Saturday, January 21, 2012

என்னைப் போலவே..

ஆனந்தவிகடனில் வெளியான கவிதை


சூழ்ச்சி வலையில்
சிக்க வைத்து எதையும்
கிடைக்கவிடாமல் செய்வதில்
அவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

நம்ப வைத்து கடைசியில்
கழுத்தறுப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

நயவஞ்சகமாகப்பேசி
தனது சொல்லை என்னிடம்
நிலை நாட்டிக்கொள்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அதிரடியாக நுழைந்து
த்வம்சம் செய்பவர்களைக்காட்டிலும்
கனிவுடன் நயமாகப்பேசி
நஞ்சு வைத்துக்கொல்பவரை
எனக்கு மிகவும் பிடிக்கும்


தன் வலையில்
உறுதியாக வீழ்ந்துவிட்ட இரையை
அதை உணரச்செய்யாமல்,
தம் கண்களில் காட்டிக்கொள்ளாமல்,
உள்ளுக்குள் ரசிப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

தன் வலையில்
வீழக்காத்திருப்பவர்களை,
காலம் கனிய வேண்டி
காய் நகர்த்துபவர்களை,
எனக்கு மிகவும் பிடிக்கும்.

தப்பிக்க வழியின்றி
அனைத்தையும்
ஒவ்வொன்றாக மூடி
கடைசியில் உரக்கச்சிரிப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

முகத்தை இறுக்கமாக
வைத்துக்கொண்டு
உள்ளுக்குள் நகைத்துக்
கொண்டிருப்பவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

விடாத பிடிவாதத்துடன்
இருப்பவரை அவரின் வலுக்குறைவு
அறிந்து வீழ்த்துபவரை
எனக்கு மிகவும் பிடிக்கும்.


எவ்வளவோ முறை சொல்லியும்
அவர்தம் வழிக்கு வராதவர்களை
அவர் வழியிலேயே தொடர்ந்துசென்று
சமயம் பார்த்து
போட்டுத்தள்ளுபவர்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

உன்னை வீழ்த்தவே முடியாதா
என்று வாய்விட்டுக்கேட்டே
முதுகில் குத்துபவரை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

இத்தனை பிடித்தங்களும் உள்ள
என்னை உங்களுக்கும் பிடிக்கும்.
உங்களை எனக்குப் 
பிடித்துப்போனது போல.





(ஆனந்தவிகடன் 25-01-2012 இதழில் வெளியான கவிதை)

.

7 comments:

  1. கடைசி வரில எல்லாருக்கும் ஆப்பு வச்ச கவிதை. நான் புத்தகத்துல படிச்சேன்.அருமை நண்பா!!

    ReplyDelete
  2. இத்தனை பிடித்தங்களும் உள்ள
    என்னை உங்களுக்கும் பிடிக்கும்.
    உங்களை எனக்குப்
    பிடித்துப்போனது போல.
    பிடிவாதமாக பிடிக்க சொல்வது போல ......
    அருமை

    ReplyDelete
  3. வாழ்த்துகளுக்கு நன்றி dhanasekaran .S

    ReplyDelete
  4. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete