Saturday, April 2, 2011

நாலு பேருக்கு நன்றி

உயிரோசையில் வெளியான  எனது சிறுகதை






எங்க சார் போணும்?”ஆட்டோவ. நிறுத்தி ஆமமாதிரி தலயமட்டும் வெளியே நீட்டிக் கேட்டார்.
"டி.எம்.எஸ்." 
 எவ்ளவு சார் தருவ?"
"நீங்க சொல்லுங்க"
பார்க்க வயதானவர் போலிருந்தார். உள்ளே சாதாரண சட்டையும் , அதுக்கு மேல காக்கி உடுப்பும் அணிந்திருந்தார். "அறுபது ரூபா குடுசார்" மத்தவன்லாம் எம்பது நூறுன்னு கேப்பான், நான் நியாயமா கேக்கறேன். இந்த ஆபீஸ் போற டயத்துல அதுவும் மவுண்ட்ரோட்ல சவாரி போறதுன்னா எவ்ளவு செரமம்னு உனக்கு தெரியாது சார்."ஏறிக்கோ". 
வண்டி நந்தனம் சிக்னலைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. அவரேதான் பேசிக்கொண்டே வந்தார்."இதே ஆட்டோவ வாடகைக்கி விட்டிருந்தேன் சார் , எடுத்தவன் ஒழுங்கா ஓட்றானான்னா, தெனம் தண்ணி அடிக்கிறான்சார் , அதொட வந்து வண்டி எடுக்கிறான் சார், அதுனாச்சும் பரவால்ல, பொண்டாட்டியும் சேத்துக்கிட்டு தண்ணி அடிக்கிறான் சார்.குடும்பமே பேஜாரு.அதோட நானே திரும்ப வண்டிய எடுத்து ஓட்டஆரம்பிச்சுட்டேன். ஒரு தொழில் பக்தி வேணாம் ? அதுலருந்துதான் காசு வருது, கும்பிடாட்டியும் பரவால்ல , ஒரு மரியாத இருக்கணும் சார், காசும் ஒழுங்கா குடுக்கிறதில்ல, எல்லாத்தயும் தண்ணிலயே வுட்டுர்றான் சார். அதான் வேணவே வேணாம்னு சொல்லி அனுப்பிட்டேன். கொழந்த குட்டிய காப்பாத்தறதுக்கு தொழில் செய்யணும், ஒரு பயபக்தி வேணும், ஒண்ணுமே கெடியாது சார், அவங்கிட்ட".
"என்னப்பாத்தா எத்தினி வயசாகுது சார்?" 
அவரே சொன்னார்
"அம்பத்திஏழு." இன்னிக்கு வரைக்கும் ஒரு கெட்டபழக்கம் இல்ல சார். சிகரெட், தண்ணி, பீடி ஏன் பாக்கு கூடப் போடறதில்ல சார், அதான் பசங்க எல்லாம் இன்னும் எளமயாவே இருக்க"ன்னு சொல்வானுங்க!" பிறகு அவரே சங்கோஜத்தில் சிரித்துக்கொண்டார்.
"பேமிலி இருக்குது , ஒழக்கிற காசக் கொண்டு போயி பொண்டாட்டி கைல குடுத்துருவேன் சார். அவ பாத்து செலவுக்குன்னு குடுக்கறதக் கூட செலவளிக்க மாட்டேன் சார். அப்டி அவ சேத்து வெச்சகாசில இந்த ஆட்டோவ சொந்தமா வாங்கிட்டேன் சார்.
இந்தக்காலப் பயலுவளுக்கு எங்க என்னா தெரியுது ,கைல நாலுகாசு வந்தா ஆடறானுங்க. இல்ல, எல்லாத்தியும் குடிச்சே அழிக்கிறானுங்க."
தேனாம்பேட்டை சிக்னலில் வண்டிநின்றது.
"என்னா வெயில் சார்." காக்கிச்சட்டையின் காலரை உள்ளே அணிந்திருந்த சட்டையோடு சேர்த்துப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பேண்ட் பாக்கெட்டிலிருந்து துணியை எடுத்து கழுத்தைச் சுற்றி துடைத்துக் கொண்டார்.சிக்னல் விழுந்து வண்டி கிளம்பிய போது பக்கத்தில் ஒரு ஆட்டோ உரசிச்சென்றது .
 "ஏய் ஆறுமுகம்" அந்த ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்தார்.
"நம்ம நாலாவது தெரு ஆடிட்டர் இல்ல, சிவசங்கரன் இன்னிக்கு காத்தால போய்ட்டாராம்ப்பா, வா இப்ப சவாரி எறக்கி விட்டுட்டு ஒருமால வாங்கிப் போடலாம்"
"எனக்கு நியூஸ் தெரியாதுண்ணே , போய்ட்டு வந்துருவோம்" ணே என்றபடி விலகிச் சென்றது அந்த ஆட்டோ.
"தம்பி, அந்த ஆடிட்டரு ரொம்ப நல்லவர்ப்பா, டெய்லி காலைல வீட்டுக்குப் போயி அவர ரெடி பண்ணி, பாவம் அவரால நடக்கமுடியாது, குச்சி வெச்சுதான் நடப்பார். அவரக் கூட்டிட்டுப் போயி ஆபீசுல விட்டுட்டு திரும்பக் கூட்டிட்டு வருவேன் சார். நல்ல மனுசன் சார், இந்த ஆட்டோ வாங்கறப்போ இருந்த சிக்கல்லாம் சரி பண்ணிக் குடுத்தார்பா, நன்றி விசுவாசம் மறக்கக்கூடாது, அதான் உங்கள எறக்கி விட்டுட்டு அங்க போலாம்னு இருக்கேன்" என்றார்.


"பேச்சுலர்ஸ் ரூமக் கூட்டறது ஈஸின்னு நெனச்சு ,வேலக்கு ஒத்துக்கிட்டா இந்தப் பசங்க கண்ட எடத்திலயும் குப்பயப் போட்டுவெச்சு, நாலு வீட்டுக்குப் போய் மிச்ச வேலயப் பாக்கவிடாமப் பண்றானுவளே ?!" சலித்துக் கொண்டாள் வேலக்கார ஆயா. நோக்கியா சார்ஜர், நேத்து தின்னு போட்ட சிப்ஸ் பாக்கெட், ஓரத்தில கொஞ்சம் சிகரெட் துண்டும் அதோட சாம்பலும், முடிசுத்திக் கெடந்த பஸ் டிக்கெட்டும் ஒரே தள்ளாகத் தள்ளினாள் துடைப்பத்தை வைத்து. "தம்பிகளா, வேலக்கு போறப்ப ,சன்னக்கதவ சாத்தி வெச்சிட்டுப்போங்கப்பா ,காத்து இல்லாத குப்பைய எல்லாம் கொண்டுவந்து உள்ள கொட்டுது ,அப்பால அத்தையும் சேத்துக்கூட்ட வேண்டியிருக்கு." 
யாரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை.
 அவரவர் வேலைக்குக் கிளம்புவதில் மும்முரமாயிருந்தனர். "எண்ணூறு ரூபா மட்டும் வாங்கத் தெரியுது , வேல பாக்கறதுன்னா மட்டும் சலிப்பு." உள்ளுக்குள் முனங்கிக் கொண்டான். குளித்துவிட்டு வெளியே வந்தவனோ, ஈரத்தோடு குப்பையை மிதித்துக் கொண்டே உடைமாற்றச் சென்றான்.
"ஏய்தம்பி, கண்ணு தெரியலயா உனக்கு, இப்பதானே கூட்டிவெச்சிருக்கேன், அதுல போய் ஈரக்கால வெக்கிறியாப்பா?"
"ஆயா",
"என்னப்பா ?"
"இல்ல நாங்க இந்த வீட்டக் காலி பண்ணிட்டு வேற வீடு போலாம்னு இருக்கோம்."
"பக்கத்திலதான், ரெண்டு தெரு தள்ளி கொஞ்சம் அந்த வீட்டுக்குப் போயி சுத்தம் பண்ணிக் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்".
"அங்க யாருப்பா இருக்கறது ? பேமிலியா ?"
"இல்ல ஆயா , எங்கள மாதிரி பேச்சுலர் பசங்கதான். அவனுங்க வேற ஊருக்குப் போறாங்களாம், அதான் காலி பண்றாங்க கொஞ்சம் அங்க போயி வீட்டக் கூட்டி பெருக்கி, கழுவி விட்டீங்கன்னா நல்லாருக்கும், அப்றம் தொடர்ந்து அங்கயே தெனம் வந்துருங்க."
"சரி தம்பி" என்றவள் அனைத்துக் குப்பைகளையும் அள்ளி பிளாஸ்டிக் கவரில் உள்ளே அமுக்கி வைத்துவிட்டு , கைப்பிடி ரெண்டயும் ஒண்ணா சேத்து முடிச்சுப் போட்டு தூக்க வசதியாக வைத்துவிட்டுச் சென்றாள்.
பிறகு சாயங்காலம் வந்தவளிடம் கேட்டான்.
 "என்ன ஆயா, புதுவீடு கழுவிவிட்டீங்களா ?
"இல்ல தம்பி, அந்தப் பசங்க இன்னிக்குதான் காலி பண்றாங்களாம், அவங்க போகட்டும், அப்பால கழுவிவிடறேன்."
"இல்ல, ஏன் சொல்றேன்னா இப்பவே கழுவி விட்டீங்கன்னா காலைல வரை காஞ்சிரும், அப்பறம் நாங்க போறதுக்கு வசதியாயிருக்கும்ன்னுதான்."
"உங்களுக்குப் புரியல தம்பி ,யாரும் வீடுகாலி பண்ணவுடனே கழுவிவிடக் கூடாது. அந்தப் பசங்க நாலு எடம் போயி வாழ வேண்டியவங்க, அதனாலதான் இன்னிக்குப் பொழுது கழியட்டும். நாளைக்கி காத்தால போயி உனக்குக் கழுவி ரெடியா வெச்சிருக்கேன்"
"ஏன் காலைல ?"
"இல்லப்பா, எழவு விழுந்த வீட்லதான் எல்லாம் தூக்கிட்டுப் போனவுடனே கழுவிவிடுவாங்க , அத சொல்லவேணாம்னு பாத்தா , ஐய வாயக் கிண்ட்றியேப்பா ?"

"பேங்ளூர், பேங்ளூர்" சார் பேங்ளூரா சார்
 நல்ல ஏ.சி.வண்டிசார், காலைல அஞ்சுமணிக்கிக் கொண்டு போயி எறக்கி விட்றுவாங்க சார் , டிக்கெட் வேணுமா சார்?" கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருந்தான் .சென்ட்ரல் ஸ்டேஷன் எதிர்ப்புறம் வரிசையாக ட்ராவல் ஏஜென்சிகள். ப்ளாட்பாரத்தில் நின்றுகொண்டு தோள்பையோடு போவோர் வருவோரையெல்லாம் கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூவிக் கொண்டிருந்தான்.
"எங்க சார். இப்பெல்லாம் நேர வந்து டிக்கெட் வாங்கறாங்க எல்லாம் கம்ப்யூட்டர்லயே பண்ணிவிட்டிர்றாங்க சார் , நமக்கு போணி ஆவறதில்ல, ஏதோ கடைசி நேரத்தில கெளம்பறவங்க மட்டும் வந்து நிப்பாங்க.
"சார், இங்க, அதுலயும் எனக்குக் கெடிக்கிற ஷேர் கொஞ்சந்தான் , தினத்துக்கு ஒருவேள சோறு துண்ணவே பத்தாது."
"ஹைதராபாத் போணுமா சார் ?" பெரியவர் இவனை வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்து விலக்கிவிட்டுச் சென்றார். "ஒரு சீட்டுக்குப் பத்தோ, இருபதோ கூட வர்றது கஷ்டம்தான் சார். சாயங்காலம் ஏழுமணிக்கு ஆரம்பிச்சா ஒம்போது, ஒம்போதர வரைக்கும்தான் சார் தொழிலு., அப்பால எல்லாவண்டியும் நெறஞ்சிடும் , மூடிட்டுப் போக வேண்டியதுதான்".
 "க்யா பையா, அப்னா டிக்கிட் பக்கிநஹி ஹுயி?"
"இல்ல சார் சீட் நம்பர் ஒண்ணு ரெண்டு போட்டு வெச்சிருந்தேன் ,கடைசி நிமிஷத்துல ட்ராப் ஆயிடுச்சி சார், உங்கிட்ட அன்ரிசர்வ் டிக்கெட் இருக்கு, கோச்ல ஏறி ஒக்காந்துக்குங்க ,அந்த ரெண்டு சீட்டும் காலியாத்தான் இருக்கு, டி.டி.ஆருக்குக் கொஞ்சம் வெட்டினீன்னா உனுக்கே கன்ஃப்ர்ம் பண்ணிக் கொடுத்துடுவாரு, வழக்கமா வர்ற நம்ம டி.டி.ஆர். இன்னிக்கு லீவு போட்டார், அதான் டிக்கெட் கரெக்ட் பண்ண முடியல. கமிஷன் துட்டு எனக்கு வேணாம், செய்யாத வேலக்கி துட்டு வாங்கமாட்டேன்."
"பேசிக் கொண்டே இருந்தவனை அவனது சகா வந்து இடித்தான்.
"ஏண்டா என்ன ஆச்சு?"
"அவன் அங்கயே கெடக்கறாம்ப்பா, சாப்ட்டு நாலுநாள் ஆவுதுன்னு சைகைலயே சொல்றான். உடம்பு எங்கயோ நல்லா அடிவாங்கினமாதிரி கெடக்குது, வாயிலருந்து ஒரு வார்த்த வரமாட்டேங்குது, பாத்தாலே பாவமா இருக்குடா." 
 "என்னா பண்றது. நாலு காசு இன்னிக்குப் பாத்தா ஏதுனா வாங்கிக் கொடுத்து டாக்டராண்ட அழச்சிக்கிட்டு போகலாம் , வருமானம் இன்னிக்கு டல்லாத்தான் இருக்கு,ம்என்ன செய்ய?"
"கோயம்பத்தூர் மூணு டிக்கெட் இருக்குமாப்பா?"
  "இருக்குதுசார், ஆனா வண்டி இங்கருந்து இல்ல, டிக்கெட் போட்றேன், நம்ம பிக்கப் வண்டி வரும், அதுல ஏறி கோயம்பேடு போய்ட்டீங்கன்னா , அங்கருந்து கோயம்புத்தூர் பஸ், போறீங்களா சார் ?"
"அதெல்லாம் சரி, பஸ் எப்டி வசதியா இருக்குமா ?
"நெஜம் சொல்றேன் சார் , வோல்வோல சீட் காலி இல்ல. இந்த வண்டி சுமாராத்தான் இருக்கும் , ட்டூப்ளஸ் ஒன்,.சி.இருக்கு சார் வண்டில, உங்கிட்ட பொய் சொல்லி அனுப்பிவிட்டுட்டு என்னால நிம்மதியா தூங்க முடியாது சார், தொழில் தர்மம் வேணும் சார், அதான், வேணும்னா சொல்லு சார், பிக்கப் வண்டி பத்து நிமிசத்துல வந்துரும், போட்றவா ?" அவர் ஒத்துக்கொண்டார்.
"ஆச்சு, இன்னிக்கு ஏதோ மூணு டிக்கெட், கொஞ்சமாவது காசு பாக்கலாம். பாவம், அந்தப் பையன், கடய மூட்னவொடனே போகணும்."
 "என்னாச்சு , யாரு அந்தப் பையன் ?"
"தெர்லசார் யாருன்னே, எங்கிருந்தோ வந்தான், கைல ஒரு பேக் கூட இல்ல,எவனோ கம்மினாட்டி பேக்க அடிச்சதோட ஆளயும் அடிச்சுப் போட்டுட்டு ஓடிட்டான் போலருக்கு. இந்தப் பையனால நடக்கவே முடியல, நாங்க தங்கற எடத்துல படுக்க வெச்சிருக்கோம் சார், ரெண்டு நாளா கெடக்கான் சார். ஒழச்சு திங்க வக்கில்லாம கண்டவனயும் அடிச்சு, ஒதச்சு, சுளுவாத் துண்ணனும்ங்ற கூட்டம் இன்னும் இருக்கு சார் இங்க.என்னவோ பேர் சொன்னான் சார், வாய் கொளர்றதால ஒண்ணும் புரியல, பாவம், அடிபலமா விழுந்திருக்கும் போல, படுத்தே கெடக்கான் சார்.அதான் கடய மூட்னவுடனே போகலாம்னு இருக்கேன்." 


.

No comments:

Post a Comment