Sunday, November 12, 2017

'ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்'


பரமக்குடியில் எங்கள் வீட்டுக்கு ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என்று ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கையை கொண்டு வந்து போடுவதற்காக ஒரு பிராமண முதியவர் எப்போதும்,மாதந்தோரும் வருவார். அவர் கையில் உள்ள துணிப்பையில் புத்தகக்கட்டும், மறுகையில் ஒரு குடையும் பிடித்தவாறு வந்துசேருவார். காலை பதினோரு மணியளவில் வேகாத வெய்யிலில் வந்து சேருவார். அதில் வரும் படக்கதையை நான் விரும்பிப்படிப்பது வழக்கம். வரும்போதெல்லாம் என்னை எங்கே என்று தேடிக்கொண்டே வருவார் , என்னைக்கண்டதும் தம்பி, ‘இன்னிக்கு என்ன செய்ற’ என்று கேட்டுக்கொண்டே கொஞ்சம் சிக்கலான கணக்குகளை கொடுத்து விடுவிக்கச்சொல்வார். எனக்கு அப்போதே கணக்கு என்றாலே பிணக்கு ஆமணக்கு வகையறாதான். எதோ என்னாலியன்றவரை விடையளிக்க முற்படுவேன். சிரித்துக்கொண்டே , ஹ்ம், ‘கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டுவா’ என்று கூறிக்கொண்டு வெளியே இருக்கும் மரக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு , எப்படி எளிதாக கணக்குகளை விடுவிப்பது என்று சில சூத்திரங்களை எனக்கு வேண்டாமென்றாலும் விளக்கிக்கூறுவார்.

மாதத்தில் இன்ன நாளில்தான் வருவார் என்று தெரியாது. கடைசி வாரம் இல்லையேல் முதல் வாரத்தில் இன்னும் சிக்கலான கணக்குகளோடு ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தையும்’ கூடவே கொண்டு வருவார். ஒவ்வொரு மாதமும் கணக்கு ஏகத்துக்கு சிக்கலாகிக்கொண்டே போக எனக்கு ஏற்கனவே வெறுப்பு. எப்படியாவது அவர் வரும் போது வீட்டில் இல்லாமல் போய்விடவேண்டும் என நினைப்பேன். ஒவ்வொரு தடவையும் சரியாக மாட்டிக்கொள்வேன் அவரிடம். எங்கள் ஊரில் கணக்காசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர்.

ஒரு நாள் அவரின் பைக்கூடும் குடையும் அவர் தூரத்தே வருவதைக்காட்டிக் கொடுத்தது. ஓடிப்போய் அருகிலிருந்த பெரியம்மாவின் வீட்டில் போய் ஒளிந்துகொண்டேன். வந்தவர் புத்தகத்தைக்கொடுத்துவிட்டு எனக்காக காத்திருந்து பார்த்திருக்கிறார். அவர் சென்றதும் எனது அண்ணனின் பையன், நான் ஒளிந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு,அவனின் அம்மா’விடம் எனக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான் “அம்மா அந்தத்தாத்தா , ராமகிருஷ்ணவிஜயம் போட்ற தாத்தா இவங்களைத் தேடிக்கிட்டிருந்து விட்டு, கணக்கு கேட்பேன்னு நினைச்சு ஓடி ஒளிஞ்சுக்கிட்டானா’ன்னு கேட்டார்மா என்று போட்டு உடைத்துவிட்டான். பின்னரும் அவர் வருவதும் நான் ஒளிவதும் சிலநாட்களில் மாட்டிக்கொள்வதுமாகக் கழிந்தது.

அவர் கணக்கு சொல்லிக்கொடுக்கும் முறையில் , கடுமையாக இருப்பார், அதனால் யாரும் அவரிடம் ட்யூஷன் கூட வைத்துக்கொள்ளமாட்டர்கள் :) பிறகு சில மாதங்களாக அவரைக்காணவில்லை. நிம்மதி. திடீரென ஒரு நாள் அதே பையை எடுத்துக்கொண்டு ஒரு நடுத்தர வயதினன், எங்கள் வீட்டிற்கு வந்து , ‘பெரிய ஐயா’ இந்தப்புத்தகத்தை கொடுத்துவிட்டு காசு வாங்கி வரச்சொன்னார்கள்’ என்றான். ‘இந்தப்புத்தகம் வாங்குவதே அந்த பெரியவர் தள்ளாத வயதில் வந்து கொடுக்கிறாரே’ என்றுதான் எனச்சொல்லி ‘புத்தகம் வேண்டாம்’ எனக்கூறி அனுப்பிவிட்டனர். புத்தகமும், தர்மசங்கடங்களை உண்டாக்கும் கணக்குகளுக்கும் ஒரு பெரிய டாட்டா :)

இன்றைக்கு பெங்களூரில் அப்பார்ட்மெண்ட்டில்,கீழ்த்தளத்தில் செக்யூரிட்டி அனைவர்க்கும் வரும் தபாலை வீடு வாரியாக பிரித்து வைப்பது வழக்கம்.அப்போது அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என் கண்ணில் பட்டது. மேலிருக்கும் எந்த வீட்டினரோ அந்தப்புத்தகத்துக்கு சந்தா கட்டியிருப்பர் போல, நல்ல பிளாஸ்ட்டிக் தாள் பேக்’கில் பெயரும், முகவரியும் தெளிவாகத்தெரியும்படி அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ மேஜையில் கிடந்தது. புத்தகமும் அதில் தொடர்ந்தும் வாசித்த படக்கதைகளும் மறந்துபோய் ,கணக்கும் பைக்கூட்டுடன் குடையும் கையில் வைத்திருந்த அந்த முதியவர் மட்டுமே தெரிந்தார்.


 .

No comments:

Post a Comment