Saturday, September 3, 2011

சோப்புக்குமிழிக் கற்பிதங்கள்



ஆப்பிளுக்குப்பதில்
நியூட்டன் தாமே விழுந்தார்
மரத்திலிருந்து
சிறுகாயமுமின்றி.

மேரி க்யூரியின்
புற்று நோய்
ரேடியத்தால் குணமாகிறது

அணுகுண்டுகள்
வெடித்துச்சிதறியதில்
லில்லிப்பூக்கள்
மலர்கின்றன

அமிலமழையில்
நனைந்த மலர்கள்
வெயிலில் பளபளவென
மின்னுகின்றன.

நான்காம் உலகப்போரின்
எச்சங்கள் முதல்
உலகப்போரின் எச்சங்களை
ஒத்திருக்கின்றன.

புத்தன் சிரிக்கையில்
உதிர்ந்த அவனின் ஒரு பல்
தொண்டைக்குழிக்குள்
சிக்கிக்கொண்டது.

நடை பழகும் காகங்கள்
இயல்புச்சிறகுகளின்
பறப்பை என்றோ
மறந்து விட்டன.

சாக்கடைகளைக் கடந்து
செல்ல கப்பல்
கட்டிக்கொண்டிருக்கிறேன்
கடல்களைக்கடக்க
என் கால்கள் போதும்.


No comments:

Post a Comment