Tuesday, August 13, 2013

மலைகள் கவிதைகள்




மரணம்

மீளமுடியா மரணத்தின் பிடியிலிருந்து
இன்று என்னைக்
கடவுள் காப்பாற்றிவிட்டார்.
அவர் வசதிப்படி இன்னொரு நாள்
சாவகாசமாக எடுத்துக்கொள்வதற்கென.

அழகு

அழகு
தான் அப்படியிருப்பதற்காக
வருந்தத்தான் செய்யும்
பலநேரங்களில்

புன்முறுவல்

எத்தனை தான் பயனற்றவன் என
எனக்குள்ளே
நினைத்திருந்தாலும்
நினைத்தவுடன்
புன்முறுவல் பூக்கவைக்கும்
எனது உறவுக்கு
நெருக்கமானவன் தான்
எப்போதும்.

போன்சாய்

காமம் எனும் ஆலமரத்தின்
போன்சாய் வடிவம் காதல்.

ஒழுக்கம்

தனிமையிலும் இருட்டிலும்
ஒழுக்கமாக இருக்கிறேன்
என்று உங்களுக்குச்சொல்லி
எனக்கு என்ன ஆகப்போகிறது?

துயரம்

ஒரு சிறிய புன்முறுவலில்
கடலளவு துயரத்தைக்கூட
என்னால் மறைத்துவிட முடிகிறது
என்று தான் இத்தனை நாளும்
நினைத்திருந்தேன்.
 
மன்னிப்பு

எப்போதும் மன்னிக்கும்
இடத்தில் இருக்க எனக்கு
விருப்பமில்லை

பெயர்

என்ன பெயரென்று
தெரியாது
தவித்துக்கொண்டிருந்தேன்
எனினும்
நினைத்தது போலவே
வடமொழியில் உன் பெயரும்
அதன் பின்னர்
வழமைத்தமிழில் கூடவே
உன் தந்தையின் பெயரும் 





.


Saturday, August 10, 2013

ஜெயமோகனும், சின்னப்பயலும்



‘குமுதம் ஸ்டஃப்’ என்றால் அவ்வளவு கேவலமா ? எனது மின்னஞ்சலில் அவரை அவமானப்படுத்தவோ இல்லை தூண்டுவது போலவோ எதையும் நான் எழுதவில்லை. எனது கதை வாசிக்கக்கூடத் தகுதியானதில்லை என்ற பட்சத்தில் அதை அவர் தவிர்த்திருக்கலாம். அவரின் எத்தனையோ அலுவல்களுக்கிடையில் இது போன்ற ஒரு ஸ்டஃபை வாசித்து அதற்கு கருத்தும் கூறி , அவரின் தளத்தில் வெளியிடவும் வேண்டும் என்ற அவசியம் எதற்கு? மேலும் அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலும் கூடவே கதையும் (http://www.jeyamohan.in/?p=38491) அவர் பக்கத்தில் நான்கு மணிநேரம் கிடந்தது. பின்னர் அந்தப்பதிவை அவரே நீக்கிவிட்டார். அதுவும் ஏனென்று புரியவில்லை. இத்தனை தாக்குதல் நடத்தி என்னை நிலைகுலையச்செய்யவேண்டும் என்று அவர் நினைத்ததுதான் ஏனென்று இன்னமும் புரியவில்லை.

கீழிருக்கும் மின்னஞ்சல்களை கொஞ்சம் பாருங்கள்.!



Ram Chinnappayal

சிறுகதைகள்

chinnappayal
Fri, Aug 9, 2013 at 9:35 AM
To: jeyamohan.writer@gmail.com
Cc: Ram Chinnappayal
தொடர்ந்தும் உங்கள் தளத்தில் புதியவர்களின் சிறுகதைகள் வெளியிடப்படுவதும்
அவை விமர்சிக்கப்படுவதும் என நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எனது இந்த இரண்டு சிறுகதைகளையும் வாசித்து கருத்துக்கூற இயலுமா.?!
மிக்க நன்றி

சின்னப்பயல்.

சிறுகதைகள்

B.Jeyamohan
Sat, Aug 10, 2013 at 8:07 AM
To: chinnappayal
சின்னப்பயலுக்கு

குடை கதையை வாசித்தேன்

நீங்கள்  யார்? நீங்கள் நான் எழுதிய எதையாவது வாசித்திருக்கிறீர்களா?  இல்லை தமிழில் எழுதப்பட்ட எந்த இலக்கியப்படைப்பையாவது வாசித்திருக்கிறீர்களா? குமுதம், மளிகைக்கணக்கு தவிர எதையாவது வாசித்திருக்கிறீர்களா?

இந்த ஒருபக்க குமுதம் கதையை எழுதி எனக்கு அனுப்புவதற்கான உங்கள் முழு மூடத்தனம் மட்டும் காரணம் அல்ல. அதற்கும் அப்பால் ஒரு திமிரும் உள்ளது. என்னை சமீபத்தில் இப்படி எவரும் அவமதித்ததில்லை

ஜெ
இந்தக்கதை தான் அது .

குடை

அவசர அவசரமாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர்..கடிகாரம் மட்டும் ஆறு மணியை வெகு சாவகாசமாக நெருங்கிக் கொண்டிருந்தது.அவர்களின் அவசரத்திற்குக்காரணம் மழை. காலையிலேயே போக்கு காட்டிக்கொண்டிருந்தது.மத்தியானம் தரையிறங்கி ,இப்போது மாலையில் விஸ்வரூபமெடுத்திருந்தது. என்னத்த மழ வரப்போகுதுன்னு நெனச்சு குடையை எடுக்காது வந்தது மெத்தனம்.சரியாகப் பிடித்துக் கொண்டது.

ம்..இனி சர்ச்கெட் வரை நடந்து போய் கெடைக்கிற "போரிவலி" லோக்கலைப் பிடித்து,பின் அங்கிருந்து நடந்து...இந்த மழையில இதெல்லாம் இமாலய செய்கைகளாக தோன்றிற்று எனக்கு.ஒருவாறாக வேலையை முடித்துவிட்டு கிளம்பினேன்..மழை போராடிக் கொண்டிருந்தது..நீர்த்திவலைகளே கண்ணுக்குத் தெரியாமல் சின்டெக்ஸ் டேங்க்கை கவிழ்த்தது போல் கொட்டிக்கொண்டிருந்தது. "ஜல்தி சலோ பாய்" என பின்னாலிருந்தவன் நெட்டித்தள்ளாத குறையாய் இடித்துக்கொண்டு முன்னேறினான். ஈறாஸ் தியேட்டர் வாசலிலிருந்து ரோட்டைக் கிராஸ் பண்ணுவதற்குள் தெப்பமாக நனைந்திருந்தேன்.கையிலிருந்த டைரி நல்லவேளை பிளாஸ்டிக் கவர் நனையவில்லை..நாளைக்கான வேலைக்குறிப்புகள்.

ஸ்ட்டேஷனுக்குள் நுழைந்து நாலாவது பிளாட்ஃபார்மில் வந்து வண்டிக்காக காத்திருக்கத் தொடங்கினேன். கண்ணில் பட்டது குடை விளம்பரம்.வெறுப்பில் வேறுபக்கம் பார்வையைத் திருப்பினேன், 6:25 என கடிகாரம் நேரத்தைக்காட்டிக் கொண்டிருந்தது.மழை இன்னும் சீற்றம் குறையவே இல்லை..ம்..பல நாள் பாவத்தப் பொறுத்துக்கலாம்..ஒரு நாள் புண்ணியத்த பொறுத்துக்க முடியாது. இண்டிகேட்டரில் "போரிவலி" என வந்ததும், அனைவரும் போருக்குத்தயாரானார்கள்..ஸீட் பிடிக்க நானும்தான்.வந்தது வண்டி ,திமுதிமுவென ஏறியது கூட்டம்..இடித்து பிடித்து ஏறி 2ஆவது  ஸீட்டைப் பிடித்து(அதிர்ஷ்டம் தான் இன்னிக்கு) அமர்ந்து தலையை ஏற்கனவே பேண்ட்டுக்குள் நனைந்திருந்த கர்ச்சீப் கொண்டு துடைத்துவிட்டேன்.
 
ஓடிக்கொண்டிருந்தது வண்டி. தாதர் வந்ததும் கூட்டம் செம்மியது. நெருக்கமும் புழுக்கமும் ஏன் தான் இந்த மழை பெய்கிறதோ என நினைக்க வைத்தது.சன்னல் கதவை வேறு மூடி வைத்திருந்தனர்.சாரல் அடிக்குமென்று. பார்வையை பக்கத்து ஸீட்களில் ஓட்டினேன்.. மும்முரமான சீட்டுக் கச்சேரி.பொழுது போகிறது அவர்களுக்கு.. தடதடவென ஓடிக்கொண்டிருந்த வண்டி நின்றது சிக்னலில்,மழை நின்ற பாட்டைக் காணோம்.

ஒரு சின்ன விஷயம்,இத்துனூண்டு..வெறுமனே தலைய மட்டும் நனைய விடாம,மற்ற பாகங்களில் விழுகிற மழைத்தண்ணிய தடுக்க இயலாத அல்பம் சின்னக்குடை. இது மனுஷன எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்குது ச்சீ..நாளைக்கு எடுத்துட்டு வந்தே ஆகணும். ஒரு வழியாக "அந்தேரி"யைக் கடந்து "போரிவலி" வந்து சேர்ந்தது வண்டி..! இறங்கி அவரவர் குடையைப் பிடித்துக்கொண்டு  நடையைக்கட்டினர் , எனக்குத்தான் முடியல ழுகை வந்தது.

வெள்ளம் போல ரோடுகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.அப்போதிருந்தே கவனித்துக் கொண்டிருந்தேன். காத்துக் கொண்டிருந்தாள் அவளும் மழை நிற்கட்டும் என்று.,ம்.நமக்கு ஒரு துணை என்று அந்த எரிச்சலிலும் ஒரு சந்தோஷம்.

எல்லோரும் போய்விட்டனர் நாளைக்கு காலையில் ஞாபகமாக குடையை எடுத்துக்கொண்டு ஆபீஸ் வருவதற்கு.நானும் அவளும் மட்டும் தான் பாக்கி..சுற்றும் முற்றும் பார்த்தேன்..நப்பாசை,யாராவது குடையில் லிஃப்ட் தரமாட்டார்களா என்று, ம்ஹூம்ம்  குடை எனக்கு இப்போது கிடைத்தற்கரிய தேவாமிருதமாகத் தோன்றியது. ம்..வருது ஒரு கெழம்...எப்படியாவது பிடிச்சு இதோட போயிர வேண்டியதுதான்னு நெனைச்சிக்கிட்டு இருக்கும்போதே கெழம் அந்தப் பொண்ணுகிட்ட போய் இளிச்சு அவளையும் குடையில் கூட்டிக்கிட்டு போயே விட்டது.

நான் நாளைக்கு குடைய மறந்தாலும் பரவால்ல..சேலையக் கட்டிக்கிட்டு வரணும்னு நெனச்சிக்கிட்டேன்...!


.