Sunday, October 1, 2017

ஏழு தோட்டாக்கள்



'ஐ யாம் கௌரி' நேற்று சாயங்காலம் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி அரங்கத்தில் திரையிடப் பட்டது. அரங்கு நிறைந்த மௌனம். ஆங்கிலம் மட்டுமே பிழையின்றி எழுதிப்பேசிக் கொண்டிருந்த கௌரி, கன்னடத்திலும் வெகு குறுகிய காலத்திலேயே பத்திகள் எழுதுமளவுக்கு தேர்ந்தார். பத்திரிகைகளில் வரும் எழுத்துப்பிழைகளை சரிபார்க்கும் அளவுக்கு முன்னேறினார். பிறப்பால் கன்னடராயினும் ஆங்கில வழிக்கல்வி பயின்றவர். பங்காளிச்சண்டையில் 'லங்கேஷ் பத்திரிகே' கை நழுவிப்போன போது கொஞ்சமும் அசராமல் இரண்டே வாரங்களில் 'கௌரி லங்கேஷ் பத்ரிகே' என ஒன்றைத்தொடங்கி இன்று வரை அதை நடத்திக் கொண்டிருந்தார். எடுத்துக்கொண்ட பிரச்னைகள் அவரை இந்த அளவிற்கு வன்முறைக்கு இலக்காக்கியிருக்கிறது. பழங்குடியினரின் வாழ்வாதாரம், ஜேஎன்யூ மாணவர்கள் கன்னையா குமார்/ஷீலா ரஷீத் போன்றவர்களை அரவணைத்துச்சென்றது, ஆர் எஸ் எஸ்ஸிற்கு கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்த்துப்பேசியது என.

ஐந்து மணிக்கு எனக்கூறியிருந்த போதும் , படம் திரையிட தாமதமானது. இயக்குநர் தீப்பு மன்னிப்புக்கூறிக்கொண்டு படத்தை தொடங்கி வைத்தார். தங்கு தடையின்றி கௌரி லங்கேஷின் பேச்சு, அவரது நடவடிக்கைகள் என தொடர்ந்தும் சம்பவங்கள் கோவையாக வந்து விழுந்தன. ஒரு ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிக்கூறு படம் ஓடியிருக்கும். அரங்கில் அவரது அன்னை, மற்றும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர். வழக்கம்போல எல்லா அம்மாக்களையும் போல என் மகள் டாக்டராக வேணும் என்றுதான் விரும்பினேன் அவள் தான் ஜர்னலிஸம் எடுத்துப்படிக்கப்போகிறேன் என அதையே படித்து பின் முழுநேர பணியாக்கிக்கொண்டார்.

லிங்காயத் பிரச்னைகளையும் முன்னெடுத்துச்சென்றிருக்கிறார். லிங்காயத் வகுப்பைச்சேர்ந்த துறவிகளும் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்துக் கொண்டதைக்காண நேர்ந்தது. இஸ்லாமியர்களும் பர்தாக்களுடன் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். Communal Harmony என்றால் என்னவெனப்போதிக்க முயன்றவருக்கு பரிசு ஏழு தோட்டாக்கள். கௌரியால் கர்நாடக முதலமைச்சரை ஒரு ஃபோன் காலில் அழைத்து அவரை சந்திக்க முடிந்ததையும் நினைவு கூர்ந்தனர். எல்லோரும் வெகு எளிதில் அணுகும் படியான தூரத்திலேயே இருந்திருக்கிறார். திருநங்கைகளுடன் அவர் பேணிய உறவு, பழங்குடியினருடன் அவர் உரையாடியது என அத்தனையும் ஆவணக்கோப்பில் பதிவாகியிருக்கிறது.

அவர் சுடப்பட்ட அன்று உடன் வெளியான அத்தனை ட்வீட்களையும் இயக்குநர் தீப்பு' படத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார். மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதில் என்ன தவறு என்று காரசாரமாக அவர் என்ன செய்ய விழைந்தார் என அறிந்துகொள்ளாமலேயே முன்கூட்டிய அவதானிப்பில் அள்ளித் தெளித்திருந்த கோலங்களைப் பதிவு செய்திருந்தார்.

அவருடன் பணியாற்றிய பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் ஆவணப்படத்தில் பேசியி ருக்கின்றனர். எத்தனை பெரிய பத்திரிக்கைகளிலும் சம்பளம் நேரத்துக்கு கிடைப்பதில்லை எனினும் கௌரி லங்கே ஷ் பத்ரிக்கையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினத்தன்று சம்பளம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். கடைசி செப்டம்பர் மாதச் சம்பளத்துக்கென கௌரி லங்கேஷ் தமது எல் ஐ சி பாலிசியை சரண்டர் செய்திருப்பதாகவும் அதன் மூலம் இம்மாதம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்ததை எண்ணி மாய்ந்து போகிறார் பதிப்பாளர். தொடர்ந்தும் பத்திரிக்கை நடக்கும் என மேடையில் முழங்குகிறார். இரவு இரண்டு மணி எனப்பாராது விமான நிலையம் வரை வந்து தம்மை அன்புடன் அழைத்துச் சென்றதை நினைவு கூறுகிறார் கன்னையா குமார்/மேவானி. பின்னரும் காலை பத்து மணியளவில் தானே காரை ஓட்டிக்கொண்டு இவர்களை கூட்டம் நடக்கும் இடத்திற்கும் அழைத்துச்செல்கிறார். உழைக்கத்தயங்காத கௌரி.

இந்த ஆவணப்படத்தயாரிப்பில் பங்கெடுத்துக்கொண்ட அத்தனை பேரும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் , ஏற்கனவே கௌரி லங்கேஷுடன் இணைந்து பணியாற்றியவர்கள். இதே அரங்கில் தான் சென்ற ஆண்டு ஷீலா ரஷீத்' காஷ்மீர் போராளியின் பேச்சும் நடந்தது. படம் முடிந்ததும் அரங்கின் வெளியில் இயக்குநரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம் நான் ஸ்ரீனி மற்றும் தோழர் சௌரி. இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் திரையிட திட்டமிட்டிருப்பதை எங்களிடம் கூறினார் தீப்பு. எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பிரதி அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்தேன். தோழர் சௌரியும் அதையே வேண்டிக் கொண்டார். இரண்டொரு நாளில் இந்தப்படத்தை யூட்யூபில் பதிவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிவித்தார் இயக்குநர்.

படம் முடிந்ததும் வழக்கமாக நாற்காலிகள் நகற்றுவதும். சலசலவென பேச்சு கிளம்புவதும் இயல்பு. அப்படி ஏதும் இங்கு அரங்கில் நிகழவேயில்லை. சட்டென விளக்குகள் எரியத்தொடங்கியதும் அவசர அவசரமாக கண்ணீரைத் துடைத்துக்கொள்ள எத்தனித்தனர் அனைவரும். அரங்கில் மயான அமைதி. மைக் எடுத்து இயக்குநர் தீப்பு பேசத்துவங்கியதுமே நிலமை சகஜமானது. எழுத்தை எதிர் எழுத்தால் சரி செய்ய வேண்டுமென்ற காலமெல்லாம் போயே போய்விட்டது.

ஆவணப்படத்தில் பணியாற்றிய அத்தனை பெயர்களும் பட்டியலிட்ட பிறகு ,கௌரி நம்மை நோக்கி 'உங்களுக்கென இன்னமும் இரண்டொரு வார்த்தைகள் உள்ளது பிறகு பேசுகிறேன்' என்று கூறியதும் திரை விழுந்தது. அவர் எப்போதும் பேசுவார் நம்முடன் அவரின் எழுத்துகள் மூலம் அதை யாராலும் தடுக்க இயலாது. .


.

No comments:

Post a Comment