Monday, January 3, 2011

அது எது..!

திண்ணை'யில் எனது கவிதை

சில சமயம் சன்னல்களின்
திரைச்சீலைகூட
அசையாமல் அது
உள்ளே வருவதுண்டு.

என் உடலையா மனதையா
தீண்டியதென்றறியாமல்
அது தழுவிச்செல்வதுண்டு.

சிறு மழைத்தருணத்தில்
பார்த்து மெலிதே வீசும்
மண்மணத்தை என்னோடு
சேர்ந்தே அனுபவிக்கும் அது.

சிலசமயம் மழைக்குப்பிந்தைய
இளவெயிலாக விரிந்து
கிடப்பதை நான் காண நேர்வதுண்டு.
மனது விரிந்து தன் நினைவுகளில்
சிலாகித்துக்கிடக்கையில் அது
என் குசலம் விசாரிப்பதுண்டு

சிலசமயம் இருளில்
நான் ஆழ்ந்த தனிமையில்
துயருடன் இருக்கையில்
என்னுடன் மிக அந்தரங்கமாக
அதுவும் கூடவே இருப்பதுண்டு.

எனக்கான வெளி'யில்
நான் இருக்கையில் அது
தன் இருப்பை உறுதி
செய்துகொள்வதுமுண்டு

அதிகாலைப்பனியில்
நனைந்த இதழ்களை என்
விரல் நுனிகள் தொட்டு
உணர்வதையும் பங்கு
போட்டுக்கொள்ளும் அது.

அடைமழையினால்
கூரையின் ஓரத்தில் ஒருங்கே
விழும் இடைவிடாத குளிர்
நீரை என் விரல்கள்
தெல்லித்தெரிக்கையில்
உள்ளூர ரசித்துக்கொள்ளும் அது.


.

No comments:

Post a Comment