Thursday, January 2, 2020

ஓசூர்ஆட்டோ

ஓலா ஊபர் வந்துருச்சு, அதோட பத்தாயிரம் குடுத்தா பைக் லோன் குடுக்குறான் அதான் சவாரியெல்லாம் கம்மியாருச்சு. இதே ஓசூர்ல நாலு வர்சம் முன்னாடி ஒரு நாளைக்கி ரெண்டாயிரம் மூவாயிரம் வரைக்கும் சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன் . இப்ப ஐநூறு ரூவாய்க்கே நாக்கு தள்ளுது. இந்த ஆட்டோவே கடன்லதான் ஓட்றேன். ஸ்ரீராம் சிட்ல கடன் கேக்கப் போனேன் மாசம் ட்யூ ஒழுங்கா கட்டாம விட்டா, அஞ்சு நாளைக்கி ,பத்து நாளக்கி, பதினெஞ்சு நாளெக்கின்னு டிஸைன் டிஸைனா வட்டி கட்டச் சொல்றான். அதான் வீட்ல இருந்தவங்ககிட்ட பணத்த கிணத்த பொரட்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். ஓலாவில சேத்துவிட்ட ஆட்டோக்காரனும் என்ன கடன்ல தான் ஓட்றான். மாசம் ஒண்ணாந்தீ ஆனா பத்தாயிரம் ஓலாக்காரனுக்கு கட்டியே ஆகணூம், இல்லன்னா வண்டிய சீஸ் பண்ணீட்டு போய்ருவான். அதுக்குப் பயந்து எதோ அஞ்சு பத்து கெடச்சாலும் சரீன்னு நட்டத்துல தான் ஓட்டிக்கிட்டு கிடக்குறாங்ய. 

ஆட்டோ ஒரு உருளைக்கிழங்கு சீவல் கடையைக் கடந்து சென்றது. எனக்குத்தெரிஞ்சு இந்தக் கடைக்காரர் நாலு கடை வெச்சிருந்தார். எல்லாம் சிப்ஸ் கடைதான். அமோகமா ஓடிக்கிட்டு இருந்துச்சு. வரிக்கட்ட முடியாம நொடிச்சுப்போய் இப்ப ஒத்தக்கடை மட்டும் தான் மிஞ்சிக்கிடக்கு. ஆளெல்லாம் வெச்சு வேல வாங்கிக்கிட்டு இருந்தாரு. இப்பப்பாத்தா அவரே எண்ணெச்சட்டி முன்னாடி நிக்கிறாரு.

ஆட்டோவின் சீட் பின்னில் இரண்டு இலைக்கட்டுகள் கிடந்தன. அதா அது ஒரு எழவு வீட்டுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போனாங்ய.. செமத்தண்ணீ ரெண்டு பேரும். வீட்ல கொண்டு போய் எறக்கி விடப் போனா, அப்பத்தான் பொணத்த தூக்கிக்கிட்டு வெளில ஊர்வலம் கெளம்பீருச்சு. இவங்க ரெண்டு பேரும் அவசரத்துல எலக்கட்ட விட்டுட்டு போய்ட்டாங்ய.. ஹ்ம்.. அவன் குடுத்து வெச்சவன் போய்ச் சேந்துட்டான். #ஓசூர்ஆட்டோ

No comments:

Post a Comment