Wednesday, January 19, 2011

ஞாபகப்பொருள்

"வியூகம்" இணைய இதழில் வெளியான எனது கவிதைகள்

அவள் தந்த அந்த ஞாபகப்பொருளை
போற்றிப்பாதுக்காத்து வந்தேன்


நாள் தோறும் கொஞ்சமும்
மாறாமல் நேரந்தவறாமல்
அதைத் துடைத்து
வைத்துக்கொண்டே இருப்பேன்

அதை விடவும் அழகான
பொருட்களாக இருந்தால்
அவற்றை அதனருகில்
இருந்து எடுத்துவிடுவேன்

நிறம் மாறியிருக்கிறதோ
அதில் அழுக்கு ஏறிவிட்டதோ
என்று சதா எப்போதும்
அதைப்பற்றியே நினைத்துக்
கொண்டிருப்பேன்

சில நாட்களில் உடல் நலக்குறைவு
கொண்டு அதைத்துடைக்காமல்
விட்டுவிட்டால் அடுத்த நாள்
நேற்றைக்குமாகச் சேர்த்து
இரண்டு முறை
துடைத்து வைப்பேன்

என்னையும் மீறிய
வேலை மிகுதியால்
சில நாட்களில்
அதைப்பற்றிய நினைவற்றுப்போவேன்

போகும்போதும்
வரும்போதும் அதைக்
கடந்து செல்கையில்
அது என்னைக்கடந்து
செல்வதில்லை என்றும் உணர்வேன்

சில நாட்களில்
அதன் மேல் வெறுப்பும்
கோபமும் கொண்டு
வேண்டுமென்றே
அதைக்கவனியாமல்
விட்டுவிடுவேன்.

பின் சிறிது குற்ற உணர்வுடன்
மீண்டும் அதை துடைப்பதிலும்
ஒழுங்கு செய்வதிலும்
அதிக நேரம் செலவிடுவேன்

அதைப்பார்த்து எனக்குள்
புன்னகைப்பதிலும்
முழு மனதுடன்
அதைக்கையில் எடுத்து
வைத்துக்கொள்வதிலும்
அக்கறை காட்டுவேன்

இப்படி இருக்கிறது
இல்லை என்ற உணர்வு
அவ்வப்போது மேலிட
எனக்குள் சிரித்துக்கொள்வேன்.

எனினும் நாளாக ஆக
அதில் இருந்த ஆர்வம் ஏனோ
குறையத்தொடங்கி
துடைப்பதும் குறைந்து
பின்னர் இல்லாமலேயே போனது

பிறகு ஒரு மழை நாளில்
அதற்கு அருகிலிருந்தவற்றை
ஒழுங்கு படுத்த
முயன்ற போது
அது கீழே விழுந்து
உடைந்தே விட்டது..

சுக்கல்களை எடுத்து மீள
ஒட்டவைக்கவே இயலாத
அளவுக்கு.

பிறகு அது எப்போதும்
எனது நினைவை விட்டு
அகலவேயில்லை
எப்போதும்...


சரியாத்தானே இருக்கு..?

சரியான மழை
சரியான குளிர்
சரியான வெய்யில்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான அடம்
சரியான அழுகை
சரியான பிடிவாதம்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான திமிர்
சரியான கர்வம்
சரியான கொழுப்பு
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான இடி
சரியான நெரிசல்
சரியான கூட்டம்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?
சரியான அடி
சரியான வலி
சரியான காயம்
எல்லாம் சரியாத்தானே இருக்கு..?



.

No comments:

Post a Comment