Saturday, September 24, 2011

பிதற்றல்கள்



ஊறவைத்த சூரிய ஒளி,
அடக்கி வாசிக்கும் சில்வண்டுகள்,
திருவிழாக்கூட்டத்தில் சன்னமாய்
எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும்
புதிதாய் வாங்கிய ஊதியின் சத்தம்,
சாலையின் ஓரத்தில்
ஊர்ந்து செல்லும் பெயரறியாப்பூச்சி,
சகித்துக்கொள்ளவே இயலாத
நெட்டுக்குத்தலான குன்று போன்ற வலி,
சூழலறியாது தனது விருப்பை
மட்டுமே கவனத்தில் கொள்ளும் சிறுகுழந்தை,
இறந்து போன மூதாதையர் செய்த
நல்ல விடயங்கள் மட்டுமே ஞாபகத்திலிருத்தல்,
கடல்கன்னியின் உருவத்தை
பச்சை குத்திக் கொண்ட மாலுமி,
காலையில் உண்ட சிற்றுண்டியை
சட்டென மறந்துபோதல்,
புத்தி ஸ்வாதீனம் உள்ள சில நல்ல நண்பர்கள்,
பெரிய பிரச்சினை ஏதும் கிடையாத பைத்தியங்கள்,

இவை அனைத்திற்குள்ளும்
ஏதோ ஒரு ஒற்றுமை
இருப்பது போல் எனக்குத்
தோணிக்கொண்டேயிருக்கிறது.


No comments:

Post a Comment