Monday, December 27, 2010

என்னில் நிறைய

திண்ணையில் எனது கவிதை

என்னைத்தேடி வரும்
காதலைப் புறக்கணிப்பதால்
எனக்கு காதல் அனுபவங்கள்
இல்லை,

எனக்குப்பிடித்த
அவர்கள் புறக்கணிக்கும்
இடத்தில் எப்போதும்
நானிருப்பதாலும்
எனக்கு காதல் அனுபவங்கள்
இல்லை.

இப்படி
புறக்கணிப்பதும்
புறக்கணிப்படுவதுமான
அனுபவங்கள் தான்
என்னில் நிறைய...!

மற்றவர்களும் சொல்லிக்கொள்ளும்
இவையே
காதல் அனுபவங்கள் என்றால்
இவை மட்டுமே
என்னில் நிறைய.



.

Monday, December 20, 2010

ரசிப்பு

திண்ணையில் வெளிவந்த என் கவிதை


பிறர் ஒரு விடயத்தை
ரசிக்கிறார் என்று எவ்வாறு உணர்வது ?

காலாட்டிக்கொண்டிருக்கலாம்
கைகளின் விரல்களால் காற்றை
அரிந்து கொண்டிருக்கலாம்
அல்லது நறுக்கிக்கொண்டிருக்கலாம்.

புன்முறுவலுடன் தன்
உடம்பை முழுதுமாகக்
குலுக்கிக்கொள்ளலாம்

பிறர் அறியாவண்ணம்
தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக்
கொள்ளலாம்.

காதுகளில் இயர்ஃபோன் இருந்தால்
திடீரென பிறர் எதிர்பார்க்காத வேளையில்
சத்தமிடலாம் அவர் கேட்கும் வண்ணம்

பிறகு தான் போட்ட சத்தம்
தனக்கும் கேட்பதை எண்ணி
மகிழலாம்.

கண்களை மூடிக்கொண்டு தனக்குள்
லயித்துக்கொண்டிருக்கலாம்

எதுவும் நினைக்காதவர் போல
அமைதியாகவுமிருக்கலாம்.

அல்லது என்னைப்போல
பிறர் எவ்வாறு ரசிப்பர் என
நினைத்து இதுபோல
மனதுக்குள் கவிதையும் எழுதலாம்.


.

Saturday, December 18, 2010

கண்ணாடி

என்னில் உன்னைப் பார்க்கிறேன்
புருவம் திருத்தினாய்
பொட்டு சரி செய்தாய்
சேலைத்தலைப்பை இழுத்து
சரி பார்த்தாய்
ஒற்றைத் தலை முடியை
முன்நெற்றிக்குத் தள்ளிவிட்டாய்
பிறகு என்னை விட்டு
சென்றுவிட்டாய்

என்னை உன்னில் பார்க்கிறேன்
குழந்தை தன்னைப்
பார்த்து தோழமையோடு
சிரித்தது, பின் அழுதது
நீர் வடிந்த முகத்தை
இடது கையால்
துடைத்துக் கொண்டது
பிறகு விலகிச்சென்று விட்டது
வேறொரு விளையாட்டு
பொம்மை தேடி

என்னை உன்னில் பார்க்கிறேன்
ஸ்டைலாக முடியைக்
கோதி விட்டாய்
ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம்
தடவி பருவைக்
குறைக்க முயற்சி செய்தாய்
கூலிங் க்ளாஸை
மூக்கின் மேல்
சரியாகப் பொருத்திக்கொண்டாய்
பின் சீழ்க்கை அடித்தவாறே
விலகிச்சென்றாய்

என்னை உங்களில்
எப்போதாவது
பார்த்திருப்பீர்களா ?
கிடைக்கும் அந்த
வாய்ப்பு.. உங்களில்
ரசம் போனபின்.


.

Sunday, December 5, 2010

நட்பாராய்தல்

திண்ணையில் வெளிவந்த என் கதை.

காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது எனக்கும் என் பிஸிக்கும் இடையே.கழுதை மட்டுமல்ல "லாஜிக்"கும் உதைக்கும் என அப்போதுதான் தெரிந்தது.நாமளா ப்ரோகிராம் எழுதுறது ஈஸி,எவனோ எழுதி வெச்சிட்டுப்போனத "மொடிஃபை" பண்ண எங்கிட்ட குடுத்துட்டானுங்க..தொண்டையில் வந்து அடைச்சிக்கிட்டிருந்தது.ஒருவழியா அந்த முடிச்ச அவிழ்க்கறதுக்குள்ள ராத்திரி பத்து மணி ஆயிருச்சி,...தனியா நடந்து கொண்டிருந்தேன் சாலையில்.."ராத்திரி பதினோரு மணிக்கு மேலே ரோட்டில உலாத்துறது யார்யார் தெரியுமா ?நாயும் சாஃப்ட்வேர் ப்ரொக்ராமருந்தான்"சீஃப் சொன்னது ஞாபகம் வந்து தொலைத்தது.ஓட்டமும் நடையுமாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தேன்.யப்பா கடைசி வண்டியாவது கெடைக்கணுமேன்னு "லினஸ் டொர்வால்ட்ஸை" வேண்டிக்கிட்டு வந்து பார்த்தேன்.புறப்படத்தயாராக நின்றுகொண்டிருந்தது கடைசி வண்டி."அப்பாடா.." ன்னு ஒரு வெஜ் பர்கரும் ஃபௌண்டன் பெப்ஸியுமாக ரயில் பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.போய்ச்சேர்றதுக்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும்..கனவிலும் மறக்காத ஸ்டேஷன்கள் கடந்து கொண்டிருந்தன.'ச்ச பேப்பர' புறப்படற அவசரத்தில ஆபீஸிலேயே விட்டுட்டு வந்துட்டேனேன்னு ..அது இருந்தா படிச்சிக்கிட்டே பொழுதக்கழிச்சிடலாம்..வழியில்ல..பர்கரும் பெப்ஸியும் காலியானது.


பெப்ஸி காகிதக்கோப்பையை கையால் நசுக்கி சன்னல் கம்பிகளூடே வெளியே விட்டெறிந்தேன்.மார்கழிக்குளிர் சன்னல்வழி பெட்டியெங்கும் பரவியது.கண்ணாடிக்கதவை இழுத்து மூடினேன்.தூக்கம் வருவது போலிருந்தது.ம்ஹூம் கூடாது..இறங்க வேண்டியது கடைசிக்கு முந்தின ஸ்டேஷன்..முழிச்சிக்கிட்டு இருக்க வேண்டிய கட்டாயம்.திரும்ப வர்றதுக்கு வண்டி இருக்கோ என்னவோ..?கண்களைக்குறுக்கி சன்னல் வழியே வெளியே பார்க்க முயன்றேன்.ஆங்காங்கே சில தெருவிளக்குகளும் அவ்வப்போது கார்களும் கடந்து செல்வது தெரிந்தது.எரிச்சலாக வந்தது.நாளைக்கு சீக்கிரமே வேலையை முடிச்சிட்டு கிளம்பிறணும்....பெட்டியில் அவ்வளவா கூட்டம் இல்ல,..அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டொரு பேர்..என்னைப்போலத்தான் போலிருக்கிறது.அருகிலிருந்தவர் பேப்பரை மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்.இரவல் கேட்கலாம் என நினைப்பே அடுத்தவனுக்கு வராதபடி படித்துக்கொண்டிருந்தார்.


லேசாகக் கண்ணயர்ந்தது.ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது.இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதல்லவா என்ற நம்பிக்கையில் தூங்கியது தெரியவில்லை கடைசி ஸ்டேஷன் வரும் வரை.


யாரோ தட்டுவது போலிருந்தது....விழித்துப்பார்த்தால் அருகிலிருந்த பேப்பர்காரர் ..கடைசி ஸ்டேஷன் வந்திருச்சுப்பா..இறங்கிடு எனக்கூறிவிட்டு இறங்கிச்சென்றேவிட்டார்.வண்டி முழுவதும் காலி.வாட்சைப்பார்த்தேன்..மணி 12:45 எனக்காட்டியது...ஐயையோ காலைல சீக்கிரம் வேற போய்த்தொலைக்கணுமேன்னு நினைத்து எழுந்திருக்கும்போது வண்டி விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது.கீழே இறங்கி ப்ளாட்ஃபார்மில் நின்றுகொண்டேன்.ஒருத்தரையும் காணோம் ..வெறிச்சோடிக்கிடந்தது,ப்ளாட்ஃபார்மில் கிர்ர் கிர்ரென்று சப்தம் எழுப்பிய சோக் ட்யூப்பை மினுக்மினுக்கியது.தூணுக்கருகில் முடங்கிக்கிடந்தான் ஒரு பிச்சைக்காரன்..அவனோடு ஒரு நாயும் உறங்கிக்கொண்டிருந்தது,அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரையும் காணவில்லை.மெதுவாக நடந்தேன்..ச்ச இப்டித்தூங்கி தொலைச்சிட்டேனே'ந்னு நொந்துகொண்டே நடந்து கொண்டிருந்தபோது இரண்டு ரயில்வே போலிஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தனர்."என்ன தம்பி வண்டிய விட்டீங்களா..இனிமே காலைல நாலேமுக்காலுக்குத்தான் வண்டி..'எங்க போகணும்...என்ன தூங்கிட்டியா ?"ன்னு ஏளனமாகக்கேட்டார்.பக்கத்திலிருந்த போலீஸ்காரர் 'தம்பி இங்க நிண்ணு ஒண்ணும் பிரயோசனமில்ல...வெளிய போய் ஏதாவது ஆட்டோ கிடைக்குதான்னு பாரு'..எப்படியும் 100ரூபாயாவது கேப்பான்..நடுராத்திரியாரிச்சில்ல..போ..போ..ன்னு விரட்டினர்.கடைசியில் வந்திறங்கிய வண்டியும் பெரிய சத்தம் போட்டுக்கொண்டு ப்ளாட்ஃபாரத்தை விட்டு சென்றுவிட்டது.ஒரு ஆள் பாக்கியில்லாம எல்லாரையும் திட்டித்தீர்த்துக்கிட்டே நடந்தேன்.


இன்னிக்குன்னு பார்த்து பையில பைசா பாக்கியில்ல,..இருந்ததும் பர்கரும் பெப்ஸியுமாக காலியாகிவிட்டது.இருப்பினும் பையைக்குடைந்ததில் ஒண்ணுக்கு ரெண்டு க்ரெடிட் கார்ட் தான் மிச்சம்..தூக்கம் வேறு கண்ணைஸ் சுழற்றியது,நடந்து நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தேன்....குளிர் வெடவெடவென ந்டுங்கிக்கொண்டிருந்தது...ஏதானும் பஸ் கிடைக்குமா என எதிர்பார்த்தேன்..பஸ் ஸ்டாண்டின் கம்பிகளில் உட்கார்ந்து கொண்டேன்.ஜில்லிட்டது...இரும்புக்கம்பி...முழுவதும் இருட்டிக்கிடந்தது,.சுற்றுமுற்றும் பார்த்ததில் டைம் ஆபீஸ்-ல் ஒரு குமுட்டி பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது..ஒரு சத்தமுமில்லை.

அப்போது டைம் ஆபீஸிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது..கையில் டார்ச்சுடன்..என்னை வெளிச்சமாக்கியது..அந்த கனத்த உருவம்..கழுத்தில் மஃப்ளர் கட்டிக்கொண்டு கையில் டார்ச்சுடன் வந்துகொண்டிருந்தது..'என்ன தம்பி பஸ்ஸுக்காக காத்திருக்கீங்களா ?எங்கே போகணும்"ன்னு குசலம் விசாரித்தார்...பதில் சொன்னவுடன் 'அடடா கடைசி பஸ்ஸும் போயிருச்சே..முதல் வண்டி காலைல நாலேமுக்காலுக்குத்தான்..அதுவரை என்ன செய்வ..ஒரு ஆட்டோ புடிச்சு போயிடு 'என்றார்.நிலைமையை விளக்கினேன்...'அப்ப எங்கூட டைம் ஆபீஸுக்குள்ள வந்து ஒக்காந்துக்க..இங்க பனி உடம்புக்கு ஆகாது..'என்றார்.சரி என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.

ஆபீஸ் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக இல்லை,...ரெண்டு சேர்,ஒரு பெரிய டேபிள்,தண்ணிக்குடுவை-ஒரு டம்ப்ளர்..மேலே ஒரு குமுட்டி பல்ப் அவ்ளவ்தான்..நான் உள்ளே நுழைந்ததும் லெட்ஜரை மூடி வைத்துவிட்டார்.'தம்பிக்கு எந்த ஊரு'..பார்த்தா உள்ளூரு மாதிரி தெரியவில்லையே..என்றார்.நான் பதில் ஏதும் சொல்லவில்லை.எழுந்து சென்று தண்ணீர்க்குடுவையிலிருந்து தண்ணீர் குடித்து விட்டு வந்து அமர்ந்து கொண்டேன்.'குளிரு கொஞ்சம் ஜாஸ்திதான்' என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவர் எழுந்து சென்றார்..எதற்கு என்று பார்த்தபோது..குடுவைக்குப் பின்னால் இருந்த சாந்துச்சட்டியில் இருந்து கொஞ்சம் ரம்பத்தூள் எடுத்து வந்தார்..ரெண்டு சேருக்கும் நடுவில் கொட்டிவிட்டு ,எதையோ தேட ஆரம்பித்தார்.'என்ன தேடறீங்க''இல்ல இங்கே தான் தீப்பெட்டிய வெச்சேன் ..காணோம்' ..ஆங்..கிடைச்சிருச்சி..'என்று சந்தோஷத்தில் தீப்பெட்டிய உரசி ரம்பத்தூளை பற்ற வைத்தார்.புகைக்கத் தொடங்கியது...கமறல் நெடி தொண்டையைத் துளைத்தது..புகை மண்டலமாக உருவெடுத்தது...லெட்ஜர் மேலிருந்த டார்ச்சை எடுத்து மேசையில் வைக்கப்போனபோது அசல் அய்யனார் போலவே இருந்தார்..சிரிப்பு வந்தது...டார்ச்சும் மிக நீளமாக கண்,காது,மூக்கு டாக்டர் வைத்திருப்பது போலே,.இருந்தது....புகைப்பின்னணியில் அவ்வாறாகத் தெரிந்தார்...


'என்ன தம்பி சிரிச்சாப்ல இருக்கு ?''இல்ல ஒண்ணுமில்ல'ன்னு சொல்லி சமாளிச்சேன்..திரும்பவும் லெட்ஜரைத் திறந்து ஏதோ எழுத ஆரம்பித்தார்..'இந்த அர்த்த ராத்திரியில எதுக்குங்க திறந்து வெச்சிருக்கீங்க...மூடிற வேண்டியதுதானே..?'ஆஹாங்..ரெண்டு மணிக்கு ஒரு பஸ்..அப்புறம் மூணறைக்கு ஒண்ணு..இதெல்லாம் நோட் பண்ணணும்'...எனக்கு நைட்தான் டூட்டிதான்'...'இப்டி ரெண்டுங்கெட்டான் நேரத்தில பஸ்கள் வந்தா தூக்கம் கெட்டுப்போய்டாதா?''இல்ல தம்பி ..அதான் ரெண்டு மணி வரை தூங்கலாமே...அப்படியே அசந்துட்டாலும் ஹாரன் அடிச்சு எழுப்புவாங்க...கையெழுத்து வாங்கிட்டு திருப்பி அனுப்பிட்டா மறுபடி மூணரைக்குத்தானே...அந்த இடை வெளியில கொஞ்சம் தூங்கிக்கலாம் பாருங்க...!''என்ன இருந்தாலும் தொடர்ச்சியாத் தூங்காம..இப்டி விட்டு விட்டு தூங்கினா...'என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்,,,''எல்லாம் பழகிப்போச்சு தம்பி"...என்றவரின் குரலில் அந்த"பழகிப்போச்சு"சொல்லும்போது குரல் கம்மி கொஞ்சம் எனக்காக வாஞ்சனையோடு பரிதாபப்படேன் என்பது போல் தொன்றியது எனக்கு...'இன்னிக்கு எதிர்பாராத விருந்தாளி வந்திருக்கீக...அதனால தான் தூங்கல...இல்லன்னா இந்நேரம் மூணாஞ்சாமந்தான்..'என்றவர் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார்,..ஐயோ நாம வந்து இந்தக் கோழித்தூக்கத்த கெடுத்திட்டோமேன்னு நினைத்துக் கொண்டேன்..'தம்பி உங்களுக்கு"என்று ஒரு பீடியை நீட்டினார்..'வேண்டாம் எனக்குப் பழக்கமில்ல"..' தம்பி நீங்க ஒண்ணும் மனசுல வெச்சுக்கவேணாம்..என்னடா இவன் தூக்கத்த கெடுத்துட்டோமேன்னு....' என்றார்..பீடிப்புகையும் ரம்பத்தூள் புகையும் ஒன்றானது...கொஞ்சம் இருமல் வந்தது...' பாத்தீங்களா..இதுக்குதான் பனியில் அலையக்கூடாதுங்கறது'..'அந்த சன்னலை சாத்திடவான்னு கேட்டார்..வேண்டாம் வேண்டாம்னு அவசரமாக மறுத்தேன்..இந்த அர்த்த ராத்திரியில் இப்படி ஒரு கவனிப்பா..?கண் சொக்கியது..நடந்த கால்கள் வலிக்கத்தொடங்கியது.....'பான்--பான்' என ஹாரன் ஒலி எனை எழுப்பியது..எழுந்து பார்த்தேன்..அய்யனாரைக் காணவில்லை..சன்னல் வழி வெளியே பார்த்தபோது டிரைவருடன் பேசிக்கொண்டிருந்தார்..பின்னர் வண்டி பின்னுக்கு எடுத்து வளைவில் சென்று மறைந்து விட்டது..



உள்ளே வந்தவர் 'என்ன தம்பி ..எழுந்துட்டீங்களா..?'தூங்குங்க....இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு...நானும் கொஞ்சம் தூங்க முயற்சி பண்றேன்..' என்றார்....கீழே பார்த்தேன்...புகை அடங்கியிருந்தது...ரம்பத்தூள் கரியாகித்தூர்ந்து விட்டிருந்தது..என்னைக்கவனித்தவர் 'இன்னுங்கொஞ்சம் தூள் போடட்டுமா தம்பி..குளிருக்கு எதமா இருக்கும்'என்று கூறியவர் பதிலுக்குக் காத்திராமல்..சாந்துச்சட்டியை காலி பண்ணிக் கொண்டு வந்து கொட்டிப் பற்றவைத்தார்..மறுபடி புகை மண்டியது...உறங்கியே விட்டேன்...



யாரோ தட்டு வது போலிருந்தது..திடுக்கிட்டு விழித்தேன்..' தம்பி மணி நாலரையாகுது..இப்ப கிளம்பினீங்கன்னாத்தான் மொத வண்டியப் புடிக்க சரியாயிருக்கும்..கெளம்புங்க..."என்றார்..நானும் கண்களைத்துடைத்து விட்டுக்கொணடு கொஞ்சம் டையைத் தளர்த்திவிட்டு வெளியே வந்தேன்..பனி இன்னும் குறையவே இல்லை...பின் வண்டி பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்..





.

Saturday, December 4, 2010

பிரியமான இசை

உறக்கத்தை ஊடுருவியது
உண்ண அமரும்போது
நினைவில் உறுத்தியது
பார்க்கும் அவள் வயது பெண்களை
எல்லாம் நினைவுறுத்தியது

விழிமூடிச்சாய்ந்து கிடக்கும் முகத்தில்
அவள் அப்போது உணர்ந்த
வலிகளை வெளியே வந்து
இப்போது அறிவிக்கும் குருதி
மனதை உறைய வைத்தது,

இந்நிலை எதிரிக்கும் வரக்கூடாதென
நினைக்கும் மனது
அறிவிடம் மன்றாடியது

வெறி கொண்ட அறிவிற்கும்
விவேகம் கொண்ட மனதிற்கும்
நடக்கும் போராட்டத்தில்
வெறியே வெல்ல வேண்டும்
என நினைத்தாலும்
விவேகமே முன் நிற்கிறது

பிரியமான இசையைப் பாடி,
கேட்டு ரசிக்கலாம்
கிடத்தி அல்ல.


.

Monday, November 29, 2010

ரகசியங்கள்

 

திண்ணை" யில் வெளியான எனது கவிதை.

எனது ரகசியங்கள்
ஏதும் வெளித்தெரிந்து
விடக்கூடாதென்ற பயம்
எனக்குள் ...ஆதலால்

என் பேச்சைக் குறைக்கிறேன்
செயலில் அதை மற்றவர்கள்
காண இயலாதவாறு
மறைக்கிறேன்

சிலரைத் தெரிந்தும்
தெரியாதது போல்
நடிக்கிறேன்

நைச்சியமாக சிலரின்
கண்களை நோக்கிப்
பேசுவதைத்
தவிர்க்கிறேன்

வழக்கமாக கூடும் இடம்
செல்லும் சாலையைத்
தவிர்த்து சுற்று வழியில்
பயணிக்கிறேன்..

நான் இயல்பில் இல்லாததை
சரியாகக் கண்டு சொன்ன
பல நாள் நண்பனை
சந்தேகிக்கிறேன்

புழுங்கும் மனதுடன்
நடைப்பிணம் போல்
அலைகிறேன்.

கனவுகள் தொல்லையில்
நடு இரவில் விழித்துக்
கொள்கிறேன்

யாருக்கும் சொல்லிக்
கொள்ளாமல்
ஊர் விட்டுச்செல்லவும்
எத்தனிக்கிறேன்.

வேற்றூரிலும் எவரேனும்
கண்டு கொண்டால்
என்ன செய்வது என்று
எண்ணி மருகுகிறேன்.

என்றாலும்
என் ரகசியம்
இன்னொரு உயிர்க்கும்
தெரிந்துதானே
இருக்கிறது.?!



.

Saturday, November 27, 2010

தண்ணீரும் கண்ணீரும்


சம உரிமை
தமிழும் ஆட்சி மொழி
எங்கும் தமிழில் கதைக்கலாம்
படிவங்களை தமிழில் நிரப்பலாம்
அவனும் தமிழ் படிக்கிறான்
பாதைகள் திறந்து விடப்பட்டு
தடையிலா வணிகம் நடக்கிறது.
அத்தனை சோதனைகள்
இப்போது இல்லை.
அதெல்லாம் சரி...
சம உரிமை கிடைத்ததா?
.....ம்.....
உங்களுக்கு காவிரி கிடைத்ததா?



தண்ணீரும் கண்ணீரும்
தண்ணீரில்
எழுத்து
தான்
'விடுதலை'
அவனுக்கு
..
தண்ணீர்
‘விடுதலே’
எழுத்தில்
தான்
இவனுக்கு.
 

.

Tuesday, November 23, 2010

நிகழ்வு




நிகழ்வு

உனக்கும் எனக்கும்
இடையேயான
வாதம் மிக வலுவானது.
எனவே இது
மீண்டும் மீண்டும் வருவது
விவாதத்தைத் தாண்டி
ஒன்றுமே நிகழ்வதில்லை
என்பதையே காட்டுகிறது.
இதனிடையே நாம்
மௌனித்துப் போகும்
கணங்கள் எம் இருவருக்கும்
உவப்பானதாகவே
இருக்கிறது
முடிவு என்ற ஒன்றை
விரும்பாத வரைக்கும்,
தன்னைத் தயார்படுத்திக்
கொள்வதற்கும்.


மொழியும் மௌனமும்

பிற மொழிகளின்
மூலம் தேடி அலைந்த போது
தமிழை வந்தடைந்தேன்
உன் மொழியின்
மூலம் தேடி அலைந்த போது
மௌனத்தை வந்தடைந்தேன்
தமிழுக்கு முன்னால்
வெறும் மௌனம்
தான் இருந்தது போலும்.



.