சில மேகங்கள்
எப்போதும் மலைமுகடுகளில்
வயதானவர்கள் போல் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
காற்று வரும்போது
கலைந்துகொள்ளலாம்
என்று சோம்பேறிகள் போல் காத்திருக்கின்றன
சில மேகங்கள்
கீழிருக்கும் மனிதருக்கு
உகந்த வகையில்
அவர் ஏற்கனவே அறிந்த வண்ணம்
உருக்கொண்டு
அவரை மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
இடையிடையில் இடைவெளிகள்
விட்டு
சூரியத்தலைவனுக்கு
கீழிருக்கும்
பூமியைக்காட்டிக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
கருக்கொண்டு கீழிருக்கும்
வயல்களை
நனைக்க காத்திருக்கின்றன
சில மேகங்கள்
தம்முள் புகுந்து கொண்ட
விமானங்களை
மறையச்செய்து சிறிதுநேரம்
வரை வெளிவரவிடாது
போக்குக்காட்டிக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
தம்மைக்காண நேரில் வந்த
விமானப்பயணிகளுக்கு
அவர்களின் ஜன்னலூடாகத் தமது
வாழ்த்துகளை
தெரிவிக்க முயன்றுகொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
காற்றடிக்கும் திசையெங்கும்
இலக்கின்றிப் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன
சில மேகங்கள்
நடந்து கொண்டிருந்த
மூதாட்டிக்கு நிழல் தரவேண்டி
அவரின் நடைபாதையெங்கும்
வியாபித்துக்கிடக்கின்றன
சில மேகங்கள்
கிரிக்கெட்
விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின்
ஏசல்கள் தாங்காது திடலின்
ஓரமாக நின்று
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
தம்முள் தேக்கி வைத்திருந்த
பெருமழையைக்
கொட்டித்தீர்த்துவிட்டு
வீட்டுக்குள் இதுவரை
முடங்கிக்கிடந்த
சிறுவர்கள் ஹோ என்று
இரைந்தபடி
வெளிப்பட்டதைக்கண்டு
அகமகிழ்வுடன்
கலைய முற்பட்டன
சில மேகங்கள்
ஓவியனுக்கு இன்று நல்ல
காட்சிகள்
தரவேண்டி சூரிய ஒளியை
தம்முள் சிதறடித்து
வர்ணஜாலங்களைக்
காட்டிக்கொண்டிருந்தன
சில மேகங்கள்
தம்மிலிருந்து பெய்த
சாரல்களிலிருந்து
உருவான வானவில்லைத்தாமே ரசித்துக்கொண்டிருந்தன.
சில மேகங்கள்
தம்மை வரைபவர் எப்போதும்
மலைகளோடும், ஆதவனோடும்
சிறு பறவைகளோடுமே வரைவதை
உள்ளுக்குள்
ரசித்துக்கொண்டு உம்மென்றிருந்தன.
சில மேகங்கள்
வெளுப்பாக இருந்துகொண்டு
நீல நிற வானை
வெள்ளையடித்துக்கொண்டிருந்தன
சில மேகங்கள்
இன்று விடுப்பு
எடுத்துக்கொண்டதுபோல்
நீல நிற வானை தனியே
விட்டுச்சென்றுவிட்டன
சில மேகங்கள்
எங்கே காணோமே என்று
விசனப்பட்டோருக்கென
இரவில் வந்து தம்முகம்
காட்டிக்கொண்டிருந்தன.
சில மேகங்கள்
கொதித்துக்கொண்டிருக்கும்
குழம்புக்கு
காய்
நறுக்கிக்கொண்டிருக்கும் என் அம்மா போல்
அவசரஅவசரமாக அடுத்த
ஊருக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.
சில மேகங்கள்
தவழ்ந்து புரண்டு மிகவும்
சோம்பல் கொண்டு
அசையவும் இயலாது நிலை
கொண்டிருக்கின்றன,
சில மேகங்கள்
இங்கு பெய்யும் என
நினைப்போரை ஏமாற்றிவிட்டு
அடுத்த ஊரில்
போய்க்கொட்டித்தீர்த்து விட்டு
இந்த ஊர்க்காரர்களின் பழியை
ஏற்றுக்கொண்டன
சில மேகங்கள்
ஆலங்கட்டி மழையெனப்பொழிந்து
அவர்களின் தலைகளைப்பதம்
பார்த்துக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
வானிலிருந்து பெரிய
துதிக்கை போல கீழிறங்கி
கடலில் நீரை
உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
கடலிலிருந்து பெற்ற நீரை கொஞ்சமும்
உப்பு இல்லாது
மழையாகப் பொழியச்செய்த
மாயத்தை
அறிவியல் மாணாக்கனிடம்
கேள்விகளாக
எழுப்பிக்கொண்டிருக்கின்றன.
சில மேகங்கள்
தலையுயர்த்திப்பார்த்து ‘யப்பா
என்னா வெய்யிலு’
என்று கூறுபவரை
ஆசுவாசப்படுத்த நிழல்
கொடுக்க முயன்று
கொண்டிருக்கின்றன.
சில மேகங்கள்
பெரிய தட்டில் வைக்கப்பட்ட
நிறைய க்றீம்
கொண்ட வெண்ணிற பனிக்குழைவு
போல
இருந்துகொண்டு சிறுவர்களின்
ஆசையைத் தூண்டிக்கொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
தேவதைகள் என வானில்
ஏதுமில்லை
அவர்கள் எங்களினூடே
காட்சியளிப்பதுமில்லை
என்று உண்மையைப்
பகர்ந்துகொண்டிருக்கின்றன
சில மேகங்கள்
இலைகளின் பச்சையம் ஊறவேண்டி
சூரிய ஓளி கேட்டு நிற்கும் பெரிய
மரத்தின்
விண்ணப்பத்தையும்
பொருட்படுத்தாது
தொடர்ந்தும் அதன் மேலேயே
நிலை கொண்டிருக்கின்றன.
சில மேகங்கள்
தமக்குள் போர் கொண்டு
ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு
இடி
மின்னல்களைத்
தரையிறக்கிக்கொண்டிருக்கின்றன.
சில மேகங்கள்
தாம் பெய்துவிட்ட மழையில்
தேங்கி நிற்கும்
சிறு குட்டைகளில் முகம்
பார்த்து அகம் மகிழ்ந்துகொண்டிருக்கின்றன.
சில மேகங்கள்
இது போன்ற கவிதைகளை
எப்போதும் எழுத வைக்கத் தம்மிலிருந்து
சாரல்களைத் தூவிக்கொண்டேயிருக்கின்றன.
சில மேகங்கள்
இது போன்ற கவிதைகளை
வாசித்த பின்னராவது தம்மை
தலையுயர்த்திப்
பார்க்கமாட்டார்களா என்ற
ஏக்கத்தில் அலைந்துகொண்டிருக்கின்றன.
.
மிக அருமை:)!
ReplyDeleteமிக்க நன்றி ராமலக்ஷ்மி..:-)
ReplyDeleteஎத்தனை மேகங்கள்?உங்களுக்கு மிக அபரிதமான கற்பனை வளம்...சிறப்பான கவிதை.
ReplyDeleteமிக்க நன்றி சதீஷ்..!
ReplyDeleteநாங்கள் ஒரு மேகத்தைமட்டும்தான் பார்க்கிறோம்.கவிஞனுக்கு அதே மேகம் எத்தனை விதமாய் அழகுபடுத்தப்படுகிறது !
ReplyDeleteஏற்கனவே இந்தக் கவிதைக்கு பின்னூட்டம் போட்டேனே.காணவில்லையே.அதனால்தான் இப்போ மீண்டுமொருமுறை !
@ ஹேமா : பின்னூட்டம் ஏதேனும் மேகத்தில் ஒளிந்துகொண்டிருந்திருக்கும்...அதான் காணக்கிடைக்கவில்லை..:-)
ReplyDelete