை மைய்யமாக வைத்தே பின்னப்பட்டிருப்பதால் வெளியே தெரியவில்லை.

பிரிந்த காதல் தான் வாழும்.சேர்ந்துவிட்டால் அது காதலே இல்லை. மொத்தமே நாலு கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. யமுனை ஆற்றிலே பாடும் இடம் பொருள் ஏவல் என்னவெல்லாம் சொல்லலாம். அற்புதம்டா! ராமச்சந்திரன்கள் இன்னமும் ஜானகி தேவிக்கென காத்துத்தான் இருக்கின்றனர். ஜானகி தேவிகளுக்குத்தான் இன்னொரு சரவணன் கிடைத்துவிடுகிறார்.