Thursday, March 1, 2012

என் செல்ல ட்ராகன்



எனக்கென செல்லமாக
ஒரு ட்ராகன் வளர்த்துவந்தேன்

ஒரு சிறு புறாவைப்போல
என்னிடமே ஒட்டிக்கொண்டு
இருக்கும்.

அவ்வப்போது அதற்கு
சிறு பழங்கள், கொட்டைகள்
தானியங்களையே
உண்ணக்கொடுத்து வந்தேன்.

எனினும் அது இன்னும்
எவ்வாறு
தீயைக்கக்குவது என்று
பழகவில்லை.

பச்சை உடம்புடன்
செதில்கள் அதன் முதுகெங்கும்
பரவிக்கிடக்க
அவ்வப்போது
தனது சிவந்த மெல்லிய
இறக்கைகளால்
அசைத்துக்காண்பிக்கும்
அந்தக்காற்றில் நான்
உலர்ந்து போவேன்.

அதன் சிவந்த
வாயைத்திறந்து ஏதோ
என்னிடம் சொல்லவிழையும்போது
தீயைத்தான் கக்க வருகிறதோ
என்று அஞ்சி
அதனிடமிருந்து விலகி நிற்பேன்.

என் கண்களின் பயத்தை
அறிந்து தானாகவே தனது
வாயை மெல்ல மூடிக்கொள்ளும்.

கைகளைக்கொடுத்தால்
அது என் விரல்களைப்பற்றிக்கொண்டு
கீறிவிடாமல் ஏறிக்கொள்ளும்.
நிமிர்ந்து நிற்கும் அதன் தலை
என் விரல்களிலிருந்து நீட்சியாகவும்,
அதன் வால் என் முழங்கை வரையும்
பரவிக்கிடக்கும்.

ஒரு நாள் இரவு
அதன் தனிமையில்,
நான் ஒளிந்திருந்து
பார்த்தபோது அது தன்
வாயைத்திறந்து
கொஞ்சம் கொஞ்சமாகத்
தீயைக்கக்கிக்கொண்டிருந்தது
அவை அவ்வப்போது
சூரியனிலிருந்து
வரும் தீப்பிழம்புகளை
ஒத்திருந்தன.



.

4 comments:

  1. தனிமையில்,
    நான் ஒளிந்திருந்து
    பார்த்தபோது // இதைச் செய்யாமலே கண்டு பிடிக்கலாம், நாமும் பச்சோந்தியாக மாறி.. :)

    ReplyDelete
  2. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி ... thanks !

    ReplyDelete
  3. பார்த்து தோழரை சுட்டு விடப்போகிறது.


    மிக அருமையான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete