இந்த அப்பட்டமான Alfred Hitchcock- ன் காப்பி படத்துக்கு விமர்சனம் எதுக்கு? அப்டீன்னு முன்முடிவோட படம் பார்க்கப்போன என்னை தனது வலுவான திரைக்கதையால விமர்சனம் எழுத வெச்ச இயக்குனர் ராஜன் மாதவ்'விற்கு வாழ்த்துக்கள்.
எல்லாமே சரியா திட்டமிடப்படுது , எங்க திரும்பணும், எப்ப அடிக்கணும்,எப்ப சுடணும் என எல்லாமே கரெக்ட்டா எழுதி, ப்ளான் பண்ணி ஒரு கொலையைப்பண்றத காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு , Plan B கூட வைத்துக்கொண்டு ,திரையில் காட்சிகளை நகர்த்தி , ஒரு Compelling Drama-வை [Action Thriller- னு சொல்ல முடியல இந்தப்படத்த ] நம்மை இருக்கையை விட்டு எழுந்துகொள்ள விடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர். வசனங்களும் அதுக்கு ரொம்பவே கைகொடுக்கிறது.
பிரசன்னா முழுக்க நம்ப வெச்சு [ நம்மளயுந்தான் ..! ] கெடுக்கிற கேரக்டர். சேரன் அதே வழக்கம்போல உள்ளுக்குள்ளயே குமைந்து கொண்டிருக்கும் கேரக்டர் , யுத்தம் செய்'யிலிருந்து , ஒரு வேளை இது அடுத்து தொடர்ந்த படமா இருந்ததால அதே மூடு'ல நடிச்சிருக்கார் போல.ஆகாத மனைவி குடுக்குற ஆறின காப்பி குடிச்ச வருத்தம் முகம் முழுக்க இறைந்து கிடக்கிறது அவருக்கு.என்ன இந்தப்படத்துல துப்பாக்கி தூக்கிறதுக்கு பதிலா Guitar-ஐத் தூக்கியிருக்கார். [ பின்னால துப்பாக்கி தூக்கத்தான் செய்றார் ..! ]
சேரன் அவ்வளவு மன உளைச்சலிலும் நம்மை சிரிக்க வைக்க முயல்வது "நான் எனக்கு கல்யாணம் ஆகலன்னு சொன்னனா ? "ன்னு கேக்ற இடம் மட்டுமே.மற்ற இடங்கள்ல ஏண்டா,எனக்கு மட்டும் இப்டி இருக்குன்னு சொல்ல முடியாம தனக்குள்ளயே சுய பச்சாதாபம் நிறைந்து அதை வெளிக்காட்டவும் முடியாம திண்டாடுவதை நல்லா செய்திருக்கார்.
"உங்கள போலீஸ் பிடிக்கமுடியாதுன்னு தெரிஞ்சா உங்க மனைவியக்கொல்ல துணிவீங்கதானே"ன்னு பிரசன்னா கேக்றப்ப ஆடிப்போறது சேரன் மட்டுமில்ல, பாத்துக்கிட்டிருக்கிற நம்மளுந்தான்."ஏன் செஞ்சா தான் என்னன்னு தனக்குள்ளேயே கேக்கவைக்கிற அளவுக்கு" ஆழம் பார்க்கிற பிரசன்னா'வின் கேஸனோவா கண்கள்.சான்ஸ் கிடைச்சா அதயே தான் நாமளும் செய்வோம்னும், Consequences-க்கு பயந்து தான் எல்லாரும் நல்லவனா நடிச்சிக்கிட்டிருக்கோம்ங்கறதயும் தெளிவா புரிய வைக்கிறார்.
சேரன்'கிட்ட இருக்கிற அந்த வெறுப்பை , தனக்கு சாதகமாப்பயன்படுத்திக்கிர்ற பிரசன்னா'வின் உத்திகள் வெகு சிறப்பு. ரோட்டோரத் தோட்டத்தில திருட்டு மாங்கா பறிக்க அனுப்புறதும், பின்னால அவரே போட்டுக்குடுக்கிறதும், சேரனோட காரை வலிய ப்ரேக்டவுன் பண்ண கோஷ்டிகள்கிட்ட,சேரன் சொல்றதையும் பொருட்படுத்தாம போயி வம்பு வளத்து , பின்னால சேரனையே சண்டைக்குள்ள இழுக்குற காட்சிகளும் சபாஷ்.
Strangers-ஆன நமக்குள்ள Help பண்ணிக்கிட்டா Motive என்னானு தெரியாமலேயே போயிடும் ரெண்டு பேரும் Easy-ஆ தப்பிச்சுக்கலாம், அப்டியே பிடிக்கிறதா இருந்தாலும் இன்னொரு ஜென்மம் எடுத்துதான் வரணும்' னு பிரசன்னா சொல்றப்ப நமக்குள்ளயே ஒரு எதிர்பார்ப்பு ,நம்பிக்கை வர்றத தவிர்க்க முடியவில்லை.
சேரன் ஒண்ணும் சொல்லாது இருப்பதை தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு , பிரசன்னா , சேரனின் வழியில் தடையாயிருக்கும் அனைவரையும் போட்டுத்தள்ளிவிட்டு , சேரனை தனது வழிக்கு கொண்டுவருவது இன்னும் சேரனின் கேரக்டரை மெருகூட்டுகிறது.ஏற்கனவே உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பவரை சூழ்நிலைக்கைதியாக ஆக்கிவைத்து விட்டு , இனி வேறு வழியேயில்லை , எனக்கு உதவித்தான் ஆகணும்னு பிரசன்னா மல்லுக்கட்டுவது நம்மை படத்தோடு ஒன்றத்தான் வைக்கிறது.
"உனக்குப்பிடிக்காத மனைவிய நான் கொல்றேன், எனக்குப்பிடிக்காத என் அப்பன நீ கொல்லு" இந்த ஒரு வரிய மட்டும் "Strangers on Train"- லருந்து எடுத்துக்கிட்டு வேறெந்தக்காட்சிகளையோ , இல்ல உத்திகளையோ மூலத்திலிருந்து எடுத்துக்கொள்ளாது தமது அழகான கதை சொல்லும் திறமையால் படத்தை கொஞ்சமும் அசராமல் நகர்த்திச்செல்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ்.பிரசன்னா கேரக்டர் மூலமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு செல்கிறது .அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு எப்பவுமே பிரசன்னா தான் தீர்மானிக்கிறார்.படத்தின் இடைவேளையைக்கூட பிரசன்னா'தான் நமக்கு சொல்கிறார் :-)
படத்தின் ஒரு ஹீரோ சேரன் ஒரு இசையமைப்பாளர், மேலும் Guitar அவரது Speciality என்று காட்சிகளால் நமக்குக்காட்டிவிட்டு
Guitar-ஐ முதன்மையாகக்கொண்டு ஒரு பாடலையும் நமக்கென படத்தின் இசையமைப்பாளர் சஜ்ஜன் மாதவ் கொடுக்கவில்லை.ஒரு Thriller படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டுமோ , அப்படி எந்த இடத்திலுமே இல்லை, .குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஜெயப்ரகாஷை'க்கொல்ல சேரன் ,க்ளப்'பில் அவரைப்பின் தொடர்ந்து செல்லும் இடத்தில் ,ஏதோ காதலனுக்கு காதலி டேக்கா கொடுத்து விட்டு செல்லும் காதல் காட்சிகளுக்கு இசைத்தது போல தோணுவது Pathetic. திகிலுக்கு உரம் சேர்க்காத இசை இந்தத் திரைப்படத்தின் முக்கியமான Weakness.திகில் படங்களுக்கென பிரத்யேகமான முறையில், முன்பு பழைய படங்களில் 'வேதா' போன்ற ஜாம்பவான்களின் இசையை நன்கு உணர்ந்திருக்கும் நமக்கு இங்கு மிஞ்சுவது வெறும் ஏமாற்றம் மட்டுமே.
Chashme Buddoor-ல் வரும் Chamko Girl தீப்தி நாவல் போல, ஹரிப்ரியா சேரன் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நன்கு சோப்' போடுகிறார்
[நமக்கும் சேர்த்துதான் :-) ], 'ஏங்க காஸ்ட்லி ஷர்ட்டு'ங்க என்பதையும் பொருட்படுத்தாமல் Permanent Marker -ஐ வைத்து அழுத்தமாக ஷேர்ட்டில் மட்டுமில்லாமல், சேரனின் மனத்திலும் அழியாத கோடுகள் போடுகிறார் ஹரிப்பிரியா.! இவர் வந்து செல்லும் காட்சிகளில் தான் சேரனுக்கு தமது
முகத்திலும் , நமக்கும் இறுக்கமற்று இருக்க முடிகிறது.
Accidents நடந்துக்கிட்டேதான் இருக்கும் , அதை யாராலும் கணிக்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது, அந்த மாதிரி ஒரு Planned Accident -ஆல நம்ம பிரச்னைய நாமளே Solve பண்ணிக்க முடியும்.அதே மாதிரி ஆக்ஸிடெண்ட் அந்த Chamko Girl ஹரிப்பிரியா'வுக்கு கூட நடக்கலாம்' னு பிரசன்னா சொல்லும்போது நம்ம முதுகுத்தண்டு ஜில்லிடறத யாராலும் தடுக்கமுடியாது.
"கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி" என்று சரோஜா'வில் Item Song-க்கு ஆடிய நிகிதா, கிட்டத்தட்ட அதே போல காசுக்கு ஆசைப்படும் Software Engineer -ஆக வந்து சேரன் மேல் எரிந்து விழுந்து கொண்டு , அவ்வப்போது சக Colleague-இடம் வழிந்து affair வைத்துக்கொண்டு பின்னர் ஒரு கார் ஆக்ஸிடென்ட்டில் செத்தும்போகிறார்.குறிப்பிட்டு சொல்லும் படியாக அவர் கேரக்டர் அமையவில்லை.இவரைப்போல நிறையப்பெண்கள் வர்றாங்க படத்துல , ஆனா யாரும் மனதில் நிற்கவில்லை , ஹரிப்பிரியாவைத்தவிர.
இசைப்பவனின் மனதில் குருதிக்கு இடமில்லை , ஏதோ அது போன்ற சில காட்சிகளுக்கென , அதிர வைக்கும் இசையைத்தந்து விடுவதோடு முடிந்து போகிற விஷயத்தை , தன் கையாலேயே செய்ய வைக்க நினைக்கும் பிரசன்னா'வை கூட வைத்துக்கொள்ள முடியாமலும் , புறந்தள்ளி விடமுடியாமலுமாக , மனக்கொந்தளிப்பை,தனது இயலாத தன்மையை வெகு இயல்பாக காட்டியிருக்கிறர் சேரன். ஆட்டோக்ராஃபிற்குப்பிறகு அவருக்குப்பேர் சொல்லிக்கொள்ளக்கூடிய ஒரு படம் இது !
இந்தப்படத்தோட ஹீரோ சேரனா இல்ல பிரசன்னா'வாங்கற "முரண்"ஐத் தவிர வேறேதும் முரணாகத்தெரியாமல் பல நல்ல உத்திகளுடன், படத்தை வலுவான திரைக்கதையை வைத்துக்கொண்டு ,Hitchcock-ன் உதவியுடன் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு சபாஷ்.
.
.
nice..
ReplyDeletethanks இராஜராஜேஸ்வரி ..:-)
ReplyDelete