Tuesday, May 15, 2012

என் அக்கா மாயம்மா
துடுக்காகப்பேசுவாள் என் அக்கா
அதற்கே அவளை லாபாய்ண்ட் என்றே அழைப்பர் பலரும்.
எனினும் அவளின் இயற்பெயர் கொண்டு அழைத்தால்
ஏனோ அவளுக்குப்பிடிப்பதில்லை

தனக்குப்பிடித்த பெயர்களை ஒவ்வொன்றாக
நாளொன்றுக்கும் கிழமையொன்றுக்குமாக
மாற்றிக்கொண்டேயிருப்பாள்
ஷோபா, ஷர்மிளா என்று க்ரந்தம் வருமாறு
அமைத்துக்கொள்வதில் அவளுக்கு ஏனோ மிக விருப்பம்

ஷோபாவின் திரைப்படங்களை
மிகவும் விரும்பிப்பார்ப்பாள்
சில நேரங்களில் அவர் போல
நடித்தும் காண்பிப்பாள் எனக்கு
அவளின் புத்தக அலமாரியில் படங்களை
ஒட்டி வைத்திருப்பாள்
கூடவே முண்டாசு கட்டியவரின் படங்களும்
ஆங்காங்கே காணக்கிடைக்கும்

என்னையும் அந்தப்புதிய பெயர்களை
வைத்தே கூப்பிடுமாறு சொல்லுவாள் என் அக்கா.
நானும் ஷோபாக்கா, ஷர்மிளாக்கா என்றே
கூப்பிட்டுக்கொண்டிருப்பேன்

நான் திடலில் பயல்களோடு விளையாடிக்கொண்டிருந்தால்
என்னோடு மார்க்கெட்டுக்கு வா ப்ளம்ஸ் வாங்கித்தருகிறேன்
என்று ஆசை காட்டுவாள்
கூடப்போனால் சொன்னபடி வாங்கியும் கொடுப்பாள்
மார்க்கெட்டில் படிக்கல்லை வாங்கி சரிபார்ப்பதையும்
தராசுத்தட்டில் கீழே ஏதும் புளி ஒட்டியிருக்கிறதா
என்றும் சரிபார்க்கவும் தயங்கமாட்டாள்

பாரதி பற்றி மிகப்பெருமையாகப்பேசுவாள்
புதுமைப்பெண் என்றெல்லாம்
நானும் அந்த பாரதி ஏதோ அவளின் தோழி போலிருக்கிறது
என்று நினைத்துக்கொள்வேன்

ஒரு முறை பாரதி வேடமிட்டு பள்ளிக்கூட நாடகத்தில்
நடிக்கும்போது தான் அறிந்தேன் அவன் ஒரு கவியென்று
அவள் அப்படி ஆண்வேடமிட்டு நடித்ததில் எனக்கு
சிறிதும் உடன்பாடிருந்ததில்லை

பாரதியை எனக்குப்பிடிக்காது என்று வலுவாகவே
அவளிடம் கூறுவேன்
பிடிக்காது என்று சொல்லாதே , அவரை உனக்குத்தெரியாது
என்று சொல் என்பாள்

தட்டச்சு குறுக்கெழுத்து என்று பலவும் பயின்றுகொண்டாள்
வேலைக்கு விண்ணப்பித்த போது உள்ளே இருந்த
கவரில் தபால் தலை ஒட்டவேண்டுமா என்று கேட்டு
கடைசிநாளில் என்னால் அதை அனுப்ப இயலாது
போனது கண்டு கடிந்துகொள்ளவும் தோணவில்லை அவளுக்கு.

புரட்சி ,போராட்டம் ,அடக்குமுறை, பெண் விடுதலை
வரதட்சணை ,கையூட்டு, லஞ்சம் , எனத் தமிழில் இத்தனை
சொற்கள் உண்டு என்று எனக்கு அறிமுகப்படுத்தியது அவள்தான்
அத்தனையையும் கேட்டுக்கொண்டு உம் கொட்டுவேன்
கிஞ்சித்தும் புரியாமல்.

பிறகும் தபால்தலை சரியாக ஒட்டி அனுப்பிய
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று வெகு நாட்கள்
வீட்டில் தான் இருந்தாள்,
என்னக்கா இன்னும் வேலைக்குப்போகவில்லையா என்று கேட்டபோது
போஸ்ட்டிங்கிற்கு லஞ்சம் கொடுக்கவேண்டுமாம் என்றாள்.
தானாக வரட்டும் என்றே இரண்டு மூன்று ஆண்டுகள் காத்திருந்தாள்.

அவ்வப்போது சில கவிதைகளும் எழுதி
என்னிடம் காண்பிப்பாள் , அவையெல்லாவற்றிலும்
மேற்கூறிய அனைத்துப் புரட்சிகளும் காணக்கிடைக்கும்
எழுத்துக்கூட்டி வாசித்துப் பொருள் புரியாமல் விழிப்பேன்
என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே
இதெல்லாம் நீ பெரியவனான பிறகு
உனக்குப் புரியும் என்று பூடகமாகச் சொல்லுவாள்.


ரயிலேறி அடுத்த ஊர்களுக்குச்சென்று
குறுக்கெழுத்து வகுப்புகள் நடத்தி வருவாள்
தெருவில் அனைவராலும் ராங்கிக்காரி
என்ற அடைமொழியிலேயே அழைக்கப்படுவாள் என் அக்கா.
அதை அவள் ஒரு பொருட்டாகக்கூட
மதிப்பதை நான் பார்த்ததில்லை

வயது ஆண் பெண் என்ற
சிறு வித்தியாசம் கூடப்பாராட்டாது
அனைவரிடமும் சகஜமாகப்பேசுவாள்
விவாதிக்கவும் தயங்கமாட்டாள்
எனினும் அவளுக்கு நெருங்கிய தோழியோ
தோழனோ இருந்து நான் பார்த்ததேயில்லை.

எப்போதும் என்னிடம் நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும் தேவையென்று
கூறிக்கொண்டேயிருப்பாள் ,
அதைக்கேட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு
அலைந்து கொண்டிருப்பதைப்பார்த்துவிட்டு
பெரிய க்ளாஸ் பயல்களிடம் நான்
பலமுறை அடி வாங்கியதுண்டு

அவளுக்கு திருமணம் செய்துவைக்க முயன்று
வீட்டில் பலமுறை தோற்றுப்போயினர்
வந்தவனிடம் ஏதேனும் குறை கண்டுபிடித்து
தட்டிக்கழித்து விடுவாள் என் அக்கா.

இலங்கை வானொலியில் ஒலிக்கும்
‘பாரதி கண்ணம்மா நீயடி செல்லம்மா’
பாடலை காதோடு வைத்து
எப்போதும் கேட்டுக்கொண்டேயிருப்பாள் என் அக்கா.

தொடர்ந்த நாட்களில் அவளின் பிடி தளர்ந்து
கொஞ்சம் நீர்த்துபோவதை
என்னால் கண்கூடாகக்காண முடிந்தது
பிறகு வீட்டில் பார்த்து வைத்த
ஒருவருடன் திருமணமும் நடந்தது
மணவறையில் கட்டிக்கொண்ட தாலியை
ஏதோ தாம்புக்கயிறு போலவே 
பார்த்துக்கொண்டிருந்தாள் என் அக்கா

சீர் செனத்தியோடு தனிக்குடித்தனமும்
போனாள் என் அக்கா , கூடவே நானும் சென்றேன்
என் அக்காவின் புது வீட்டுக்கு.
இருப்பினும் வேலைக்குத்
தொடர்ந்து போவதை நிறுத்தவேயில்லை என் அக்கா

கொஞ்ச நாளைக்கெல்லாம் எங்கள் வீட்டிற்கு
அடிக்கடி வரத்தொடங்கினாள் என் அக்கா
பெரியவர்களின் பேச்சு எனக்கு சிறிதும் விளங்கியதில்லை
வரும்போதெல்லாம் எனக்கு ஏதேனும்
வாங்கி வரத்தயங்கியதில்லை அவள்.
அப்போதெல்லாம் பாரதி பற்றிய பேச்சே எடுப்பதில்லை அவள்
வெறித்துப்பார்ப்பதும் , தனக்குள் சிரித்துக்கொள்வதுமாக
எங்கள் வீட்டில் இருக்கும் நாட்களைக்கழிப்பாள்

வெகுகாலம் கழித்து அவளுக்கு ஒரு
ஆண் குழந்தை பிறந்தது.
மிகவும் மகிழ்ச்சியோடு
தூக்கிக்கொஞ்சுவதும் அவனோடு கூடவே
நாட்களைக்கழிப்பதுமாக இருந்தாள் என் அக்கா.

படிப்பு முடிந்து எனக்கு வேலை கிடைத்து
வெளியூரில் தங்கத்தொடங்கியதும்
அவளுடன் தொடர்ந்தும் பேசும் வாய்ப்புகள்
குறைந்தேதான் போனது

உறவினர் திருமணத்தில்
என் அக்காவைச்சந்தித்தபோது,
‘அவனுக்கு இஞ்சினியரிங் காலேஜில சீட் வாங்கறதுக்கு
நாலு லட்சம் கேக்றானுங்கடா
கொஞ்சம் பேரம் பேசிக்கொறச்சு
ரெண்டர லெட்சத்துல முடிச்சுட்டேன்’ என்றாள்
அதோடு விட்டுவிடாமல்
‘என்ன ஒன் மகளுக்கு எவ்வளவு போடுவ ?
என் பையன் இன்னும் நாலே வருஷத்துல
இஞ்சினியர் ஆயிருவான்’ என்றாள்
என் அக்கா மாயம்மா.


2 comments:

  1. இப்படி எத்தனை மாயம்மாக்கள்.நானும்கூடத்தானோ என்று மனம் அஞ்சத்தான் செய்கிறது.ஏனென்றால் நம் சமூக அமைப்பு அப்படி !

    ReplyDelete
  2. ஹ்ம்..! இப்படி ஒரு அக்கா எனக்கு இருக்கிறார்..பலரும் என்னிடம் சொல்கின்றனர்,இப்படி ஒருத்தர் என் குடும்பத்தில் இருக்கிறாரென..! @ ஹேமா..

    ReplyDelete