Friday, October 7, 2011

சுதேசிகள்



அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து
கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும்
ஆபத்பாந்தவர்களான அடிடாஸு’ம் ,ப்யூமா’வும்
வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்

தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள்
மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை
‘ஆதலால் காதலை’ச்சொல்ல இப்போதெல்லாம்
ஆதாமும்  தங்கம் தேடி அலைகிறான்.

வெள்ளாவியில் வைத்துத் துவைத்ததால்
போகாத அழுக்குடன் எல்லோரும்
வாழ்நாள் முழுதும் மல்லுக்கட்ட இயலாமல்
ஒரு தேக்கரண்டி பொடி தேடி அலைகின்றனர்

வெள்ளை உள்ளம் படைத்தவரை
இனங்கண்டுகொள்ள
அவரின் முகமும் செயற்கை
வெள்ளையாய் இருத்தல் அவசியம்
அதுவும் ஏழே நாளில்.

பார்க்கச்சென்ற பெண்
அழகாக  மட்டும் இருந்து விட்டால்,
அவர் போடும் காப்பியும்
இலுப்பைப்பூவின்றி இனிக்கிறது.

இளம் வயதுப்பெண்களுக்கு
இப்போதெல்லாம் இயல்பு வாசனையுள்ள
விடலைப்பையன்களை பிடிப்பதில்லை
அவர்களும் மாற்று மருந்து தேடி அலைகின்றனர்.

தாய்த்தமிழில் பேசினால் தரணியில்
மதிப்பே கிடைப்பதில்லை
ஆதலால் பலரும் 30நாளில் செவ்வாய்க்கிரகமொழி
பயின்று கொண்டிருக்கின்றனர்

அடுத்த கவிதையின் கருவுக்கென
வாஷிங்டனிலிருந்து தருவிக்கப்பட்ட
ஆப்பிளின் மேல் தோலைக் கீறி
எடுக்க கடந்த 40 நாட்களாக
முயன்று கொண்டிருக்கிறேன்,
இயலவில்லை.


.

4 comments:

  1. ஜலசயனன் says:
    October 6, 2011 at 8:57 am

    நான் புதுக்கவிதைகளை படிப்பதில்லை, இருப்பினும், உமது கவிதை சிறப்பாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. மாம்பழமும், வாழையும் புளித்துபோக, லிட்சீஸும் ஸ்ட்ராபெரியும் வாங்கும் நேரத்தில் இந்த பதிவிடுகிறேன்

    ReplyDelete
  2. chithra says:

    October 8, 2011 at 3:54 am
    True, chinnapayal has got unique style of writing!

    ReplyDelete
  3. chinnappayal says:
    October 9, 2011 at 4:18 am

    நன்றி ஜலசயனன் , வெறுப்பின் உச்சம் இந்தக்கவிதை.
    மூளை மழுங்கிக்கிடக்கும் ஒரு சமுதாயம், பல நூற்றாண்டுகளாக

    ReplyDelete
  4. chinnappayal says:

    October 9, 2011 at 4:18 am
    நன்றி சித்ரா.

    ReplyDelete