Thursday, May 3, 2012

புதிய கடவுள்



விலங்குகள்,பறவைகள் அனைத்தும்
வாகனமாகிப்போனது என் பழைய கடவுள்களுக்கு

மரங்கள், குத்துச்செடிகள் அனைத்தும்
தல விருட்சமாகிப்போனது என் பழைய கடவுள்களுக்கு

மலைகள்,கடற்கரைகள் அனைத்தும்
கோவில்களாகிப்போனது என் பழைய கடவுள்களுக்கு

குகைகள், முட்டுச்சந்துகள் அனைத்தும்
இருப்பிடமாகிப்போனது என் பழைய கடவுள்களுக்கு

இலக்கியங்கள், புராணங்கள் அனைத்தும்
புனித நூல்களாகிப்போனது என் பழைய கடவுள்களுக்கு

கனிகள்,காய்கள் அனைத்தும்
படையல்களாகிப்போனது என் பழைய கடவுள்களுக்கு

அழகிய கன்னிகள், வேட்டுவப்பெண்டிர் அனைவரும்
காதலியர் மற்றும் மனைவியராகிப்போயினர் என் பழைய கடவுள்களுக்கு

ஒரு கடவுள் விலங்கை வாகனமாகக்கொண்டான்
ஒரு கடவுள் அதே விலங்கைப் படையலாகக்கேட்டான்
ஒரு கடவுள் பறவையைத் தோழனாகக்கொண்டான்
ஒரு கடவுள் அதே பறவையைப் படைக்கச்சொன்னான்
ஒரு கடவுள் ஒரே மனைவியோடு இரு என்றான்
ஒரு கடவுள் கூட்டுக்கலவியும் சரி என்றான்.ஒரு கடவுள் என்னை ஐந்துமுறை தொழு என்றான்
ஒரு கடவுள் என்னை எப்போதும் நினை என்றான்.

இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்டு
நம்மோடு கூடவே இருந்துகொண்டிருக்கும்
இந்தப்பழைய கடவுள்களோடு
தினந்தோறும் மல்லுக்கட்டி
எனக்குச்சலித்துத்தான் போனது 

உங்களில் ஒத்த கருத்துடைய
யாரேனும் புதிதாக
ஒரு கடவுளைக்கண்டுபிடித்தால்
எனக்குச்சொல்லியனுப்புங்கள்



.

7 comments:

  1. இந்தப்பழைய கடவுள்களோடு
    தினந்தோறும் மல்லுக்கட்டி
    எனக்குச்சலித்துத்தான் போனது // மிகவும் அருமையான வரிகள் .

    ReplyDelete
  2. சலித்தவர் பட்டியலில் இன்னுமொரு தோழர் சசிகலா ,,,வருக வருக.. :-)

    ReplyDelete
  3. உயிரோசையிலேயே வாசித்து வியந்துவிட்டேன்.என் மனநிலையும் இதேதான் !

    ReplyDelete
  4. எல்லார் நிலையும் அதேதான் ஹேமா :-)

    ReplyDelete
  5. //கடவுள்களோடு தினந்தோறும் மல்லுக்கட்டி எனக்குச் சலித்துப் போனது//
    மனித வாழ்வின் அவலங்களை இதைவிட அழுத்தமாக இதுவரை யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.
    உண்மையாகவே, உங்களைப் பாராட்டப் பொருத்தமான வார்த்தைகள் என்னிடம் இல்லை.
    நீங்க சின்னப்பயலல்ல; மிகப் பெரிய மனிதர்.
    கருத்தாழம் மிக்க தங்களின் கவித்திறனைப் போற்றுகிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. மிக்க நன்றி முனைவர் , வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..!

    ReplyDelete