Saturday, April 23, 2011

எப்ப போவீங்க..?




திண்ணையில் வெளியான கதை


“ எப்ப போவீங்க மாமா “ அவன்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எனது அக்கா பையன் மூணாவது படிக்கிறான்.” என்னக்கா கேக்றான் இவன் ?” “சும்மா இப்டித்தாண்டா வர்றவங்ககிட்டல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பான்.வீட்டுக்கு யாரும் வந்துறக்கூடாது,உடனே கேக்க ஆரம்பிச்சுடுவான் “எப்ப போவீங்க எப்ப போவீங்கன்னு”எவ்வளவோ சொல்லியாச்சு,கேக்கமாட்டேங்கிறான்.என்ன செய்றது என்றாள் அக்கா சலிப்பாக. “சின்னப்பையன் தானக்கா,புரியாமத்தான கேக்றான், பரவால்ல விடு” “தம்பி , நான் சாயங்காலம் ஏழு மணிக்கு போவேன்..” ஆமா ஏன் கேக்குற?”இல்ல சும்மாதான் மாமா கேட்டேன்.” “பெரிய இவரு கேக்க வந்துட்டாரு, இவனுக்கு நாளைக்கு ஹிந்திப்பரீட்ச இருக்கு, அதுக்கு ஒழுங்கா புத்தகத்த எடுத்துப் படிடான்னா கண்ட கேள்வில்லாம் கேட்டுக்கிட்டு..?! “ “இருக்கா நீ வேற அவனத்திட்டாத, “தம்பி, மாமாவுக்கு நல்லா ஹிந்தி தெரியும்,பாம்பேல ரொம்ப வருஷம் இருந்துருக்கான், புரியாததெல்லாம் கேட்டுக்க, நாளைக்குப் பரீட்சைக்கி புண்ணியமாப்போகும் “ என்றாள் அக்கா.அவன் புத்தகத்தை எடுக்க ரூமுக்குள் சென்றான்.அக்கா காப்பி எடுக்க அடுக்களைக்குச் சென்றாள்.

“ஏக்கா , அத்தான எங்க காணோம் ?” அவருக்கு ஏதோ கம்பெனில யூனியன் தகராறாம், அதான் ராப்பகல்னு பாக்காம , கம்பெனியெ கதின்னு கெடக்காரு.வீடுன்னு ஒண்ணு இருக்கு,பொண்டாட்டி புள்ளக எல்லாம் ஒரு பொருட்டே இல்ல அவருக்கு.,வருவார் நீ காப்பியக்குடிச்சுட்டு போய்க்குளிச்சுட்டு இந்தப்பயலுக்கு ஹிந்தி கொஞ்சம் சொல்லிக்குடு,பாஸ் பண்றானானு பாப்போம் இந்தத்தடவயாவது..” ஏங்க்கா என்னாச்சு ? “ “மாமா , அந்த டீச்சர் பீஹார்லருந்து வந்துருக்காங்க,அவங்களுக்கு தமிழே தெரியாது, எல்லாத்துக்கும் தமிழ்ல என்ன சொல்றது, எப்டிக்கேக்றதுன்னு எங்ககிட்டயே கேட்டுக்கிட்டு இருப்பாங்க,” சிரிப்பு தாங்கவில்லை எனக்கு. “வெறும் ஹிந்தில தான் பேசுவாங்க இங்கிலீஷும் சரியா வராது, செமக்கேலி பண்ணுவோம் நாங்க, அவங்களுக்கு ஒண்ணும் புரியாம மண்டய மண்டய ஆட்டிக்கிட்ருப்பாங்க..” “அப்ப உருப்பட்டாப்ல தான், தமிழ்ல அர்த்தம் சொல்லிக்குடுத்தாதானே புரியும் , அவளும் பசங்களுக்கு ஏதாவது புரியுதா இல்லயான்னு தெரியாம ஏதோ எடுக்குறா, இவனுங்களும் படிக்கிறாங்ய…”

என்ன பாடம் தம்பின்னு புத்தகத்த வாங்கிப்பாத்துக்கிட்டிருந்தேன்.ஏதோ ஒரு வண்டு ரொம்பத்திமிரா நடந்துக்கிட்டதாவும்,காட்டுல ராஜா மாதிரி நெனச்சிக்கிட்டு சிங்கத்தயே சீண்டுற மாதிரியும் கத போய்ட்டுருந்தது. “ எனக்கு புரியுது மாமா,ஆனா சில ‘செண்டென்ஸ்’ தான் புரியல, நீங்க கொஞ்சம் ‘எக்ஸ்ப்ளைன்’ பண்ணுங்கன்னான்.சரின்னு முழுக்கதயையும் படிக்க ஆரம்பிச்சேன்.

அத்தானுக்கு மில்லில் வேலை.ஃபிட்டராக வேலைக்கு சேர்ந்தவர்,அவரது குணத்தால் இன்னும் மேலே போக இயலாமல் தங்கிவிட்டார்.கறார் பேர்வழி.வந்த சண்டய ஒருபோதும் விடமாட்டார்.மில்லுக்குள்ள ‘சண்டியர்’னு பட்டப்பேர் அவருக்கு உண்டு.அக்கா பாவம் ஒரு பொண்ணயும், பையனையும் பெத்து வெச்சுக்கிட்டு இவரோட தெனம் மாரடிச்சிக்கிட்டிருக்கா.

என்ன ‘ஹிந்தி’ ட்யூஷன் எப்டிப்போயிட்டுருக்கு ? நீ குளிச்சிட்டு வந்திருடா,இட்லிக்கு இன்னிக்கு அக்கா கையால சாம்பார் வெச்சுருக்கேன்.சாப்டுட்டு அப்புறம் உங்க ட்யூஷன ஆரம்பிங்க என்றாள் அக்கா.உங்க அத்தான் எப்ப வருவாங்கன்னு தெரியல, தேவையில்லாத வம்பெல்லாம் வெலக்கி வாங்கி வெச்சுக்கிட்டு இருக்கார்.வீட்டுல பொண்ணு பெரியவளாயிட்டாளே,கொஞ்சம் காசு பணம் சேர்த்து நக,நட்டு வாங்கிப்போட்டு கல்யாணம் பண்ணிக்குடுக்கணுமே, இந்தப்பயல நல்ல படிப்பு படிக்க வெக்கணுமேன்னு கொஞ்சமாவது நெனப்பு இருக்கா அவருக்கு.?எப்பப்பாரு யூனியன், தகராறு,மேனேஜ்மெண்ட்டோட சண்ட, இதே பொழப்பா போச்சு, காலைல ஆறு மணிக்குப்போனவர் , பாரு இப்ப மணி பதினொண்ணு ஆகப்போகுது இன்னும் காணோம்.ஊத்தி வெச்ச இட்லியெல்லாம் ஆறிப்போச்சு. “வருவார்க்கா, ஏன் அத்தாண்ட்ட ‘செல்’ இல்லியா ”, பொண்டாட்டி புள்ளகளப்பத்தி நெனப்பே இல்லாதவருக்கு, செல் கையில தங்குமா, எங்கயோ தொலச்சிட்டார், இதோட ரெண்டு,மூணு செல்லு காணாமப்போச்சு.”சரிக்கா, வந்துடுவார் , எங்க போயிடப்போறார்” எனறு சொல்லிகொண்டே , “தம்பி, இது வர நான் சொல்லிக்குடுத்தத படிச்சிட்டிரு, மாமா குளிச்சுட்டு வந்துருவேன்’னு சொல்லிக்கொண்டே குளியலறையில் புகுந்தேன்.

வண்டு பறந்து வந்து மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிங்கத்தின் கன்னத்தின் மீது அமர்ந்தது.உறங்கிக்கிடந்த சிங்கம் ,வண்டின் குறுகுறுப்பை உணர்ந்து தன் வலக்காலால் ஓங்கி அறைந்தது தன் கன்னத்தில்.சட்டெனப்பறந்த வண்டு சிங்கத்தின் உடலில் அமர்ந்து கொண்டது.அடித்த இடம் காயமானதை உணர்ந்தது சிங்கம்.பிறகும் வண்டு கொட்டாத வரை அமைதியாகவே கிடந்தது சிங்கம்.உடலிலமர்ந்த வண்டு தன் வேலையைக் காட்டத் தொடங்கியது.இப்போது உடலில் இருக்கும் வண்டை விரட்ட அடித்தது, வண்டு லாவகமாக மேலே பறந்து செல்ல உடலில் அடி பலமாக விழுந்தது.

சிங்கம் உடலை ஒரு முறை உதறிவிட்டு , பிடரியை சிலிர்த்துக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டது.சும்மா இராத வண்டு சிங்கத்தின் கண்ணிமைக்கு அருகே தாழ்வாகப்பறந்தது.ஏகக்கோபம் கொண்ட சிங்கம் சரேலென ஓங்கி அடித்ததில் அதன் கண்ணில் இருந்து ரத்தம் வழியத்தொடங்கியது.இப்படி தன்னையே அடித்துக்கொண்டு காயப்படுத்திக்கொண்ட சிங்கத்தைப்பார்த்து ,வண்டு கேட்டது. “ என்னை இந்தக்காட்டின் ராஜா என ஒத்துக்கொண்டால் நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என்றது.தன் கைகளாலேயே அடி வாங்கி அலுத்துப்போன சிங்கமும் அதற்கு ஓத்துக்கொண்டது.பெருமை தாங்காமல் அங்கிருந்து பறந்து சென்ற வண்டு , அந்தப்பக்கமாக வந்து கொண்டிருந்த யானையைப்பார்த்து,” எனக்கு வணக்கம் சொல்..ஏனென்றால் நாந்தான் இந்தக்காட்டின் ராஜா, அதை அந்த சிங்கமே ஒத்துக்கொண்டது’ என்றது.இவ்வளவு நேரம் நடந்ததைப்பார்த்துக்கொண்டிருந்த யானை தும்பிக்கையை உயர்த்தி வாழ்த்துச்சொல்லி விலகிச்சென்றது.

டெலிஃபோன் மணியடித்தது,அக்காதான் எடுத்து பேசிக்கொண்டிருந்தாள்.குளித்து விட்டு தலை துவட்டியவாறே வெளியே வந்தவன் , “என்னக்கா அத்தான் தான் பேசினாரா ? “ இல்லடா, அவர் எங்க பேசப்போறார், இந்த நாலாவது வீட்டு பணிக்கர் வைஃப் , அவங்க பொண்ணு இன்னும் ட்யூஷன் விட்டு வர்லயாம், அதான் இவளும் வந்துட்டாளான்னு கேட்டு போன் பண்ணுச்சு.இருந்தாலும் அந்த மலயாளிக்கு சந்தேகம் ஜாஸ்தி. பெத்த புள்ள மேலயே.நொடிக்கொருதரம் எல்லா சினேகிதி வீடுகளுக்கும் போனப்போட்டு தொல்ல பண்ணீருவா. சரி , நீ சாப்டுட்டு உங்க ஹிந்தி ட்யூஷன ஆரம்பிங்க என்றாள். என்ன தம்பி எதுவர படிச்சிருக்க, “ யானை தும்பிக்கையை தூக்கி வாழ்த்து சொன்னது “ வர,,சரி சரி இப்ப வர்றேன் மாமா , சாப்டுட்டு அப்புறம் கதயத்தொடங்கலாம்.

சிங்கமும் , யானையும் தனக்கு அடி பணிந்து விட்ட மிதப்பில் பறந்து சென்று கொண்டிருந்தது வண்டு.வழியில் தென்பட்ட மிருகங்களையெல்லாம் வணக்கம் சொல்லச்சொல்லி இம்சை செய்தது.இவை யாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நரி அதற்கொரு பாடம் கற்பிக்க நினைத்து வண்டின் அருகில் சென்றது. ‘ஏய் நரி , எனக்கு வணக்கம் சொல்ல வந்திருக்கிறாயா ?” “ ஆம் ராஜா, ஆனால் இந்தக்காட்டில் ஒருவன் உங்களை ராஜாவென ஏற்றுக்கொள்ள மாட்டானாம். அவனை ஒரு கை பாருங்கள் என்றது.”யாரவன் ..அந்த சிலந்திதான் என்றது நரி.சிலந்தி அப்போது தான் தன் வலைப்பின்னலை முடித்து விட்டு இரைக்கெனக் காத்துக்கொண்டிருந்தது.

அக்காதான் போன் பண்ணிக்கொண்டிருந்தாள், யாருக்குக்கா, அந்த ட்யூஷ்ன் க்ளாஸுக்குத்தான், என்னக்கா நீயுமா..? “ இல்லடா உனக்கு ஒண்ணும் தெரியாது ,அந்த ட்யூஷன் வாத்தியார் கொஞ்சம் சபலிஸ்ட், இவளே ரெண்டொரு தடவ ஜாடமாடயா எங்கிட்ட சொல்லிருக்கா.அதான் விசாரிச்சேன்.இப்பதான் க்ளாஸ் முடிஞ்சு எல்லாரும் கெளம்பிப்போய்ட்டதா சொல்றார்.அவள் கூறி முடிப்பதற்குள் காலிங்பெல் ஒலித்தது.

உங்க அத்தான் தான் வந்திருப்பார்னு நெனக்கிறேன், இரு நானே கதவத்திறக்கிறேன்னு சொல்லிக்கொண்டே அக்கா தான் திறந்தாள்.வந்தது அத்தான் இல்ல, இவள் தான். “ என்னடி ட்யூஷன் முடிஞ்சிருச்சான்னு அக்காவின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் விறுவிறுவென ரூமுக்குள் சென்று விட்டாள்.” ஏண்டி ஒன் மாமன் வந்துருக்கான் , அவனப்பார்த்து வாங்க, எப்ப வந்தீங்கன்னு ஒரு வார்த்த கூடக் கேக்கலியே “ விடுக்கா” அவ கேக்கலன்னா என்ன இப்ப ? அவ ஏதோ படிக்கிற டென்ஷன்ல வந்திருப்பா.

அவள் உள்ளே போனதும், இவன் ..மாமா..அக்காவுக்கு ஸ்கூல்ல பட்டப்பேரு என்னான்னு தெரியுமா ? “செம்மறி ஆடு” . ஏண்டா “ செம்மறி ஆடு”ன்னு வெச்சாங்க, தலயக்கவுந்துகிட்டே போவாள்ல எப்பவும் அதனாலதான்னு சொல்லிச்சிரிச்சான். அதோட அந்த ஆனந்த் பய தான் பேரு வெச்சுருக்கான், அவங்க ஊர்ல ஒரு ஆட்டுக்கு அக்கா பேரு தானாம் , அதான் அக்காவ “ஆடு”ன்னு கேலி பண்ணுவாங்ய. “ டேய் ஒழுங்கா படிக்க மாட்ட, இப்ப வந்தேன்னா அடி விழும்டா” ன்னு குரல் வந்தது உள்ளேயிருந்து.

சரி அத விடு, நம்ம வண்டு கத என்னதான் ஆச்சு , பாப்போம்..வண்டு சிலந்தியத்தேடிப்போச்சு, நரி பேச்சக்கேட்டுக்கிட்டு. சிலந்தியப்போய்ப்புடிக்கிறேன்னு வகையா அதோட வலையில மாட்டிக்கிச்சு வண்டு.வலையில் மாட்டிக்கொண்ட தன் கால்களை பலம் கொண்டு இழுக்க இழுக்க மேலும் மேலும் அவை தீவிரமாக ஒட்டிக்கொண்டன.இதைக்கண்ட சிலந்தி விரைந்து வந்து வண்டைத்தாக்கிக் கொன்று தின்று முடித்தது.

மீண்டும் டெலிஃபோன் மணி அடித்தது.உங்க அத்தானாதான் இருக்கும், இரு என்றவள் எடுத்துப்பேசப்பேச அவள் முகம் மாற ஆரம்பித்தது.”டேய் ,என்னவோ சொல்றாங்கடா பாருடா என்றவளின் குரல் என்னைக்கலவரமாக்கியது. “ இங்க குடு”ன்னு ரிசீவரை வாங்கியவன் , வந்த செய்தி கேட்டு செய்வதறியாமல் திகைத்தேன்.அத்தானோட கம்பெனில யூனியன் தகராறுல கைகலப்பாகி , உயிருக்கு ஆபத்தான் நெலயில அத்தான ஜி.ஹெச்.ல சேத்துருக்காங்களாம்.பெருங்குரலெடுத்து அழத்தொடங்கிய அக்காவையும் , பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன்.

என்ன சார்? எந்த வார்டு , “இல்ல இப்ப யாரையும் பாக்க முடியாது , இது போலீஸ் கேஸு,” சார் இவங்க அடிபட்டவரோட மனைவி, “ யாரா இருந்தாலும் முடியாது சார், “வாக்குமூலம் வாங்கிக்கிட்டிருக்கார் இன்ஸ்பெக்டர், எல்லாம் முடிஞ்சா தான் உங்கள அனுமதிக்க முடியும், சாரி சார் ரொம்பத்தொல்ல பண்ணாதீங்க.கொஞ்சம் அப்பால போயி ஒக்காருங்க, கூப்டும்போது வந்தாப்போதும்”

அருகில் நின்று கொண்டிருந்த மில் தோழரை அணுகி விசாரித்தேன்.அவர் உடுப்பிலும் முழுதும் ரத்தக்கறைகள். “ இல்ல தம்பி, சார் ரொம்பக்கோவக்காரர், அதோட அடங்கவும் மாட்டார், சின்னதா ஆரம்பிச்ச பிரச்னையை நல்லா உருவேத்தி விட்டு,ஜி.எம்.மையே பணிய வெச்சுட்டார், அதோட நின்றுக்கலாம், சூப்பர்வைஸர் கிட்டயும் வலியப்போயி ஜி.எம்.மையே போட்டேன் நானு,என்னைய மரியாதையா நடத்துங்கன்னு மிரட்டிருக்கார்.அவர் பலம் இவருக்கு தெரியாது. சரி ஏதோ இன்னிக்கி போனாப்போகட்டும்னு அவரும் விட்டுட்டார். சூப்பர்வைஸர் ரூம விட்டுவெளியே வந்தவர், போறவாரவன் கிட்டயெல்லாம் எனக்கு சலாம் போடு,இனிமே நான் தான் இந்தக்கம்பெனிலன்னு ரொம்பத்திமிரா பேசிக்கிட்டே போயிருந்திருக்கார். இவர எப்படா போடலாம்னு காத்துக்கிட்டிருந்த ஒருத்தன், வலிய அவர்கிட்ட போயி நைச்சியமாப்பேசி , அந்த டூல்ஸ் செக்ஷன்ல இருக்கிற தன்ராஜூ உங்கள மதிக்கிறதே இல்ல சார், என்னான்னு கேளுங்கன்னு உசுப்பேத்தி விட்ருக்கான், இவரும் அதப்புரிஞ்சுக்காம அவங்கிட்ட போயி வம்பிழுத்திருக்காரு,அவன் கம்பெனிக்குள்ளயே ஆயுதம்லாம் வெச்சுருப்பான், யாரும் ஒண்ணும் கேக்க முடியாது அவன.அதான் பல நாளா கருவம் வெச்சு இன்னிக்குப் போட்டுத்தள்ளிட்டான்…நம்ம தகுதி, பலம் தெரிஞ்சு நடக்கணும் தம்பி, இப்டி எல்லாரையும் பகைச்சுக்கிட்டா என்னாச்சுன்னு பாத்தீங்களா ? எங்க கொண்டாந்து விட்ருக்கு பாருங்க இப்ப…..?” என்றவாறு முகம் பொத்தி அழுதார்.

அக்கா வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சின் ஒரு மூலையில் , மகனையும் , மகளையும் கைக்கொரு பக்கமாக அணைத்தபடி உட்கார்ந்திருந்தாள்.” என்னடா என்னதான் சொல்றாங்க ? இப்போதைக்கி பாக்க முடியாதா ? இல்லக்கா, உள்ள ஸ்டிட்சிங் நடந்துக்கிட்டிருக்காம், அது முடிஞ்சவுடனே பாக்கலாம்னு சொல்லிருக்காங்கன்னு” சமாளித்தேன்.

வார்டு பாய் குரல் அனைவரையும் பதற வைத்தது, “ இங்க யாருங்க, சுந்தரத்தோட மனைவி,உள்ள போய்ப்பாருங்க “ என்றான். “ அடி பலமா நெஞ்சுப்பகுதில பட்டதில அளவுக்கதிகமா ரத்தம் வீணாகி காப்பாத்த முடியாமப்போச்சு, சீக்கிரமா ஃபார்மாலிட்டீஸ முடிச்சிட்டு “ பாடி”ய வீட்டுக்கு எடுத்துட்டுப்போயிருங்க என்றார் டாக்டர். தொப்பியைக்கழற்றியவாறே இன்ஸ்பெக்டர், சார் நீங்க யாரு, கொஞ்சம் உங்களையும் , குடும்பத்தையும் விசாரிக்க வேண்டிருக்கு.அப்புறமா வீட்டுக்கு வாறேன் என்றவாரே அவரும் விலகிச்சென்றார்.பேண்டேஜ் கட்டுகளுடன் உடலெங்கும் ரத்தம் பரவிக்கிடந்த அத்தானின் உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு,அவர்கள் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து, ஏற்கனவே சுற்றப்பட்டிருந்த துணிக்கட்டுகள் , மேலும் இறுக்கப்பட்டு பொட்டலமாக நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தார் என் அத்தான்.அவருக்குக்கொஞ்சம் தள்ளி ,அந்த ஹிந்திப்புத்தகம் காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தது.அவரையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, “மாமா நீங்க எப்ப போவீங்க? “ என்று கேட்டுக்கொண்டிருந்தான் தம்பி.மணி ஏழடித்து ஓய்ந்தது.


.

3 comments:

  1. பரிதாபமாக இருக்கிறது. அந்தக்குடும்பத்தை நினைத்தால்.

    ReplyDelete
  2. நன்றி மஹன் , தங்களின் முத்ல வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ம்..என்ன செய்வது இராஜராஜேஸ்வரி? பரிதாபப்படலாம் தான்...."தான் என்ற அகந்தை"

    ReplyDelete