Sunday, January 16, 2011

தமிழின் நிலை- பாரதி

 இது பாரதி ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் எழுதிய அன்றைய "தமிழின் நிலை " இன்றும் அது மாறாதிருப்பது தமிழின் சிறப்பு...:-)

இணையப்பக்கங்களைப்புரட்டிய போது கிடைத்த இந்த 

அரிய விடயத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள ....



--------------------------------------------------------------------------------------------------------------------------


 தமிழின் நிலை பற்றி பாரதி

கல்கத்தாவில் " ஸாஹித்ய பரிஷத்" ( இலக்கியச்சங்கம் ) என்றொரு சங்கமிருக்கிறது.அதி தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச்சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி
"ஹிந்து" பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கார்,மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத்தமிழ்ச்சங்கம் முதலிய தமிழ் நாட்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டுக்காட்டி நம்மவரின் ஊக்கக்குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். 

தெலுங்கர்,மலையாளத்தார்,கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை.வங்காளத்திலுள்ள 'ஸாஹித்ய பரிஷத்'தின் நோக்கமென்னவென்றால் 'எல்லா விதமான உயர்தரப்படிப்புகளும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக்கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விட வேண்டும்' என்பது 'விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றிவிடுவார்கள்' என்பது. பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது. என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார்.வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக்கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் உபன்னியாஸங்கள் நடந்ததை எடுத்துக்காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப்படுகிறார்.

"நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும் பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை" என்று அவர் வற்புறுத்திச்சொல்லுகிறார்.

மேற்படி லிகிதக்காரர் தமது கருத்துகளை இங்கிலீஷ் பாஷையில் எழுதி
வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிக்கைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஸபைகள், ஸங்கங்கள்,பொதுக்கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள்,பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷை வளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியை மேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு.அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லௌகீக ஞானமும் அதனைப்பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸௌகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ் படித்த வக்கீல்களும் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் , தமது நீதி ஸதலங்களையும் பள்ளிக்கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும்.

பந்தாடும் போதும்,சீட்டாடும் போதும்,ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாஸ்ரம ஸபைகளிலும், எங்கும் , எப்போதும், இந்தப் "பண்டிதர்கள்" இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால் உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை , இவர்கள் தமிழெழுதக்கற்றுக்கொள்ள வேண்டும்.இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதைகாவியம் , விளையாட்டு ,வார்த்தை , வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை , ராஜ்ய நீதி ,எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும். தமிழ்ப்பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படுங்கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல.

வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீர வேண்டியிருக்கிறது.வெளியூர்களிலுள்ள
" ஜனத்தலைவரும்" ஆங்கில பண்டித "சிகாமணிகளும்" தமிழ்ப்பத்திரிகைகளைச் சரியான படி கவனிப்பதில்லை.அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக்காரியங்களையும் , அவரவர்  மனதில் படும் புதுயோசனைகளையும், தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப்பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம்.ஜனத்தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்விக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
.

1 comment: