Wednesday, December 23, 2020

#பாவம் கதைகள்

 


பாவக்கதைகள். சின்ன தீப்பெட்டிக்குள் யானையை அடைக்கச் சொன்னது போல அத்தனை பெரிய இயக்குநர்களையும் கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குள் முழுக்கதையையும் சொல்லிவிடவேணும் என்று பலவந்தப்படுத்தியது போல இருக்கிறது. வெற்றிமாறன் மூன்று மணிநேர பெரிய படமானாலும் சின்னத் திரைக்குள் அரைமணிக்கூறு மட்டுமே ஓடும் சிறு நதியானாலும் உழைப்பு அருமை. அதான் சிறுகதை எழுதுவது தான் கடினம், பெரிய புதினத்தை முன்னூறு பக்கங்களுக்கு எழுதிவிடலாம் மனம் போன போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பல அத்தியாயங்களை வைத்துக் கொண்டு தலையணை உயரத்தில் அடுக்கிவிடுவது சுலபம். 
 
வெற்றி மாறனிடம் எனக்குப்பிடித்ததே அந்த விவரித்தல் தான் (டீட்டெய்லிங்) . இங்கு ஒரு சவால் போல அவருக்கு. ஒரே கதை 35 நிமிடங்கள் மட்டுமே. எடுத்து முடிக்க வேணும் என்ற கட்டாயம். ’வடசென்னை’யில் ஒவ்வொரு கதாபாத்திரமாக எடுத்து அறிமுகப்படுத்தி அது வரை அத்திரைக்கதையின் படுதாவில் பார்த்தேயிராத கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி பின்னர் அவைகளை மைய நீரோட்டத்தில் கலக்க வைத்து என அமர்க்களம் செய்திருப்பார். அதில் ஒன்றே ஒன்றை மட்டுமே எடுக்கவைத்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கிறது என்றே தோணுகிறது எனக்கு.
 
பாலச்சந்தர் கூட சின்னத்திரை நாடகங்களுக்கென தம்முடைய உத்தியை சிறிதும் மாற்றாது பெரிய திரைக்கென எடுத்தது போலவே எடுத்திருப்பார். அது போலவே இங்கும் வெற்றி. நல்ல கலைஞர்களை வைத்து எடுத்தாலே பாதி வெற்றிதான். இருப்பினும் இதே கதையை சுந்தர்சி’யும் இன்னபிற பிரபலமற்ற கலைஞர்களும் எடுத்த அதே களம் தான். நிகழ்வுகள் கூட அதே தான். என்ன பெரிய வேறுபாட்டைக் காண்பித்து விட முடியும் ? சொல்லும் விதத்தைத் தவிர,. இங்கும் அதே வடசென்னையின் நான் லீனியரில் தான் முயன்றிருக்கிறார். எங்கோ வாசித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு, நான் லீனியரில் படமாக்குவது எளிது , அதே வடிவத்தில் எழுதினால் , டெக்ஸ்ட்டாக , யாராலும் வாசிக்க போலும் இயலாது விளங்காது. 
 
சாய் பல்லவி தமது அம்மாவின் வீட்டில் சேர் போட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரோடும் அளவளாவிக்கொண்டு அதன் பின்னர் வரும் காட்சியில் தான் பிரகாஷ்ராஜ் பெங்களூரில் இருக்கும் பல்லவி வீட்டின் வாசலில் தயங்கி தயங்கி அழைப்புமணியை அழுத்துகிறார். பிறகு வரும் காட்சிகள் எல்லாம் லீனியர் தான். இருப்பினும் அழுத்தமும் இறுக்கமும் பிரகாஷ்ராஜுக்கு கை வந்த கலை. இருப்பினும் கடைசியில் ஏன் ஆர்ட்வொர்க் கொண்டு முடிக்கவேணும் படத்தை? டீம்ல யாருக்காச்சும் கொரொனா போட்ருச்சா ?!🙂
 
சுதாவின் கதை அப்பட்டமான லீனியரில் மட்டுமே. ஒரு மாற்றமும் இல்லை. எந்தப்புது விஷயமும் இல்லை. அடிப்படையில் பார்ப்பவர்களின் செண்டிமெண்டை உரசிப்பார்த்ததை தவிர வேறொன்றும் செய்ய வில்லை அது.
 
விக்னேஷ் சிவனின் கதை, அப்பட்டமான கமர்சியல். அபிநயித்த யாருக்கும் அக்கறை இருந்ததாகத் தோன்ற வில்லை. கல்கி உட்பட. அந்தக் குள்ள மனிதன் மட்டுமே சிறப்பு.
 
கெளதமனின் கதை எப்படியோ முடிஞ்சா சரி ரகம். குழந்தைகள் யாருமே அந்தத்தம்பதிக்கு பிறந்தவர்கள் போலவே இல்லை. எதோ மொழி மாற்றுப்படம் போல இருக்கிறது.
 
இந்த ஓட்டீட்டீ’க்காரா எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு ப்ளான் வெச்சா நல்லாருக்கும். அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ்,டிஸ்னிஹாட்ஸ்டார், மூபி, இன்னும் எத்தனை எத்தனைக்கு பணம் கட்டி பார்க்கிறது ?? இடைல ஜியோ வேற படம் காட்றேன்கிறான், டாட்டா ஸ்கை மாசம் முப்பது ரூபா குடு,உலகப்படம் காமிக்கிறேன்னு வெளம்பரம் கேட்காமலே ஓட்றான் ஒவ்வொரு தடவையும் டீவீ ஆன் பண்ணும்போது..! ஒரு குடையின் கீழ் அத்தனை ஓட்டீட்டீ’யும் வந்தா நல்லது.
 

Friday, December 18, 2020

கடல் காணமலாகிறது

 


Human Space Time and Human கிம்-கி-டுக்-கின் படம் காணக் கிடைத்தது. ஒரு வழியாக தேடிக்கண்டடைந்து பார்த்தேன். அவரது மற்ற படங்களை ஒப்பிடும் போது இங்கு கொஞ்சம் வேறு பாணி. படத்தை முழுதுமாக பார்த்து முடிக்க பொறுமை வேண்டும். ஒரு முகச்சுளிப்பு கிட்டியாலே எனக்கு அது வெற்றி எனக்கூறியவரின் படம் . ஒரு கப்பல், அதில் பயணிகள், மேலும், அரசியல்வாதி, ரெளடிகள் மற்றும் பல பெண்கள் என்று ஒரு கூட்டம் , அதில் ஆச்சரியம் கடவுளும் கூடவே பயணிக்கிறார். கப்பல் வேறொன்றுமில்லை. ‘நோவா’வின் படகு’ தான் அது. அழியப் போகும் உலகிலிருந்து பாதுகாக்க இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று. அன்னை மரியாவும் அவளின் மகவும் கூடவே.

 இப்படி பல புராணக் கதைகளைப் பின்னி  வைத்துக் கொண்டு , வழக்கம் போல் கிம்-மின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும் அதீத வன்முறை, மனித உடலைத்தின்ன கசாப்பு கத்தி வைத்து ஓங்கி ஓங்கி வெட்டி –அத்தனை சுளுவில் மனித உடம்பு கூறு போட முடியாது போல இருக்கிறது எலும்புகள் அத்தனை கடினம் – ரத்தம் தெறிக்க தெறிக்க கூறு போட்டு உண்கின்றனர். இறந்த மனிதனின் உடலைத்தான் ..உணவுப் பஞ்சத்தில் கப்பலே தடுமாறுகிறது.

 


கப்பலின் கடவுளும் பிள்ளைக்கறி கேட்ட ருத்ரனைப்போல மனிதக்கறி தான் சாப்பிடுகிறார். கப்பலின் தரைத்தளத்தில் சேரும் காலடி மண்ணை சேகரித்து வைக்கிறார். செடிகளை நட்டுவைக்க.. கூடவே இரண்டு கோழிகளை வளர்க்கிறார். எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. நல்லது நடப்பினும் கெட்டது நடப்பினும் வெறும் பார்வையாளராகவே இருக்கிறார். உண்டது போக மிஞ்சும் மனித எலும்புகளை அரைத்துக் கூழாக்கி அதை உரமாக செடிகளுக்கு இரைக்கிறார். அத்தனை கொடியவர். இருப்பினும் மரியாளைப் பாதுகாக்கிறார். கப்பலில் வன்கலவிக்குள்ளாகி  தற்கொலை செய்யத் துணியும் அவளை கழுத்தில் விரல் வைத்து மயக்கமுறச் செய்து அறைக்கு கூட்டி வந்து கட்டிப்போட்டு வைக்கிறார்  இறக்கும் காலம் இன்னமும் வரவில்லை என்று கூறாமல் கூறுகிறார். உனக்கான பணி இன்னமும் முடியவில்லை என்று அவளாகவே காலம் செல்லச் செல்ல தமக்குள் சமாதானம் ஆகிக்கொள்ள வைக்கிறார். ஹ்ம்.. கடவுள் என்றாலே இப்படித்தான் இருப்பர் போலும்.

வழக்கம்போல படிநிலை பிரகடனம், அதிகாரிகளுக்கும் அவர் தம் அடிப் பொடிகளுக்கும் பல விதமான உணவுவகைகள், சாதாரணப்பயணி களுக்கோ ஒரு வேளை அரிசி உணவு மட்டுமே. வழக்கம்போல கலவரம் வெடிக்கிறது. லஞ்சக்காசு கொடுத்தேனும் உணவை வாங்கி விடவேணும் என்று நினைக்கும் கூட்டம். ஒரு வித்தியாசமுமில்லை. எல்லாம் பூமியிலும் நடப்பது தான். The Platform’ என்ற படமும் இதையே அடிப்படையாக கொண்டது தான். 233 படிநிலைகள், அற்புதமான உணவு தயாரிக்கப்ப்ட்டு ஒவ்வொரு தளமாக கீழ் தளத்துக்கு வரும் வரையில் எலும்பு கூட மிஞ்சாது போகும் நிலை. அதில் மேலிருப்போர் வீணாக்கும் உணவுகளைக் கண்டால் பார்ப்போருக்கு ரத்தக்கண்ணீர் வரும். ஒரு வேளை கிம்-மின் இந்தப்படமே தூண்டுதலாக இருந்திருக்கக் கூடும்.

 


இதெற்கெல்லாம் காரணம் கூடவே பயணிக்கும் கடவுள், இது காறும் கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலை ஆகாயத்தில் மிதக்க விட்டு விடுகிறார். கடல் காணமலாகிறது. கப்பல் கேப்டன் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். இது எப்படி , ஒரு போதும் நாங்கள் இப்படி கண்டதேயில்லை என பயணிகளுக்கு கூறுகிறார்.  உணவுக் கையிருப்பு தீருகிறது. உணவுக்கென வெடிக்கும் போரில் ரெளடிகளும் அதிகாரியும் பங்கு போட்டுக் கொண்டு பிறரை வெட்டி சாய்க்கின்றனர் அனைத்து சாதாரணப் பயணிகளையும். உணவுக்கென ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பயணிகளை கண்ணி வெடிகளை தூக்கி வீசி...அடப்பாவி அரசியல்வாதி. கூடப்பயணிக்கும் அந்த பிரதம ரெளடியே ஒரு கணம் ஆடிப்போகிறான்.

 ’நீ சாதாரண தெருப்பொறுக்கி ரெளடிடா, உனக்கெல்லாம் என்ன தெரியும்’ என்று கூறும் அந்த அரசியல்வாதி. அவனிடமிருந்த ஒரே துப்பாக்கியை பிடுங்கி ரெளடி போட்டுத்தள்ளுமிடத்தில் நாம் நிமிர்ந்து உட்காரலாம். இறக்கும் தருவாயிலும் எதோ சொல்ல வருகிறான் அந்த அரசியல்வாதி, என்ன வாரிசு அறிவிப்பா எனக்கேட்டு நெற்றியிலேயே சுட்டுத் தள்ளுகிறான் அந்த ரெளடி. அது தான் முடிவு. அவனுக்கு. கைப்பாவைகளை நம்பலாம். ஆட்டி வைப்போரை ஒரு போதும் நம்ப வியலாது.

 


இனியும் வெட்டிக்கறி எடுக்கமுடியாது என்ற நிலையில் மிகுதியான  உடல்களின் வெட்டிப்பிளந்த இடங்களில் விதைகளை ஊன்றி மண்ணை இட்டு வைக்கிறார் கடவுள். புதைக்கப்பட்ட உடலங்கள் விதைகளுக்கு உணவாவதைப் போல. காலம் செல்கிறது. கடவுளும் மரிக்கிறார் மரியாளை வல்லுறவு கொண்டவனின் பசியாற தம்மையே வெட்டிக் கொடுத்து பின்னர் இரத்தக்கால்களால் நடந்து நடந்து 8 என்ற குறியீட்டை இட்டு விட்டு மரிக்கிறார்.இதில்லென்ன குறியீடு என்று விளங்கவில்லை

மிஞ்சுவது மரியாளும் அவளின் மகனும் மட்டுமே. புல்லாகிப் பூண்டாகி பல்கிப் பெருகியிருக்கும் மரங்கள் சோலையாக மாறியிருக்கின்றன., கோழிகளின் கூட்டமும் பெருகி இருக்கிறது. அபரிமிதமாக உண்ண உணவு கிடைக்கிறது. கப்பலும் ஒரு மலை மேல் தரை தட்டி நிற்கிறது.. கடைசிக் காட்சியையும் கூடவே ஜீரணித்துக்கொள்ளலாம். வேறு வழியில்லை. மனித இனத்தின் தோற்றமே இங்கனம் தானே.?!

 


 

Thursday, December 3, 2020

தார் (தந்தி)

 


தார் (தந்தி) என்ற மராத்தி குறும்படம் பார்த்தேன். ஆர்கே லக்ஷ்மணின் ’மால்குடி டேய்ஸ்’ கதைகளில் வரும் ஒரு தபால்காரனின் கதை ஞாபகத்துக்கு வந்தது.அதிலும் அப்படித்தான் ஒரு கெட்ட செய்தியை (தந்தியை) கொடுக்க செல்லும் போது அந்த வீட்டில் ஒரு நல்ல நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும். கொடுக்காமல் திரும்ப வருவார். பல முறை சென்று பார்த்து விட்டு இந்த நேரத்தில் இப்படி ஒரு தகவலை கொடுக்கத்தான் வேண்டுமா என அல்லாடுவார். அதே போன்ற ஒரு கதா பாத்திரம். நாகராஜ் மஞ்சுலே (ஃபன்றி இயக்குநர்) தான் தபால்காரராக நடித்திருக்கிறார். இந்திரா காந்தி காலத்தை பின்னொட்டாக வைத்து, அற்புதமான பின்னணி மண்ணுக்கேற்ற இசை. யுவன் இசைத்த ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ இதே பாணியிலான மராத்தியரின் இசை தான்.
 
அந்தப்பையனை சைக்கிளிலேற்றி கொண்டு செல்கிறார் நாக்ராஜ். ‘சினிமா பாரதீஸோ’ சிறுவன் போல சைக்கிள் பாரின் முன்னில் அமர்ந்து கொள்கிறான். நான் சொன்னேன்ல பையா, ஹரிபாவு ரொம்ப வீரமானவர் அவருக்கெல்லாம் ஒண்ணும் ஆவாதுன்னு 🙂 எனக்கூறிவிட்டு பின்னர் இங்கியே எறக்கி விடுங்க என்று கூறி இறங்கிக்கொள்கிறான் அவனின் வீட்டு முன்னில்.
 
மொத்தமே மூன்று கதாபாத்திரங்கள் தான். தபால்காரர், அவர் மனைவி மற்றும் பின்னர் “தந்திகளை நீ கொடுக்கவில்லை என்றால் என்ன , இன்னொருத்தன் கொடுக்கத்தான் போறான், அதுக்காக விசனப்பட்டு வேலையை விடுவதெல்லாம் நல்லதல்ல” எனச்சொல்லும் அந்த தபால்கார நண்பர் என.சிறப்பான வழங்கல். நாக்ராஜ் மஞ்சுலெ’ மனைவியின் வளையோசை இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. #தார்
 
.

Tuesday, December 1, 2020

வேற்றுக்கிரகவாசிகள்

 


வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஒரு வலைத்தளத்தில் இவருடைய பெயரைப் பார்த்தேன். எதோ ஒரு புதிய புத்தகம் எழுதியிருக்கிறார் போல. போன ஆண்டு, அதில் வேற்றுக் கிரகவாசிகள் என்ற ஒரு உயிரினமே இல்லை, அப்படியாக நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்கிறார். அப்படி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை மைக்கேல் மாஸ்டர்ஸ். மொண்டானா யுனிவர்சிட்டியில் பயாலஜிக்கல் ஆந்த்ரப்போலஜி கற்பிப்பவர். ஆந்த்ரபோலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். தொடர்ந்தும் மனிதவியல் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர். 
 
அவரின் வாதம் இப்படிப்போகிறது. வேற்றுக்கிரக வாசிகளை கண்டேன் எனக்கூறியவர்களில் பலரும் பாமரர்களே. உலகம் முழுக்க. விஞ்ஞானிகளோ இல்லை அதைப்பற்றிய ஆராய்ச்சி செய்யக்கூடிய எவருமோ இதுவரை ஏலியன்களுடன் கூட்டி முட்டியதில்லை. வாதங்களை நம்பும்படி வைக்கிறார். அறிவில் வளர்ந்த நம்மை விடவும் கூடுதல் தொழில் நுட்பங்களில் முன்னேறிய ஒரு இனம் அதுவும் பூமியிலேயே வேறொரு பரிமாணத்தில் (நான்காம் பரிமாணம்) வாழக்கூடிய ஒரு உயிரினத்தை தான் எல்லோரும் வேற்றுக்கிரக வாசிகள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம் என்கிறார்.
 
பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தில் உடலில் மனதில் சிந்தனையில் பல மாற்றங்கள் உண்டானது. அவற்றுள் எடுத்துக்காட்டுக்கென கைகளை ஊன்றி நடந்து கொண்டிருந்த குரங்குகள் (நாம்) எழுந்து நடக்க ஆரம்பித்தது, அதனால் கைகளை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்த முடிந்தது. இல்லையெனில் முழு உடலையும் எடுத்து செல்ல கைகளும் கால்களுமே பயன்பட்டன. இன்னிக்கு இந்த கட்டுரையை தட்டச்சு செய்வதும் கை விரல்கள் தான். எழுந்து நடந்தவுடன் வாலின் தேவையின்றிப் போனது. நம் வயிற்றுக்குள் அப்பெண்டிக்ஸ் என்ற ஒன்று மட்டும் மிச்சமாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது விலங்கின் எச்சமாக. 
 
இதே போன்ற பரிணாமத்தின் வளர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னபிற உறுப்புகள் தேவையின்றிப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. காது மடல், புருவங்கள் இல்லாது போதல் மற்றும், அதீத ஆராய்ச்சிகள் மற்றும் தீவிர கண்டுபிடிப்புகளுக்கு ஏதுவாக மூளை தன் அளவைக்காட்டிலும் கூடுதல் ஸைஸில் பெருப்பதால் தலை வீங்குதல் என்ற மாற்றங்கள் உருப்பெற்று ஏலியனாக பரிணமிக்கும் என்பது அவர் வாதம். 
 
மேலும் உலகெங்கிலும் ஏலியன்களைக் கண்டோம் என உறுதியுடன் கூறியவர்களும் இதே போன்ற தோற்றத்தை தான் சொன்னதாக பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எங்கோ பல்லாயிரம் ஒளியாண்டு தொலைவில் வசிக்கும் ஒரு உயிரினம் பூமியில் பரிணமித்து வரும் உயிரினத்தைப்போல அல்லது எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறோம், உடலில் என்னென்ன மாற்றங்கள் வரக் காத்திருக்கின்றன என்பதை உறுதி செய்யும் விதமாக இருந்துதான் ஆக வேணும் என்ற எந்தக் கட்டாயமுமில்லை. 
 
சரி அப்புறம் ஏன் நம்மை ‘விசிட்’’ செய்கிறார்கள் ஏலியன்கள் ? அவர்களிடம் இருக்கும் அதி நவீன கருவிகளைக்கொண்டு காலத்தின் பின்னோக்கிப் பயணித்து அவர்களின் மூதாதையர் எப்படி இருந்தனர் என்பதைக் காண வந்தவர்களாக இருக்கும்,. ஒரு க்யூரியாஸிட்டி தான் வேறொன்றும் இல்லை. இதே போன்று காலக்கருவி இருக்கும் பட்சத்தில் நம்மாலும் பின்னோக்கி 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை பயணித்து நமது மூதாதையர்கள் எங்கனம் இருந்தனர் என்று ஆப்ரிக்கா சென்று ஆராயலாம். மேலும் அவர்களும் இப்போது நம்மைப் போலவே அவர்களுக்குள்ளாக பேசிக்கொள்வார்கள் ஏலியன்கள் நம்மை வந்து பார்த்து சென்றனர் என்று.
 
புத்தகத்தின் முதல் அத்தியாயம் மட்டும் பகிரங்க வாசிப்புக்கு இலவசம். முழுமையாக வாசிக்க வேணுமெனில் கிண்டில் பதிப்பு கிடைக்கிறது அமேஸானில்.
 
UFO unidentified Flying Objects என்ற பதத்தையே மாற்றி புத்தகம் முழுக்க IFO Identified Flying Objects என்றே குறிப்பிடுகிறார் ஆசிரியர்.!
 
Identified Flying Objects: A Multidisciplinary Scientific Approach to the UFO Phenomenon
- Dr. Michael P. Masters