Friday, January 17, 2020

Pianist and Baritone



ஆப்ரா சங்கீதம் அதை வாய்ப்பாட்டாக இதுவரை நேரில் கேட்டு அனுபவித்ததில்லை. யூட்யூபில் அவ்வப்போது பரோக், ஆரட்டோரியா, சிம்ஃபொனி,ஆப்ரா ஆகியனவற்றைத்தேடும் போது  காணக் கிடைத்தாலும் , ஏனோ அதை உட்கார்ந்து கேட்க மனம் ஒப்புவதில்லை. அதிரடியான குரலில் ஏறத்தாழ நமது ‘மதுரை சோமு’ அவர்களின் கணீர்க்குரலில் காதல், கலகம், ரத்தம், சோகம், ஏமாற்றம், விரகம் என எவ்வித ரசத்திற்கும் ஒரே போன்ற ஹைட்ரஜன் பலூன் போல எப்போதும் உச்சாணியைத் தொடும் குரல் என்றால் சலிப்புத்தான் வருமே தவிர ஏனோ ஒட்டுவதேயில்லை எனக்கு.


நேற்று இரவில் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் பெங்களூர் இண்டர்நெஷ்னல் செண்டரில் வழக்கம் போல இசை நிகழ்ச்சி பியானோ மற்றும் பாரிடோன்,Baritone என்றால் விக்கிப்பீடியா இவ்வாறு கூறுகிறது இது ஒரு வகையான ஆண் குரலில் கீழ்ஸ்த்தாயிக்கும் (Bass) ,மேலான உச்சஸ்த்தாயிக்கும் இடையிலான குரல் கொண்டு பாடுவதை Baritone எனலாம்.  எல்லாப்பாடலும் அப்படித்தானே பாடப்படும் ? அதிலும் ஏகப்பட்ட வரைட்டிகள் இருக்கிறதாம். Bass Baritone தான் இவர் பாடியது என நினைக்கிறேன். லூசியானோ பவரொட்டி அவர்களின் குரல் இந்த கேட்டகரியில் வருகிறது. இதே பாரிடொன் ’Heavy Sounding’ என்றும் வகைப்படுத்தப் படுகிறது. பொதுவாக இந்த ஆப்ரா வகை வாய்ப்பாட்டுகள் இத்தாலியர்களுக்கு மட்டுமே கைவரக்கூடிய குரலாக கலையாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். இல்லை நான் இது வரை கேட்ட இந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் அனைவருமே இத்தாலியர் களாகக்கூட இருக்கலாம்.


இங்கு பாடியவர் நிக்கில் கோயல் என்ற இந்தியக்கலைஞர் , போலண்ட்க்கு போய் அங்கு இக்கலையைக் கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்திருக்கிறார். ரஷ்யன், ஜெர்மன், போலிஷ், ஃப்ரென்ச், இட்டாலியன், பிறகு ஆங்கிலத்திலும் என கூப்பாடு போட்டு வெளுத்துக்கட்டுகிறார். எனக்கென்னவோ அவர் அனைத்துப் பாடல்களையுமே ஒரே மொழியில் பாடியதைப் போலத்தான் தோன்றியது. என்னதான் பாடுகிறார் எப்படித்தான் இவரின் ஆலாபனைகள் இருக்கின்றன என அறிந்துகொள்ளவே நிகழ்ச்சி முடியும்வரை அமர்ந்திருந்தேன். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஒரு ‘மொளலின் ரூஜ்’ நிகழ்வுக்கு வந்தது போல அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தது போல இருந்தது எனக்கு.  நம்ம ரஹ்மானும் இந்த சேட்டையை கொஞ்சம் ‘ஐ’ படத்தில் காட்டியிருந்தார். (ஐலா ஐலா)



நிக்கில் கோயல் பாடும்போது மைக்கை கீழே வைத்துவிட்டு, அந்தப் பாடலைப்பற்றி அரங்கத்திற்கு அறியத்தரும்போது கையில் பிடித்துக் கொள்கிறார். அந்தக்குரல் ஒவ்வொரு சுவரிலும் பட்டுத்தெறிக்கிறது. சுமார் ஐநூறு பேர் உட்காரும் வசதியுள்ள டால்பி ஸ்ட்டீரியோ வசதியுடன் கூடிய திரைப்படங்களும் காண்பிக்கும் வகையிலான அரங்கம் அது. மைக் இல்லாது அவர் பாடும் பாடல் எந்த மூலையிலிருந்து கேட்டாலும் அதே அட்சரசுதியுடன் பிசிறின்றி ஒலிக்கிறது. இத்தனைக்கும் அரங்கு நிரம்பி வழிந்தது. இதுவரை இப்படி ஒரு கூட்டம் நான் கண்டதில்லை.  அரங்கு நிறைந்து படிக்கட்டுகளிலும் மக்கள் அமர்ந்திருந்து பார்த்தனர். எப்போதும் நிகழ்ச்சிகள் ஆறு ஆறரைக்கு ஆரம்பித்துவிடும் , நேற்று நிகழ்ச்சிகான நேரம் எட்டரையிலிருந்து ஒன்பதரை வரை. அதனால் தான் கூட்டம் செம்மியது.



மொத்தம் ஆறுபாடல்கள் , ஒவ்வொன்றும் ஒரு ஐரொப்பிய மொழியில் பாடினார். ஜாஸ், பிராட்வே, ஆப்ரா என்று வகைவகையாக. என்னவொரு எனர்ஜி. சளைக்கவேயில்லை. இடையில் மூன்று பாடல்கள் முடிந்ததும் இரண்டே இரண்டு நிமிடம் அரங்கத்தின் திரைமறைவுக்கு சென்றார்.  ஆங்கிலத்தில் விளக்கம் கூறிவிட்டு பின்னர் அந்தந்த மொழியில் பாடுகிறார். தமிழ்த்திரையில் இதுபோல பாட தகுதியானவர் ‘ஆன்டிரியா’ மட்டுமே.  ‘Whos the Hero’ (மன்மதன் அம்பு), இதுவரை இல்லாத கனவிது (கோவா) இந்தப்பாடல்களில் காணப்படும் உச்சஸ்த்தாயியை கொஞ்சம் கேட்டுவிட்டு வாருங்கள். இருந்தாலும் இதெல்லாம் லைட் வெர்ஷன் தான் தமிழ்கூறும் நல்லுலகுக்காக :)  ஏன்னா இதெல்லாம் ஆப்ரா சிங்கிங் கிடையாது. இதெல்லாம் ஆரம்பமாக வெச்சுக்கிட்டு தொடங்கலாம்.!  ஸ்ருதிஹாசனைப்பற்றி சொல்வதென்றால் கற்றுக்கொண்டு பாடுவது போல இருக்கும் அவரது வெஸ்ட்டர்ன் டைப் பாடல்கள். ஆனால் ஆன்ட்ரியா தான் ஆதென்ட்டிக்.



இத்தனை ஆண்குரலில் கணீரென அரங்கத்தையே கட்டிப்போட்டாலும் அவர் நடை நளினமாக ஒரு யுவதியின் நடையைப்போலிருந்தது என்னவெனத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை அரங்கை பியானோவை விட்டு விலகி நடக்கும்போது அங்கனமே தோன்றியது எனக்கு,



கூடவந்த  மிக்கால் க்ருப்பா’ பியனிஸ்ட், பல விருதுகளை வாங்கிக் குவித்தவராம் ஐரோப்பிய மேடைகளில். விரல்கள் நடனமாடுகின்றன. இசைக்குறிப்புகள் ஏதுமின்றி தாமே வாசிக்கிறார். பாடலுக்கு பின்னணியில் மட்டும் இசைக்குறிப்புகளுடன் வாசித்தார்.  ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் பேசுகிறார். அதிலும் பனி பொழிகிறது. ஷோப்பின் மற்றும் லிஸ்ட்’ இவர்களின் சின்ன ராப்ஸோடிகளை பியானோவில் குறிப்பின்றி அனுபவித்து வாசித்துக்காண்பித்தார்.



நிகழ்ச்சி தொடங்குமுன் சிறு புத்தகம் போல நிகழ்வில் பாடப்படும் பாடல்கள் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, இசைத்துணுக்கின் கம்ப்போஸர் ஆண்டு ஆகியன அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.  ட்ஷைக்காவ்ஸ்க்கியின் பாடலும் இடம் பெற்றது. ராசைய்யா பெருமையாகப் பேசுவார் இவரைப் பற்றி. எல்லோரும் பீத்தோவன்,மொஸார்ட் பற்றிப்பேசும் போது.



நிகழ்வின் இடையில் யாரும் புகைப்படமோ, இல்லை வீடியோப்பதிவோ எடுக்கலாகாது என்று பணிக்கப்பட்டது. நிகழ்வு முடிந்து கலைஞர்களுக்கு பூச்செண்டெல்லாம் கொடுத்தாகிவிட்டது. ஆர்வலர்கள் ஒன்ஸ் மோர் ஒன்ஸ்மோர் எனக்கேட்டதில் மிக்கால் இன்னுமொரு பியானோ மெட்லியும், குறிப்பிடப் படாத ஒரு பாடலை நிக்கிலும் பாடினார். அதுமுடிந்து இன்னொரு நபர் எனக்காக இன்னொரு பாடல் எனக்கேட்டு தொல்லை படுத்த மொத்தம் மூன்று பாடல்கள் எக்ஸ்ட்ரா. எனினும் அதில் ஒன்று கூட துக்கடா இல்லை. எல்லாம் முழுப்பாடல்கள். கலைஞனிடம்  ஒன்ஸ்மோர் கேட்பது என்பது பெங்களூர் சில்க்போர்டு சந்திப்பில் ஒரு வாகனம் கூட இல்லாத சுத்தமாக வழித்தெடுக்கப்பட்ட சாலையை ஒத்ததாகும். :)





No comments:

Post a Comment